samedi 28 mars 2015

திருவருட்பா வாழ்த்துமலர்




திருவாளர் தட்சிணாமூர்த்தி சத்தியவாணி இணையாின் 
இல்லத்தில் நடைபெற்ற
திருவருட்பா முற்றோதல் வாழ்த்துமலர்

சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
பத்திய வாழ்வின் பயனுணர்ந்தார்! - சித்தத்தில்
சன்மார்க்கம் கொண்டார்! தங்கத் தமிழ்நெறியின்
பொன்மார்க்கம் கண்டார் பொலிந்து!

அன்பே தெய்வம்! அருளே இன்பம்!
பண்பே மேன்மை! பணிவே உயர்வு!
மனித நேயம் மாண்பின் உச்சம்!
இனிய மொழியே இன்றேன் ஊற்று!
ஒழுக்கம் வாழ்வின் ஒளியை ஏற்றும்!
பழுத்த பழமாய்ப் பாக்கள் இனிக்கும்!
அன்னைத் தமிழின் அமுத நெறிகளைப்
பொன்னெனப் போற்றிப் புகழும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
புத்தமு துண்டு புதுமை காண்கவே!

வடலூர் வள்ளல் வகுத்த வழியை
உடலூர் வண்ணம் ஓதி மகிழ்வார்!
உற்ற உறவை உயரச் செய்தல்
கற்ற கல்வியின் கடமை என்பார்!
கொல்லா நோம்பின் கோலம் கொண்டு
நல்லார் உரைகளை நாடிக் கேட்பார்!
செல்லும் இடமெலாம் செந்தமிழ்ச் சீரினை
வெல்லும் முறையில் விளைக்கும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
எத்திசை ஏத்த ஏற்றம் காண்கவே!

செம்மொழித் தமிழின் சிறப்பைக் காத்துக்
கம்பன் கழகம் கடமை யாற்றும்!
எங்கும் தமிழே! எதிலும் தமிழே!
தங்கத் தமிழின் சால்பினைச் சாற்றும்!
அருட்பா அமுதை அள்ளி அருந்தி
அரும்பா எழுத ஆற்றல் அளிக்கும்!
எங்கள் தொண்டில் இறுக இணைந்து 
பொங்கும் தமிழைப் போற்றும் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
சித்தினை வென்று சிறப்பைக் காண்கவே!

அமைதி என்னும் அரும்தமிழ்ச் சொல்லைத்
தமதுயி ராகத் தரித்த மனத்தர்!
நட்பைப் பேணி நலங்கள் நல்கிக்
கட்டு மலராய்க் கமழும் செயலர்!
நல்ல வழியில் நடக்கும் மைந்தரை
வல்ல திறமையில் வளர்த்த செல்வர்!
வள்ளல் அடிகளை வாழ்த்தி வணங்கி 
உள்ளம் ஒளிரும் ஒப்பில் இணையர்
சத்திய வாணியும் தட்சிணா மூர்த்தியும்
சித்திரை நிலவின் சிறப்பைக் காண்கவே!

28.03.2015

samedi 14 mars 2015

தாய்மொழிநாள்




புதுவைப் பாவலா் பயிற்சிப் பட்டறை

நடத்திய பாட்டரங்கம்
[தலைமைக் கவிதை]

தாய்மொழிநாள்

தமிழ் வணக்கம்!

மலர்பூக்கும்! மனம்பூக்கும்! எழில்சேர் மங்கை
     மணிவிழிகள் தாம்பூக்கும்! வையம் போற்றும்
நலம்பூக்கும் திருக்குறளை நன்றே கற்றால்
     நம்மினத்தின் சீர்பூக்கும்! சான்றோர் நுாலால்
புலம்பூக்கும்! புகழ்பூக்கும்! புதுமை பூக்கும்!
     புத்தமுதாய்ப் புன்னகையும் பூக்கும்! இந்த
நிலம்பூக்கும் பூவெல்லாம் தோற்கும் வண்ணம்
     நெஞ்சத்துள் கவிபூக்கத் தமிழே காப்பாய்!

இறை வணக்கம்

சீர்பூத்த செழுங்கம்பன் நுாலில் வாழும்
     செம்பொருளே! பொன்மறையே! பாடிப் பாடிப்
பேர்பூத்த ஆழ்வார்கள் நெஞ்சுள் நின்ற
     பெருமாளே! நெடுமாலே! சுழலு கின்ற
பார்பூத்த பொழுதினிலே தமிழைத் தந்து
     பயன்பூத்த என்னிறைவா! பசுமை பொங்கக்
கார்பூத்த திருமலையில் வாழும் தேவா!
     கவிபூத்த இவ்வரங்கைக் காப்பாய் நன்றே

அவை வணக்கம்!

பொங்குதமிழ் பூக்கின்ற புதுவைத் தாயின்
     பொன்னடியை வணங்குகின்றேன்! உங்கள் நெஞ்சுள்
தங்குதமிழ் தந்திட்ட இலக்கி யர்தம்
     தாள்தொட்டு வணங்குகின்றேன்! விழுதாய் நாளும்
தொங்குதமிழ் பாடுகின்ற உங்கள் முன்னே
     துாயகவி வணங்குகின்றேன்! சந்தம் பாடிச்
சுங்குதமிழ் காட்டுகின்ற ஆய்வு வேந்தா்
     சுடர்.அரங்க இராசரை..நான் வணங்கு கின்றேன்!

முன்பிறந்த முத்தமிழை உலகம் போற்றி
     முழங்கிடவே தாய்மொழிநாள் வேண்டும்! வேண்டும்!
தன்பிறந்த நாளுக்குச் சாலை எங்கும்
     தலைவனெனப் படமொட்டித் திரிதல் வீணே!
பின்பிறந்த பலமொழிகள் ஆட்சி மன்றில்
     பெருமையுடன் அமர்ந்தனவே! அறங்கள் சூடி
இன்குவிந்த வாழ்வுக்கு வழியைக் காட்டும்
     எழில்தமிழாள் அரசாளும் நாளே பொன்னாள்!

அடுத்துவரும் தலைமுறையைக் காக்க வேண்டின்
     அமைத்திடுக தாய்மொழிநாள்! மேன்மை யாவும்
தொடுத்துவரும் வண்ணத்தில் எதிலும் எங்கும்
     துாவிடுக தமிழ்விதையை! நம்மின் வாழ்வைத்
தடுத்துவரும் பகைசாயும்! சாதி நீங்கும்!
     சமயத்தின் தீ[து]ஒழியும்! உங்கள் நெஞ்சம்
அடுத்துவரும் பிறவியிலும் தமிழைப் பாடி
     அழகேந்தி அறிவேந்தி ஒளிரும் என்பேன்!

பற்றில்லாத் தமிழருக்குப் பண்பை ஊட்டிப்
     பகையெதிர்க்கும் மறமூட்டும் மொழிநாள் வேண்டும்!
கற்றெல்லாத் திசைகளிலும் தமிழன் சென்று
     கனித்தமிழின் தொன்மையினை உரைக்க வேண்டும்!
ஒற்றெல்லாம் உயிர்சேரும் இயல்பைப் போன்றே
     உயர்ந்தோரின் உள்ளங்கள் தமிழில் ஒன்றும்!
பொற்பெல்லாம் நாம்பெற்று வாழ்தல் வேண்டின்
     பொழுதெல்லாம் தமிழ்முழக்கப் பணிகள் செய்வீர்!

தன்மானம் பெற்றிடவும், வாழ்வைக் காக்கும்
     தமிழ்மானம் காத்திடவும் மொழிநாள் வேண்டும்!
பொன்வான விடிவாக நெஞ்சம் மின்னப்
     பூந்தமிழின் நன்னெறியைப் போற்ற வேண்டும்!
இன்கான யாப்பழகைக் கற்க வேண்டும்!
     இனமானம் உயிரென்றே இயம்ப வேண்டும்!
உன்னுான உள்ளத்தை மெல்ல மாற்றி
     உயா்தமிழால் ஒளியேற்று! பாரே வாழ்த்தும்!

பொய்யுரைத்து நம்வாழ்வைப் பொசுக்கப் பார்க்கும்
     புல்லர்களைப் போக்கிடவே மொழிநாள் வேண்டும்!
மெய்யுரைத்து விழிப்பூட்டி இருளைப் போக்கி
     வெற்றிபெறும் வீரத்தை விளைக்க வேண்டும்!
செய்..துடித்துக் கடமையினை! செம்மை காணச்
     சீா்திருத்து மேதினியை! கீழ்மைப் போக்கை
எய்..முடித்து! பிறப்பொக்கும் நெறியை ஓதி
     இவ்வுலகை மேலுயா்த்து! புகழே ஓங்கும்!

பாட்டரங்கில் தாய்மொழிநாள் தலைப்பில் பாடப்
     பாவலரை அழைக்கின்றேன்! ஆட்சி செய்யும்
நாட்டரங்கில் நற்றமிழை அமரச் செய்யும்
     நல்லகவி தந்திடுவார்! இதயம் என்னும்
கூட்டரங்கில் இவர்பாடல் இனிக்கும் என்பேன்!
     குயிலரங்காய் இவ்வரங்கம் மணக்கும் என்பேன்!
வேட்[டு]அரங்கில் விழுந்ததுபோல் கைகள் தட்டி
     வியன்தமிழை வரவேற்று மகிழ்வீர் இன்றே!

முடிப்பு கவிதை

வெள்ளிக் கிழமைப் பாட்டரங்கில்
     வியக்கும் வண்ணம் கவிபடைத்தார்!
துள்ளி ஓடும் மானாட்டம்
     துரத்தும் வேங்கைக் கண்ணேட்டம்
அள்ளிப் பாட்டில் அளித்திட்டார்!
     அமுதாய் நாமும் சுவைத்திட்டோம்!
பள்ளி கொண்ட திருவரங்கன் 
     பார்வை இவா்மேல் படருகவே!

மொழிநாள் என்னும் நற்றலைப்பில்
     மொழிந்த கவிகள் வாழியவே!
வழிநான் என்றே முன்னிற்கும்
     வல்ல புலவோர் வாழியவே!
பழிநாள் இன்றிப் பாதையினைப்
     படைக்கும் தமிழர் வாழியவே!
பொழில்நாள் என்பேன் இந்நாளை!
     புகன்றேன் வணக்கம்! நனிநன்றி!

20.02.2015 புதுவை

mardi 10 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 5

என்னாசிாியா் தமிழ்மாமணி பாவலா்மணி சித்தன் ஐயாவுடன்


 புதுவைப் பெரும்புலவா் சந்தப்பாமணி அரங்க. நடராசனார் ஐயாவுடன்


 தனித்தமிழ்த் தொண்டா் தமிழ்மண் இளவழகனார் ஐயாவுடன்

முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணனார் ஐயாவுடன்

 திரைப்பட இசையமைப்பாளர் சௌவுந்தா் ஐயாவுடன்

திரைப்பட இயக்குநா் செல்வமணி ஐயாவுடன்

கவிஞா் மாலதி, கவிஞா் கீதா, கவிஞர் சுவாதி ஆகியோருடன்

கவியாழி கண்ணதாசன், கவிஞர் தென்றல் சசிகலா, சசிகலா இளையமகன் இனியன் மற்றும் எதிா்வீட்டுப் பிள்ளைகளுடன்

  தந்தையும் தாயும்

dimanche 8 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 4



கம்பன் உறவுகளே வணக்கம்
21.02.2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குப்
புதுவை இலக்கியச் சோலை அமைப்பினர்
எனக்கு அளித்த பாராட்டு விழாப்
புகைப்படங்கள்

 









jeudi 5 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 3



16.02.2015 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் எம்.இராசாராம் IAS அவா்களைச் சந்தித்தேன்.

2016 ஆண்டுப் பிரான்சு கம்பன் கழகமும் சென்னைத் தமிழ் வளர்ச்சிச் சிறகமும் இணைந்து தமிழ் இலக்கண இலக்கிய மாநாட்டைப் பிரான்சு நாட்டில் நடத்த வேண்டுமென விண்ணப்பித்தேன். செய்யலாமென இன்னுரை மொழிந்தார்.

பிற்பகல் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் "பிரான்சுக் கம்பன் கழகத்தின் தமிழ்ப்பணியும் சமுகப்பணியும்" என்ற தலைப்பில் உரையாற்றினேன். 





mercredi 4 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 2



பாவலர் பயிற்சிப் பட்டறைப் பாவரங்கம்

புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றத்தின் வெள்ளிப் பாவரங்கம் 20.02.2015 அன்று என் தலைமையில் "தாய்மொழி நாள்" என்ற தலைப்பில் நடைபெற்றது.









lundi 2 mars 2015

தாயகப் பயணம் - பகுதி 1

தமிழ் உறவுகளே வணக்கம்!

தாயகப் பயணம் எண்ணிய வண்ணம் சிறப்புடன் அமைந்தது

புதுக்கோட்டையில் இயங்கும் பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்திய 
இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "ஏக்கம் நுாறு"  "கனிவிருத்தம்"  என்னும் கவிதை நுால்களை இயக்குநா் திலகம் கே. பாக்யராசு  அவா்கள் வெளியிட்டுச் சிறப்புரை வழங்கினார்