vendredi 12 mai 2017

தமிழின் சொல்லழகு


தமிழின் சொல்லழகு
  
1.
அடியென்றால் பாடும் அடியென்பேன்! கொம்பால்
அடியென்றால் செய்யேன்! அளந்த - அடியை
அடியென்றால் சீர்மாலில், நீள்கோலில் ஆழ்வேன்!
அடியென்றால் தேனாம் அவள்!
  
2.
பிடியென்றால் யானை! பெருமறவன் போர்வாள்
பிடியென்றால் பேணிப் பெறுவேன்! - கொடியைப்
பிடியென்றால் முன்னிற்பேன்! நான்பெற்ற கல்வி
பிடியென்றால் இல்லை பிழை!
  
3.
கடியென்றாள் அச்சம்! கடுங்காவல்! காயைக்
கடியென்றாள் உண்ணல்! களிப்பு! - மடல்சேர்
கடியென்றாள் வாசம்! கடக்கும் விரைவு!
கடியென்றாள் இன்பமெனக் காண்!
    
4.
மடியென்றால் துாய்மை! மயக்கம் கொடுக்கும்
மடியென்றால் பெண்ணின் வனப்பு! - குடம்போல்
மடியென்றால் மாடு! வடிவாய்த் துணியை
மடியென்றால் செய்வேன் மகிழ்ந்து!
    
5.
படியென்றால் நாள்தொகையாம்! பார்த்தே..நீ ஏறு
படியென்றால் நீர்நிலையாம்! பண்பாய்த் - தொடர்ந்து
படியென்றால் நல்லுரையாம்! பன்னும் நகலாம்!
படியென்றால் ஏணிப் படி!
    
6.
விளக்கு வழிகாட்டும்! வேண்டாத தீதை
விளக்கு நலங்கூட்டும்! மேன்மை - விளைய
விளக்கு மதியூட்டும்! பித்தளை மின்ன
விளக்கு மிளிர்வூட்டும் வீறு!
  
7.
கொடியை வணங்கிடுவோம்! கோலப்பெண் கொண்ட
கொடியை இலையென்போம்! கூந்தல் - சுடர்ப்பூங்
கொடியை வளர்த்திடுவோம்! நற்குழந்தை தாயின்
கொடியை உணர்ந்திடுவோம் கூர்ந்து!
  
8.
தடியென்பார் மேனித் தசையளவை! ஊன்றும்
தடியென்பார்! நற்குளிர் தண்மை - படைக்கும்
தடியென்பார் ஆற்றங் கரையை! தருக
தடியென்பார் நன்களக்கத் தான்!
  
9.
மின்னும் முடியுண்டு! மென்மலர் சூடிடவே
பின்னும் முடியுண்டு! பேருலகில் - அன்பூறும்
மூன்று முடியுண்டு! நல்லடிக்குப் பின்முரணாய்த்
தோன்றும் முடியுண்டு சொல்லு!
  
10.
கட்டென்றால் காவல்! கயிறெடுத்து நன்றாகக்
கட்டென்றால் ஏவல்! கனிமொழியாள் - பெட்பருள்
கட்டென்றால் பேரழகு! காதல் கவிதைத்தாள்
கட்டென்றால் என்னுள் களிப்பு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.05.2017