vendredi 31 mars 2017

வஞ்சித் துறை - 2




ஈசன் அடிபோற்றி!
அடிமறி வஞ்சி மண்டிலத் துறை [விளம் + காய்]
  
[ஒரு பாட்டின் நான்கடிகள், எவ்விடத்திலும் மாற்றிப் பாடும் வகையில் அமைவன அடிமறி வஞ்சி மண்டிலத் துறையாகும்]
  
ஆடிய அடிகண்டேன்!
சூடிய சுடர்கண்டேன்!
கூடிய உருக்கண்டேன்!
நாடிய நலங்கண்டேன்!
  
வெண்பனி மலைகொண்டான்!
பண்ணளி உளங்கொண்டான்!
தண்ணளி நதிகொண்டான்!
வண்ணொளி கரங்கொண்டான்!
  
தோடுடைச் செவி..பார்த்தேன்!
காடுடைப் புலி..பார்த்தேன்!
பீடுடை எழில்பார்த்தேன்!
ஏடுடைத் தமிழ்பார்த்தேன்!
  
அன்பெனும் அமுதுண்டேன்!
இன்பெனும் நெறியுண்டேன்!
துன்பெனும் வினைவென்றேன்!
பொன்னெனும் அருளுண்டேன்!
  
சடையொளிர் அருட்சிவமே!
கொடையொளிர் பெருமனமே!
விடையொளிர் வருமழகே!
நடையொளிர் தமிழ்ச்சுவையே!
  
நடுவிழி கதிரொக்கும்!
இடுநலம் அமுதொக்கும்!
உடுவொளி உலகொக்கும்!
அடுமருள் அலையொக்கும்!
  
தாயுறை தகைமேனி!
வாயுறை திருநாமம்!
சேயுறை செழுநெஞ்சம்
நோயுறை துயர்தீர்க்கும்!
  
பொற்புறு திருநீறு!
பற்றறு திருநீறு!
கிற்றறு திருநீறு!
வற்புறு திருநீறு!
  
பொன்னுருப் புகுநெறிகள்
அன்புரு அடைவழிகள்!
இன்புறும் இறைமொழிகள்!
பன்னிரு திருமுறைகள்!
  
ஈசனின் எழில்போற்றி!
ஓசனின் உளம்போற்றி!
பாசனின் பணிபோற்றி!
தாசனென் தமிழ்போற்றி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.03.2017

வஞ்சித் துறை - 1



கண்ணன் காதல் [தேமா + தேமா]
  
கண்ணா! என்னை
நண்ணா[து] ஏனோ?
பெண்..நாச் சொல்லை
உண்ணா[து] ஏனோ?
  
கண்ணா! உன்னைக்
கண்..நா.. தேடும்!
பண்..நா இன்று
புண்ணாய் வாடும்!
  
மண்ணைக் கொண்டாய்!
விண்ணைக் கொண்டாய்!
கண்ணைக் காட்டிப்
பெண்ணை வென்றாய்!
  
விண்டல் ஓசை
கொண்டல் கோலம்
வெண்ணெய்த் தாழி
கொண்டேன் காதல்!
  
எண்ணம் உன்மேல்
திண்ணம் ஆகும்!
வண்ணம் ஓங்கி
அண்ணம் ஏங்கும்!
  
கண்..மை மீதும்
ஒண்மை கொண்டேன்!
வெண்மை மீதும்
வண்மை கண்டேன்!
  
எண்மை என்னுள்
உண்மைக் காதல்!
பெண்மை என்னுள்
நுண்மை மோதல்!
  
மண்டைக் குள்ளே
செண்டை யிட்டாய்!
தொண்டைக் குள்ளே
சண்டை யிட்டாய்!
  
மண்டும் ஏக்கம்
கிண்டும் நெஞ்சை!
அண்டும் ஆசை
அண்டம் கொள்ளா!
  
பண்டும் இன்றும்
தொண்டு செய்தேன்!
கண்டும் ஏனோ
விண்டே சென்றாய்?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

விருத்த மேடை 5



விருத்த மேடை - 5

அறுசீர் விருத்தம்  - 5
[குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா]

இயற்கை இன்பம்!

காலை விடியலைக் கண்டு
   கவியலை ஓங்கிடும் என்னுள்!
சோலை மலர்களைக் கண்டு  
   சுரந்திடும் கற்பனை கோடி!   
மாலை மதியினைக் கண்டு
   மனமுறும் மாமது இன்பம்!
சேலை எழிலணிப் பெண்ணே!  
   செப்பிய செந்தமிழ் காப்பாய்!

இப்பாடல் "குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

மாச்சீரின் இறுதியில் குறில் எழுத்தைப் பெற்று வருவதும் [பேசு] , குறில் ஒற்றைப் பெற்று வருவதும் [பேசும்] குறிலீற்றுமா ஆகும்.

இப்பாடலில், விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வருவதுண்டு.
    
இலக்கணம் நுாற்பா
  
ஒன்று மூன்றுடன் ஆறு
மா,விளம் பிறவிடம் உறுமே!   
      - விருத்தப் பாவியல் [5]

இயற்கை எழிலை எண்ணி இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.03.2017

விருத்த மேடை 4



விருத்த மேடை - 4

அறுசீர் விருத்தம்  - 4
[குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம் + மாங்காய்]

தமிழ்க்கல்வி!

செல்லும் ஊரெலாம் சிறப்புறச்
   சீரினைத் தந்திடும் செழுங்கல்வி!
வெல்லும் ஆற்றலை மேவியே
   வியன்மதி மின்னிடும் விண்ணாக! 
சொல்லும் தேனினைச் சுரந்திடும்!
   சுடருளம் சூட்டிடும்! என்தோழி!
இல்லும் ஓங்கிட நற்புகழ்
   எய்திடத் தாய்மொழி ஏற்பாயே!

இப்பாடல் " குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம் + மாங்காய்" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஆறாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

மாச்சீரின் இறுதியில் குறில் எழுத்தைப் பெற்று வருவதும் [பேசு] , குறில் ஒற்றைப் பெற்று வருவதும் [பேசும்] குறிலீற்றுமா ஆகும்.

இப்பாடலில், விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வருவதுண்டு.
    
இலக்கணம் நுாற்பா
  
குறிய வீற்றுமாக் கூவிளம் முவ்விளம்    
காயொடுங் குறிகொள்ளே   
      - விருத்தப் பாவியல் [4]

கல்வியின் சிறப்பை உணர்த்தும் வண்ணம் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
113.03.2017

விருத்தமேடை - 3



விருத்த மேடை - 3

அறுசீர் விருத்தம்  - 3
[காய் + காய் + காய் + காய் + மா + தேமா]

என்னினத்தைக் கீழ்த்தள்ளி ஏமாற்றி வாழ்ந்ததெலாம்
      இறந்த காலம்!
வன்னினத்தை அறியாமல் வாய்ப்பேச்சி மாயங்கள்!
      வறண்ட காலம்!
பொன்னினத்தைப் புவியாண்ட புகழினத்தைப் பிரித்தாண்ட
      பொய்யர் காலம்!
தன்னினத்தைக் காத்திடவே தமிழிளைஞன் கண்திறந்தான்
      தழைக்கும் வாழ்வே!
  
இப்பாடல் "காய் + காய் + காய் + காய் + மா + தேமா" என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
    
இலக்கணம் நுாற்பா
  
முதனான்குங் காயாகிப் பின்னவை,மா தேமாவாய்   
முடியு மன்றே   
      - விருத்தப் பாவியல் [3]
  
"இளையோர் அணி விழித்தெழுகவே "  என்ற தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
     
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.02.2017