Affichage des articles dont le libellé est மெய் வருக்கை வெண்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est மெய் வருக்கை வெண்பா. Afficher tous les articles

mercredi 12 septembre 2018

வெண்பா மேடை - 121



வெண்பா
மேடை - 121
  
மெய் வருக்கை வெண்பா!
  
ஊக்கம[து] ஓங்கிடவும், உச்சமது விஞ்சிடவும்,
மாட்சியது நண்ணிடவும், மத்தாப்புச் சிந்துவகை
செப்பமுறச் செம்மொழியில் செய்திடவும், சீர்பொங்கி
வல்லமை எவ்விடத்தும் வாழ்ந்திடவும், வெள்ளமென
நற்றிறனை என்கண்ணா நல்கு!
  
இந்த இன்னிசைப் பஃறொடை வெண்பாவில் மெய்யெழுத்துகள் பதினெட்டும் முறையே சீர்களின் இரண்டாம் எழுத்தாக வந்தன.
  
காக்கின்ற வேங்கடவா! காட்சிதர வேள்வியில்..வா!
வார்க்கின்ற யாப்பழகில் வாழ்ந்திட..வா! - வாய்க்கின்ற
பூந்தமிழாய் மூத்தவனே! போற்றுகிறேன்! மாச்சிறப்பை
வாஞ்சையுடன் தான்தர..வா! மால்வீடு - நான்காண
மீண்டும்..வா! தேவ்..நீ..வா ஈங்கு!
  
இந்த நேரிசைப் பஃறொடை வெண்பாவின் சீர்களின் இரண்டாம் எழுத்தாகப் பதினெட்டு மெய்யெழுத்துகளும் வந்தன. [இப்பாடல் கடையாகு எதுகையைப் பெற்றுள்ளது]
  
விரும்பிய பொருளில் மெய் வருக்கை இன்னிசை வெண்பா ஒன்றும், மெய் வருக்கை நேரிசை வெண்பா ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து உயிர் வருக்கை வெண்பாக்களை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.09.2018