Affichage des articles dont le libellé est சித்திர கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est சித்திர கவிதை. Afficher tous les articles

dimanche 24 juillet 2022

ஒன்றில் ஒன்று [ மிறைப்பா]


 

ஒன்றில் ஒன்று [ஏக பங்கி]

[வஞ்சி விருத்தம் - வஞ்சித் துறை]

 

வஞ்சி விருத்தம்

மா+ மா +காய்

 

தண்மை தழைக்கும் தகையெழுமே!

வெண்மை விளைக்கும் விதியெழுமே!

திண்மை திளைக்கும் திறனெழுமே!

உண்மை யுளத்தில் ஒளியெழுமே!

 

வஞ்சித்துறை

 

தண்மை தழைக்கும்

வெண்மை விளைக்கும்

திண்மை திளைக்கும்

உண்மை யுளத்தில்

 

வஞ்சி விருத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சித்துறைக் கிடைக்கும். வஞ்சி விருத்தம் 1, 3 மோனை பெறும். வஞ்சித் துறையை நோக்கி அடிதோறும் முச்சீரும் மோனை பெறுதல் சிறப்பு.

 

எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை

 

முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சித்துறை எழுத வேண்டும் [மா + புளிமா]  பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து வஞ்சி விருத்தமாக்க வேண்டும்.

 

மேலுள்ள இரண்டு பாடலும் அளைமறி பாப்புப் பொருள்கோளள் பெற்றுள்ளதைப் படித்து மகிழவும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

23.07.2022

ஒன்றில் ஒன்று [மிறைப்பா]


ஒன்றில் ஒன்று

[கலிவிருத்தம் - வஞ்சி விருத்தம்]

 

கலிவிருத்தம்

[குறிலீற்று மா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்]

 

நல்ல பேரினை நாட்டுவோம் பண்புடனே!

இல்லச் சீரினை ஈட்டுவோம் அன்புடனே!

மெல்ல யாழினை மீட்டுவோம் பண்ணுடனே!

வெல்ல வானினைவேட்டுவோம் இன்புடனே!

 

வஞ்சி விருத்தம்

[மா + கூவிளம் + கூவிளம்]

 

நல்ல பேரினை நாட்டுவோம்!

இல்லச் சீரினை ஈட்டுவோம்!

மெல்ல யாழினை மீட்டுவோம்!

வெல்ல வானினை வேட்டுவோம்!

 

கலிவிருத்தத்தின் அடிதோறும் ஈற்றுச்சீரை நீக்கினால் வஞ்சி விருத்தம் கிடைக்கும். கலிவிருத்தம் 1, 3  ஆம் சீர்கள் மோனை பெறும்.

 

எளிதாக இந்தப் பாடலை எழுதும் முறை

 

முதலில் அடிதோறும் பொருள் நிறைவுறும் வஞ்சி விருத்தம் எழுத வேண்டும் [மா + கூவிளம் + கூவிளம்]  பின்னே காய்ச்சீரை ஒவ்வோர் அடியின் ஈற்றில் சேர்த்து கலிவிருத்தமாக்க வேண்டும்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

24.07.2022

mardi 9 mars 2021

மீன் சித்திரக் கவிதை


 

மீன் சித்திரம்

மீன்விழியளே!

 நாவே யினிக்க நறுமொழி தரும்..வாய்!

காவே மிகுதமிழ் கற்கும் திருவிழி!

கன்னல் கூட்டுங் கவிமொழிப் பார்வை!

மின்னல் மின்னுதே! விந்தைகள் பின்னுதே!

அன்பின் பெருக்கே! அருளே!சீர்ப் பொழிலே!

இன்பின் யாழிசை மீட்டித் துன்பொழி!

வான்மழைபோல் குவித்திடும் பன்னலன் மீட்டி

மீன்விழி யாளே! தேன்மொழி தருகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

08.03.2021

dimanche 27 octobre 2019

நான்காரச் சக்கரம்


நான்காரச் சக்கரம்
  
அகமே அடங்கு!
[ஆசிரியப்பா]
  
சென்ம மறிக! மேவு பணியின்
தன்னடை வேதனின் மனையை யேறு!
அரணி யாகவே கரணி சேரின்
தரணி யேயுன் கரனளி யழகே!
கேணி வட்டம்! தோணி வட்டம்!செவ்
வாதி, பூமி, ஆழி வட்டம்!
அகமே அடங்கு! ஆசை யகற்று!
இகமே சுழியே! ஊது சங்கே!
  
இது நான்காராய்க் குறட்டின் நடுவே 'த' என்ற எழுத்து நின்று, குறட்டைச் சூழ நான்கு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் பத்து எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல்[வட்டம்] நாற்பத்தெட்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
செய்யுளில் முதல் இரண்டடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், மூன்று நான்காமடிகள் சேர்ந்து 25 எழுத்துக்களையும், ஐந்து ஆறாமடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் சேர்ந்து 24 எழுத்துக்களையும் பெற்றன. செய்யுட்கண் 98 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 92 எழுத்துக்கள் வந்தன.
  
இதுச்செய்யுள், மேலாரின் முனைதொடங்கியிறங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதல் இரண்டடிகள் முற்றி, இடப்பக்கத்து ஆரின் முனைதொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி சென்று மூன்றாமடியும் நான்காமடியும் முற்றி, மறித்தும் அம்முனைநின்ற 'கே' தொடங்கி வட்டை வழியே இடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் சென்று தொடங்கிய 'கே' எழுத்தில் பாடல் நிறைவுறும்.
  
ஆரத்தில் 1 முதல் 20 வரை எழுத்துக்களை இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
மணியை யறிக! மனமே கனிக!
பணிவே யுயிரி[ன்] அணி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
நடை - ஒழுக்கம்
வேதன் - மறையின்வழி வாழ்பவன்
அரணி - கவசம்
கரணி - செய்பவன்
தரணி - பூமி
கரன் - நிலையுள்ளவன்
கேணி - கிணறு
தோணி - ஆற்றைக் கடக்க உதவும் பரிசல்
செவ்வாதி - சூரியன்
ஆழி - கடல்
இகம் - இப்புறப்பு
சுழித்தல் - சுழலுதல்
  
கருத்துரை:
  
உயிர்களின் பிறப்பு இறப்புச் சுழற்சியை உணர்த்தும் வண்ணம் இப்பாடல் அமைந்துள்ளது. பிறப்பை அறிவாய். ஒழுக்கமுடன் தன் பணிகளைச் செய்கின்ற நீதியாளனின் இடத்தை அடைவாய். அரண் அளிப்பவன் இடமடைந்து நிலையாக வாழ்கின்ற உன்னால் இப்புவி அழகைப்பெறும். கிணறு, பரிசல், சூரியன், பூமி, கடல் அகியவை வட்டமாக அமைந்துள்ளன. அகத்தை அடக்கு, ஆசையை அகற்று இப்புறப்பும் வட்டமாகச் சுழலும் என்பதை உணர்ந்து சங்ககெடுத்து ஊதுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.10.2019

dimanche 21 juillet 2019

வேல் பந்தம் - 3

வேல் சித்திர கவிதை - 3
  
வா..வா..தே னே!வாழ்வே! வாழ்கவி கண்மிக..வா!
நாவோது நற்றேன்..தா! மாதர..வா! - மேவிரத
நா..வாழ் கவிகற்றே மேவி..வா! தாதுமிக
வா..வேழ்வா னே!தேவா! வா!
  
கண் - அறிவு, பெருமை
மா - செல்வம், வலிமை, அழகு
மே - மேன்மை
மேவுதல் - விரும்புதல்
தாது - மலர்
  
விளக்கவுரை
  
இனிமையான தேனே வாராய்! என் வாழ்வே வாராய்! வாழும் கவிஞனாகிய எனக்குப் பெருமை மிகுந்தோங்க வாராய்! நாவோதும் தமிழ்த்தேனைத் தாராய்! நல்லழகைத் தந்திட வாராய்! மேன்மையைத் தரும் தவத்துக்குரிய பாடல்களை நான் கற்றுக்களிக்க விரும்பியே வாராய்! வாழ்வு மலராக மலர்ந்து மணம்வீச வாராய்! ஏழுலகுக்கும் வானாக இருக்கும் தேவனே வாராய்!
  
வேலின் அடியில் பாடலைத் தொடங்கி, வேல் பகுதில் படுக்கைக் கோட்டில் ஏறிச் உச்சியை அடைந்து, வேலைச் சுற்றி, மீண்டும் உச்சியை அடைந்து, உச்சியிலிருந்து கீழ் இறங்கிப் பாடல் தொடங்கி இடத்தில் நிறைவடையும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
21.07.2019