Affichage des articles dont le libellé est அகவல். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est அகவல். Afficher tous les articles

samedi 21 avril 2018

ஆசிரியப்பா மேடை - 5



ஆசிரியப்பா மேடை - 5

 சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா

அதிராச் சிறப்பின் மதுரை மூதுார்
கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்
வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தோன்
ஆரஞர் உற்ற வீர பத்தினிமுன்
............................................................
முந்தைப் பிறப்பில் பைந்தொடி கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்து

[சிலப்பதிகாரத்தில் சீரெதுகையில் அமைந்த ஆசிரியப்பா அடிகள்]

கோதை வாழ்கவே!

பிறைசேர் வண்ணம் நிறைசேர் நெற்றி!
கெண்டை மீன்கள் சண்டைக் கண்கள்!
தோகை இமைகள் வாகை அழைப்பு!
பூக்கும் எள்பூ மூக்கின் அழகு!
ஆம்பல் இதழோ கூம்பும் உதடு!
பல்லின் வரிசை முல்லைப் பூக்கள்!
பேழை நாக்கு வாழைக் குருத்து!
நாவின் சொற்கள் மாவின் இனிமை!
கன்னம் மீது மின்னும் கோவை!
கோங்கு போன்றே வீங்கும் மார்பு!
தும்பைக் காடாய்ச் செம்மை உள்ளம்!
காந்தள் அழகை ஏந்தும் கைகள்!
சண்பக மென்மை தண்மலர் மேனி!
வஞ்சிக் கொடியை விஞ்சும் மெல்லிடை!
வாழைத் தொடையும் தாழை மணமும்
பெற்ற பாவை! கற்பின் கனலி!
மாமறை மாதின் தாமரைத் தாள்கள்
போதை ஏற்றும்! மேதை யாக்கும்!
பாதை காட்டும் கோதை வாழ்கவே!  

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

அடியெதுகை, சீரெதுகை என எதுகை இருவகையாகும். அடிகளின் முதல் சீர்களில் அமைவது அடியெதுகையாகும்.  ஓரெடியின் சீர்களில் அமைவது சீரெதுகையாகும்.
மேலுள்ள நிலைமண்டில ஆசிரியப்பாவில் அடிதோறும்  முதல் சீரும் மூன்றாம் சீரும் எதுகை பெற்று வந்துள்ளது.
இப்பாடலைச் சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா என்பர்.
சீரெதுகை பெற்று வந்த நிலைமண்டில ஆசிரியப்பா ஒன்றை விரும்பிய பொருளில் பன்னிரு அடிகளுக்குள் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.04.2018

ஆசிரியப்பா மேடை - 4



ஆசிரியப்பா மேடை - 4

 அடிமறி மண்டில ஆசிரியப்பா

தீர்த்தம் என்பது சிவகங் கையே!
ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே!
மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே!

[சிதம்பரச் செய்யுட்கோவை]

தாய்மொழி வளர்த்தல் தமிழர்தம் கடனே!
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே!
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே!
ஆய்மொழி உரைத்தல் அறிஞர்தம் கடனே!

[புலவர் குழந்தை]

பண்ணே மணக்கும் பசுமைப் பொழிலே!
கண்ணே மணக்கும் கவிதைக் காடே!
விண்ணே மணக்கும் விந்தை ஒளியே!
மண்ணே மணக்கும் மாண்பார் தமிழே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

நல்லார் நட்பை நாடிப் பெறுகவே!
வல்லார் நட்பை வளமாய் உறுகவே!
பொல்லார் நட்பைப் போக்கி உயர்கவே!
ஒல்லார் நட்பை உடனே அறுகவே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

மேலுள்ள பாடல்களில் உள்ள எல்லா அடிகளையும் முதல் நடு இறுதியாக மாற்றி அமைத்துப் பாடினாலும் பொருள் மாறாது. அடியை  முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் அடிமறி மண்டல ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.   

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.

நிலைமண்டில ஆசிரியப்பாவைப்போவே அனைத்து அடிகளும் நான்கு சீர்களை கொண்ட அளவடியாக அமைய வேண்டும்.

ஒவ்வோரடியும் பொருள் முற்றுப்பெற்று வரவேண்டும். அனைத்து அடிகளும் ஏகாரத்தைப் ஈற்றாகப் பெற்று முடியும்!

ஓரெதுகையைப் பெற்று இப்பாடல் வந்துள்ளதைப் பெரும்பான்மை காண்கிறோம். [ எதுகை பலவாகவும் இப்பாடல் அமையலாம்]

அடிமறி மண்டில ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

மனப்படும் அடிமுதலாய் இறின் மண்டிலம்
[யா.வி - 74]

நடு ஆதி அந்தத்து
அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே
[யா.கா. 29]

உரைப்போர் குறிப்பின் உணர்வகை யன்றி
இடைப்பால் முதல் ஈறு என்றிவை தம்முள்
மதிக்கப் படாதன மண்டில யாப்பே!
[சிறுகாக்கை பாடினியார்]

கொண்ட அடிமுதலாய் ஒத்திறுவது
மண்டிலம், ஒத்திறி னிலைமண் டிலமே!
[அவிநயனார்]

எவ்வடி யானும் முதல்நடு இறுதி
அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே
[மயேச்சுரம்]

மனப்படும் அடிமுதல் இடைஈறு ஆயின்
அடிமறி மண்டில ஆசிரியம் ஆதலும்..
[இலக்கண விளக்கம் 734]

தலைநடுஈறு
ஆற்றிய பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே.
[வீரசோழியம் 115]

நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி
அடிமறி மண்டிலம் அந்நடைத் தாகி
அடிமா றினும்தான் அழியா நிலைத்தே
[தொன்னுால் விளக்கம் 226]

மூன்றடி முதலா முடிந்தெலா அடியும்
இடைகடைமுதல் ஆயெடுத் தாலும்
ஓசையும் பொருளும் உலவாது வருவன
அடிமறி மண்டில அகவலா கும்மே
[மு.வீ. 26]

'விரும்பிய பொருளில் மூன்றடிகளை உடைய அடிமறி மண்டில ஆசிரியப்பா  ஒன்றைப்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.03.2018

ஆசிரியப்பா மேடை - 3



ஆசிரியப்பா மேடை - 3

இணைக்குறள் ஆசிரியப்பா

ஆட்சி பிடிக்க அலைந்தே வந்தார்!
மாட்சி மொழியை வடித்தார்!
உயிரே! உறவே! என்றார்!
பயிர்போல் பசுமை படைப்போம் என்றார்!
ஊழல் யாவும்
வீழும் என்றார்!
நலமே இங்கு நாடும் என்றார்!
இலவய மாகப் பொருள்கள் ஈந்தார்!
வாங்கிக் கொண்டு வாக்கும் இட்டோம்!
ஏங்கி இன்று துாக்கம் கெட்டேம்!
வாயில் வந்து வாக்குப் பெற்றார்
நாயாய் நம்மை நடத்து கின்றார்!
பொல்லார் இங்கே
நல்லார் போன்றே
காதி அணிந்து காட்சி தருகிறார்!
நீதித் தாயின் நெஞ்சைப் பிளக்கிறார்!
மாற்றம் எந்நாள் வருமோ?
போற்றும் புலமை புலம்பும் இங்கே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

நேரிசை யாசிரியப்பாவின் இடையிடையே குறளடியும் சிந்தடியும் கலந்து இப்பா நடக்கும். நேரிசை யாசிரியப்பாவில் சிந்தடி வருகிறது. சிந்தடியோடு  குறளடியும் வருவதால் இணைக்குறள் ஆசிரியப்பா எனப் பெயர் பெற்றது.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் நாற்சீர் கொண்ட அளவடியாகவும், இடையில் நாற்சீர் அடிகளாகிய அளவடியோடு இருசீராகிய குறளடியும், முச்சீராகிய சிந்தடியும், ஒரோ வழி ஐஞ்சீராகிய நெடிலடியும் கலந்து வரும்.  [ஈற்றயல் அடி முச்சீரை பெற்று வரும்]  

இலக்கண விளக்கம்

முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஈற்றயலடி முச்சீரைப் பெற்று வரவேண்டும்.

இடையில் இருசீர் அடியும் முச்சீர் அடியும் கலந்து வரும்.

ஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]

இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.

ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெறும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] [இருசீர் அடியில் மோனை கட்டாயமில்லை]

மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]

ஈற்றடியின் கடைசி ஏகாரத்தில் முடிய வேண்டும்.  

நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.

இணைக்குறள் ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

[யா. கா - 28]
இடைபல குன்றின் இணைக்குறள்.

இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.
 [யா.வி - 74]

இடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.
[அவிநயனார்]

இடையிடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.
[சிறுகாக்கை பாடினியார்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகி
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.
[காக்கை பாடினியார்]

ஈற்றயல் குறைந்த நேரசை யிணையாம்
ஏற்ற அடியின் இடைபல குறைந்தன.
[மயேச்சுரம்]

அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பின் இணைக்குறள் ஆதலும்.
[இலக்கண விளக்கம் 734]

ஆதியும் அந்தமும் அளவடி யாகிக்
குறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும்
இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.
[முத்து வீரியம் 25]

இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந்து இடையே வரும்.
[வீரசோழியம் 115]

இணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி
இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.
[தொன்னுால் விளக்கம் 225]

'இன்றைய அரசியலார் போக்கை உரைக்கும் வண்ணம் இணைக்குறள் ஆசிரியப்பா  ஒன்றை 12 அடிக்கு மிகாமல்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
17.03.2018

ஆசிரியப்பா மேடை - 2



ஆசிரியப்பா மேடை - 2

நிலைமண்டில ஆசிரியப்பா

ஈற்றயலடி முச்சீராலும், ஏனைய அடிகள் நாற்சீராலும் நேரிசை ஆசிரியப்பா அமையும். அனைத்தடிகளும் நாற்சீரால் நிலைமண்டில ஆசிரியப்பா அமையும். நேரிசை ஆசிரியப்பா ஏகாரத்தால் மட்டுமே முடியும். நிலைமண்டில ஆசிரியப்பா ஏகாரத்துடன் ஓ, ஈ, ஆய், என், ஐ எனவும் முடிவதுண்டு. இற்றைப் பாவலர்கள் நிலைமண்டில ஆசிரியப்பாவை இன்னிசை ஆசிரியப்பா என்றும் வழங்குவர்.

நிலைமண்டில ஆசிரியப்பா!

கண்ணே! மணியே! கன்னல் கனியே!
மண்ணே மயங்கும் மாசறு பொன்னே!
என்னே உன்றன் எழில்மிகு தோற்றம்!
முன்னே கண்டு மூளை இழந்தேன்!
பித்தம் ஏறிப் பிதட்டு கின்றேன்!
முத்தம் ஒன்றே முழுநோய் தீர்க்கும்!
மெல்லிடை தன்னில் மின்னல் தோன்றும்!
சொல்லடை போன்று சுவையை ஊட்டும்!
உயிர்கள் ஒன்றி உவக்கும் நாளில்
பயிர்போல் வாழ்வு பசுமை காணுமே!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

இலக்கண விளக்கம்

இப்பா, அனைத்து அடிகளிலும் நான்கு சீர்களைப் பெற்றிருக்கும்.

ஈசைச்சீர்கள் நான்கும் பயின்று வரும். [தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்]

இரண்டடி ஓரெதுகைப் பெற்று வரும்.

ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை பெற்று வரும். [மூன்றில் அமையவில்லை யெனில் இரண்டாம் சீரில் அல்லது நான்காம் சீரில் மோனை அமையவேண்டும்] 

மூன்றடிக்குக் குறையாமல் எத்தனை அடிகளிலும் வரலாம். [சிற்றெல்லை 3 அடி, பேரெல்லை அளவில்லை]

ஈற்றடியின் கடைசிச் சீர் ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ என்று முடிதல் வேண்டும். ஏகாரத்தில் முடிதலே சிறப்பாகும்.

நேரொன்றிய ஆசிரியத் தளையும், நிரையொன்றிய ஆசிரியத்தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து நடக்கும்.

நிலைமண்டில ஆசிரியப்பாவின் நுாற்பாக்கள்

எல்லா அடியும் ஒத்து நடைபெறுமாயின்
நிலைமண்டிலம்,
[யா. கா - 28]

ஒத்த அடியின தாகியும் ஒற்றிற
நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.
[யா.வி - 74]

ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம்
என்என் கிளவியை ஈறாகப் பெறும்
அன்ன பிறவும்அந் நிலைமண் டிலமே.
[அவிநயனார்]

ஒத்த அடித்தாய்  உலையா மரபொடு
நிற்பன தானே நிலைமண்டிலமே.

என்னென் கிளவியை ஈறாப் பெறுதலும்
அன்னவை பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறுாஉம் நிலைமண் டிலமே.
[சிறுகாக்கை பாடினியார்]

ஒத்த அடியின நிலைமண் டிலமே
என்னெனும் அசைச் சொலும் பிறவும் ஒன்றித்
துன்னவும் பெறுாஉம் நிலைமண் டிலமே.
[மயேச்சுரம்]

நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி.
[மு.வீ .செ. 23]

எல்லா அடியும்ஒத் திறின்நிலை மண்டில
அகவல் என்மனார் அறிந்திசினோரே

'வடலுார் வள்ளல் வழியில் வாழ்கவே' என்ற அடியை ஈற்றடியாக வரும் வண்ணம் நிலைமண்டில ஆசிரியப்பா  ஒன்றை 12 அடிக்கு மிகாமல்  பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.03.2018