mercredi 30 novembre 2022

கலிவிருத்தம் - 18

 

விருத்த மேடை - 82

 

கலிவிருத்தம் - 18

இயற்சீர் வெண்டளையால் அமைந்த விருத்தம்

[நேர் 11 எழுத்து - நிரை 12 எழுத்து]

 

ஒண்மைக் குணமே ஒளியை யளிக்கும்!

உண்மைக் குணமே உயர்வை யளிக்கும்!

எண்மைக் குணமே எழிலை யளிக்கும்!

வண்மைக் குணமே மகிழ்வை யளிக்கும்

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

நேர் முன் நிரை, நிரை முன் நேர் இயற்சீர் வெண்டளையாம். இவ்விருத்தம் அடித்தோறும் இயற்சீர் வெண்டளை பெற்று வரும். ஒவ்வோர் அடியின் ஈற்றுச்சீர் மாச்சீராகும். நேரில் தொடங்கினால் 11 எழுத்துக்களும் நிரையில் தொடங்கினால் 12 எழுத்துக்களும் வரும்.  [ஒற்றுகளை நீக்கிக் கணக்கிட வேண்டும்]

 

இயற்சீர் வெண்டளையால் அமைந்த  கலிவிருத்தம் ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
30.11.2022

vendredi 25 novembre 2022

கலிவிருத்தம் - 17


 

கலிவிருத்தம் - 17

விளம் + விளம் + விளம் + மா

 

மல்லொடு மலைமலைத் தோளரை வளைவாய்ப்

பல்லொடும் நெடுங்கரப் பகட்டொடும் பருந்தாள்

வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும்

சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்

[கம்பன், சுந்தர. சம்புமாலிவதைப் படலம் - 32]

 

கடமையை ஊக்கிடும் கதிரினைத் துதித்தேன்!  

மடமையைத் தாக்கிடும் மதியினை விளைத்தேன்!  

கொடுமையை நீக்கிடும் குணத்தினைப் பதித்தேன்!

கடுமையைப் போக்கிடும் களத்தினைப் படைத்தேன்!  

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

விளம் + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
25.11.2022

 

 

lundi 21 novembre 2022

கலிவிருத்தம் - 16


 

விருத்த மேடை - 80

 

கலிவிருத்தம் - 16

 

நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் 

 

பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதன்

ஆர்த்தா யாடர வோடன லாடிய

கூத்தா நின்குரை யார்கழ லேயல

தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே!

 

[திருநாவுக்கரசர், தேவாரம் - 6178]

 

பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை

முனியாய் நீயுல கம்முழு தாளினும்

தனியாய் நீசரண் நீசல மேபெரி

தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே

 

[திருநாவுக்கரசர், தேவாரம் - 6176]

 

மானே வாராய்

 

1.

மானே உன்விழி மன்னனை வாட்டுதே!

தேனே உன்மொழி செந்தமிழ் ஊட்டுதே!

வானே உன்னெழில் வன்வெறி மூட்டுதே!

கானே உன்மணம் காதலைக் கூட்டுதே!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

விருத்த மேடை கலிவிருத்தம் 1 இல் முதல் சீர், குறிலீற்றுமா வாகும். இதில் முதல் சீர் நெடிலீற்றுமா வாகும்.

நெடிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
15.06.2022

samedi 12 novembre 2022

கலிவிருத்தம் - 15


 

விருத்த மேடை - 79

 

கலிவிருத்தம் - 15

 

மா + மா அல்லது விளம் + மா அல்லது விளம் + காய்

 

கண்ணர் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்றன்

திண்ணா கம்பிளக் கச்சரஞ் செலவுய்த்தாய்

விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே! - 1

 

இலங்கைப் பதிக்கன் றிறையா ய,அரக்கர்

குலங்கெட் டவர்மா ளக்கொடிப் புள்திரித்தாய்!

விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய

அலங்கல் துளப முடியாய் அருளாயே! - 2

 

[திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி]

 

பெண்ணே ஏன் பிரிந்தாய்?

 

மின்னும் விழிகள் மீனிடம் சரணாகும்!

பின்னும் கார்குழல் பெயர்ந்து முகின்மேவும்!

அன்னம் இடத்தில் அடிகள் உறவேற்கும்!

என்றன் இதயம் எங்குறும் ஏந்திழையே!

 

[பாட்டரசர்] 23.06.2022

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இந்தக் கலிவிருத்தம் நேரசையில் தொடங்கினால் ஓரடிக்கு 12 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 13 எழுத்துகளும் பெறும்.

 

அடியின் முதல் மாச்சீர் வரவேண்டும். தேமா இரண்டு எழுத்துகளைப் பெறும். புளிமா 3 எழுத்துகளைப் பெறும்.

 

இரண்டாம் சீர் மூன்று எழுத்துகளையும், மூன்றாம் சீர் மூன்று எழுத்துகளையும் பெற்றுவரும். அவ்விடங்களில் புளிமா அல்லது கூவிளம் அல்லது தோமாங்காய் வரும்.

 

நான்காம் சீர் 4 எழுத்துகளைப் பெற்றுவரும். இவ்விடத்தில் புளிமாங்காய் அல்லது கூவிளங்காய் வரும்.

 

இவ்வகையில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
12.11.2022