dimanche 29 décembre 2013

திருஅருட்பா அரங்கம் - 4

திருஅருட்பா முற்றோதல் அழைப்பிதழ்


வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 23


நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்

எண்ணம் சிதறா எழிலார் படங்களை
வண்ண வலையினில் வை!

மார்பு தெரிகின்ற மாதை அகற்றுக!
சோர்ந்தேன் மனமும் சுருண்டு

11.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

கலையன்பன் தந்த கவிபடித்தேன்! மின்னும்
வலையன்பன் என்பேன் மகிழ்ந்து!

11.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்

காலத்தின் கோலத்தைக் காட்டும் கவிபடித்தேன்!
ஞாலத்தை என்சொல்ல? என்நண்பா! - ஓலமேன்?
ஆலத்தை ஒத்தவா்நாம்! ஆா்த்தெழுந்து செந்தமிழின்
மூலத்தைக் காப்போம் முனைந்து!

மதிசுதா தந்த கவிபடித்தேன்! நெஞ்சுள்
பதிந்தே மிளிரும் பதிவு!

11.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

மரபின் மன்னன் பாரதியை
           
மறவா துரைக்கும் நன்னெஞ்சா்!
முரளி தரனார் தமிழ்ப்பற்றை
           
முழுதும் அறிந்து மகிழ்கின்றேன்!
குரலில் இனிமை பெற்றவா்கள்
           
கொடுக்கும் தேன்தான் இவா்பதிவு!
உரலில் கட்டுண்டு இருந்தவனே!
           
ஒளிரும் கண்ணா! காத்திடுக!!

11.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்யாழ்க் கவிவாணா் இங்கே இசைகின்றார்
நன்யாப்பு தீட்டும் நறுந்தமிழை! - என்வணக்கம்!
சொந்தக் கவிமணக்கச் சூடும் மனமினிக்கச்
சந்தக் கவிமணக்கச் சாற்று!

11.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அழகிய சொற்கள் அணிந்தன ஆடைகள்!
பழமாய் இனிக்கும் படைப்பு

12.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!!

திங்களைப் போற்றித் திருக்குறள் நன்னெறியில்
பொங்கலைப் போற்றியே பொங்கு!

12.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

விழிப்புணா்வை ஊட்டும் வியப்புமிகு பக்கம்
மொழியுணா்வை ஊட்டும் முனைந்து!

12.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நதியின் கரையில் நான்வந்து
     நாயின் கதையைப் படித்திட்டேன்!
விதியின் செயலோ? என்றெண்ணி
     விருத்தம் ஒன்று படைக்கின்றேன்!
மதியின் கரையை மீறுகிற
     மழைபோல் பதிவைப் பதித்துள்ளீா்!
ததியின் குளிர்ச்சி தருகின்ற
     தமிழை நாளும் வழங்குகவே!

12.01.2013

--------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இரண்டு பக்கம் விளக்கேற்றி 
            இன்பத் தமிழால் ஒளிதந்தீா்!
திரண்டு வந்த நினைவுகளைத்
           
தேனில் குழைத்துச் சுவைசெய்தீா்!
உருண்டு பிரண்டு கிடந்தாலும்
           
உன்போல் வாய்ப்புக் கிடைத்திடுமோ?
அரண்டு மிரண்டு நிற்கின்றேன்!
           
அருமை மின்னல் வரிகளிலே!

12.01.2013

--------------------------------------------------------------------------------------
 

samedi 28 décembre 2013

விண்ணின் மைந்தன்



விண்ணின் மைந்தன்

ஓலைக் குடிலில் அருட்கர்த்தர்
     உலகைக் காக்கப் பிறந்துள்ளார்!
காலைக் கதிர்போல் எவ்விடத்தும்
     கருணை கமழ நிறைந்துள்ளார்!
மாலை ஏந்தி மன்றாடு!
     மனமே ஒன்றிப் புகழ்பாடு!
சாலை யாவும் பூத்தாடும்
     சோலை யாக மணந்திடுமே!

பாவச் சுமையைச் சுமந்திடவே
     பரமர் யேசு பிறந்துள்ளார்!
ஆவல் கொண்டே உலகுயிர்மேல்
     அன்பை அருளைத் தந்துள்ளார்!
தாவல் இன்றி ஓர்நிலையில்
     தேவர் உருவை எண்ணிடுக!
நாவால் நாளும் சீர்பாடி
     மூவா இனிமை கண்டிடுக!

விண்ணின் செல்வர்! மரி..வயிற்றில்
     விளைந்த செல்வர்! அவர்உதித்த
பெண்ணின் பெருமை பேசுகையில்
     பெருகிப் பாயும் பேரின்பம்!
மண்ணின் மாசைத் துடைத்திடவே
     மழைபோல் வந்த திருக்கர்த்தர்!
கண்ணின் காட்சி அவரானால்
     கருத்தின் மாட்சி ஒளிர்ந்திடுமே!

பொய்யுள் புரளும் இப்புவியை
     மெய்யுள் புரட்டிப் போட்டவரை
மெய்யுள் நாமும் தரித்திட்டால்
     மேன்மை யாவும் அடைந்திடலாம்!
வெய்யில் கூடக் குளிராகும்!
     விரிநீர் கூட வழியாகும்!
செய்யும் செயல்கள் செம்மையுறத்
     தேவர் பெயரைச் செப்புகவே!

விண்மீன் தோன்றி வழிகாட்டும்
     விடிவை நல்கும் இடத்திற்கு!
தண்மீன் நீந்திக் களிப்பதுபோல்
     சார்ந்து நின்றோர் மகிழ்ந்தனரே!
கண்ஏன்? வாய்ஏன்? நம்செவிஏன்?
     கர்த்தர் உருவைக் கண்டிடவும்!
பண்தேன் பாடிக் கேட்டிடவும்!
     பரம பிதாவே அருளுகவே!

சிலுவை சுமந்து நம்கர்த்தர்
     உலகைச் சுமந்து நின்றாரே!
மலரை நிகர்த்த திருவடியில்
     வன்மை ஆணியைக் கொண்டாரே!
நிலவைப் பிடித்துச் சிறையிலிட
     நினைத்தல் சரியோ? மீண்டுமவர்
நலனை நல்க உயிர்பெற்றார்!
     நாதர் மாண்பைப் போற்றுகவே!

தலையில் முள்ளால் அணிதாங்கித்
     தரையைத் தாங்கும் அருட்தந்தை!
கலையில் முழ்கும், கனித்தமிழின்
     கவியில் முழ்கும் உளத்தைப்போல்
சிலையில் மின்னும் அவர்உருமுன்
     சிந்தை செலுத்திச் செபித்திடுக!
மலையில் தோன்றும் நீராக
     மனத்துள் தோன்றும் மகிழ்வூற்றே!

அந்த இறுதி நாள்களிலே
     அடைந்த துயருக்(கு) அளவுண்டோ?
எந்தப் பொழுதும் அவருள்ளம்
     இந்த உலகை எண்ணியதே!
தந்த உரைகள் நமக்குள்ளே
     தங்கச் செய்தால் தவமேனோ?
சொந்த மாகத் தூயவரைச்
     சூடும் வாழ்வு சுடர்ந்திடுமே!

இறையின் ஆட்சி உலகெங்கும்
     எண்ணில் அடங்காச் செயலாற்றும்!
குறையும் போக்கில் சிந்தித்தால்
     கொள்ளை அழகைக் காண்பாரோ?
நிறையும் இனிமை நிலைத்திடவே
     நினையும் புனிதர் திருச்செயலை!
மறையின் தலைவர் நம்கர்த்தர்
     மாண்பை வாழ்த்திப் பாடுகவே!

அன்பே அவரின் வழியென்பேன்!
     அருளே அவரின் விழியென்பேன்!
இன்பே நல்கி நலஞ்சேர்த்தே
     இனிக்கும் அவரின் மொழியென்பேன்!
குன்றே உருகும் அருட்பொழிவில்
     குளித்தால் நீங்கும் பழியென்பேன்!
இன்றே அவரின் பிறந்ததினம்
     இயங்கும் புவியே கொண்டாடு!

25.12.2013

jeudi 26 décembre 2013

யேசு பிறந்தார்!



கிருத்துப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


எடுப்பு

யேசு பிறந்தார் - எங்கள்
யேசு பிறந்தார்!
                                 (யேசு)

தொடுப்பு

வீசும் காற்றாக!
விரிநீர் ஊற்றாக!
விண்ணின் ஒளியாக!
மண்ணின் மகிழ்வாக!
                                 (யேசு)

முடிப்பு

கட்டில் தொட்டில் இல்லாமல் - தழைக் 
கொட்டில் உள்ளே நற்றேவன்!
கொட்டும் பனியின் காலத்தில் - சிறு
குழந்தை யாக விண்தூதன்!
                                                                  (யேசு)

உலகை மாற்றிப் போட்டிடவும் - உயர்
உண்மை நெறியை ஊட்டிடவும்!
பலகைத் தொழிலில் ஈட்டிடவும் - புவி 
பாவம் அனைத்தும் ஓட்டிடவும!
                                                                  (யேசு)

பாரின் சுமையைத் தரித்திடவும் - நற்
பண்பை அன்பை வடித்திடவும்!
வேரின் கனிபோல் இனித்திடவும் - ஒண்
சீரின் மறையை அளித்திடவும்!
                                                                  (யேசு)

காற்றில் நீந்திப் பாடுகவே - தேன்
ஆற்றில் நீந்தி ஆடுகவே!
போற்றி கவிதை சூடுகவே - தொண்டு
ஆற்றி அருளைக் கூடுகவே!
                                                                  (யேசு)

25.12.2013

mercredi 25 décembre 2013

திருமண மண்டபம் - பகுதி 2



இராகவனின் வில்லின் விளைவு
'திருமண மண்டபம்'

திண்மைமிகும் இராகவனின் வில்லால் வந்த
     திருமணமண் டபம்தன்னைப் பாட வந்தேன்!
உண்மைமிகு சொல்லெடுத்துச் சொல்வேன்! வல்வில்
     ஒடித்ததனால் விளைந்திட்ட விளைவை இங்கு! 
தண்மைமிகு காதலிலே உயிர்கள் ஒன்றும்
     தகைசான்ற நாடகத்தைச் சொல்லச் சொல்ல
ஒண்மைமிகு செந்தமிழே பெருகிப் பாயும்!
     உளம்நனைந்து உயிர்நனைந்து பாடும்! ஆடும்!

சீதையவள் அம்புவிழி கூர்மை கண்டு
     சிவன்தந்த பெருவில்லும் உடைந்த தென்பேன்!
கோதையவள் பார்வையினால் தொடுத்த அம்பு
     கோதண்ட ராமனையே வென்ற தென்பேன்!
பேதையவள் என்செய்வாள்? பெருமான் மீது
     பெருங்காதல் கொண்டிளைத்தாள்! இராமன் உற்ற
போதையவள் என்றுணர்த்தும் கம்பன் மாட்சி!
     பொலிந்திருந்த திருமணமண் டபமே சாட்சி!

திருமணத்தை எதிர்ப்பார்த்து நிற்போர் நெஞ்சுள்
     தேன்பாய்ச்சம் இத்தலைப்பு! வாழ்வில் சேர்ந்தும்
ஒருமனத்தை உணராமல் சண்டை யிட்டே
     உடைப்பவர்க்கோ இத்தலைப்பு வெறுப்பு! நாளும்
பெருமனத்தைப் பெற்றுவக்கும் இதயக் கூட்டில்
     பிறந்தாடும் நினைவலைகள்! ஒன்றாய் ஒன்றும்
அருமனத்தை அடைந்தவர்தாம் இராமன் சீதை!
     அவர்மணமா மண்டபத்தைக் காணு வோமே!

ஈருயிரும் ஒன்றாகும்! இனிமை காணும்
     இளமையெனும் பூந்தென்றால் வீசும்! பெற்ற
சீருயரும்! சிரிப்பலையில் காதல் சிந்தை
     சிலிர்த்துயரும்! தேன்சுரந்து பாயும்! உற்ற
பேருயரும்! பெரியோர்தம் வாழ்த்தும் ஓங்கும்!
     பெற்றவர்தம் உயங்குளிரும்! மதிலைச் செல்வி
காருயரும் காகுத்தன் கைகள் பற்றக்
     கமழ்ந்திருக்கும் திருமணமண் டபத்தைக் காணீர்!

ஈசனவன் தன்னுடலில் பாதி வைத்தே
     இவ்வுலகில் பெண்ணுரிமை காத்தான்! சீனி
வாசனவன் தன்மார்பில் மங்கை வாழ
     வழிவகுத்துப் பேரின்பம் கண்டான்! ஆக்கும்
நேசனவன் பிரம்மாவோ நாவில் பெண்ணை
     நிலைத்திருக்கச் செய்திட்டான்! பிரிந்து வந்த
கேசனவன் சீதையுடன் சேர வைத்த
     கீர்த்திமிகு திருமணமண் டபத்தைக் காணீர்!

பூமழையும் பொழிந்ததுவே! இராமன் வண்கை
     பொன்மழையைப் பொழிந்ததுவே! சந்தம் சிந்தும்
பாமழையும் பொழிந்ததுவே! உலகே வந்து
     பாசமழை பொழிந்ததுவே! மோலோர் தந்த
மாமறையும் பொழிந்ததுவே! முரசின் ஓசை
     வான்மழையாய்ப் பொழிந்ததுவே! வானோர் வாழ்த்தாம்
மாமழையும் பொழிந்ததுவே! இராமன் சீதை
     திருமணமா மண்டபத்தின் இனிய காட்சி!

கண்கொள்ளாக் காட்சியென மண்ட பந்தான்
     கமழ்ந்ததுவே! வந்திருந்த மக்கள் கூட்டம்
மண்கொள்ளா நிலையெக்கும்! மகிழ்ச்சி பொங்கி
     மனங்கொள்ளா வழியேகும்! மறையோர் வாழ்த்தும்
விண்கொள்ளா வண்ணத்தில் ஒலிக்கும்! பார்க்கும்
     விழியெல்லாம் நன்னயமே விளைந்தி ருக்கும்!
பண்கொள்ளா வண்ணத்தில் படர்ந்தே ஓங்கும்
     திருராமன் சீதையவள் மணநாள் சீரே!

பகைமுடிக்கும் இராகவனின் வில்லின் மேன்மை
     பழிமுடிக்கும்! பயன்விளைக்கும்! மிதிலை நாட்டின்
மிகைமுடிக்கும் என்றெண்ணி முனிவன் சொன்னான்
     வேள்வியையும் காண்பார்!பின் வில்லும் காண்பார்!
தகைவிளைக்கும் மலர்ச்செல்வி மேனி வண்ணம்
     தாமரைப்பூங் கண்ணானைத் தாக்க, ஏக்கத்
தொகைவிளைக்கும்! தொடர்பளிக்கும்! பிரிந்தோர் கூட
     வகையளிக்கும் வரிசிலையை வாழ்த்தாய் நெஞ்சே!

மண்ணுலகு விண்ணுலகாய் மின்ன! மாய
     மணிவண்ணன் ஆதவனாய் மின்ன! போற்றும்
பெண்ணுலகு வியந்துருகிப் பெருமை கொள்ளக்
     பேரழகாய்ப் பெருந்தேவி மின்ன! வாழ்த்திப்
பண்ணுலகு பல்லாண்டு பாடி மின்ன!
     பரவுதமிழ் பாங்குடனே பாரில் மின்ன!
கண்ணுலவக் கருத்துலவக் காதல் பொங்கக்
     கமழ்ந்திருந்த மண்டபத்தை வாழ்த்தாய் நெஞ்சே!

உலகளந்த பெருமானின் திருத்தாள் மெல்ல
     உயர்வளர்ந்த சீதையினை நாடிச் செல்ல
உயர்வளந்த எண்ணங்கள் கோடி! கோடி!
     உயிரளந்த வண்ணங்கள் கோடி! கோடி!
வளமளந்த வண்டமிழில் கம்பன் தந்த
     மரபளந்த விருத்தங்கள் காலம் வெல்லும்!
நலமளந்த நாரணனின் மண்ட பத்தை
     நானுரைத்தால் எளிதாமோ? வணக்கம்! நன்றி!

புதுவைக் கம்பன் விழா 12.05.2012