Affichage des articles dont le libellé est தேர்ச் சித்திர கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est தேர்ச் சித்திர கவிதை. Afficher tous les articles

samedi 24 août 2019

இரத பந்தம்


பாட்டரசரின் பெருந்தேர் ஓவியக்கவிதை
  
இத்தேரின் வடிவமைப்பு என்னால் உருவாக்கப்பட்டதாகும். முன்னோர் வடிவமைத்த தேர்கள் பதினாறையும் விட இத்தேர் பெரியதாகும். இத்தேரின் உயரம் இருபத்தைந்து கட்டங்களைக் கொண்டது. தேரின் சக்கரங்கள் இரண்டு குறட்பாக்களில் அமைந்துள்ளன. இரண்டு குறட்பாவின் ஈற்றெழுத்தும், தேர்ப்பாடலின் முதலெழுத்தும் ஈற்றெழுத்தும் ஒன்றி அமைகின்றன.
  
இரண்டு சக்கரங்களில் அமைந்த குறள்வெண்பாக்கள், சக்கரத்தின் நடுவில் தொடங்கி உள்வட்டத்தைச் சுற்றிப் பின் மேல் வட்டத்தைச் சுற்றித் தேரின் தொடக்கவெழுத்தில் [பு] நிறைவுறும்.
  
கலிவெண்பாவில் அமைந்த தேரின் பாடல் தேரின் அடியில் தொடங்கி இடவலமாகச் சுற்றிச்சுற்றி மேலேறி உச்சியிலிருந்து இறங்கினால் நிறைவுறும்.
  
தேரின் மேற்றட்டில் அமைந்த குறட்பாவில் என்னுடைய வேண்டுகோள் உள்ளதைக் காண்க.
  
கலிவெண்பா
  
புதுப்பார் படைக்கப் புனை..பண்! தமிழே!
முதுமை கமழு மரபே! - புதுமை
வழியே! படரும் வளமே! மதுர
மொழியே! உலகின் முதலே! - பொழிலே!
உயர்வை யளிக்கு மொளியே! இறையே!
வியத்திருவே! வெல்லு மறமே! - இயற்கை
யெழிலே! மிகுபசுமை யின்பமே! தாயே!
அழகே! அமுதே! அருளே! - பழமையைக்
காத்திடும் வாழ்வே! தொழுங்கலையே! வேரடர்ந்து
பூத்த கொடியே! புகழே!கண் - கோத்தினிக்கும்
மாண்பே! நனிபொற்பே! வண்ணக் கவிவெற்பே!
கேண்மை யுழவே! செழுமையே! - மேன்மையே!
வான்மழையே! சிந்தை மணக்குந் தகையே..நீ
தேன்கல மே!பண்ணே நல்கியென் - னுான்வாழ்
மலர்மணமே! புண்ணியமே! ஓத வுளமே
நலமே மிகுமே! பெரும்பேர் - நிலமே!
கதிரே! கவிவனமே! பாகுறுமின் யாழே!
நதியே! நயமே! கலைநற்கா வே!இன்பஞ்
சேர்..தாயே! தா.. சாத னம்!வழங்கும் கண்ணிமையால்
சீர்மைமனம்! தேறிட வை!நன் மதுவே!
புதுவைமண் சாற்றும் புலமை - பொதுமை
பதிய மொழிக படைப்பு!
  
சக்கரத்தில் அமைந்த குறள்
  
1.
பொன்னின் புதுப்பொலி வே!பூந்தேன் காரிகையே!
கன்னித் தமிழே..நீ காப்பு!
  
2.
தங்கத் தமிழே! தவமொழியே! செங்காந்தல்
பொங்கும் புகழே!நீ காப்பு!
  
தேரின் மேற்றட்டில் அமைந்த குறள்
  
கனிந்த தமிழே! கனக மணியே!
இனமே மகிழ வெழு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
24.08.2019

lundi 5 août 2019

இரதபந்தம்



தேர் ஓவியக் கவிதை 14
  
புதுவைப் புலவர்
சந்தப்பாமணி அரங்க. நடராசனார் வாழியவே!
  
கட்டளைக் கலித்துறை
  
உளமோங்கி வாழும் பெருமை! அருளளி வேல்வடிவ
நலமோங்கி வாழும் புலமை!..வல் வேய வெழிற்சுவைவாய்!
குளமேந்து பூநட ராசர்முத் தாளு முயரணியர்!
வளமோங்கி வாழுங் கவிதை புவிவார்த்து வாழியவே!
  
கருத்துரை:
  
புதுவைப் புலவர், சந்தப்பாமணி அரங்க. நடராசனாரின் உள்ளத்துள் பெருமை நிலையாக வாழும். நுால்களில் நலமோங்கி வாழும் கூரிய புலமையுடையவர். வல்ல வேய்ங்குழல் இசைபோல் இனிக்கும் திருவாயைப் பெற்றவர். குளம்பூத்த தாமரைபோல் அழகுடைய வாழ்வைப் பெற்றவர். முத்துப்போல் வெண்மை அணியர். வளமோங்கி வாழும் கவிதைகளைப் புவிக்களித்து வாழியவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
04.08.2019

dimanche 4 août 2019

இரத பந்தம்



தேர் ஓவியக் கவிதை - 13
    
இயலிசைப்புலவர்
இராச. வேங்கடசனார் வாழியவே!
  
மதுப்பூத்த வேயேதான் மார்புரையாம்! நாவை
நதிவனத்துத் தேன்சேரும்! நன்றாய் - விதுப்பும்
நயமதும்..சீர் நன்கிசைக்கும்! மெல்லிசைத் துாயர்!
இயலிசை வேந்தரை யேத்து!
  
கருத்துரை:
  
புதுவை இயலிசைப்புலவர் இராச. வேங்கடேசனார் நெஞ்சமளிக்கும் உரைகள் இனிக்கும் வேய்ங்குழல் இசையைப்போன்றிருக்கும். அவரின் திருநாவைப் பாய்ந்தோடும் ஆற்றுவளமுடைய சோலைதரும் தேன் சேரும். [தேன்போல் அவர் சொற்கள் இனிக்கும்] நன்றாய் அவரின் ஆசைகள் நமக்கு நன்மைகளை மிக்களிக்கும். சிந்து, சந்தம் ஆகிய மெல்லிசை பொழிகின்ற துாயவர். இயலிசை மன்னவர். அவரை ஏத்திப் போற்றுகவே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

samedi 3 août 2019

இரதபந்தம்

 தேர் ஓவியக் கவிதை 11
[செய்யுள் 172 எழுத்து, ஓவியம் 155 எழுத்து]
  
நுாற்கடல் தி.வே. கோபாலையரைப்
பாற்கடல் என்றே பகர்!
  
[கலிவெண்பா]
    
புதுவை நகர்போற்றுஞ் சீர்மேக வாணர்!
பதித்தநுாற் றேனே பகுத்து - மதன்சேர்க்கும்!
கூர்மை..வே லென்மொழியர்! கோல வுரைச்சுடர்!
சீர்மைமிகு நெஞ்சர்! கவிதைகள் - வார்க்கும்
பெரும்புலமை பொங்கூற்று! பேரறிஞர்! அன்னை
யரும்புகழ் பாடு மறத்தர்! - திருவுடையர்!
வாயே மணக்க இலைபோட்டுக் கோடிநலத்
தாயேபோல் வாழ்வருள் தி.வே.கோ! - துாயசுவை
நுாற்கடற்கார்! சூடிய ஈடிற் சுவடியே
பாற்கட லென்றே பகர்!
    
இலக்கியங்களில் காணப்படும் தேர்க் கவிதைகளில் இதுவே பெரியதாகும். தேரின் நடுத்தட்டு 9, 11, 13 எழுத்துகளைப் பெற்றுவரும் கவிதைகளே மிக அதிகமாகப் பாடப்பட்டுள்ளன. இத்தேர் நடுத்தட்டில் 17 எழுத்துக்களைப் பெற்றுள்ளது.
  
கருத்துரை:
  
தி.வே.கோபாலையர் அவர்கள் திருமாலின் திருப்பெயருடையவர், தமிழை மழையாகப் பொழிந்தவர். புதுவைநகர் போற்றும் புகழுடையவர். அவா் எழுதிய நுால்கள் தேனை அளிக்கும். கல்வியழகைக் கொடுக்கும். நுண்மொழியாளர். இலக்கண உரையாசிரியர்களில் சுடராக ஒளிர்ந்தவர். சிறப்புடைய மனத்தை உடையவர். மிக்க புலமையுடைய கவிதை ஊற்றவர். பேரறிஞர். தமிழ்த்தாயின் புகழ்பாடி அறநெறியில் வாழ்ந்தவர். இறையருள் பெற்றவர். வெற்றிலை போடும் பழக்கத்தை உடையவர். கோடி நலங்களைத் தருகின்ற பெற்ற தாயைப்போன்று வாழ்வளித்தவர்.
  
நற்சுவையுடைய நுாற்கடல் தி.வே. கோபாலாலையர் அவர்கள் எழுதிய இணையிலா நுால்கள் பாற்கடலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.08.2019

vendredi 2 août 2019

இரத பந்தம்


தேர் ஓவியக் கவிதை 10
    
புலவர் இறைவிழியனார் புகழ் வாழியவே!
    
ஆசிரியப்பா
[செய்யுள் 130 எழுத்து - ஓவியம் 115]
    
நாவே பூவே திகழ்புகழ் நல்லார்!
பாவாய்ப் பாக்கள் வார்க்கும் புலவர்!
நம்சீர் காக்கவே முன்னே நின்றார்!
தம்பேர் பதியத் தமிழ்ப்பெயர் பூண்டார்!
நற்றமி ழிதழை யெழிலுற நல்கினார்!
கற்றோர் விரும்பும் வண்ணம் நிறைமதி
கனிந்துரு வித்தகர்! துாயநற் பனிபோ[ல்]
இனிய விறைவிழி யர்சீர் வாழ்கவே!
    
கருத்துரை:
  
புதுவைப் புலவர், நற்றமிழ் இதழாசிரியர் மு. இறைவிழியனார் அவர்கள் மணக்கின்ற நன்மொழி பேசுகின்ற புகழுடைய நல்லார். பாகாய் இனிக்கின்ற பாக்களைப் பாடும் புலமையுடையவர். தமிழினத்தின் சீரைக் காக்க முன்னின்று போராடினார். 'சாமிகண்ணு' என்ற தம்முடைய பெயரை 'இறைவிழியன்' என்று தனித்தமிழில் வைத்துக்கொண்டார். நற்றமிழ் என்ற திங்களிதழைச் சிறப்பாக வெளியிட்டார். கற்றவர் போற்றுகின்ற முற்றறிவாளர். வல்லவர். துாய பனிபோல் குளிர்ந்த குணமுடைய இனிய இறைவிழியனார் புகழ் வாழ்கவே.
    
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.08.2019

samedi 27 juillet 2019

தேர்ப் பந்தம்


தேர் ஓவியக் கவிதை

பார்வேண்டும் கல்வியே! நல்லுறவே! பைந்தமிழால்
சீர்வேண்டும் சிந்தை சொலிப்புறவே! - ஊர்ப்பச்சைக்
காரோங்கக் கட்டுகவே! தங்கமே! வேரோடு
பாரோங்கச் சொல்லுகவே பா!

பார்..சேர் பலகலையே! உன்னுடைய சேண்மாகண்
சீர்சேர் தமிழே!தண் சேர்பார்..சேர் - தார்..சேர்
புகழே! பொலிவேசேர்! தாயே தருக
பகையே ஒழிதேர்சேர் பா!

விளக்கவுரை:
    
உலகம் கற்றவர்களின் நல்லுறவை வேண்டும். சிந்தை செழிப்படைய பைந்தமிழின் சீரினை வேண்டும். ஊரில் பச்சைவயல்களின் அழகோங்கச் செய்வாய்! தங்கத்தமிழே நிலைத்து நிற்கும் வண்ணம் பாரோங்கச் சொல்லுவாய் பாட்டு.

தமிழே! என்னைப் பார்த்திடுவாய். பல்கலையே சேர்த்திடுவாய்! உன்னுடைய நீள்கயல் கண்களால் எனக்குச் சீரினைச் சேர்த்திடுவாய். குளிர்ச்சியைச் சேர்த்திடுவாய்! உறவாக இப்புவியைச் சேர்த்திடுவாய்! வெற்றி மாலையைச் சேர்த்திடுவாய்! புகழையும் பொலிவையும் சேர்த்திடுவாய்! என் தாயே! பகையை ஒழிக்கின்ற தேரைச் சேர்கின்ற பாடலைத் தந்திடுவாய்.

சித்திரத்தில் 1வது எண்ணிருக்கும் இடத்தில் முதல் வெண்பாவைத் தொடங்கி இடம்வலம், வலம்இடம் என மாறிமாறிப் படித்துக் கொண்டே தேரின் உச்சிவரை சென்று, அங்கிருந்து நேரே சீழிறங்க முதல் வெண்பா நிறைவடையும்.

நிறைவடைந்த 'பா' எழுத்தில் தொடங்கி வலது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து, இடது சக்கரத்திலிறங்கிச் சுற்றிப் படித்து, உள்வட்டத்தையும் அவ்வாறே படித்து வந்த வழியே 'பா' வந்து இரண்டாம் வெண்பா நிறைவடையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
26.07.2019