lundi 27 novembre 2023

ஆசைக் கடலில்

 


ஆசைக் கடலில்....

 

ஆசைக் கடலில் நீந்துகிற

       ஆட்டம் போதும்! செந்தமிழாம்

ஓசைக் கடலில் மனமுழுகி

       ஒளிரச் செய்வாய் திருமாலே!

மீசை முறுக்கி வீண்சண்டை

       வினைகள் போதும்! உள்ளொன்றிப்

பூசை அறையில் தவநெறியைப்

       புரியச் செய்வாய் திருமாலே!

 

அகத்தை யுடைத்தே எண்ணங்கள்

       அலைதல் போதும்! பற்றற்றுச்

சுகத்தைக் காணும் நல்லமைதி

       சூழச் செய்வாய் திருமாலே!

முகத்தைப் பார்த்தே உயிர்சொக்கி

       முணங்கல் போதும்! கவிபாடிச்

செகத்தை வெல்லும் உயர்புலமை

       செழிக்கச் செய்வாய் திருமாலே!

 

அதையும் இதையும் அடைந்திடவே

       ஆடல் போதும்! பழியான

எதையும் புரியா நெஞ்சத்தை

       எனக்குக் தருவாய் திருமாலே!

சதையும் எலும்பும் அழகென்று

       சாற்றல் போதும்! மண்ணுக்குள்

புதையும் முன்னே ஞானவொளி

       பொலியச் செய்வாய் திருமாலே!

 

மண்ணும் பொன்னும் பெரிதென்ற

       மயக்கம் போதும்! வண்டமிழின்

பண்ணும் பாட்டும் வாழ்வென்று

       பணியச் செய்வாய் திருமாலே!

பெண்ணும் கண்ணும் போதையெனப்

       பிதற்றல் போதும்! மேலுள்ள

விண்ணும் என்னுள் ஆட்பட்டு

       மின்னச் செய்வாய் திருமாலே!

 

நான்றான் நான்றான் என்றெண்ணி

       நவிலல் போதும்! தற்பெருமை

ஏன்றான் ஏன்றான் தெளிவுற்றே

       இயங்கச் செய்வாய் திருமாலே!

வான்றான் வான்றான் காதலென

       வாழ்தல் போதும்! இறையொளிதான்

தேன்றான் தேன்றான் சுவையூறித்

       திளைக்கச் செய்வாய் திருமாலே!

 

பொய்யே புழுத்துப் புரளுகிற

       புன்மை போதும்! எந்நாளும்

மெய்யே பூத்து மணக்கின்ற

       மேன்மை செய்வாய் திருமாலே!

அய்யே யென்று பிறர்சொல்லும்

       அல்லல் போதும்! விளைந்தோங்கும்

செய்யே போன்று நலமீயச்

       செம்மை செய்வாய் திருமாலே!

 

அறிவே யின்றி வினையாற்றி

       அழிதல் போதும்! நல்லோரின்

நெறியே உணர்ந்து கைப்பற்றி

       நிறைவைத் தருவாய் திருமாலே!

வெறியே கொண்டு தள்ளாடும்

       வேட்கை போதும்! உடலுற்ற

பொறியே யடங்கி தவமோங்கும்

       புத்தி தருவாய் திருமாலே!

 

கள்ளம் நிறைந்து வாழ்ந்திட்ட

       காலம் போதும்! மெய்ந்நெறியே

உள்ளம் நிறைந்து மிளிர்கின்ற

       உயர்வைத் தருவாய் திருமாலே!

துள்ளும் இளமைப் பருவத்தின்

       துன்பம் போதும்! சிந்தைனையுள்

பள்ளம் குள்ளம் இல்லாமல்

       பசுமை தருவாய் திருமாலே!

 

நம்பி வந்தோர்க் கின்னலிடும்

       நாசம் போதும்! எம்மக்கள்

தம்பி நீயே என்றோதும்

       தன்மை தருவாய் திருமாலே!

தும்பி வாலில் நுாலிட்ட

       துன்பம் போதும்! இனிவாழ்வில்

இம்மி பாவம் இல்லாமல்

       இயங்கச் செய்வாய் திருமாலே!

 

புறமே பேசித் திரிகின்ற

       போக்குப் போதும்! தமிழ்தந்த

அறமே பேசி யொளிர்கின்ற

       அழகே தருவாய் திருமாலே!

திறமே பேசி உழல்கின்ற

       செய்கை போதும்! வரிப்புலியின்

மறமே பேசி வெல்கின்ற

       வன்மை தருவாய் திருமாலே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

27.11.2023

 

samedi 18 novembre 2023

காதலிலே அவள் குழந்தை

 



காதலிலே அவள் குழந்தை

.

காதலிலே - அவள்

குழந்தை!

.

கையில் இருப்பாள்!

மடியில் கிடப்பாள்!

மெல்ல சிரிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கழுத்தைக்

கட்டிப் பிடிப்பாள்!

மார்பில்

ஒட்டிக் கிடப்பாள்!

சுவையைக்

கொட்டிக் கொடுப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கெஞ்சுவாள்!

கொஞ்சுவாள்!

விஞ்சுவாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

என்..கை

கோத்து நடப்பாள்!

புன்னகை

பூத்து மணப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

உப்பு மூட்டை சுமப்பேன் - என்

உயிருள் அவளைச் சுமப்பேன்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

சிணுங்கு மொழியாள் - எனை

விழுங்கு விழியால்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

அடம் பிடிப்பாள் - ஆசை

வடம் பிடிப்பாள் - நெஞ்சுள்

இடம் பிடிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

கண்ணழகும்

கழுத்தழகும்

எனை மயக்கும்!

.

மூக்கழகும்

முடியழகும்

எனை இயக்கும்!

.

காலழகும்

கையழகும்

கவி கொடுக்கும்!

.

பல்லழகும்

சொல்லழகும்

மலர் படைக்கும்!

.

தோளழகும்

துணியழகும்

போதை விளைக்கும்!

.

தொடையழகும்

நடையழகும்

துயர் துடைக்கும்!

.

தொட்டவிடம்

பட்டவிடம்

இன்பம் தழைக்கும்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

சொல்லிய வண்ணம்

நடப்பாள் - பாடம்

படிப்பாள்! - வந்து

கடிப்பாள்!

காதலிலே - அவள்

குழந்தை!

.

வரவால்

குலஞ்செழிக்கும்!

வடிவால்

உளங்கொழிக்கும்!

காதலிலே - அவள்

குழந்தை

.

பார்க்கப் பார்க்கப்

படரும் இனிமை!

பாவை எழிலைப்

பாடும் என் புலமை!

.

கிள்ளுவாள்

தொல்லை பண்ணுவாள்!

அள்ளிக் கொள்ளுவேன்!

பள்ளி கொள்ளுவேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
18.11.2023

mercredi 15 novembre 2023

பாவலர்மணி வெற்றிச்செல்வி

 

வணக்கம்

.

பாவலர் பயிலரங்கம் நடத்தும் விருத்தம் ஆயிரம் எழுதும் கவிவளப் பயிற்சியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற பாவலர் வெற்றிச்செல்வி அவர்களுக்குப் பாவலர்மணி பட்டம் வழங்குகிறோம்.

.

பாட்டரசர் கோட்டையிலே பைந்தமிழ் நற்கொடியை

ஏட்டரசர் ஏத்திடவே ஏற்றியவர்! - ஈட்டுபுகழ்ச்

சீர்மணக்கும் எம்..வெற்றிச் செல்வியார்! பாமணியாய்ப்

பேர்மணக்கும் மேன்மையைப் பெற்று!

.

பாவலர்மணி பட்டம் பெற்ற வெற்றிச்செல்வி அவர்களுக்குப் பயிலரங்கம் சார்பாக வெண்பா மாலை சாத்த விரும்புகிறேன்.  பாவலர் பயிலரங்க உறவுகள் ஓர் வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

.

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

14.11.2023