mercredi 12 décembre 2018

யாரோ என்னை வரவேற்பார்?


பாட்டரசர் கி. பாரதிதாசனின் மாமியாருமாகிய,
திருமதி குணசுந்தரி பாரதிதாசனின் அன்னையுமாகிய
திருமதி பட்டம்மாள் குப்புச்சாமி அவர்களின் நல்லு
இறையடியில் ஆழ்ந்து நிறைவுற வேண்டுகிறோம்.
 
யாரோ என்னை வரவேற்பார்?
 
பூமி மீது நான்..ஏற்கப்
  பூப்போல் பெண்ணை அளித்தனையே!
சாமி யிடத்தில் எமக்காகத்
  தண்ட மிட்டுத் தொழுதனையே!
சேமித்[து] எமக்குக் கொடுத்தனையே!
  தேவி வடிவே! திருவிளக்கே!
மாமி.. மாமி.. உன்மருகன்
  மனமே உடைந்து துடிக்கின்றேன்!
 
பொல்லாக் கணவன் நிலையெண்ணிப்
  பொறுத்த உள்ளம் அடைத்ததுவோ?
எல்லாத் துயரும் எமக்காக
  ஏற்ற இதயம் உடைந்ததுவோ?
சொல்லா தெங்குச் சென்றாயோ?
  துாய வடிவே! சுடர்விளக்கே!
கல்லாய் மருகன் நிற்கின்றேன்!
  கண்ணீர்க் கடலில் தவிக்கின்றேன்!
 
கண்ணில் இருக்கும் உன்னுருவம்!
  கருத்தில் இருக்கும் உன்சொற்கள்!
மண்ணில் இருக்கும் உன்பெருமை!
  மலரில் இருக்கும் உன்னிதயம்!
பண்ணில் இருக்கும் உன்மென்மை!
  பண்பில் இருக்கும் உன்வாழ்வு!
விண்ணில் இருக்கும் உன்மாட்சி!
  விழியின் இமைபோல் காப்பாயே!
 
ஒருசொல் உரைக்க நான்..எண்ணி
  உன்றன் வரவை எதிர்ப்பார்த்தேன்!
திருச்சொல் கேட்ட செவிக்குள்ளே
  தேள்சொல் ஏனோ பிரிந்தாயோ?
இருசொல் பேசும் வழக்கில்லை!
  எதிர்சொல் வீசும் முறையில்லை!
அருஞ்சொல் இனிமேல் யார்தருவார்?
  அகமே உடைந்து துவள்கின்றேன்!
 
பட்டு வருமே! பட்டென்று
  பறந்து விடுமே! என்றுன்னைக்
கொட்டும் நகைப்பில் உரைக்கின்ற
  கோல மருகன் குலைகின்றேன்!
எட்டுத் திக்கும் உனைப்போன்றே
  யார்தாம் வருவார் துணைசெய்ய!
கட்டுக் கடங்கா வெள்ளமெனக்
  கண்ணீர் பெருகிக் கரைகின்றேன்!
 
ஆண்டு முடிவைக் கொண்டாட
  அருமை மருகன் வரமாட்டான்,
நீண்டு துயரில் கிடந்தாயோ?
  நினைவாம் நெருப்பில் வெந்தாயோ?
கூண்டுக் கிளிப்போல் வதைந்தாயோ?
  குன்றிக் குன்றி வளைந்தாயோ?
மீண்டும் மீண்டும் அடிதொழுதேன்!
  விரைந்து என்னைப் பொறுத்தருளே!
 
ஆண்டு பிறந்த முதல்..நாளில்
  அழகாய் வாழ்த்து மழைபொழிவாய்!
வேண்டும் வரங்கள் யாம்பெறவே
  விழிகள் சிந்தி வணங்கிடுவாய்!
யாண்டும் வந்து நலஞ்சேர்ப்பாய்!
  இன்னல் நீங்க வழிசொல்வாய்!
கூண்டும் விழுந்த நிலையுற்றோம்!
  துாணும் விழுந்த துயருற்றோம்!
 
அன்பின் ஊற்று நிற்பதுவோ?
  அருளின் ஊற்று மறைவதுவோ?
பண்பின் ஊற்று மூடுவதோ?
  பாச ஊற்றுத் துார்வதுவோ?
துன்பின் ஊற்றுப் பாய்வதுவோ?
  துணிவின் ஊற்றுக் காய்வதுவோ?
என்பின் ஊற்றுக் குன்றிடவே
  ஏனோ பிரிந்து சென்றாயோ?
 
இல்லம் வருவாய் என..நம்பி
  இருந்து விட்டேன்! ஒருதொண்டும்
சொல்லும் வகையில் செய்யலையே!
  துளியும் நெஞ்சம் ஆறலையே!
செல்லும் பொழுதில் உன்னருகே
  சேர்ந்த உறவில் நான்..இலையே!
கொல்லும் நினைவால் வாடுகிறேன்!
  குற்றம் யாவும் பொறுப்பாயே!
 
மனமே அடைந்த மதிபெல்லாம்
  மருகன் இழந்து நிற்கின்றேன்!
இனிமேல் உன்றன் இல்லத்தில்
  யார்தாம் என்னை வரவேற்பார்?
வனமே வறண்டு காய்வதுபோல்
  மதியே வறண்டு வதைகின்றேன்!
இனமே தேடும்! என்சொல்வேன்?
  எங்கே செல்வேன்? வழியறியேன்!
 
ஆழ்ந்த அழுகையுடன்
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
12.12.2018


samedi 24 novembre 2018

ஒளியே போற்றி!


ஒளியே போற்றி!
 
1.
அண்ணா மலையின் பேரொளியை
  அகத்துள் ஒளிரத் தொழுதிடுவோம்!
எண்ணா திருந்த சிறப்பெல்லாம்
  ஏற்கும் வாழ்வைச் சமைத்திடுவோம்!
உண்ணா திருந்தே ஒருவேளை
  உள்ளம் ஒன்றித் தவம்புரிவோம்!
பெண்ணா? ஆணா? உருப்பெற்றோன்
  பெருமை யாவும் அளிப்பானே!
 
2.
அருணா சலத்தின் அழகொளியில்
  ஆழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்திடுவோம்!
இரு..நா அரவ அணியானை
  எண்ணி யெண்ணி மகிழ்ந்திடுவோம்!
திரு..நா மலர்ந்து தமிழ்பாடித்
  தேனை யள்ளி அருந்திடுவோம்!
குரு..நா நல்கும் மொழிகேட்டு,
  கொள்கை விளக்கை ஏந்திடுவோம்!
 
3.
அன்பே இறைவன் இருப்பிடமாம்!
  ஆசை யதனின் எதிர்நிலையாம்!
இன்பே யென்று தமிழ்பாடி
  ஏத்தி யிசைத்தல் பெருவாழ்வாம்!
துன்பே கூட்டும் விதியவனைத்
  துாள்துாள் ஆக்கும் இறையொளியாம்!
இன்றே உணர்ந்து மனவீட்டில்
  எழிலாம் விளக்கை ஏற்றுகவே!
 
4.
உண்மை மணக்கும் சித்தரிடம்
  ஓங்கும் ஒளியைப் பெற்றிடலாம்!
பெண்மை மணக்கும் கற்பினிலே
  பேணும் ஒளியைக் கற்றிடலாம்!
வெண்மை மணக்கும் மனத்துக்குள்
  வெல்லும் ஒளியை உற்றிடலாம்!
தண்மை மணக்கும் புவி..காணத்
  தமிழாம் ஒளியை ஏற்றுகவே!
 
5.
சொல்லும் செயலும் ஒன்றானால்
  சுடரும் புகழைச் சூடிடலாம்!
செல்லும் இடத்தில் சிறப்பெய்திச்
  செம்மை வாழ்வை நாடிடலாம்!
அல்லும் பகலும் அருளொளியை
  அகத்துள் ஏற்றித் தொழுதிட்டால்
வெல்லும் ஞான விழிதிறக்கும்!
  விண்ணார் உலகின் வழிதிறக்கும்!
 
6.
உரிமை ஒளியே உலகமெலாம்
  ஓங்கிப் பரவ உழைத்திடுவோம்!
பெருமை ஒளியே செயற்பாட்டில்
  பெருகிப் பரவத் திறம்பெறுவோம்!
அருமை ஒளியே தமிழாகும்!
  அறத்தின் ஒளியே குறளாகும்!
ஒருமை ஒளியே உளமேவ
  ஒளிரும் பொன்போல் நம்முடலே!
 
7.
கண்ணைக் கவரும் கலையொளியே!
  கருத்தைக் கவரும் கவியொளியே!
மண்ணைக் கவரும் மதியொளியே!
  மனத்தைக் கவரும் மாதொளியே!
பெண்ணைக் கவரும் அணியொளியே!
  பிறப்பைக் கவரும் அருளொளியே!
விண்ணைக் கவரும் தமிழொளியே!
  வேண்டு! வேண்டு! மெய்யொளியே!
 
8.
வடலுார் நல்கும் திருவொளியால்
  வளமாய் வளரும் நன்மனிதம்!
உடலுார் உணர்வில் உறுமொளியால்
  உயரும் வாழ்க்கை யெனும்பாதை!
மடலுார் காலைக் கதிரொளியால்
  மலர்ந்து மணக்கும் குளிர்சோலை!
வடமூர் தேரின் அழகொளியால்
  மயங்கி மகிழும் மெய்யுள்ளம்!
 
9.
உலகின் முதலே ஒளியாகும்!
  உயிரின் தன்மை ஒளியாகும்!
நிலவின் வருகை இராப்பொழுதை
  இனிக்கச் செய்யும் ஒளியாகும்!
குலவும் தமிழும் ஒளியாகும்!
  கூத்தன் உருவும் ஒளியாகும்!
நிலமும் செழிக்க எழுகதிரோன்
  நிகரே இல்லா ஒளியாகும்!
 
10.
ஒளியே போற்றி! ஓமென்னும்
  ஒலியே போற்றி! அருளிதயத்
தெளிவே போற்றி! தித்திக்கும்
  தேனே போற்றி! வான்கொண்ட
வெளியே போற்றி! இவ்வுலகின்
  விளைவே போற்றி! வாழ்விக்கும்
வளியே போற்றி! வண்டமிழின்
  வளமே போற்றி! சீர்..போற்றி!
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்