dimanche 6 décembre 2020

விருத்த மேடை - 49


விருத்த மேடை - 49

எண்சீர் விருத்தம் - 1

 காய் +  காய் + காய் + மா
   காய் +  காய் + காய் + மா

 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!

   காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே!

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே!

   மதியார்க்கும் மதிப்பவர்க்கும்  மதிகொடுக்கும் மதியே!

நல்லார்க்கும் பொல்லார்க்கம் நடுநின்ற நடுவே!

   நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலஞ்சொடுக்கும் நலமே!

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே!

   என்னரசே! யான்புகலும் இசையும்அணிந் தருளே!

 [வள்ளலார், திருவருட்பா - 575]

 
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி

   நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்

பூப்பிளக்க எழுகின்ற புற்றீசல் போலப்

   புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்,

காப்பதற்கும் வகையறியீர், கைவிடவும்  மாட்டீர்,

   கவட்டுத்தொல் மரத்திடுக்கில் கால்நுழைத்துக் கொண்டே

ஆப்பதனைப் பிடித்தசைத்த பேய்க்குரங்கு போல

   அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே!

[பட்டினத்தடிகள்]

 
மோனம் போற்று [பாரதியின் புதிய ஆத்திசூடி]

[மோனம் - மௌனம்]

உள்ளிருக்கும் உன்னுயிரை உணர்ந்திடவே வேண்டின்

   உடலடக்கி உளமடக்கி மோனநிலை ஏற்பாய்!

முள்ளிருக்கும் சொல்லகற்றி நாவடக்கம் கொண்டு

   மூச்சிருக்கும் மொழியிருக்கும், ஞானநிலை கற்பாய்!

கள்ளிருக்கும் சுவையூறும் பேரிறையின் சீரில்

   கட்டுண்டு களிப்பூறும் வானநிலை அறிவாய்!

எள்ளிருக்கும் சிறுவளவும் வாயடக்கம் மேவ

   இனித்திருக்கும் இறையொளியின் கானநிலை காண்பாய்!  

 [பாட்டரசர் கி. பாரதிதாசன்]

முதல்  மூன்று சீர்கள் காய்ச்சீராகும். நான்காம் சீர் மாச்சீராகும். இதுபோன்றே மற்ற  அரையடி அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.11.2020

vendredi 4 décembre 2020

வெண்பா மேடை - 199

 

வெண்பா மேடை - 199

 

மங்கல வெண்பா

 

நுால்களை மங்கலச் சொற்களில் தொடங்க வேண்டுமெனப் பாட்டியல் நுால்கள் உரைக்கும். வெண்பாப் பாட்டியல் இரண்டாம் நுாற்பா 19 மங்கலச் சொற்களைக் காட்டும். 

 

சீர்,எழுத்து, பொன்,பூ, திரு,மணி,நீர், திங்கள்,சொல்

கார்,பரிதி, யானை, கடல்,உலகம், - தேர்,மலை,மா,

கங்கை, நிலம்,பிறவும் காண்,தகைய முன்மொழிக்கு

மங்கலமாம் சொல்லின் வகை!

 

சீர் முதலாக நிலம் ஈறாக எண்ணப்பட்ட பத்தொன்பதும் பிறவும் முதன்மொழி யிடத்தே வரக்கூடிய மங்கலச் சொற்கலாம்.

 

பிறவும் என்றதால் - வாழி, மாலை, சங்கு, தார், கவி, கயல், சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு,  மலர், பழனம், இடபம், செல்வம், ஞாயிறு, புனல், களிறு, அமுதம், புகழ், சீர்த்தி, கீர்த்தி, வேழம், ஆரணம், கடவுள், தீபம், புயல், ஆறு, எழில், மழை, பசுங்கதிர், செஞ்சுடர், பரி, ஆழி, பால், பார்,  ஆகிய சொற்களும் மங்கலச் சொற்களாகும்.

 

மங்கலச் சொல்லின் பொருளைக் குறிக்கும் மற்றொரு சொல்லும் மங்கலச் சொல்லாக ஏற்கலாம். [சீர் - சிறப்பு] [பொன் - பொலம்] [பூ - மலர்] [திங்கள் - நிலவு - மதி] [சொல் - கிளவி - மொழி]

 

இலக்கண விளக்கம் - 771, பன்னிரு பாட்டியல் - 133, 134, நவநீதப் பாட்டியல் - 2, சிதம்பப் பாட்டியல் - 18, தொன்னுால் விளக்கம்  - 285, முத்துவீரியம் - 66, சுவாமிநாதம் - 173, பொருத்த விளக்கம்  - 3 ஆகிய நுால்களில் மங்கலச் சொற்குறித்து நுாற்பாக்கள் உள்ளன.

 

மங்கல வெண்பா

 

நீரோடும் நற்புதுவை! நீடுபுகழ்ச் செந்தமிழின்

தேரோடும் சீர்ப்புதுவை! தென்புதுவை! - பேரோதி

மின்னும் திருப்புதுவை! விஞ்சும் கலைப்புதுவை!

கன்னல் கவியின் கடல்!

 

மங்கல வெண்பாவின் முதல் சொல்லும் ஈற்றுச் சொல்லும் மங்கலச் சொல்லாக அமைய வேண்டும். மேலுள்ள வெண்பா "நீர்" என்ற மங்கலச் சொல்லில் தொடங்கி, "கடல்" என்ற மங்கலச் சொல்லில் நிறைவுற்றது. இரண்டாம் அடியில் நான்கு சீர்களில் ஓரிடத்தில் மங்கலச் சொல் அமைய வேண்டும். மேலுள்ள வெண்பாவின் இரண்டாம் அடியில் "தேர்", "சீர்" என மங்கலச் சொற்கள் வந்தன. மூன்றாம் அடியில் நான்கு சீர்களில் ஓரித்தில் மங்கலச் சொல் வர வேண்டும். மேலுள்ள வெண்பாவில் மூன்றாம் அடியில் "திரு" என்ற மங்கலச் சொல் வந்தது.

 

மங்கல வெண்பாவில் அமங்கலச் சொல்லோ, கருத்தோ வரக்கூடாது.

 

மங்கல நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

04.12.2020


mardi 1 décembre 2020

வெண்பா மேடை - 198

 வெண்பா மேடை - 198

 அமுத வெண்பா!

 அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ ஆகிய 11 எழுத்துக்களை அமுத எழுத்தென்பர். இவ்வெழுத்துக்களைச் சீர்களின் முதலெழுத்தாகக் கொண்டு பாடப்படும் வெண்பா அமுத வெண்பாவாகும். வாழ்த்தும், மங்கலமும், விழுமிய பொருளும் கருவாக அமையும்.

 மேற்கூறிய நான்கு உயிர்களோடு [அ,இ,உ,எ]  புணர்ந்து தோன்றும் உயிர்மெய் எழுத்துக்களும், கம்முதல் வவ்வீறாகக் கூறிய மெய்யெழுத்தினோடு [க்,ச்,த்,ந்,ப,ம,வ,] புணர்ந்து வரும் உயிர்மெய் எழுத்துக்களும் அமுதெழுத்தாகும்.

 கசதப நமவ ஏழொடும் அகரம்

இகரம் உகரம் எகரம் நான்கும்

அமுத எழுத்தென்று அறைந்தனர் புலவர்

 [இலக்கண விளக்கம் 779]

 அஇஉஎ கசதந பமவவும்

அமுத எழுத்து

 [முத்து வீரியம் 71]

 பன்னிரு பாட்டியல் - 23, நவநீதப் பாட்டியல் - 10, சிதம்பப் பாட்டியல் - 4, வெண்பாப் பாட்டியல் - 7, தொன்னுல் விளக்கம் 290, சுவாமிநாதம் - 175, பொருத்த விளக்கம்  - 29 ஆகிய இலக்கண நுால்களில் அமுத எழுத்தைக் குறித்து நுாற்பாக்கள் உள்ளன.

 யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ய், ர், ல், ள், ஃ, மகரக் குறுக்கம்,உயிரளபெடை, ஒற்றளபெடை, ஆகிய எழுத்துக்களை நச்செழுத்தென்று மேற்கூறிய இலக்கண நுால்களில் காண்கிறோம்.  நச்செழுத்தின்றி அமுதவெண்பா அமைதல் சிறப்பு. ய்.ர்,ல்,ள் ஆகிய வர்க்க எழுத்துக்களை நீக்குதல் சிறப்பு. 

 அமுத எழுத்துக்களைக் சீரின் முதல் எழுத்தாகக் கொண்டும், நச்செழுத்து இன்றியும் அமுத வெண்பா அமைய வேண்டும்.

 அமுத வெண்பா!

பண்ணைப் படைக்கப் பறந்தே..வா! வண்ணமுடன்

மண்ணைப் படைக்க மணந்தே..வா! - தண்டமிழே!

பற்றே..தா! பண்பைப் பழுத்தே..தா! நற்றவத்தைக்

கற்றே கமழுமென் கண்!

வெண்பாவின் 15 சீர்களும் அமுத எழுத்தில்  தொடங்க வேண்டும்,

[அ, இ, உ, எ, க, ச, த, ந, ப, ம, வ]

வெண்பாவில் வரக்கூடாத எழுத்துக்கள்

ய், ய, யா, யி, யீ,...................யௌ

ர், ர ரா, ரி, ரீ, ய், ...................ரௌ

ல், ல, லா, லி, லீ,...................லௌ

ள், ள, ளா, ளி, ளீ,...................ளௌ

ஃ, மகரக் குறுக்கம், உயிரளபெடை, ஒற்றளபெடை.

 அமுத நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]


 பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

01.12.2020