mercredi 12 décembre 2012

மகாகவி பாரதியார் [பகுதி - 2]



பாட்டுக்கோர் புலவன் பாரதி


போதிமரத் தத்துவங்கள் வெறுமை யாமோ?
            புகழ்மிக்க ஏசுவழி சிறுமை யாமோ?
காதிதனைக் கண்டமகான் கொள்கை யாவும்
            காற்றினிலே பறக்கின்ற பட்ட மாமோ?
சாதிமத சமயமெலாம் நமைப்பி ரிக்கத்
            தந்நலத்தார் செய்தசதி வேலை யாகும்!
ஆதியிலே இல்லாத கொடுமை தன்னை
            அழிக்கின்ற வெடிமருந்தாம் உன்றன் பாட்டே!

கலப்படங்கள் உன்கண்ணில் பட்ட துண்டோ?
            கடைகளிலே விலைப்பட்டி இருந்த துண்டோ?
புலப்படாக் கொலைகொள்ளை நடந்த துண்டோ?
            பொய்சூது கொடிகட்டிப் பறந்த துண்டோ?
நிலத்திற்கும், நீருக்கும், மின்னொ ளிக்கும்
            நெடிதுயரு கின்றவரி போட்ட துண்டோ?
வலுத்தார்க்கு வரிபோட்டு, வகையற் றார்க்கு
            வரிவிலக்குச் செயமீண்டும் வரமாட் டாயா?

கண்ணொத்த செந்தமிழில் கவிகள் தந்த
            கவிக்கோவே! நீவடித்த வைரப் பாட்டால்
'பெண்ணடிமை செய்யாதீர்! மாதர் தம்மைப்
            பேரிழிவு பண்ணாதீர்!' என்று சொன்னாய்!
புண்ணுற்ற நெஞ்சத்தார் கேட்டா ரில்லை
            புவியிலவர் திருந்தும்நாள் எந்த நாளோ?
விண்ணொத்த விiடுதலையை வேண்டி நின்ற
            வீரமிகு பாரதியே மீண்டும் வா!வா!

ஆரோடும் அச்சமின்றிப் பேச வேண்டும்!
            அருளோடும் அன்புமழை வீச வேண்டும்!
ஏரோடும் மேதினியில் இன்பம் பொங்கும்!
            இணையில்லாச் செல்வங்கள் அங்கே தங்கும்!
சீரோடும் உழவினது பெருமை சொன்னாய்!
            தெருவெல்லாம் தொழில்பெருக முழக்கம் செய்தாய்!
போராடும் சிங்கமென வீரம் கொண்ட
            புரட்சிமிகு பாரதியே வெற்றி கண்டாய்!

முற்போக்குக் கொள்கைதனை வாழ்வில் கொண்ட
            முத்தமிழின் பாவலனே! உன்னைக் கண்டு
பிற்போக்கு மனத்தார்கள் வெட்கிப் போனார்!
            பிரிவினையார் பேசுதலை மறந்தே விட்டார்!
தற்போது பாரதந்தான் தலைநி மிர்ந்து
            தன்னிறைவு பெற்றதுன்றன் ஆசி யாலே!
பொற்புடைய செந்தமிழை உயிராய்க் காத்த
            புரட்சிப்பா மணியேஉன் நற்பேர் வாழ்க!

2 commentaires:

  1. தரமான படைப்புகள்
    தந்ததால் உங்களுக்கு
    தமிழுக்கு அணிகலன்
    தந்துரைத்து சேர்த்ததால்
    வளமான தமிழ் வாழ்த்தில்
    வணங்குகிறேன் நன்றி

    RépondreSupprimer
  2. பாரதியின் புகழ் பாடிய கி.பாரதி தாசன் வாழ்க! வாழ்க!

    RépondreSupprimer