dimanche 30 septembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 3]




நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள் 

வணக்கம்!
 
மல்லன் அளித்த மணிக்கவிதை என்னெஞ்சை
அல்லும் அழகை அளித்ததுவே! - வெல்லெமெனச்
சொல்லும் சுவையைச் சுரக்கின்ற செந்தமிழைச்
செல்லும் வழியெலாம் செம்பு!

16.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சின்னச் சின்னச் சிதறல்கள்
            செந்தேன் மழையைப் பொழிந்தனவே!
என்ன என்னக் கற்பனைகள்
            எண்ண எண்ணச் சுவைபெருகும்!
பின்னப் பின்னச் சரமாகும்
            பீடாய் அகிலா கவிகண்டேன்
தன்ன தான தானதன
            தமிழே மகிழ்ந்து விளையாடு!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பெண்ணின் பார்வை வரமன்றோ!
      பேசும் விழிகள் பேறன்றோ!
கண்ணின் கணைகள் பட்டவுடன்
      கன்னல் கவிஞன் உயிர்பெறுவான்!
மண்ணின் செல்வம் அத்தனையும்
      மங்கை அழகுக் கீடாமோ?
விண்ணின் மழைபோல் கவிபாடும்
      கவிஞா் விச்சு விஞ்சுகவே!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தனிமரம் என்றே எண்ணித்
            தவித்திடும் நெஞ்சே கேளாய்!
கனிமரம் அன்றோ உன்றன்
            கவிமணம் பூக்கள்! தோழா
இன்மரம் செடிஎன் றெண்ணி
            ஏங்கிட வேண்டாம்! காலைப்
பனிமரம் போன்றே வண்ணப்
            பறவைகள் பாட வாழக!

17.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பக்கைக் கூண்டு பார்த்ததுண்டு!
      பொக்கை வாயைப் புகழ்ந்துண்டு!
சுக்கைக் காய்ச்சிக் குடித்ததுண்டு!
      சுவைத்தேன் கதைகள் படித்ததுண்டு!
தக்கைச் செயல்கள் புரிபவரைத்
      தடுத்துத் திருந்த வைத்ததுண்டு!
அக்கை என்று சிலபேரை
      அன்பாய் அழைத்து மகிழ்ந்ததுண்டு!
கொக்கைக் கண்டு! குயில்கண்டு
      கோலக் கவிதை படைத்ததுண்டு!
சக்கை யாக என்னுயிரைச்
      சரியாய்ப் பிழிந்த பெண்ணுண்டு!
எக்..கை என்னை எதிர்த்தாலும்
      எலும்பை முறித்து எறிந்ததுண்டு!
மெக்கைப் பதிவா? தமிழ்பூக்கும்
      மொக்கை நிகா்த்த படைப்பன்றோ!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சிட்டுக் குருவி தான்என்று
      சிரித்த வண்ணம் உள்வந்தேன்!
கட்டுக் கட்டாய்ச் சரவெடிகள்
      காக்கும் வலையின் திறம்கண்டேன்!
முட்டும் பகையைத் துாளாக்கி
      முன்னைத் தமிழா முன்னேறு!
விட்டுப் போக மனமின்றி
      விரும்பி விருத்தம் படைக்கின்றேன்!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இருளை அகற்றிச் சிறுவொளியை
      இதயம் பெற்றால் துயரோது?
மருளை அகற்றும் மதியொளியை
      வார்க்கும் துாயோன் திருவடியே!
அருளைப் போற்று! அகமொளிரும்!
      அன்பை ஊட்டு! இறைத்தொண்டு!
உருளை போன்று பிறவிவரும்!
      உயர மலிக்கா தமிழ்காண்க!

19.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இயன்றதைச் செய்வோம்! என்றே
            எழுதிய சொற்கள் கண்டேன்!
உயா்ந்ததைச் செய்யும் மோகன்
            உருவினில் மாற்றம் ஏனோ?
பயந்ததை நோக்கும் பார்வை
            பசுந்தமிழ் வாழ்வில் உண்டோ?
நயந்ததை எண்ணிப் பாராய்!
            நறுந்தமிழ் நம்மின் வாழ்வு!
20.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழ்வண்ண நற்றிரட்டைச் சற்றேநான் பார்த்தேன்!
உமியென நம்பகையை ஊதுகின்ற பக்கங்கள்!
ஈழ நிலமெங்கும் வீரவிதை! மீண்டும்நாம்
சூழ எழுவோம் சுடா்ந்து

20.09.2012

------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அழகிய மரணம் என்றே
      அளித்துள கவிதை கண்டேன்!
பழகிய நாளாய் நானும்
      பார்த்திடா அடிகள்! தேனில்
முழுகிய தமிழை உண்டு
      முணுங்கிடும் விருத்தம்! சீா்கள்
விழுமிய வலையைக் கட்டும்
      நெற்கொழு தாசன் வெல்க!

20.09.2012

samedi 29 septembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 2]




நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்

வணக்கம்

நம்பிக்கை வலுபெற்றால் வெற்றி மாலை
      நமதடியைத் தேடிவரும்! வானம் முட்ட
எம்பிக்கை துாக்கிடுக! ஒருநாள் உன்றன்
      எண்ணங்கள் நிறைவேறும்! வீணே மண்ணில்
அம்மிக்கல் போலிருந்தால் அக்கம் பக்கம்
      அசைந்துவரும் புழுகூட அழகு காட்டும்!
இம்பி..கை சோராமல் துணிந்து நிற்பாய்!
      நம்பிக்கை! தும்பிக்கை வன்மை தோழா!

11.09.2012

------------------------------------------------------------------------------------------------------

தோழி வணக்கம்! வாழ்த்துகிறேன்!
      தொடா்ந்து எழுது! திறன்வளரும்!
ஆழி சூழ்இவ் வுலகினியே
      அன்னைத் தமிழே முதன்மொழியாம்!
வாழி என்று செந்தமிழை
      வாழ்த்திக் களித்த பாரதியை
நாழிப் பொழுது நாம்நினைத்தால்
      நரம்பில் ஊறும் தமிழுணா்வே!

11.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

நற்காதல் வெண்பா நறுமணச் சோலையெனப்
பொற்காதல் வாழ்வைப் புனைந்ததுவே! - சொற்காதல்
நல்கும் சுடா்தமிழை நாடும் சிவகுமரன்
பல்கும் படா்தமிழைப் பார்!

ஈற்றடி யாவும் இனிமையை ஈந்தனவே!
போற்றடி பொங்கும் புகழ்புலமை! - சாற்றுகிறேன்
ஊற்றடி நீா்குளிரும்! உண்மைச் சிவகுமரன்
ஏற்றடி சீா்குளிரும் ஏத்து!

12.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

பாண்டவரைக் காத்திட்ட பரமன் கண்ணன்
            படமிட்ட கலைகண்டு வணங்கும் நெஞ்சம்!
ஆண்டவரை ஆண்டியரை உய்யச் செய்யும்
            அரும்படைப்புப் புண்ணயத்தைத் தேடி என்பேன்!
மாண்டவரைக் கண்டுருகும் மனமே! மெய்யின்
            வடிவில்லா ஒளிப்பிறப்பை எண்ணிப் பக்தி
பூண்டவரைச் சரணடைக! உண்மை காண்க!
            புழுபூக்கும் பல்பிறப்புப் போகும் அற்றே!

12.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

பிறவிகள் வேண்டாம் என்று
      பித்தனை வேண்டி நிற்கும்
அறவியல் பொதிந்த சொற்கள்
      அகத்தினில் பதிந்த தென்பேன்!
மறவியல் மனத்துள் ஊறும்
      மாண்கொளிர் தமிழா! ஏனோ
துறவிகள் கூட இன்று
      துணிகிறாய் வாழ்க்கை வாழ!

14.09.2013

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

கம்பனைப் போற்றும் கவிஞன்நான்! வந்தவுடன்
வம்பனைப் போன்று வதைக்க மனமில்லை!
எந்தமிழ் மக்கள் இனிய நலமெய்த
தந்ததமிழ் தாங்கும் தலை!

14.09.2012

இனிய நண்பருக்கு வணக்கம்
வரவேற்று மகிழ்கின்றேன்

உங்கள் வலையைக் கண்ணுற்றேன்
சிறந்த கவிஞருக்கான முத்திரையை அனைத்துப் பக்கங்களிலும் உள்ளன.

நம்தாய்த்தமிழ் மொழியில் நாம் கற்றது கொஞ்சம்!
கற்க வேண்டியவைக் கடலையும் விஞ்சும்

இனிய நண்பா் சிவகுமாரன்
            இங்கே அளித்த கருத்துரையில்
கனியின் சுவையை நான்பெற்றேன்!
            கவிஞன் என்ற உரமுற்றேன்
பனியின் பொழிவை இந்நாடு
            பார்க்கத் தொடங்கும் காலமிது!
இனியென் பாட்டில் குளிருக்கும்
            இதயக் கூட்டில் பதித்திடுவீா்!

14.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

புதிய கவியில் காதலினைப்
      புனைந்த அழகைச் சுவைக்கின்றேன்!
பதியம் போட்டே இதயத்துள்
      படா்ந்த காதல் கொடிமலா்ந்தால்
பதிய செய்யும் இயந்திரமாய்ப்
      பதிக்கும் வண்ணக் கவிதைகளை!
மதிய கோடை என்செய்யும்
      மனமே குளிர்செய் பெட்டியடா!

வலைப்பதிவைக் கலைப்பதிவாய்
வடிக்கின்ற அன்பீா் வாழ்க! வளா்க!

நீங்கள் என் வலையில் பதித்த கருத்தை உணா்ந்தேன்
நல்ல கருத்தாழமும் வல்ல கற்பனை வளமும்
இனிய தமிழ்ச் சொல் ஆளுமையும் இருந்தால் போதும் மரபுக் கவிதை பாடலாம்

என் வலையைத் தொடா்ந்து படித்துவரவும்
மரபின் இலக்கணத்தை எழுத உள்ளேன்
படித்து அதன் வண்ணம் கவி பாடி எனக்கு அனுப்புங்கள், செம்மை செய்து அனுப்பி வைப்பேன்
நல்ல தமிழ்க் கடடுரைப் பகுதி 10 நிறைவுற்றதும்
அதைத் தொடா்ந்து வல்லின வம்புகள் என்ற கட்டுரை தொடரும்! கவிஞா்களுக்கு அக்கட்டுரை மிக மிகப் பயன்தரும்

15.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்

தென்கோடித் தீந்தமிழன்! தமிழின் தொண்டன்!
            திறன்கோடி மகேந்திரன்தன் வலையைக் கண்டேன்!
பொன்கோடி கொண்டதுபோல் சொற்கள் யுாவும்
            பொருள்கோடி தந்தனவே! வாழ்த்து கின்றேன்!
தன்கோடி தேடாமல் பணிகள் ஆற்றித்
            தமிழ்கோடி நலங்காணச் செய்யும் நண்பா!
இன்கோடிச் சீருடைய நம்மின் அன்னை
            எழிற்கோடி வழங்கட்டும்! இனிதே வாழ்க!

15.09.2012

------------------------------------------------------------------------------------------------------ 

ஐயா வணக்கம்!

கருத்துக் கிங்கே தடைபோடக்
      கவிஞன் எனக்கு மனவருமோ?
குருத்துச் சொற்கள்! குறைசொற்கள்!
      கொடுமை கொடுக்கும் கொலைச்சொற்கள்!
இருக்க வேண்டாம் என்றெண்ணி
      இட்டேன் இந்த முறையினையே!
வருத்தம் வேண்டாம் இதற்காக!
      வழிகள் செய்வேன் விரைவினிலே!

உலகம் தமிழை ஓதிடவே
      உழைக்கும் தமிழன்! தமிழ்த்தாய்
திலகம் போன்றே படைப்புகளைத்
      தீட்டி வைப்பேன் திறன்பெறவே!
குலவும் தமிழை வாழ்வென்று
      கொள்கை கொண்டோர் திருவடியை
உலவும் பொழுதும், என்னான்மா
      உறங்கும் பொழுதும் வணங்கிடுமே!

15.09.2012
------------------------------------------------------------------------------------------------------ 

jeudi 27 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 12 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 12]


மான்போன்று பார்க்கின்றாள்! மதுவை அள்ளி
     மலா்போன்று சோ்க்கின்றாள்! நீந்தும் வண்ண
மீன்போன்று என்னடத்தில் ஆட்டம் காட்டி
     வேல்போன்று பாய்கின்றாள்! நினைவில் என்றும்
தேன்போன்று சுவைக்கின்றாள்! இரவில் ஏக்கத்
     தீ..போன்று கொதிக்கின்றாள்! குழலில் ஓடும்
பேன்போன்று அவள்தலையின் மணத்தில் வாழும்
     பேறொன்று கிடைத்தாலும் போதும்! போதும்!! 56

எப்படியும் அவளோடு சேர வேண்டும்!
     என்னதடை வந்தாலும் எதிர்க்க வேண்டும்!
இப்படியும் ஒருநெஞ்சம் காதல் பாடி
     ஏங்கியதை இவ்வுலகம் ஏத்த வேண்டும்!
அப்படியும் அவளின்றி முடிந்தால் வாழ்வு
     அடுத்துவரும் பிறவியிலும் தொடர வேண்டும்!
தப்படியும் தவறடியும் இல்லா தோதும்
     தமிழடியான் தந்தகவி நிலைக்க வேண்டும்! 57

மலைத்தேனீ சேகரித்த தேனை, வண்ண
     மலா்மங்கை வாய்மலரும் சொற்கள் நல்கும்!
கலைத்தேனீ நானாகிக் காதல் கன்னி
     கட்டழகைப் பருகுவதால் வாழ்நாள் பல்கும்!
தலைத்தேனீ கூடியதும் இறப்பை ஏற்கும்!
     தமிழ்த்தேனீ கூடியதும் கவிதை பூக்கும்!
கொலைத்தேனீ பார்வையினால் என்னை மெல்லக்
     கொல்கின்ற கோகுலமே! கோபம் நீக்கு! 58

நீ..அங்கே! நான்...இங்கே! காதல் நெஞ்சின்
     நினைவலையைத் தடுப்பார் யாரோ? கண்ணே
வா..அங்கே என்றென்னை அழைக்கும் நெஞ்சம்!
     மலா்மஞ்சச் சுகக்கனவில் மனங்கள் கொஞ்சும்!
தா..அங்கே இருந்தபடி முத்தம் ஒன்று!
     தானாக எனக்குள்ளே இன்பம் பாயும்!
பா..அங்கே மழையாகப் பொழியும் வண்ணம்
     பாடுகிறேன் விருத்தங்கள்! குளிர்க உள்ளம்! 59

அணுஅணுவாய் அவளழகைச் சுவைத்த நெஞ்சுள்
     அலைஅலையாய் தொடா்ந்துவரும் ஆசை! ஏக்கம்!
கணுகணுவாய்ச் சுவைதேங்கி கமழும் எண்ணம்
     கனிகனியாய்க் கற்பனைகள் காட்டும் வண்ணம்!
அணைஅணையாய்க் கட்டுகின்ற உறுதி யாவும்
     அவளழகைக் கண்டவுடன் துாளாய்த் போகும்!
கணைகணையாய் வீசுகின்ற கண்கள் காணக்
     கரைபிரண்டு ஓடிவரும் கவிதை வெள்ளம்! 60
                                      (தொடரும்)

mercredi 26 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 11 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 11]

கண்ணனிடம் கமழ்கோதை காதல் கொண்டு
     கலந்திட்ட நிலையானேன்! கண்ணே உன்றன்
அண்ணனிடம் இருந்தபகை முற்றும் போச்சி!
     அளவில்லா உன்னழகை அளக்கும் மூச்சி!
திண்ணனிடம் தீராத ஆட்டம் காட்டும்
     திருச்செல்வி மீன்விழிகள்! படைக்கும் மாய
வண்ணனிடம் தாழ்பணிந்தே ஒன்று கேட்பேன்
     மங்கையிவள் நடந்துவரும் மண்ணாய்த் தோன்ற! 51

சீராட்டச் சொல்லின்றி நெஞ்சம் தேடும்!
     சின்னவளின் திருவுருவே கண்முன் ஆடும்!
தேரோட்டம் கண்டதுபோல் இனிமை கூடும்!
     தேன்குடித்து மயங்கிவரும் வண்டாய்ப் பாடும்!
நீரோட்டம் போல்படைத்த கவிகள் பார்த்து
     நினைவெல்லாம் நேரிழையின் இடமே ஓடும்!
போராட்ட வாழ்வினிலும் புனையும் பாட்டுப்
     புதிதெனவே பிறந்ததுபோல் உணா்வைச் சூடும்! 52

படைதவனின் உளம்முழுதும் காதல் மேவப்
     பாவையிவள் பிறந்தாளோ? மோக ஆற்றை
உடைத்தவனின் கருணையினால் ஒளிரும் தங்க
     உடல்பெற்றுச் சிறந்தாயோ? அமுதப் பானை
கிடைத்தவனின் பேரின்பச் சுவையைப் போன்று
     கிளா்ந்தாடும் என்மனமே! இவள்பால் என்னை
அடைத்தவனின் திருவடியை வணங்கு கின்றேன்!
     அழகுலகில் விளையாட வைத்த தாலே! 53

இருவிழிகள் வேலேந்தும், இளமை யாட்சி
     ஈடின்றி நடப்பதனால் காவல் செய்ய!
தரும்மொழிகள் தேனேந்தும், குளிர்ந்த பொய்கை
     தழைத்தொளிரும் தாமரையை முகமாய்க் கொண்டு!
வரும்வழிகள் பொன்னேந்தும், கதிர்கள் தொட்டு
     வஞ்சியிவள் திருவுருவம் வடிவாய் மின்ன!
பெரும்பழிகள் புரிந்தேனோ? பெண்ணே உன்றன்
     முப்படைகள் அணிவகுத்து என்னைத் தாக்கும்! 54

கலைவாணி இசைமீட்டும் வீணை போன்று
     கட்டழகுத் திருமேனி! கவிநான் தேனீ!
மலைஞானி ஈசனுடல் பாதிப் பெண்ணே!
     மாதுளம்போல் என்முழுதும் அவளே உள்ளாள்!
சிலைமேனி பளபளப்பு! சிந்தை அள்ளும்
     சித்திரமாய் மினுமினுப்பு! உலகைக் காக்க
அலைமேனி அரிதுயிலும் அரங்கா! என்றும்
     அவள்மேனி நான்துயில வரங்கள் தாராய்!! 55
                                             தொடரும