lundi 10 décembre 2012

இரவின் புன்னகை

           கவிஞா் கி. பாரதிதாசனும், பேராசிரியா் பெஞ்சமின் லெபோ அவா்களும்



கம்பன் கழகம் நடத்தும் திங்கள் கவியரங்கம்
தலைமைக் கவிதை

இரவின் புன்னகை

இருபத்து முத்திங்கள் எய்தி மின்னும்
     இனியதமிழ்க் குறளரங்கம்! கழகம் கண்ட
அருந்சொத்து மெய்வாணி மூர்த்தி அன்பர்!
     அறமொளிரும் தமிழேந்தும் பேறு பெற்றார்!
வரும்சொத்துப் பின்னொருநாள் போகும்! கற்று
     வளர்கல்வி எப்பிறப்பும் நிலையாய் நிற்கும்!
பெரும்சொத்து பெற்றவர்கள் தமிழர்! இன்று
     பீடுதமிழ்த் தாய்மறந்து வாழ்தல் ஏனோ?

புகழ்கம்பன் கழகத்தின் கவிதை மன்றப்
     பொற்கதவைத் திறக்கின்றேன்! இன்பம் பொங்கித்
திகழ்கம்பன் காவியத்தில் திளைத்த நெஞ்சம்
     தீந்தமிழின் சோலையினைப் படைக்கும் என்பேன்!
நிகழ்கம்பன் குறளரங்கைச் சிறக்கச் செய்யும்
     நிறைமனத்துத் தோழர்களே வணக்கம்! யாப்பில்
அகழ்கம்ப கவிஞர்கள் கவிதை பாட
     அணிவகுத்து வருகின்றார்! வரவேற் கின்றேன்!

புன்னகையை முகமணிந்தால் சுற்றம் இந்தப்
     புவியுனக்கு வசமாகும்! புகழே கூடும்!
பொன்னகையைப் பொலிமணியைத் தோற்கச் செய்யும்!
     பூத்தொளிரும் சிரிப்பழகு! உலகம் கண்ட
வன்பகையை அகற்றிவிடும்! அழிவை நீக்கும்
     இன்வகையை இசைகின்ற சொற்கள்! இங்கு
நன்வகையைக் கவிதையிலே கட்ட வுள்ள
     நம்கழக கவிஞர்களை வணங்கு கின்றேன்!

செடியளிக்கும் புன்னகையே பூக்கள்! ஆழ்ந்த
     சிந்தனையின் புன்னகையே பாக்கள்! நாட்டின்
கொடியளிக்கும் புன்னகையே வீரர் சொத்து!
     கொள்கைதரும் புன்னகையே வெற்றி மாலை!
நொடியளிக்கும் புன்னகையே காதல் பார்வை!
     நூலளிக்கும் புன்னகையே அறிவின் மாட்சி!
மடிகிடக்கும் புன்னகையே மழலைச் செல்வம்!
     மதிமயக்கும் புன்னகையின் உச்சம் அஃதே!

இரவின் புன்னகை

அடிமையென வாடுவதோ? அயலார் தந்த
     அடியுதையைத் தாங்குவதோ? அழிவில் சிக்கி
மிடிமையென நம்நாடு கிடந்த போது
     விடுதலையின் இடிமுழக்கம்! உரிமைத் தாகம்!
மடிமையென நமையெண்ணி ஆண்டோர் தம்மை
     வாயடக்கி வந்தவழி அனுப்பி வைத்தோம்!
குடிமைபெற விடுதலையைப் பெற்ற நேரம்
     நல்லிரவின் புன்னகையாய்க் குளிர்ந்த தென்பேன்!

வானூரும் வட்டநிலா! மெல்ல வந்து
     வருடிவிடும் மென்காற்று! மல்லிப் பந்தல்!
தேனூறும் செந்தமிழின் இலக்கி யங்கள்!
     சீரூறும் சிறப்பூறும் இலக்க ணங்கள்!
மீனூரும் பெருங்கடலின் அகலம் ஆழம்
     வியப்பூறும் தமிழ்க்கடலும்! கவிதைப் பித்தன்
நானூறும் கவிக்கம்பன் நூலில் ஆழும்
     நல்லிரவும் புன்னகையைப் பூக்கும் என்பேன்!

தனிமையிலே தண்டமிழின் அருளை வேண்டித்
     தவமிருக்கும் நற்பொழுது! வானில் பூக்கள்!
இனிமையிலே இதற்கிணையாய் ஒன்றும் இல்லை!
     எனக்குள்ளே சுரக்கின்ற கவிதை ஊற்று!
பனியினிலே நடப்பதுபோல் உள்ளத் துள்ளே
     பைந்தமிழின் குளிர்படரும்! சந்தம் மீட்டும்!
கனிமையிலே சொல்மணக்கத் தோன்றும் பாட்டு!
     காரிரவின் புன்னகையாய்க் கமழ்ந்த தென்பேன்!

கருமைநிற கண்ணன்தன் அழகில் சொக்கிக்
     கன்னியர்கள் களித்ததுபோல் களிக்கும் காலம்!
எருமைநிறப் பேர்வையிலே ஓட்டை கோடி!
     ஓரோட்டை நிலவாகும்! உறக்கம் பாதி!
பெருமைபெற வேண்டுமென எண்ணம் கொண்டும்
     பெண்ணழகுக்(கு) உவமைதரும் பேற்றைக் கண்டும்
அருமையுற மலர்ந்தாடும் பூக்கள் யாவும்
     அடர்இரவின் புன்னகையாய் மணக்கும் என்பேன்!

முத்தாடும் பல்லாக்கு! மகிழ்ச்சி யாற்றில்
     முன்னாடும் ஊர்மக்கள்! மணக்கும் மல்லிக்
கொத்தாடும் குழலழகு! காதல் பேசிக்
     குளிர்ந்தாடும் இளவட்டம்! கரக ஆட்டப்
பித்தாடும் நெஞ்சங்கள்! செவியை மோதிப்
     பிளந்தாடும் பறையோசை! வானில் வண்ணச்
சித்தாடும் மத்தாப்புப் பூக்கள் யாவும்
     சீரிரவின் புன்னகையாய் மின்னும் என்பேன்!

வான்நிலவு வாழ்த்தொலிக்கும்! விண்மீன் கூட்டம்
     வரவேற்பு மலர்பொழியும்! வீசும் காற்று
தேன்நிலவு! தேன்நிலவு என்றே பாடிக்
     திரண்டோங்கும் ஆசைக்குத் தண்ணீர் ஊற்றும்!
மீன்நிலவு முகத்தழகி! விரிந்த மார்பன்!
     மீட்டுகின்ற இசைப்பாட்டில் இரவு நீளும்!
மான்,நிலவு, மயில்உலவு காதல் சொர்க்கம்!
     மகிழ்இரவின் புன்னகையைக் கதிரும் காணும்!

ஊருறங்கும்! பல்லுயிர்கள் அயர்ந்து றங்கும்!
     உருகுலைந்து வான்நிலவு தேய்ந்து றங்கும்!
தேருறங்கும் சிறுசிட்டு! தென்னை வாழை
     தென்றலிடும் தாலாட்டில் நின்று றங்கும்!
தாருறங்கும் மதுவண்டு! தழைகள் போர்த்தித்
     தண்மொட்டுக் கொடியுறங்கும்! செடியு றங்கும்!
மார்புறங்க அவள்வேண்டி இரவு பொங்கும்
     மகிழ்வேக்கம் புன்னகையாய் இனிக்கும் என்பேன்!

பாடுபடும் பாட்டாளி வேர்வைக் கீடாய்ப்
     பரிந்துரைக்கப் பொருளில்லை! அவனின் வாழ்வில்
கேடுவிடும்! கீர்த்திவரும் என்ப தெல்லாம்
     கேட்கின்ற செவிக்கின்பம் பாய்ச்சும் சொற்கள்!
மாடுபடும் துன்பெய்தி மாலை சாய்ந்து
     வயிற்றுக்குப் பதில்சொல்லி உறங்கும் காலம்!
காடுபடும் மணமாகக் கமழ்ந்து பூக்கும்
     கன(வு)இரவின் புன்னகையாய் இருக்கக் கூடும்!

சாதியிடும் வெறியொழிந்தே! மண்ணை மாய்க்கும்
     சமயமிடும் அழிவொழிந்தே! குறளை நன்றே
ஓதியிடும் ஒளியெழுந்தே! உயிரின் மேலாம்
     ஒழுக்கத்தால் உயர்வடைந்தே! புத்தன் கண்ட
போதியிடும் நெறியுணர்ந்தே! ஆள்வோர் நாட்டைப்
     புற்றாக அரிக்கின்ற ஊழல் மாய்ந்தே!
ஊதியிடும் பொய்யகன்றே ஓங்கும் நாளில்
     உள்ளிரவும் புன்னகையைப் புரியும் என்பேன்!

இருள்நிறைந்த பெருந்துயரில் வாடும் மக்கள்
     எற்றசுமை நீக்கியவர்! வாழ்வில் என்றும்
பொருள்நிறைந்த திருமறையை ஓதச் செய்து
     புவிப்பிணியைப் போக்கியவர்! பொல்லாத் தீய
மருள்நிறைந்த மனத்தவரின்  அழுக்(கு) அகற்றி
     மகிழுவழி காட்டியவர்! அன்பின் ஊற்றாம்
அருள்நிறைந்த இறையேசு உதித்த காலம்
     திருஇரவின் புன்னகையே! வணக்கம்! நன்றி!

24.11.2012

5 commentaires:

  1. அற்புதமான வரிகள் ஐயா, ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதும் பொறாமையாக இருக்கிறது. உங்களுடைய தமிழும் நீங்க கையாளும் வார்த்தைகளும் மிக மிக அருமை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சித்திரமும் கை..பழக்கம்! செம்மை சோ்க்கும்
      செந்தமிழும் நா..பழக்கம்! சுமையைத் தாங்கும்
      உத்திரமும் வாரைகளும் கொண்ட வன்மை
      உன்னிதயக் கூட்டுக்குள் வாய்த்தால் நன்மை!
      எத்திறமும் பெற்றிடலாம்! முயற்சி செய்க!
      இவ்வுலகை வென்றவரின் வாழ்வைக் காண்க!
      பத்திரமும் பதிவிட்டே உறுதி தந்தேன்!
      பகலிரவாய்ப் பைந்தமிழை ஆய்க! வெல்க!

      Supprimer
  2. வணக்கம் அய்யா... நலமா? தாங்கள் அழைத்தும் இணையத் தொடர்புகள் அற்ற காரணத்தினால் தான் இந்த கால தாமதமான கருத்துரை...

    யாப்புக் கவிதையை அழகாக இசைத்துள்ளீர்கள். அதுவும் என் தளத்தின் பேரில், படிக்கும்போதே அழகாக உள்ளது...

    கவிதை அழகாக உள்ளது அய்யா. இதனை நீங்கள் வாசித்த காணொளியை இணைக்க இயலுமா? கேட்கும்போது இன்னும் அழகாக இருக்கும் என நினைக்கிறேன்...

    வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சற்றே வருந்தினேன்! தண்டமிழ்ப் புன்னகையார்
      நற்றேன் கருத்தை நயந்திடவே - உற்றதடை
      என்னென எண்ணியே! இன்றளித்த நல்லுரை
      பொன்னென மின்னும் பொலிந்து!

      Supprimer
  3. வணக்கம்
    இரவின் புன்னகையில் முத்தாய்ப்பு
    ஏசு பிறந்ததுதான் .ஆழமான சிந்தனை
    அடியேனும் இரவின் புன்னகையாய் பிறந்தவன்தான்
    இன்று தான் தங்கள் மின் தளம் அகப்பட்டது
    நன்றி
    த.சிவப்பிரகாசம்

    RépondreSupprimer