samedi 29 février 2020

கேட்டலும் கிளத்தலும்



கேட்டலும் கிளத்தலும்
  
சொன்னபடிச் செய்தான் - சொன்னபடி செய்தான்
இவற்றில் எது சரி?
  
பாவலர் தென்றல்
  
--------------------------------------------------------------------------------------------------------------------------------
  
வினையை அடுத்துவரும் படி என்ற சொல்முன் வல்லினம் இயல்பாய் வரும். சொன்னபடி செய்தான், வரும்படி சொன்னான், போகும்படி கேட்டான்.
  
பெயரை அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகும். முறைப்படிச் செய்வான். சட்டப்படிக் குற்றம்.
  
சுட்டையும் வினாவையும் அடுத்து வரும் படி முன் வல்லினம் மிகாமலும் வரும், மிகுத்தும் வரும். அப்படி செய், அப்படிச் செய், இப்படி பார், இப்படிப் பார், எப்படி போவாய், எப்படிப் போவாய்.
  
அப்படி போகாதே! இப்படிச் சென்றிடுவாய்!
தப்படி இன்றித் தமிழ்தருவாய்! - செப்பும்
பெயர்வினை ஆய்ந்திடுவாய்! பீடுதமிழ் காப்பாய்!
எழிலணை செய்வாய் இசைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் - பிரான்சு
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு
29.02.2020.

சிந்துப்பா மேடை - 4


சிந்துப்பா மேடை - 4
  
ஆனந்தக் களிப்பு
  
எடுப்பு
வெண்மதி வந்தது விண்ணில் - பொங்கித்
தண்ணதி பாயுது தண்டமிழ்ப் பண்ணில்!
            [வெண்மதி]
  
முடிப்பு
1.
பொன்முகப் பேரெழில் காட்டி - முன்னே
   போகிறாள் கொஞ்சிடும் ஆசையைக் கூட்டி!
என்னகக் காதலை மூட்டி - நாளும்
   ஏங்கிடச் செய்கிறாள் இன்னிசை மீட்டி!
            [வெண்மதி]
  
2.
அன்னத்தின் நன்னடை கொண்டாள் - என்றன்
   அங்கத்தைப் பார்வையால் அள்ளியே உண்டாள்!
கன்னத்தின் மென்மலர்ச் செண்டாள் - கவி
   கம்பனின் சொற்களில் போதையைக் கண்டாள்!
            [வெண்மதி]
  
3.
பஞ்செனும் நெஞ்சினை உற்றாள் - இன்றேன்
   பாகெனும் பேச்சினை யாரிடம் கற்றாள்!
பிஞ்செனும் மென்விரல் பெற்றாள் - காதல்
   பித்தேற்றி வாட்டிடும் பெண்கொண்ட நற்றாள்!
            [வெண்மதி]
  
4.
எத்தனை எத்தனை எண்ணம் - வானில்
   ஏறியே நீந்திடும் பற்பல வண்ணம்!
தித்திக்கும் இன்மதுக் கிண்ணம் - அவள்
   தீண்டிடத் தீண்டிடத் தேன்சுவை நண்ணும்!
            [வெண்மதி]
  
5.
மூடி மறைப்பதும் ஏனோ? - மனம்
   வாடிக் கிடப்பதும் நன்னெறி தானோ?
ஓடிக் குதிப்பதும் மானோ? - இங்குப்
   பாடிப் படைப்பதும் பைந்தமிழ்த் தேனோ?
            [வெண்மதி]
  
இது 'ஆனந்தக் களிப்பு' என்னும் சிந்துப்பா. ஒவ்வொரு அடியும் எட்டுச் சீர்களைப் பெற்றிருக்கும். 'பொன்முக' என்பது முதல் 'கூட்டி' என்பது வரை ஓரடி. ஒவ்வொரு சீரும் மூன்று உயிர்களைக் கொண்டிருக்கும். மூன்றாம் சீரில் இரண்டு உயிரே இருந்தாலும் மற்றும் ஓர் உயிர் அளவு அது நீண்டு இசைக்கும். அதன்பின் தனிச்சொல்லைப் பிரித்துக்காட்டும் சிறுகோடு. அதன்பின் முன்சீரின் இறுதி உயிரே மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது. அதன்பின் இரண்டு உயிர் உள்ள நான்காம் சீா். எட்டாம் சீரும் இரண்டு உயிர். அதுவும் மேலும் ஓர் உயிர் அளவு நீண்டு இசைக்கிறது.
  
இத்தகைய இரண்டு அடிகள் ஒரே எதுகையில் அமைந்து ஒவ்வொரு அடியிலும் ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை பெறுவது ஒரு கண்ணி. அடிதோறும் மூன்று எட்டாம் சீர்களில் காட்டி, கூட்டி, மூட்டி, மீட்டி என இயைபு அமைய வேண்டும்.
  
இப்படிப்பட்ட ஓர் அடி மட்டும் ஐந்தாம் சீரில் எதுகையோ மோனையோ பெற்று எடுப்பு அமையும். இரண்டடிக் கண்ணிகளே முடிப்புகளாக வரும். எத்தனை முடிப்புகளும் எழுதலாம்.
  
தாயுமானவர், வடலுார் வள்ளலார், பாரதியார், பாவேந்தர் முதலியோர் ஆனந்தக் களிப்புப் பாடி இருக்கிறார்கள். கடுவெளிச் சித்தரின் ஆனந்தக் களிப்பில் சிறப்பான இயைபுத் தொடையைக் காணலாம்.
  
விரும்பிய பொருளில் ஆனந்தக் களிப்பு ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
29.02.2020.

dimanche 16 février 2020

வெண்பா மேடை - 158 - 159


வெண்பா மேடை - 158

காலோடி நடக்கும் வெண்பா!

வன்பாடல் செய்துறுக! வான்பாணி கண்டிடுக! 
நன்னாடல் நன்கறிக! நல்லுழைப்பு - என்றும்
உயர்வளிக்கும் சீர்வாழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

இவ்வெண்பாவில் உள்ள கால்கள் [ா] நீங்கிய பின்னே வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்நீங்குவதால் 'காலோடி நடக்கும் வெண்பா' எனப் பெயர் வைத்தேன். 

பாணி - காலம்
நாடல் - ஆராய்தல்

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று வன்மைதரும் பாடல் படைத்திடுக. விளைக்கின்ற வானிலையை [பாணி- காலம்] அறிந்திடுக. மண்ணையும், விதைகளையும் ஆராய்ந்து[நாடல்] தெளிந்திடுக.  என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்கமழும் வாழ்த்துகளை  உற்றிடுக.

காலோடிய வெண்பா

வன்படல் செய்துறுக! வன்பணி கண்டிடுக! 
நன்னடல் நன்கறிக! நல்லுழைப்[பு] - என்றும்
உயர்வளிக்கும் சீர்வழி உற்றிடுக! நன்றே
பயிரளிக்கும் கல்வி பயின்று!

பாடல் - படல்
பாணி - பணி
நாடல் - நடல்
வாழி - வழி

நன்றே பயிர் விளையும் கல்வியைப் பயின்று பயிரைக் காக்கும் வன்மைப்படல் படைத்திடுக. வல்ல பணியை அறிந்திடுக. பயிர் நடலை நன்கறிக. என்றும், நல்லுழைப்பால் உயர்வளிக்கும் சீர்வழியை உற்றிடுவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

வெண்பா மேடை - 159

கால் முளைத்து நடக்கும் வெண்பா!

பண்டு கதையறிக! பட்டுக் கலையறிக!
தண்டு வினையறிக சந்தமுடன் - கண்டலுறும்
மண்ணறிக! நன்மன வன்னறிக! என்னுயிரே
பண்ணறிக நன்றே படித்து!

இவ்வெண்பாவில் காலுடைய சொற்கள் இல்லை. சில சொற்களில் கால்[ா] சேர்ந்தபின்னே  வெண்பா இலக்கணம் சரியாக வரவேண்டும். வேறு பொருள் தரவேண்டும். கால்சேர்வதால் 'கால் முளைத்து நடக்கும் வெண்பா' எனப் பெயர் கொடுத்தேன்.

பண்டு - நீதி
சந்தம் - அழகு
கண்டல் - தாழை
பண் - நிறை

என்னுயிரே நன்றே படித்து, நீதிநெறிக் கதையறிவாய். பட்டுடைக் கலையறிவாய். அழகடைய தண்டுணவின் செயலறிவாய்.  தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மனத்தின் வன்மை யறிவாய்.  நிறையறிவாய்.

கால் முளைத்த வெண்பா

பாண்டு கதையறிக! பாட்டுக் கலையறிக!
தாண்டு வினையறிக! சாந்தமுடன் - காண்டலுறும்
மாண்ணறிக! நன்மான வான்னறிக! என்னுயிரே
பாண்ணறிக நன்றே படித்து!

பண்டு - பாண்டு
பட்டு - பாட்டு
தண்டு - தாண்டு
சந்தமுடன் - சாந்தமுடன்[அமைதி]
கண்டல்[தாழை] - காண்டல்[வணங்குதல்]
மனம் - மானம்
வன் - வான்
பண்[நிறை] - பாண்[இசைப்பாட்டு]

என்னுயிரே நன்றே படித்துப் பாண்ரங்கனின் கதையறிவாய். பாட்டுக் கலையறிவாய். தாண்டும் பயிற்சி அறிவாய். அமைதியுறத் தாழை மணக்கும் மண்ணறிவாய். நன்மானவான் அறிவாய்.  இசைப்பாட்டறிவாய்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
16.02.2020

samedi 15 février 2020

வெண்பா மேடை - 157   

படம் இதைக் கொண்டிருக்கலாம்: புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை
வெண்பா மேடை - 157
  
கொம்படைந்த வெண்பா
  
கொம்புடைந்த வெண்பாவுக்கு முரணாக அமைவது கொம்படைந்த வெண்பாவாகும்.
'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சாலை' என்ற சொல் கொம்பேற்றால் சோலை யாகும். இவ்வாறு கொம்பில்லாச் சொல்லையும் கொம்படைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்படைந்த வெண்பா' வாகும்.
  
கொம்பிலா்லா சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'தாள்' என்ற சொல் 'கால்' எனும் பெயரில் வந்துள்ளது. 'தோள்' என்ற சொல் 'புயம்' என்று வந்துள்ளது.
  
காலிங்குக் கொம்படைந்து காட்டும் புயமாகும்!
ஆலிங்குக் கொம்படைந்து மாராகும்! - பாலிங்குக்
கட்டுணவும் நல்லரசும் காணும்! பசுவாழும்
கொட்டிலும் பேழையாம் கூறு!
  
கால் - தாள்
தாள் - கொம்படைந்தால் தோள்
  
ஆல் - நஞ்சு
நஞ்சு - நெஞ்சு [மார் - மார்பு]
  
பால் - பாதி
பாதி - பொதி, போதி
பொதி [கட்டுணவு]
போதி [அரசமரம்]
  
கொட்டில் - பட்டி
பட்டி - பெட்டி [பேழை]
  
கொம்படைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.02.2020

vendredi 14 février 2020

வெண்பா மேடை - 156


வெண்பா மேடை - 156

கொம்புடைந்த வெண்பா

'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சோலை' என்ற சொல்லில் கொம்பு உடைந்துவிட்டால் சாலை யாகும். இவ்வாறு கொம்புடைய சொல்லையும் கொம்புடைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்புடைந்த வெண்பா' வாகும்.

கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.

கீழ்காணும் பாடலில் 'சோலை' என்ற சொல் 'பொழில்' எனும் பெயரில் வந்துள்ளது. 'சாலை' என்ற சொல் 'வழி' என்று வந்துள்ளது.

பொழிலுற்ற கொம்புடைந்து போகுவழி காட்டும்!
தொழிலுற்ற கொம்புடைந்து சூட்டும் - விழிச்சாலம்!
பாங்கிதன் கொம்புடைந்து பானைப் பெயர்கூட்டும்!
துாங்கல்தன் கொம்புடைந்து நீறு!

பொழில் - சோலை
சோலை - கொம்புடைந்தால் சாலை [வழி]

தொழில் - வேலை
வேலை - கொம்புடைந்தால் வலை [சாலம்]
விழிச்சாலம் - கண்ணுடைய வலை - துளையுடைய வலை

பாங்கி - தோழி
தோழி - கொம்புடைந்தால் தாழி [பானை]

துாங்கல் - சோம்பல்
சோம்பல் - கொம்புடைந்தால் சாம்பல் [நீறு]

கொம்புடைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.02.2020

jeudi 13 février 2020

நிலாக் கண்ணி!


நிலாக் கண்ணி!
  
1.
வெள்ளை மனத்தழகி!
பிள்ளைக் குணத்தழகி!
கொள்ளை இனிமையடி - நிலவே!
தொல்லை தனிமையடி!
  
2.
விந்தை விழியழகி!
முந்தை மொழியழகி!
சிந்தை செழிக்குதடி - நிலவே!
நிந்தை கழிக்குதடி!
  
3.
தண்மை முகத்தழகி!
உண்மை அகத்தழகி!
பெண்மை ஒளிருதடி! - நிலவே!
கண்மை குளிருதடி!
  
4.
பின்னல் சடையழகி!
மின்னல் இடையழகி!
கன்னல் படைக்குதடி - நிலவே!
இன்னல் துடைக்குதடி!
  
5.
அன்ன நடையழகி!
கன்னச் சுவையழகி!
எண்ணஞ் சிறக்குதடி - நிலவே!
வண்ணம் பிறக்குதடி!
  
6.
வேல்சேர் அறிவழகி!
பால்சேர் பணியழகி!
மால்போல் மயக்குதடி - நிலவே!
நுால்போல் மணக்குதடி!
  
7.
கொஞ்சும் உளத்தழகி!
விஞ்சும் வளத்தழகி!
நெஞ்சம் உருகுதடி - நிலவே!
மஞ்சம் பெருகுதடி!
  
8.
ஆடை மிளிரழகி!
ஓடைக் குளிரழகி!
வாடை தழுவுதடி - நிலவே!
மேடை குலவுதடி!
  
9.
முத்துச் சரத்தழகி!
பத்துத் திறத்தழகி!
பித்துப் பிடிக்குதடி - நிலவே!
சித்துப் படிக்குதடி!
  
10.
தண்டைக் கழலழகி!
கொண்டைக் குழலழகி!
கெண்டை தவழுதடி! - நிலவே!
மண்டை சுழலுதடி!
  
11.
முல்லை நலத்தழகி!
தில்லை நிலத்தழகி!
கொல்லை மலருதடி - நிலவே!
தொல்லை வளருதடி!
  
12.
தேன்தரும் சொல்லழகி!
வான்தரும் வில்லழகி!
கான்தரும் வாசமடி! - நிலவே!
மாண்தரும் நேசமடி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
09.02.2020

samedi 8 février 2020

பாவாணர்


மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்
  
எடுப்பு
  
பாவாணர் தனித்தமிழ்ப்
படைவாணர்! - எங்கள்
[பாவாணர்]
  
தொடுப்பு
  
நாவாணர் போற்றுகின்ற - நல்லதமிழ்
நடைவாணர்! - எங்கள்
[பாவாணர்]
  
முடிப்ப
  
உலகாளும் தமிழேந்தி
உறவாகி நின்றார்! - தமிழ்க்
குலமாளும் புகழேந்திக்
குருவாகி வென்றார்!
  
நிலமோதத் தமிழ்வேரை
நிறைவாக ஆய்ந்தார்! - தமிழர்
நலமேவப் பணியாற்றி
நறுமாக்கம் வேய்ந்தார்!
  
தனித்தோங்கும் தமிழென்று
தகைபாடிக் குதித்தார்! - கவிதை
நனித்தோங்கும் சுவையென்று
நயங்கோடி பதித்தார்!
  
தடைவென்று பகைவென்று
தமிழோங்கச் செய்தார்! - அன்று
படைவென்று புவியாண்ட
பணியாவும் நெய்தார்!
  
உயிர்தோன்றி வளர்ந்திட்ட
உயர்மண்ணைத் தெளிந்தார்! - மொழிப்
பயிர்தோன்றி வளர்ந்திட்ட
பயனாய்ந்து மிளிர்ந்தார்!
  
அயற்சொற்கள் அகன்றோட
அருஞ்சொற்கள் தந்தார்! - என்றும்
இயற்சொற்கள் இசைச்சொற்கள்
எடுத்தோதி வந்தார்!
  
இணையில்லாத் தமிழேந்தி
இசையோங்கப் பூத்தார்! - தடுக்கும்
அணையில்லா அறிவேந்தி
அறமோங்கக் காத்தார்!
  
கனவெல்லாம் தமிழாட்சி
கனிந்தோங்கக் கண்டார்! - நெஞ்ச
நினையெல்லாம் குறண்மாட்சி
நிறைந்தோங்கக் கொண்டார்!
  
அருநுால்கள் அளித்திங்கே
அணியூட்டும் நேயர்! - தமிழ்
தருநுால்கள் அனைத்திற்கும்
தகையூட்டும் தாயர்!
  
முதல்பூத்த தமிழே..நீ
முறைபூத்த மொழியாம்! - நுண்
மதிபூத்த அமுதே..நீ
மரைபூத்த எழிலாம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
07.02.2020

vendredi 7 février 2020

வெண்பா மேடை - 155



வெண்பா மேடை - 155
  
கால் ஓடும் வெண்பா!
  
தமிழில் 'ா' இவ்வெழுத்தைக் 'கால்' என்று அழைப்பர். சோலை என்ற சொல்லில் கால் ஓடிவிட்டால் சேலை யாகும். இவ்வாறு காலுடைய சொல்லையும் காலோடிய பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கால் ஓடும் வெண்பா' வாகும்.
  
காலுடைய சொல்லும் காலோடிய சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'தார்' என்ற சொல் 'மாலை' எனும் பெயரில் வந்துள்ளது. 'மலை' என்ற சொல் 'வெற்பு' என்று வந்துள்ளது.
  
தாரின்தன் காலோடித் தண்டமிழில் வெற்பாகும்!
பாரின்தன் காலோடிப் பார்..மையம்! - காரின்தன்
நன்முரணும் காலோடி ஞானமுறும்! பார்வினையும்
இன்முறையில் நன்விழியாம் நாடு!
  
தார் - மாலை
மாலை - கால் ஓடியபின் மலை [வெற்பு]
  
பார் - நாடு
நாடு - கால் ஓடியபின் நடு [ மையம்]
  
கார் - இரவு
இரவின் முரண் காலை
காலை - கால் ஓடியபின் கலை [ஞானம்]
  
பார் என்னும் வினையைக் காண் என்றும் சொல்லலாம்
காண் - கால் ஓடியபின் கண் [விழி]
  
கால் ஓடும் வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.02.2020

mardi 4 février 2020

அண்ணா என்றால் தமிழென்பேன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
'ஒன்றே குலமாம்' நன்னெறியை
   உள்ளம் ஏற்றால் துயரேது?
'ஒன்றே இறையாம்' பொன்னெறியை
   உலகம் ஏற்றால் பகையேது?
நன்றே அண்ணா உரைத்தவழி
   நாடும் மண்ணில் குறையேது?
வென்றே வாழ உரமூட்டும்
   விந்தைத் தலைவன் மொழிகாப்போம்!
  
ஏழை சிரிப்பில் விண்ணிறைவன்
   இருப்பான்! குடிசை வாழ்மக்கள்
ஊழைப் போக்கும் உள்ளத்துள்
   ஒளிர்வான்! என்றன் இதயமெனும்
பேழைக் குள்ளே புகழ்அண்ணா
   பேரைத் தீட்டிக் காத்திடுவேன்!
தாழை போன்று மணம்வீசும்
   தமிழைப் பாடிக் கூத்திடுவேன்!
  
இந்தி எதிர்ப்புப் பெரும்போரை
   முந்தி நின்று நடத்தியதால்,
தொந்தி சாயும் துன்னரிகள்
   சுரண்டும் தீதைப் போக்கியதால்,
சந்தி யெங்கும் தமிழமுதைப்
   பந்தி யிட்டு முழங்கியதால்,
புந்திக் குள்ளே இனப்பற்றுப்
   பொங்கும்! அண்ணா புகழ்வாழ்க!
  
நொடிக்கும் பொழுதில் நற்பதிலை
   நுவன்ற ஆற்றல்! எந்நாடும்
படிக்கும் வண்ணம் பன்னுரையைப்
   படைத்த வன்மை! துன்புற்றுத்
துடிக்கும் மக்கள் வளமுறவே
   தொகுத்த சட்டம்! நற்றேனைக்
குடிக்கும் வண்டாய் நுால்தேடிக்
   குவித்த அண்ணா புகழ்வாழ்க!
     
அண்ணா என்றால் அறமென்பேன்!
   அண்ணா என்றால் அறிவென்பேன்!
அண்ணா என்றால் அழகென்பேன்!
   அண்ணா என்றால் அமுதென்பேன்!
அண்ணா என்றால் ஒளியென்பேன்!
   அண்ணா என்றால் உயர்வென்பேன்!
அண்ணா என்றால் தகையென்பேன்!
   அண்ணா என்றால் தமிழென்பேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
04.02.2020

பேரறிஞர் அண்ணா


பேரறிஞர் அண்ணா
  
அண்ணா அளித்த நுால்யாவும்
   அமுதத் தமிழின் சுவையூட்டும்!
வண்ணான் போன்று துவைத்தழகாய்
   மண்சேர் அழுக்கை விரைந்தோட்டும்!
வண்..நா வடித்த சொல்யாவும்
   வறுமை போக்கும் வழிகாட்டும்!
பண்..நாப் புலமை படைத்தொளிரும்
   பாட்டின் அரசன் பணிகின்றேன்!
  
மேடை மணக்கும் உரையழகும்,
   மேன்மை மணக்கும் நடையழகும்,
கூடை மணக்கும் தேங்கனியாய்க்
   கொள்கை மணக்கும் செயலழகும்,
ஓடை மணக்கும் பூங்காற்றாய்
   உள்ளம் மணக்கும் பகுத்தறிவும்,
கோடை மணக்கும் அரசியலும்,
   கொடுத்த அண்ணா புகழ்வாழ்க!
  
உள்ளம் தமிழின் குடிலாகும்!
   உருவம் ஒளிரும் கதிராகும்!
பள்ளம் மேடு சீர்செய்யும்
   பார்வை பசுமைப் பொழிலாகும்!
வெள்ளம் போன்று பாய்ந்தோடும்
   வீரச் சொற்கள் விடிவாகும்!
கள்ளம் கொண்ட மனிதர்களைக்
   கழித்த அண்ணா நெறிகாப்போம்!
  
கட்டுப் பாடும், கண்ணியமும்,
   கமழும் கடமை நன்மனமும்,
முட்டும் பகையை வெல்கின்ற
   முன்னைத் தமிழின் வன்மறமும்,
கொட்டும் முரசாய் உரிமையினைக்
   கூவி உரைத்த திருவாயும்,
கட்டுக் கரும்பாய் இனித்தனவே!
   காஞ்சி அண்ணா வழியேற்போம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
03.02.2020

dimanche 2 février 2020

வெண்பா மேடை - 154


படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’வெண்பா மேடை’ எனச்சொல்லும் உரை
வெண்பா மேடை - 154
  
கால் கூடும் வெண்பா!
  
தமிழில் 'ா' இவ்வெழுத்தைக் 'கால்' என்று அழைப்பர். கலை என்ற சொல் கால் பெற்றல் காலை யாகும். இவ்வாறு, காலில்லாச் சொல்லையும் கால் பெற்று வந்த சொல்லையும் கொண்டு பாடப்படும் வெண்பா 'கால் கூடும் வெண்பா' ஆகும்.
  
காலில்லாச் சொல்லும் காலுற்ற சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'மது' என்ற சொல் 'போதைநீர்' எனும் பெயரில் வந்துள்ளது. 'மாது' என்ற சொல் 'கோதை' என்று வந்துள்ளது.
  
போதைநீர் கால்கொண்டால் கோதை உருப்பெறுவாள்!
பாதையும் கால்கொண்டால் பார்..வாழ்த்து! - வாதையும்
கால்கொண்டால் கண்மூடும்! காருடைய கட்டையும்
கால்கொண்டால் வள்ளலைக் காண்!
  
மேற்கண்ட வெண்பாவில்
  
போதைநீர் - மது
மது கால் பெற்றல் மாது [கோதை]
  
பாதை - வழி
வழி கால் பெற்றால் வாழி [வாழ்த்து]
  
வாதை - துக்கம்
துக்கமும் கால் பெற்றால் துாக்கம் [கண்மூடும்]
  
காருடைய கட்டை [கரி]
கரி கால் பெற்றால் காரி [வள்ளல்]
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.02.2020

கேட்டலும் கிளத்தலும்


கேட்டலும் கிளத்தலும்
  
இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்பது காரிகையிலுள்ளதா? வேறு இலக்கண நூல்களில் விளக்கப்பட்டுள்ளதா? தயவுசெய்து விளக்கவும்.
  
காளியப்பன் எசேக்கியல்
சென்னை
  
------------------------------------------------------------------------
  
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனக் கொச்சகக் கலிப்பா ஐந்து வகையாம்.
  
தரவே தரவிணை தாழிசை தாமும்
சிலவும் பலவும் சிறந்து மயங்கியும்
மற்றும் விகற்பம் பலவாய் வருநவும்
கொச்சகம் என்னும் குறியின ஆகும்.
  
யாப்பருங்கல விருத்தி - 86
  
தரவே தரவிணை தாழிசை சிலபல
மரபான் இயன்றவும் மயங்கி வந்தனவும்
அவ்வவ் பெயரான் அமைந்த கொச்சகமும்
ஆகும் என்ப அறிந்தி னோரே.
  
இலக்கண விளக்கம் - 738
  
தரவே ஆகியும் இரட்டியும் தாழிசை
சிலவும் பலவும் மயங்கியும் பாவேறு
ஒத்தா ழிசைக்கலிக்கு ஒவ்வா உறுப்பின
கொச்சகக் கலிப்பா ஆகும் என்ப.
  
அவிநயம்
  
தரவே தரவிணை தாழிசை சிலபல
வரன்முறை பிறழ அயற்பா மயங்கியும்
தனிச்சொல் பலவாய் இடைஇடை நடந்தும்
ஒத்தா ழிசைக்கலி உறுப்பினில் பிறழ்ந்தவும்
வைத்தவழி முறையால் வண்ணகம் இறுவாய்
மயங்கி வந்தவும் இயங்குநெறி முறையின்
கொச்சகக் கலியெனக் கூறினர் புலவர்.
  
மயேச்சுரம்
  
தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்
மரபே இயன்றும் மயங்கியும் வந்தன கொச்சகமே.
  
யாப்பருங்கலக் காரிகை - 33
  
மேலும், வீரசோழியம் 118 ஆம் நுாற்பாவும், தொன்னுால் விளக்கம் 234 ஆம் நுாற்பாவும், முத்துவீரியம் செய்யுளியல் 39 ஆம் நுாற்பாவும், கொச்சகக் கலிப்பாவின் இலக்கணத்தை உரைக்கின்றன.
  
தரவு ஒன்றே வந்தால் 'தரவு கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு இரண்டாய் வந்தால் 'தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும், சில தாழிசையால் வந்தால் 'சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும், பல தாழிசையால் வந்தால் 'பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் பிற பாவினோடு மயங்கியும் வந்தால் அதனை 'மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா' என்றும் வழங்கக் காண்கிறோம்.
  
தரவு ஒன்றாய்ச் சுரிதகம் பெற்றதனைச் 'சுரிதகத் தரவு கொச்சகக் கலிப்பா' என்றும், சுரிதகம் இல்லாததனை 'இயல் தரவு கொச்சகக் கலிப்பா' என்றும் தரவு கொச்சகம் இருவகையாகும். இருவகையை உணர்த்தவேண்டிச் சுரிதகம், இயல் என்னும் சொற்கள் முன்னே வந்தன.
  
தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வந்ததனைச் 'சுரிதகத் தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும், சுரிதகம் இல்லாததனை 'இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா' என்றும், தரவு கொச்சகக் கலிப்பா போன்று தரவிணைக் கொச்சகக் கலிப்பாவும் இருவகையாகும். இங்கும் இருவகையைப் பிரித்துணரச் சுரிதகம், இயல் என்னும் சொற்கள் முன்னே வந்தன.
  
தரவு கலிப்பாவின் முதல் உறுப்பு. செய்யுளின் கருத்தைத் தொடங்கி அல்லது தொகுத்து உரைப்பது. ஒருவனை அல்லது ஒன்றைக் கூறப்படுவது போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும்.
  
அளவடியில் அமையும். மோனை மூன்றாம் சீரில் அமையும். இரண்டடிகள் ஓரெதுகை பெற்று அமையும். [நான்கடிகளில் தரவு அமைந்தால் நான்கடியும் ஓரெதுகை பெற்று வருவது சிறப்பு]
  
சிற்றெல்லலை நான்கடி, பேரெல்லை பன்னிரண்டடி. ஒரோவழி பன்னீரடியின் இகந்தும் வரும். இவ்வாறு தொல்காப்பியம் உரைக்கும். தரவுவின் சிற்றெல்லை முன்றடியானும் உள்ளன.
  
தரவில் பெரும்பாலும் புளிமாங்காய், கருவிளங்காய்ச் சீர்களே வரும்.
  
எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக்கொண்டு தந்து முன் நிற்றலின் தரவு என்பதுாஉம் காரணக்குறி.
  
நான்கடி ஓரெதுகை பெற்று வரும் கொச்ககக் கலிப்பா இரட்டித்து எட்டடி ஓரெதுகை பெற்றுவரும் பாடல் இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்று பிற்காலத்தில் பெயர்கொண்டது.
  
தனிச்சொல் பெற்றுவரும் இயல் தரவிணைக் கொச்சகமும், ஆண்டாள் பாடிய இயல் தரவிணைக் கொச்சகமும் வேறுபாடுடையன.
  
தனிச்சொல் பெற்று வரும் இயல்தரவிணைக் கொச்சகம், தரவின் சிற்றெல்லை மூன்றடியாய் வருவதுண்டு. தரவு ஓரெதுகையிலும் பல எதுகையிலும் அமைவதுண்டு. இரண்டு தரவும் வேறு வேறு எதுகையைப் பெறுவதுண்டு. ஆண்டாள் பாடிய இயல் தரவிணைக் கொச்சகம் ஓரெதுகையில் மட்டுமே வரும்.
  
நான்கடி ஓரெதுகை பெற்று வரும் கொச்சகமும், கலிவிருத்தமும் வேறுபாடுடையன.
  
தரவு கொச்சகம் கலித்தளையும் வெண்டளையும் மட்டும் பெற்று வருகின்றது. இது பெரும்பான்மை. அருகிச் சிலவிடங்களில் ஒன்றா வஞ்சித்தளை வரலாம் எனப் பாடல்களைப் பார்க்கும்போது தெரிகிறது. கலிவிருத்தத்தில் தளை பார்க்கப் படுவதில்லை.
  
தரவு கொச்சகம் ஓரெதுகையில் நான்கு, ஆறு, அல்லது எட்டடிகள் பெற்று வருகின்றன. கலிவிருத்தம் நான்கடியே பெற்று வரும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
02.02.2020