Affichage des articles dont le libellé est சித்திர கவி. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est சித்திர கவி. Afficher tous les articles

lundi 16 septembre 2019

தேருலா

பிரான்சு கம்பன் கழகம் நடத்தும்
18 ஆம் ஆண்டு
கம்பன் விழாவில் வெளியிடப்படும்
சித்திர கவி நுாலின் முகப்பட்டை

jeudi 25 juillet 2019

சிவலிங்கப் பந்தம்



சிவலிங்க ஓவியக் கவிதை - 3
[பாடல் 143 எழுத்து, ஓவியம் 128 எழுத்து]
  
என்னாசிரியர்
அந்தாதி அரசர் பா.சு. அரியபுத்தரனார்
செழிப்பை யருள்கவே!
  
விந்தைத் தமிழை வேண்டித் தொழுதார்!
சிந்தை யினிக்கத் தேன்கவி வடித்தார்!
நாள்கள் யாவும் நலமே பெருகத்
தாள்கள் துாய வழியை யன்பையே
நாடிப் பொழிலே செல்ல, நெஞ்ச
மோடி மேவு முயர்வை! வாழ்வு
மேன்மை யூட்டும்! நாட்டும் வெற்றியை!
கோன்மை நல்கி மேலாங் கோலிடும்!
பேரார் சற்குரு பாரெலாம் வாழ்த்தவே
சீரெலாம் மேவுஞ் செழிப்பை யருள்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.07.2019

mercredi 17 juillet 2019

சேவல் பந்தம்



சேவல் ஓவியக் கவிதை
  
கட்டழகே கண்!மின்பொன் மிக்கு வியனழகே!
மொட்டழகே! காதல் மொழிமிகு - பட்டழகே!
சொத்தென ஆடும் கொடிவாழும் பின்னழகே!
மத்தென வாடும் மனம்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
17.07.2019

dimanche 14 juillet 2019

உடுச்சித்திர கவிதை


உடுச்சித்திர கவிதை
  
கண்ணா வாராய்!
  
கவிவளர் கோல்போல் வாராய்!
   கனிவளர் கோல்போல் வாராய்!
சுவைவளர் தேன்போல் வாராய்!
   சுனைவளர் நீர்போல் வாராய்!
சுனைவளர் மண்போல் வாராய்!
   சுளைவளர் மண்போல் வாராய்!
கவின்வள மரைபோல் வாராய்!
   கவிவளர் தமிழ்போல் காக்க!
  
கோல் - எழுதுகோல், மரம்
சுனை - மலைவூற்று, நீரும் நிழலும் உள்ள இடம்
கவி - கவிதை, புலவன்
கவின் - அழகு
  
கண்ணா எனக்கு நீ கவிதையைத் தருகின்ற எழுதுகோலாக வரவேண்டும். செழித்த கனிமரமாக வரவேண்டும். சுவைவளர் தேனாக வரவேண்டும். மலைவூற்றாக வரவேண்டும். நீரும் நிழலும் உள்ள நிலமாக வரவேண்டும். அழகாக மலர்ந்துள்ள தாமரைக் காடாக வரவேண்டும். புலவனாகிய என்னை வளர்க்கின்ற தமிழாக வரவேண்டும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.07.2019

lundi 8 juillet 2019

மும்மீன் சித்திர கவிதை


மும்மீன் சித்திர கவிதை
  
காழ்வேன் பெருமுறுதி! கானந்..தா! செந்திருவே!
கார்மேனி மன்னனே! வாழ்வே..நீ! - சீரேநீ!
வான்மேகா! மீனேநான் தேறிட வாமனா!
கான்தேகா! வா!தேனே கா!
  
காழ் - மரவயிரம்
கா - காத்தல்
கான் - மணம், மலர்
  
கருத்துரை - உன்னிடத்தில் வன்மையாக உறுதிவைத்துள்ளேன்! செந்திருவே இசையை எனக்குத் த் தாராய்! கருமை நிறத்தைக் கொண்ட என் மன்னனே என் வாழ்வே நீ. நானுற்ற சீரே.. நீ. மழை தருகின்ற வான்மேகனே! வாமனனே! மலர்மணம் வீசுகின்ற மேனியனே! தேனே! இந்த மும்மீன் கவிதையை நான் எழுதிட, என்னைக் காக்க வாராய்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
07.07.2019

samedi 6 juillet 2019

சித்திர கவிமேடை - 4


சித்திர கவிமேடை - 4
  
சங்குச் சித்திர கவிதை
  
குன்றுறுங் கோகுலத்துச் சீர்த்தேனே! விண்ணரசே!
என்றுறும் பொன்னருளே! வா..திருவே! - அன்புறுந்பே
ரிங்கேந்தும் கன்னல்மிகும் வந்தொளிர் வாழ்வேந்தச்
சங்கேந்தும் கண்ணனே தாங்கு!
  
78 எழுத்துக்களைக் கொண்டிருக்கும் இவ்வெண்பா சித்திரத்தில் 73 எழுத்துக்களைப் பெற்றிருக்கும். ஒன்றாக வரும் எழுத்துக்கள் [1-78] [5-77] [16-75] [30-34] [56-69]
  
விரும்பிய பொருளில் சங்குச் சித்திர கவிதை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் சங்குச் சித்திர கவிதையைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
06.07.2019

jeudi 4 juillet 2019

கோபுர ஓவியக் கவிதை


கோபுர ஓவியக் கவிதை
  
சிந்தை வேண்டும் சீர்மிக! நாடி
விந்தை பொழிய விரிவிழி! மாபொன்
மாதே! கழையே! தாயே! பூமனத்து
மீதே மனமாழ் காவே மின்னிடக்
காண்பண்! காண்திண்! கமழ்தவத் தேனே!
காண்செம்மை தந்தமை பெருகுமே தண்தகை
வகைதரும் வண்டமிழ் மதுமழை பொழிகவே!
  
கோபுரத்தின் அடியிலிருந்து ஒவ்வொரு கட்டமாக எழுத்துக்களைக் கூட்டிப் படிக்க,பாடலின் ஈற்றடி கோபுரத்தின் தலையிலிருந்து இறங்கி வருவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.06.2019

samedi 29 juin 2019

மிறைக்கவி மேடை - 3



மிறைக்கவி மேடை - 3

துாசங்கொளல்
துாசங்கொளல் என்பது, ஒருவன் ஒரு வெண்பாச் சொன்னால், அதன் ஈற்றெழுத்தே ஈறாக, அதன் முதல் எழுத்தே முதலாக மற்றொரு வெண்பா ஈற்றினின்று மேற்பாடுவது.
அத்தி வரதா
கஞ்சி வரதரே காயும் கடுவெயிலுக்
கஞ்சிக் கிடந்தீரோ? நீர்க்குளத்தில் - மஞ்சன..நீர்
ஆட்டக் கரையேறும் அத்தி வரதாவுன்
காட்டா வடிவம்தான் காட்டு!
பாவலர் ஐயப்பன்
கண்ணுறக்கம் தண்குளத்துள் காண்பதுமேன்? பன்னாளாய்
மண்ணுறக்கம் இன்றி வதைகின்றேன்! - விண்ணுறக்கம்
நானுறும்..முன் வேண்டுகிறேன்! நாரணா உன்னுடைய
கானுறும் பூமுகம் காட்டு!

பாவலர் ஐயப்பன் பாடிய பாடலுக்கு நான் பாடிய துாசங்கொளல்.

பிரான்சில் நடைபெறும் யாப்பிலக்க வகுப்பில் மாணவர்களுக்கு மிறைப்பா நடத்தினேன்.  மாணவ மாணவியர் பாடிய வெண்பாவுக்குத் துாசங்கொளல் பாடினேன்.

நாவினிக்க நற்றமிழை நல்கிடுவாய்! வெள்ளிதழ்ப்
பூவிருக்கும் நாயகியே! பொற்கொடியே! - பாவினிக்கும்
சிந்தையுறச் செந்தமிழின் சீர்மகளே! என்றும்..நீ
விந்தையுறை வேதத்தின் வித்து!

பாவலர் கவிப்பாவை
23.06.2019

பாவலர் கவிப்பாவையின் வெண்பா 'நா' என்ற எழுத்தில் தொடங்கி 'து' என்ற எழுத்தில் நிறைவுற்றது.

'து' என்ற எழுத்திலிருந்து மேனோக்கி 'நா' என்ற எழுத்தில் நிறைவுறும் வண்ணம் ஒரு சில நிமிடங்களில்  நான் எழுதிக் காட்டிய வெண்பா.

நானினிக்கப் பாடுகிறேன் நாளெல்லாம் நாரணனே
தேனினிக்கப் பாடுகிறேன் சீர்பெறவே! - வானொலிக்கத்
தங்குபுகழ் மின்னுமே! சந்த நடையேந்திப்
பொங்குதமிழ் மின்னுமே பூத்து!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
23.06.2019

மிறைப்பா மேடை - 1


மிறைப்பா மேடை - 1

கூட சதுர்த்தம்

நான்காம் அடியிலுள்ள எழுத்துக்கள் மற்றைய மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு இயற்றப்படும் செய்யுள் கூட சதுர்த்தம்.

கூடம் - மறைந்திருப்பது, சதுர்த்தம் - நான்காம் அடி. மறைவாக நான்காம் அடியை உடையதென்பது பொருள்.

பல நுால்கள் கூட சதுர்த்தத்தை, கூட சதுக்கம் என்று குறிப்பிட்டுள்ளன.

பாரதியே போற்றுகிறேன்!

நாட்டுக் குழைத்தாய்! பற்றுடனே
          நம்மின் நற்றேன் நெறிக்குழைத்தாய்!
ஏட்டுக் குழைத்தாய்! பாவையர்தம்
          இழிவைக் கிள்ளிப் போர்தொடுத்தாய்!
வீட்டுக் குழைத்தாய்! பாத்தாயே
          வியக்கப் பார்த்த சாரதியின்
பாட்டுக் குழைத்தாய்! பாரதியே
          பாதம் பற்றிப் போற்றுகிறேன்!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

கருத்துரை: செந்தமிழ் நாட்டுக்கும் பாரத நாட்டுக்கும் உழைத்தாய். தமிழ்த்தாயின் நெறிகள் பரவ உழைத்தாய். நல்ல நுால்களை படைத்திட உழைத்தாய். பெண்ணின் விடுதலைக்கு உழைத்தாய். பரம்பொருள் நல்கும் விண்வீட்டுக்கு உழைத்தாய். பாட்டின் தாயாகிய பைந்தமிழ் வியந்திடவே கண்ணன் புகழ் வீசும் பாட்டுக்குழைத்தாய். மகாகவி பாரதியே உன்றன் பாதங்களைப் பற்றிப் போற்றுகிறேன். 

இவ்விருத்தத்தின் நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஏனைய மூன்றடிகளுள்ளும் ஆங்காங்கே மறைந்துள்ளன.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.06.2019

மிறைப்பா மேடை - 2


மிறைப்பா மேடை - 2
  
விசித்திர அகவல்
  
ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.
  
குறள் வெண்பா
  
குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!
  
இக்குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் கீழ்க்கண்ட விசித்திர அகவலின் ஓவ்வோர் அடியின் ஈறறில் அமைந்துள்ளதைக் காணலாம்.
  
அன்னைத் தமிழின் அமுதைப் பருகு
மன்பன்! ஆற்றல் அரிமா! கி.மு
முன்னே மொழியைத் முனைந்து காத்த
தன்னே ரில்லாத் தமிழன் நாம
மோதும் மறவன்! முத்தமிழ் வல்ல
தாதும் மணக்கும் தகையன்! தீரா
ஆசை கவிமேல்! ஆக்கம் வாழ்க!
மீசைக் கவிமேல் மேவும் உணர்வைக்
காட்டும் நெஞ்சன்! கண்ணியன் என்கோ!
சூட்டும் மின்னிதழ்த் துாயன்! கால
மூட்டும் சீரை உடையன்! அருவி
போலத் தண்மைப் பொழிலன் தந்த
கோல இதழ்கள் கூட்டும் நற்புகழ்!
பாடும் புலவர் நாடும் நட்பி
லாடும் மனத்தன்! அருங்கணி வரையன்!
படங்கள் யாவும் பட்டாய் மின்னு
முடைமை கற்றவன்! ஊக்கம் பின்னும்
தன்மை பெற்றவன்! மாட்சி தழைத்த
வன்மை உற்றவன்! வாழும் பூமி
சுற்றும் செயலாய்த் தொண்டே சூழ
நற்றமிழ் காப்பவன்! நன்றே தமிழமி
னுற்ற பெருமையை ஓதி மகிழ்ந்தேன்!
உலகை உவக்கும் ஒப்பில் தேவா!
நலமே நண்பன் நாளும் இங்காழ்
வண்ணம் செய்க! வளமே பொழிக!
எண்ணம் என்றும் இன்பங் குழைத்த
தாகம் தணித்த தகையுடை இன்மழை
யாக வேண்டும்! அருளைக் கொடுத்துத்
தமிழமிழ் வாழ்வைத் தாங்கியே உயர்த்து!
உமதுயிர்த் தமிழை ஓங்கியே சாற்று!
எல்லாம் அறிந்த அல்லா அழகைச்
சொல்லி, அகவல் அடிகளில் தோன்றும்
ஈற்றாம் எழுத்தைப் போற்றிப் படித்தால்
சாற்றிய நற்குறள் ஊற்றெனத் துள்ளும்!
விசித்திர அகவல் வேண்டி விளைத்தேன்!
பசியுறு புலமைப் பான்மை தெரிக்கவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.06.2019

dimanche 16 juin 2019

காதைகரப்பு

காதைகரப்பு
  
வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத்தேயே இருக்குமாறு பாடப்படும் பாடல் காதைகரப்பாகும். ஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம்மாறி மறைந்திருத்தல் என மாறனலங்காரமும் வீரசோழியமும் இதன் இலக்கணத்தைக் கூறுகின்றன. மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று. [மிறைக்கவி என்றால் சித்திர கவி என்று பொருள்]
  
காதை கரப்பது காதை கரப்பே
[மாறனலங்காரம் 289]
  
இவ்வாறு அமையும் பாடலைக் 'கரந்துறை செய்யுள்' என்று, தண்டியலங்காரமும், முத்துவீரியமும், இலக்கண விளக்கமும் கூறுகின்றன.
    
கரந்துறை செய்யுளுக்கும் காதை கரப்பிற்கும் உள்ள வேறுபாடு:
    
இவ்விரண்டின்கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்ற எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமை யிருப்பினும், முன்னையது இறுதி எழுத்தின் அயலெழுத்திலிருந்து ஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக்கொள்ளப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். காதைகரப்பாவது பாட்டின் முதற்கண் இருந்தே எவ்வித வரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக் கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும். [காதை - கவி] [கரப்பு - மறைத்தல்]
  
கண்டுகண் சொக்குதடி! காதல்மொழி கேட்டுமது
உண்டு கிடக்குதடி! பண்ணறியும் - ஒண்தொடியே!
இன்பம் உளமுயிர்த்து ஏங்குதடி ஐம்புலனும்!
அன்புற்றுப் பெண்ணே அணை!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள!
[திருக்குறள் - 1101]
  
என்ற குறளிலுள்ள எழுத்துக்கள் எல்லாம் ஆங்காங்கு வருமாறு அமைந்து குறள் மறைந்து கிடப்பதைக் காண்க
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
09.04.2017

lundi 5 mars 2018

கோமூத்திரி



பசுவின் பாய்ச்சல் ஓவியக் கவிதை
[கோமூத்திரி]
  
குறள்வெண் செந்துறை
  
ஈசா உன்னையே எண்ணம் நாடும்
வாசா உன்னையே வண்ணம் பாடும்
  
பசுவானது நடந்தவாறு சிறுநீர் கழிக்க, உண்டாகும் சுவட்டின் மேல் எழுத்துக்கள் அமையும் பாடல். கோ - பசு, மூத்திரி - மூத்திர வடிவுடையது.
  
நேராக எழுதப்பட்ட இரண்டடிகள். சுவட்டின் வழியாகவும் அமைவதைக் காணலாம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
05.03.2018

jeudi 1 mars 2018

ஓவியக் கவிதை

ஓவியக் கவிதை
  
ஆறாரைச் சக்கரம்
[கட்டளைக் கலித்துறை]
  
பாடுவாய் பாரதி பாக்களை நெஞ்சார மாவுலகே!
நாடுக நுட்பமே! சூடுக நன்மையே சங்கமென!
தேடுக பாடம் சிறக்க! வளமையின் தேனுறவே!
பாடுக நாளுமே! தேவியே கேட்பன பண்வேதமே!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'க' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'பாட்டரசன்' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் முதன் மூன்றடிகள் 19 எழுத்துகளைப் பெற்றும், ஈற்றடி 18 எழுத்துகளை பெற்றும் வரும். மொத்தம் 75 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
கட்டளைக் கலித்துறையின் கணக்கின்படி ஒற்று நீக்கி எண்ணிட ஒவ்வொரு அடியும் 16 எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.03.2018

samedi 23 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 3


சித்திர கவிதை

[வெண்டளைக் கலிவிருத்தம்!]
  
கம்பன் வாழி!
  
சந்தம் கமழ்ந்திடும் கம்பன் தமிழாம்!
சொந்தமும் சூழ்ந்திடும் தோழா..நீ வா..கற்போம்!
முந்தும்பண் இன்பிடும்! நம்மொழி நாம்காக்க!
கந்திகமழ் சொக்கா! முழுதெம் இனம்வாழ்க!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'டு' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'கம்பன் வாழி' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் ஒவ்வொரு அடியும் 19 எழுத்துகளைப் பெறும். மொத்தம் 76 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் 22.12.2017
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம் - 3

jeudi 21 décembre 2017

நான்காரைச் சக்கரம் - 3



சித்திர கவிதை
நான்காரைச் சக்கரம் - 3

இது நான்கு ஆராய், நடுவே 'மே' என்னும் எழுத்து நிற்க, ஒவ்வொரு ஆரையின் மேலும் மூன்று எழுத்துகள் நிற்க, சுற்று வட்டத்தில் இருபத்தெட்டேழுத்துகள் பொருந்தப் பாடப்படும் கவியாகும்.

அறுபத்து நான்கு எழுத்துகளை உடைய இச்செய்யுள், நான்காரைச் சக்கரத்தில் அமைக்குங்கால் நாற்பத்தோர் எழுத்துகளாகச் சுருங்கும்.

சந்த அறுசீர் விருத்தம்

மேடு நாடு கூட்டும் கண்ணா! நாவு பாடுமே!
மேடு பாவு நாட்டும் கண்ணா! தேனு கூடுமே!
மேடு கூனு தேற்றும் கண்ணா! தாரு சூடுமே!
மேடு சூரு தாக்கும் கண்ணா கூடு நாடுமே!

செய்யுளுரை

கண்ணா! மேன்மையுடைய உன் நாட்டினை எனக்குக் கூட்டுவாய். உன்னாட்டினை என்..நாப் புகழ்ந்து பாடி மகிழும்.  

கண்ணா! உலகம் போற்றும் உயர்ந்த பாடல்களை எனக்கு அளிப்பாய். நீ அளிக்கும் பாடல்களில் கன்னல் ஊறி என்றென்றும் இனிக்கும்.  

கண்ணா! பாவச் சுமையால் மிக வளைந்துள்ள என்னுயிரைக் குணப்படுத்துவாய். மணக்கின்ற மாலையை என்னெஞ்சம் சூடிக் களிக்கும்.

கண்ணா! மிகவும் கூடியுள்ள என்மன அச்சத்தை நீக்குவாய். எப்பிறப்பிலும் என்னுயிர்க்கூடு உன்னையே நாடி வரும். 

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.12.2017