vendredi 31 janvier 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 26

நண்பா்களின் வலைப்பூக்களில்

என் கவிப்பூக்கள்

வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநாளே!
எங்கும் அளிப்பாய் இசைத்து!

14.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பாட்டும் படமும் படைத்தசுவை நெஞ்சத்துள்
கூட்டும் தமிழைக் குவித்து!

14.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஏக்கப் பொங்கல் சமைத்தனையே!
         என்றன் கண்கள் அழுதனவே!
தாக்கும் கொடிய தடையுடைத்துத்
         தமிழைத் தாங்கி உயா்ந்திடுவோம்!
ஊக்கப் பொங்கல்! தமிழ்ஒன்றே!
         உண்மைப் பொங்கல் தமிழ்ஈழம்!
போக்கும் பொங்கல் போகியிலே
         போடு துன்பம் எரியட்டும்!

14.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

திங்கள் ஒளியும்! செழும்வயலும்
     தேவன் தந்த பெருங்கொடையே!
எங்கள் வாழ்வும் உயா்வளமும்
     இன்பத் தமிழின் அருங்கொடையே!
உங்கள் பணிகள் சிறக்கட்டும்!
     உலகப் புகழிற் திளைக்கட்டும்!
பொங்கல் திருநாள் பொங்குகவே!
     பூந்தேன் இனிமை தங்குகவே!

14.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஏா்பிடிக்கும் கைகளையே எண்ணிப் பார்த்தே
     எழுதிவைத்த கவிபடித்தே இன்பம் கொண்டேன்!
கூா்பிடிக்கும் நுண்மையென ஆக்கம் செய்தால்
     குளிர்பிடிக்கும் நெஞ்சுக்குள் சூட்டை ஏற்றும்!
சீா்பிடிக்கும் சிந்தனைகள்! கொள்கை வன்மை!
     சீழ்பிடிக்கும் உலகுக்கு மருந்தை ஏவும்!
தோ்பிடிக்கும் திருநாளின் மகிழ்வைப் போன்றே
     தேன்வடிக்கும் இளமதியார் காலம் வெல்க!

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சுத்தம் சுகத்தைத் தருமென்ற
     துாய மொழியை எண்ணுகிறேன்!
பித்தம் போக்கும் நன்மருந்தைப்
     பிணைக்கும் பதிவைத் தொடருகவே!
சத்தம் போட்டுக் கொண்டாடும்
     சல்லிக் கட்டு! தமிழ்வீரம்!
சித்தம் யாவும் தமிழ்சூடிச்
     சிறந்து வாழ்க பல்லாண்டே!

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நேரிசை வெண்பா!

காவேரி நீா்எண்ணிக் கந்தக மண்ணெண்ணிப்
பா..வாரிப் தந்தவுயா் பாவலனே!  - பூ..வாரித்
துாவுகிறேன் உன்கவிக்கு! வல்ல துணிவேந்தி
ஏவுகிறேன் என்றன் இடம்!

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஒவ்வொரு நாளும் உயா்தமிழைத் தேடிவரும்
செவ்விய நண்பா முரளி! தெளிதமிழை
இட்டுச் சிறந்தாய்! இருநுாற்றை இன்று..நீ
தொட்டுச் சிறந்தாய் தொடா்ந்து

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

மீண்டும் வணக்கம்!

மூங்கிற் காற்றின் இனிமையினை
         முரளி தரனே இசைத்திடுக!
ஏங்கித் தவிக்கும் காதலென
         எழுத்தை எழிலாய்ப் படைத்திடுக!
தாங்கி நிற்கும் விழுதாகத்
         தமிழைத் தரித்துக் தழைத்திடுக!
ஓங்கி அளந்த திருவடியான்
         ஒப்பில் புகழை அருளுகவே!

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அலையன்று! பொங்கும் சுனாமி! அழகுக்
கலையென்று போற்றக் கமழும் - வலைப்பூவை
விச்சு வடித்துள்ளார்! வெல்லும் தமிழ்சுவைத்து
உச்சி குளிர்ந்தேன் உவந்து!

15.01.2013

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்
 
என்வலைக்கு வந்தே எழுதிய பின்னுாட்டம்
இன்சுவைக்கு ஈடாய் இனிப்பென்பேன்! - மின்னும்  
இளமதி வந்தே எழுத்தொளி ஊட்ட
உளம்மகிந் தாடும் உவந்து!

15.01.2013

----------------------------------------------------------------------------------------------- 

தொடரும்

dimanche 26 janvier 2014

வாழ்த்துமலா்

திருவாளா்
பாரீசு பார்த்தசாரதி - வத்சலா இணையரின்
முப்பதாம் ஆண்டுத் திருமண வாழ்த்து

மூன்று முடியிட்ட முப்பதாம் ஆண்டொளிரத்
தோன்றும் புறாக்கள்! சுடர்ப்பூக்கள்! - ஈன்ற
குடியோங்கச் செல்வம் குவிந்தோங்கப் பாசக்
கொடியோங்க வாழ்க கொழித்து!

பாரீசு பேர்விளங்கப் பார்த்தன் அருள்விளங்க
வாரிசாய் வந்த வளமனத்தர்! - பேரீச்சம்
போலினிக்கும் பொற்கவிஞர்! வாழ்கவே பைந்தமிழின்
பாலினிக்கும் வாழ்வைப் படைத்து!

நற்புதுவைப் பேர்மணக்க! நல்லோர் நெறிமணக்க!
பொற்புகழைப் போந்த பொதுச்செயலர்! - கற்றோரைப்
போற்றும் மதியர்! புகழ்ப்பார்த்த சாரதியார்
ஆற்றும் பணிகள் அமுது!

அய்யன் திருவடியில் ஆழ்ந்து கிடந்திட்ட
மெய்யர் குடிசெழிக்கும் மேன்மேலும்! - கொய்யாபோல்
வன்பார்த்த சாரதியும் வத்சலா வும்வாழ்க!
பொன்கோர்த்த பூவாய்ப் பொலிந்து!

மாமணி கண்டன் மலரடியை எந்நாளும்
பாமணி சாற்றி பரவுகின்ற - நாமணிகள்!
சீர்பார்த்த சாரதியும் வத்சலா வும்சேர்த்த
பேர்காத்து வாழ்க பிணைந்து!

தாங்கித் தழைக்கின்ற தண்மர வேர்போன்றும்! 
தேங்கி வழிகின்ற தேன்போன்றும்! - ஓங்கி
வளர்பார்த்த சாரதியும் வத்சலா வும்,தம்
உளங்கோர்த்து வாழ்க ஒளிர்ந்து!

கொஞ்சும் தமிழழகும் கோலக் கலையழகும்
விஞ்சும் குறளழகும் மேவிட - நெஞ்சமெலாம்
அன்பாம் அமுதுற இன்பார்த்த சாரதியார்
என்..பாச் சுவைபெறுக இங்கு!

பாவேந்தர் மாணவர் பாவலர் சித்தனார்
நாவேந்தி நல்கும் நறுந்தமிழைப் - பூவேந்திப்
பாடும் திருமகனார் நற்பார்த்த சாரதியார்
பீடும் கமழ்க பெருத்து!

கம்பன் கழகத்தின் கன்னல் விழாச்சிறக்க!
நம்மின் மொழிசிறக்க! நற்பணிகள் - செம்மையுறச்
செய்யும் திறனுடைச் சீர்பார்த்த சாரதியார்
உய்யும் உறவின் ஒளி!

வில்லாண்ட வேந்தன் வியன்ராமன் சீரடியைப்
பல்லாண்டு பாடிப் பரவுகின்ற - நல்லிணையர்!
நற்பார்த்த சாரதியும் வத்சலா வும்,தமிழ்போல்
சொற்கோர்த்து வாழ்க சுடர்ந்து!

25.01.2014

mercredi 22 janvier 2014

பொங்கல் விழா 2014

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
பொங்கல் விழா அழைப்பிதழ்

மாதவ மங்கையர் - பகுதி 6

கவியரங்கம்

மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

மாசிலா மாணிக்கம் மணிமேகலை!

கோவலன் விரும்பிய கொஞ்சும் புறாவாம்
பாவலம் மிக்க பாவை மாதவி!
இந்த இணையர் இனிதாய்ப் பெற்ற
செந்தா மரையாம் சீர்மணி மேகலை!
அன்பு மாதவி அழகை மறந்து
மன்னன் ஆணையால் மாய்ந்தான் கோவலன்!
மாதவி அதன்பின் மணிமே கலையொடு
தோதுறத் துறவற நெறியைத் தொடர்ந்தாள்!

தாயைப் போலவே தமிழ்க்கலை யாவிலும்
தோய பட்டவள் தூய்மணி மேகலை!
ஆடலைப் பாடலை அறவே விட்டாள்!
மாட மாளிகை மனத்தை வெறுத்தாள்!
இந்திர விழாவையும் ஏற்கா(து) அவள்தன்
சிந்தையில் துறவறம் சிறக்க நின்றாள்!

கலைசேர் சுதமதி காவலாய்ச் செல்ல
மலர்கள் பறிக்க மணிமே கலையாள்
பூந்தோட்டம் ஒன்றில் புகுந்த காலை
வேந்தன் மகனாய் விளங்கிய உதயன்
மேகலை அழகில் விருப்பம் உற்று
வேகமாய் அவளை விரட்ட லானான்!
பளிங்கறை உள்ளே பதுங்கினாள் மேகலை!
கண்ணகி போலக் கற்புக் கரசியாய்
அன்னையைப் போல அரண்நெறி செல்வியாய்
மண்ணில் வாழ்ந்த மாசறு மாணிக்கம்
கன்னல் மொழியாள் கவின்மிகு மேகலை!

மணிபல் லவத்திலும் மணிமே கலையாள்
அணிந்தது துறவற அறநெறி ஒன்றே!
அழகை ஆடலைப் பாடலை மறந்து
வழுவிலாத் துறவற வாழ்வைக் கண்டாள்!

அன்பின் வடிவம்! அறத்தின் கோயில்
துன்பம் துடைத்த சுடர்மணி மேகலை
அமுத சுரபியால் அன்னம் அளித்து
குமுகம் உற்ற கொடுமை தீர்த்தாள்!

பசிப்பிணி நீக்கிய பாவையை எண்ணிக்
கசிந்துளம் நெகிழப் பாடினேன் கவியே!

தொடரும்

lundi 20 janvier 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 25

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

கோடிக் கோடிப் பலகோடி
     கூட்டை மாற்றிப் பறந்தோடும்!
ஆடிப் பாடிப் பகலிரவை
     ஆளும் ஊழல் தொடா்கிறது!
நாடிச் செய்யும் திட்டமெலாம்
     நாட்டைச் சுரண்டும் நரிச்செயலே!
வாடி வதங்கும் என்மக்கள்
     வாழ்க்கை வாழ்தல் எந்நாளோ?

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

உருண்டு பிரண்டும் உடல்உயிரை
     உருக்கும் காதல் கவி..படித்தேன்!
இருண்டு போகும் வரிகளினால்
     இந்த விருத்தம் படைக்கின்றேன்
மருணடு கிடக்கும் மனக்கூட்டில்
     மணக்கும் தமிழை நிரப்பிடுக!
இருந்து வாட்டும் நினைவலைகள்
     இன்பத் தமிழாய்ப் பிறந்திடுமே!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஆற்றெழும் ஆசைகளை அள்ளி அளிக்கும்..பா
ஊற்றெழும் வண்ணம் உடைத்து!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இனிய தமிழின் புத்தாண்டை
     இயம்பிக் களிக்கும் என்தோழா!
கனிய வேண்டும் தமிழாட்சி!
     கமழ வேண்டும் தமிழ்மாட்சி!
குனியக் குனிய நம்பகைவா்
     கொட்டி மகிழ்வார்! அவா்அழிய
இணைய வேண்டும் தமிழ்மக்கள்!
     இன்பப் பொங்கல்  வாழ்த்துக்கள்!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

ஊக்கு விற்கும் தொழிலாளி
     ஊக்கம் ஊட்ட ஆளிருந்தால்
தேக்கு விற்கும் உயா்நிலையைத்
     தேடிப் பெற்று மகிழ்ந்திடுவான்!
பாக்கு கொண்ட வன்மையெனப்
     பாக்கள் படைக்கும் அகமதுவே!
கேக்கு போன்றே உன்வலையைக்
     நோக்கி இனிமை சுவைத்தனனே!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தாமரைப் படத்தை இட்டுத்
     தமிழ்மணம் நல்கும் தோழி!
நாமரைச் செல்வி உன்னுள்
     நடமிட நன்றே வாழி!
மாமறைக் கண்ணன் தாளை
     மனமுற பாடும் உன்னைப்
பாமறை தீட்டும் நானும்
     பணிவுடன் வணங்கு கின்றேன்!

புனைந்திடும் பக்கம் யாவும்
     புகழ்த்தமிழ் மாண்பைப் போற்றும்!
அணிந்திடும் அணியைப் போன்றே
     அழகுற பேரைத் தீட்டும்!
இணைந்திடும் தோழி தோழா்
     இயம்பிடும் வண்ணம் காண்க!
இனித்திடும் பொங்கல் வாழ்த்தே!
     இன்புற வாழ்க வாழ்க!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அம்மா நீயும் வருவாயா!
     அன்பை மீண்டும் தருவாயா!
சும்மா சொல்லக் கூடாது
     சுரக்கும் அன்பின் தலைப்பிதுவே!
கும்மாங் குத்தாம் ஆட்டங்கள்
     கொடுக்கும் மகிழ்வை எய்துகிறேன்!
இம்மா நிலத்தில் முதற்சொத்தாம்
     ஈன்ற தாயின் கருவறையே!

கண்ண தாசன் பெயா்சூடிச்
     கன்னல் பொங்கும் கவியாழி!
உண்ணத் தெவிட்டாச் செந்தமிழாம்
     உணவைப் பொங்கும் உயா்தாழி!
எண்ண மெல்லாம் நிறைவேற
     எழுதும் உன்றன் தமிழ்வாழி!
வண்ணப் பாட்டின் வளமாக
     வாழ்க! வாழ்க! பல்லுாழி!

-----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

உசிரும் உருகுதய்யா
ஒம்பாட்டைப் படிச்சதனால்!
பசியும் பெருகுதய்யா
பைந்தமிழைக் குடித்ததனால்

-----------------------------------------------------------------------------------------------

13.01.2013

dimanche 19 janvier 2014

மாதவ மங்கையர் - பகுதி 5

கவியரங்கம்
மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

மாண்புடை மாதவி

நாடெலாம் போற்றும் நங்கை யாக
ஆடலில் பாடலில் அழகினில் சிறந்த
கணிகையர் குலத்தில் கண்ணெனத் தோன்றி
மணியாய் விளங்கிய மாதறு மாதவி!
அகவை ஐந்திலே ஆடத் தொடங்கி
அகவை,பன் னிரண்டில் அரங்கம் கண்டாள்!
நாடு நகரெலாம் நற்புகழ் பெற்றே
ஆடல் கலையின் அரசி யானாள்!
மன்னன் அவையில் மாதவி ஆடி
பன்மதிப் புள்ள பச்சை மாலையைப்
பரிசாய்ப் பெற்றாள் பாரோர் போற்றவே!
அரிதாய்க் கிடைத்த அந்த மாலையை
வாங்கினால் அடையலாம் மாதவி மங்கையை!
பாங்குடைக் கோவலன் பாசத் தோடு
தீதறும் கண்ணகி சிறப்பினை மறந்து
மாதவி அடைந்தான் மாலையை வாங்கியே!
காதல் மேலுற கலையின் அரசி
மாதவி ஆடலில் பாடலில் மகிழ்ந்தான்!
முழுநிலாப் பொழுதில் மூண்டது சொற்போர்!
அழகியை விட்டே அகன்றான் கோவலன்!
வாடினாள் மாதவி! மடலும் விடுத்தாள்
நாடி வருவான் என்றே! நற்பயன்
ஏதும் இல்லை! இனியவள் வாழ்வில்
தீது வந்ததாய்த் தேம்பி அழுதாள்!
கண்கண்ட தெய்வமாய்க் கருதினாள் மாதவி
புண்படச் செய்தான் பொல்லாக் கோவலன்!
அன்புக் கடிமை ஆன மாதவி
துன்பப் பட்டது தொடர்கதை யானது!
மகிழ்ந்து பெற்ற மணிமே கலையொடு
திகழ்ந்தாள் மாதவி தேற்றுவார் இன்றியே!
மறைநெறி மாறா மாதவி பின்னர்த்
துறவறம் ஏற்றாள் தூய்பணி தொடரவே!

தொடரும்
 
samedi 18 janvier 2014

பறக்குதடி நெஞ்சம்

பறக்குதடி நெஞ்சம்

எடுப்பு

உன்றன் உருவம் - பாட
உள்ளம் புகுந்ததடி!
என்றன் பருவம் - வாட
ஏக்கம் மிகுந்ததடி!
                   (உன்றன்)

தொடுப்பு

தென்றல் காற்றே - தமிழ்த்
தேனின் ஊற்றே!
சின்ன நாற்றே - கிளி
சிரிக்கும் கீற்றே!
                   (உன்றன்)

முடிப்பு

பாடும் குரல்கேட்டுப் பறக்குதடி நெஞ்சம் - நீ
சூடும் கவிகேட்டுச் சுரக்குதடி மஞ்சம்!
வாடும் நிலைகோர்த்து வளருதடி தஞ்சம் - நீ
ஆடும் கலைபார்த்து ஆசையலை மிஞ்சும்!
                                            (உன்றன்)

கோடி மலரழகைக் கொண்டொளிரும் பெண்ணே - உனைக்
கூடிக் கற்பனையில் கண்டொளிரும் கண்ணே!
தேடி வருகையிலே தேன்பொழியும் விண்ணே - உனைப்
பாடிப் பரவுகையில் மணக்குதடி மண்ணே!
                                            (உன்றன்)