samedi 25 mars 2023

சந்தக் கலிவிருத்தம் - 11

 

விருத்த மேடை - 94

 

சந்தக் கலிவிருத்தம் - 11

 

தந்த+தந்ததன+தந்ததன+தந்ததனதாம்

[3+5+5+7 சந்த மாத்திரை]

 

பம்பு செக்கரெரி யொக்குமயிர் பக்கமெரியக்

கும்ப முற்றவுய[ர்] நெற்றியி[ன்]வி சித்தொளிகுலாம்

உம்ப ருக்கரச[ன்] மால்கரியி னோடையெயிறொண்

கிம்பு ரிப்பெரிய தோள்வளையொ டும்கிளரவே

 

[கம்பன், ஆரணிய. விராதன் வதைப் படலம் - 12]

 

தந்த+தந்ததன+தந்ததன+தந்ததனதாம் என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீர் மூன்று மாத்திரை, இரண்டாம் மூன்றாம் சீர்கள் 5 மாத்திரை, நான்காம் சீர் 7 மாத்திரை பெறும்.

 

தந்த  என்பதற்குப் பதில் தான, தனன என்பனவும் வரும். தந்ததன என்பதற்குப் பதில் தானதன வரும். தந்ததனதாம் என்னுமிடத்தில்  தானதனதாம் வரும். மோனை 1, 4 ஆம் சீர்களில் அமையும்.

 

உண்மை காத்தொளிர உற்றபுக[ழ்] ஓங்கியெழுமே!

தண்மை பூத்தொளிர வண்ணநிறை சாந்தமிடுமே!

வண்மை சேர்த்தொளிர வாய்த்தபுவி வந்துதொழுமே!

வெண்மை மூத்தொளிர விண்ணினிறை வெற்றிதருமே! 

 

[பட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

25.03.2023

samedi 18 mars 2023

சந்தக் கலிவிருத்தம் - 1

 

விருத்த மேடை - 84

 

சந்தக் கலிவிருத்தம் - 1

 

சந்த இலக்கணம்

 

ஒரு பாடலின் எல்லா அடிகளிலும் ஒரே வகையான சந்தம் தாளத்துடன் கூடிய ஓசையமைப்பு அமைந்திருந்தால் அதனைச் சந்தப்பாடல் என்பர். சந்தப் பாடல்கள் இசைத்தமிழ்ப் பாடல்களாகும்.

 

இதுவரை நாம் எழுதிய விருத்தங்கள் மா, விளம், காய், கனி எனும் சீர்களைக் கொண்ட வாய்பாடுகளில் அமைந்தவை. சந்த விருத்தங்கள்  மாத்திரைக் கணக்கில் எழுதப்படுவன.

சந்த மாத்திரை

 

குறில் ஒரு மாத்திரை [க-1]

நெடில் இரண்டு மாத்திரை [கா-2]

குறில் ஒற்று இரண்டு மாத்திரை [கண் - 2]

நெடில் ஒற்று இரண்டு மாத்திரை [காண் - 2]

 

அடி இறுதியில் தனிக்குறில் இரண்டு மாத்திரையாகவும் கொள்ளப்படும்.

வாழ்க என்பது மூன்று  மாத்திரையை உடைய சீராகும். வாழ்க என்ற சொல் அடியிறுதியில் வந்தால் நான்கு மாத்திரையாக நீண்டு ஒலிக்க இடம் தரும்.

 

சில இடங்களில் சீரின் இடையிலும் ஈற்றிலும் வரும் இடையின மெல்லின மெய்கள் கணக்கிடப்படுவதில்லை.

 

மலையே மரனே மயிலே குயிலே

கலையே பிணையேகளிறே பிடியே

நிலையா உயிரே நிலைநே டினிர்போய்

உலையா வலியா ருழைநீ ருரையீர்

 

[கம்பன். ஆரணிய. இராவணன் சூழ்ச்சி - 75]

 

தனனா தனனா தனனா தனனா

 

என்ற அமைப்புடைய சந்த விருத்தம் இது.  நான்கு சீர்களும் 4 சந்த மாத்திரையுடைன.  1ஆம் சீரிலும் 3 ஆம் சீரிலும் மோனை வரும்.  நான்கடி ஓரெதுகையில் அமையும்.

 

இவ்விருத்தத்தில் முதற்சீராக தானா [தேனே] தன்னா [கண்ணா] தனதம் [மலரும்] தந்தம் [முந்தும்]  ஆகியனவும் வரும்.

 

எ.கா

 

கோதா வரியே! குளிர்வாய் குழைவாய்

மாதா அனையாய்! மனனே தெளிவாய்!

ஓதா துணர்வார் உழையோ டினைபோய்

நீதான்  வினையேன்  நிலைசொல் லலையோ?

 

[கம்பன். ஆரணிய. இராவணன் சூழ்ச்சி - 78]

 

அறமே! அகமே! அழகே! அமுதே!

மறமே! வளமே! மணமே!  மதுவே!

திறமே! சிவமே! செகமே தொழுமே!

புறமே! நிறமே! புகழே! தமிழே!

 

[பாட்டரசர்]

 

மேலுள்ள அனைத்துச்சீர்களும் தனனா என்ற 4  சந்த மாத்திரையைப் பெற்று வந்தன.

 

தேனே பொழிவாய்! திணைமா தருவாய்!

மானே வருவாய்! மகிழ்வே இடுவாய்!

மீனே விழியாய்  விடிவே வரைவாய்!

நானே கவியாய் நலமே அடைவேன்!

 

[பாட்டரசர்]

 

இந்த விருத்தத்தில் முதல் சீர் தானே என்ற 4 சந்த மாத்திரையைப் பெற்றது. இடையில் ஈற்றில் வந்த இடையின மெல்லின மெய்கள் கணக்கில் வாரா.

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
05.12.2022

சந்தக் கலிவிருத்தம் - 2

 

விருத்த மேடை - 85

 

சந்தக் கலிவிருத்தம் - 2

 

தனதன தனதன தனதன தனதன

ஒவ்வொரு சீரும் நான்கு சந்த மாத்திரை

 

இறுவன கொடியவை எரிவன இடையிடை

துறுவன சுடுகணை துணிவன மதகரி

அறுவன அவையவை கடவினர் தடிதலை

வெறுமைகள் கெடுவன விழுகுழி கழுதுகள்

 

[கம்பன், யுத்த. ஆதிகாயன் வதை - 132]

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்

மயா்வற மதிநலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழென் மனனே

 

[நம்மாழ்வார். திருவாய்மொழி - 1]

 

துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய

வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள்

அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு

படுகடன் இதுவுகு பலிமுக மடையே!

 

[சிலம்பு.வேட்டுவ வரி - 16]

 

தனதன தனதன தனதன தனதன என்ற சந்த அமைப்பைக் கொண்ட இவ்விருத்தத்தின் ஒவ்வொரு சீரும்  நான்கு சந்த மாத்திரைகளைப் பெற்றுள்ளது.

 

முதல் சீரும் மூன்றாம் சீரும் தந்தன, தானன எனும் சந்தத்திலும் அமையலாம். இரண்டாம் சீர் தந்தன எனவும் நான்காம் சீர் தானன எனவும் வரலாம்.

 

பாடலின் இறுதி ஒரு சீர் மட்டும் தனனா என்று வருவதும் உண்டு.

 

திருமொழி யமுதடி! திருவடி மலரடி!

கருவிழி தருமொழி கலைநட மிடுமடி!

அருமொழி யணியடி அகமுறு நினைவடி!

ஒருவழி யிலையினி உறவினை யளியளி!

 

[பாட்டரசர்]

 

பொன்மகள் புனைகவி புவியெழில் பருகிடும்!

இன்மகள் தருமொழி எனதுயிர் சொருகிடும்!

மென்மகள் விழியொளி விளைநிலம் பெருகிடும்!

சொன்மகள் உருவொளி உயிருடல் உருகிடும்!

 

[பாட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

எளிமையாக எழுதும் முறை

 

வல்லாற்று இல்லாமல் நான்கு குறிலெழுத்துகளைப் பெற்று வரும் கருவிளமாக அனைத்துச் சீர்களும் அமைந்தால் மிகச் சிறப்பாக இச்சந்தம் இனிக்கும்.  

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

17.12.2022

சந்தக் கலிவிருத்தம் - 4

விருத்த மேடை - 87

 

சந்தக் கலிவிருத்தம் - 4

தந்தாதன + தந்தாதன + தந்தாதன + தனனா

[முதல் மூன்று சீர்கள் 6 சந்த மாத்திரை + இறுதிச்சீர் 4 சந்த மாத்திரை]

 

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

துாமாமழை துறுகல்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை அணையும்பொழி[ல்] அண்ணாமலை அண்ணல்

பூமாங்கழ[ல்] புனைசேவடி நினைவார்வினை இலரே!

 

[சம்பந்தர் தேவாரம், திருவண்ணாமலை]

 

வெய்யோனொளி தன்மேனியி[ன்] விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடு[ம்] போனான்!

மையோ!மர கதமோ!மறி கடலோ!மழை முகிலோ!

ஐயோவிவ[ன்] வடிவென்பதொ ரழியாவழ குடையான்!

 

[கம்பன், அயோத்தியா. கங்கை - 1]

 

குற்றெழுத்தை இறுதியில் கொண்ட மாங்கனிச் சீர்கள் மூன்றும், இறுதியில் மாச்சீர் ஒன்றும் ஓரடியாகும். இதுபோல் நான்கடி ஓரெதுகையில் வரவேண்டும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும். அடி இறுதியில் தனிக்குறிலும் வரலாம். [அடியிறுதியில் வரும் குறில் 2 மாத்திரை பெறும்]

 

கனிச்சீர் 6 சந்த மாத்திரையும், மாச்சீர் 4 சந்த மாத்திரையும் பெறுதல் வேண்டும்.

[குறில் 1 மாத்திரை, குறிலொற்று, நெடில், நெடிலொற்று 2 மாத்திரை என்ற சந்த மாத்திரைக் கணக்கை நினைவில் கொள்ளவும்]

 

சம்பந்தர் தேவாரம், சுந்தரர் தேவாரம், திருமங்கையாழ்வார் பாடல்கள், திருவாசகம், சூளாமணி, நீலகேசி, பெரியபுராணம், கம்பராமாயணம் ஆகியவற்றில் இந்தக் சந்த விருத்தங்கள் உள்ளன.

 

தொண்டேபுரி தொழுமேபுவி தொடரேபுக ழாகும்!

செண்டேபொழி கவியேகுவி சிவமேதமி ழாகும்!

பண்டேவழி ஒளியேமிகு பணியேயுயி ராகும்!

கண்டேயளி கருவேயிடு கனிவேமிகு தாயே!

 

[பாட்டரசர்]

 

கண்ணேயெனை நெஞ்சோடணை! கவியேபல தருவேன்!

பெண்ணேயுனை யுற்றேநனி பேறேபல பெறுவேன்!

தண்ணேபுனை தவமேபுரி தகையேபல வுறுவேன்!

பண்ணேயுனை மணமேபுரி பசியேமிக வருவேன்!

 

[பாட்டரசர்]

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

06.01.2023