Affichage des articles dont le libellé est ஆறாரைச் சக்கரம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est ஆறாரைச் சக்கரம். Afficher tous les articles

mercredi 30 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
[ஈற்றடி மாலை மாற்றாய் அமைந்தது]
  
கல்வியே கண்!
[நேரிசை வெண்பா]
  
வண்ணணெறி கற்கவே யேகுக!வாழ்வின்ப
மண்ணெறி வாகே!மால் வேகமுறு! - தண்ணென்ப
பண்பணிகள்! தேவிவேண் டிப்..படி! நீசேம
வண்மண் படி!படி..பண் மண்!
  
அருஞ்சொல் விளக்கம்
  
வாகு - அழகு
மால் - காற்று
தண் - குளிர்
சேமம் - காவல், இன்பம்
வண் - வண்மை
பண் - இசைப்பாட்டு
  
இஃது ஆறாராய், குறட்டின் நடுவே 'வே' நின்று, 'கல்வியே கண்' என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] பன்னிரண்டு எழுத்துப்பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது. இந்நேரிசை வெண்பாவின் முதல் மூன்றடிகள், ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றது. ஈற்றடி 12 எழுத்துக்களைக் கொண்டது. செய்யுட்கண் 63 எழுத்துக்கள் உள்ளன. சக்கரத்தில் 55 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின் முனைதொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்துள்ள இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி இறங்கி இரண்டாமடி முற்றி, அடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வடப்பக்கத்தாரின் மேலேறி மூன்றாமடி முற்றி, செய்யுள் தொடங்கி எழுத்தில் நான்காமடி தொடங்கி வட்டை வழியிடஞ்சுற்றிச் சென்று நான்காமடி முற்றியது. வட்டத்தில் அமைந்த அவ்வடி மாலை மாற்றாய் அமைந்தது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.10.2019

dimanche 27 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
  
கண்ணா தருவாய் கவி!
[ஆசிரியப்பா]
  
மாதவ மனமே யெழுதகை தா..தா!
மாதாய்! ஏக வான் வாமம்..தா!
அரண்..தா! வாழென அருள்..தா தா!
வருக கண்ணா! மயில மாடு
வண்ண மினிநீக்கா வாழ்வே..தா!
தண்விண் ணா! நுாழை யாரெ ழாலே!
மாண்பே! வளமே! தா..அன்பே!தா!
ஆண்ட வன்மை ஆறே தா..தா!
தாதே! தீதே தீய விடு!பா
வோதிடப் பாலே ஊட்டுக தேவே!
  
இஃது ஆறு ஆராய், குறட்டின் நடுவே 'தா' என்ற எழுத்தும் நின்று, குறட்டைச் சூழ ஆறு எழுத்துக்கள் வந்தன. ஆர்மேல் ஒன்பது எழுத்துக்கள் நின்றன. சூட்டின்மேல் [வட்டம்] நாற்பத்திரண்டு எழுத்துக்கள் அமைந்தன.
  
முதல் இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், அடுத்த இரண்டடிகள் 23 எழுத்துக்களையும், பின் இரண்டடிகள் 21 எழுத்துக்களையும், ஈற்றிரண்டடிகள் 21 எழுத்துகளையும் பெற்றன. செய்யுட்கண் 111 எழுத்துக்கள் உள்ளன. சித்திரத்தில் 103 எழுத்துக்கள் வந்தன.
  
இச்செய்யுள், இடப்பக்கத்தின் முனைநின்று தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி மேலேறி முதல் இரண்டடிகள் முற்றி, அடுத்த கீழாரின் முனைநின்று மேலாரின் முனையிறுதி மேலேறி மூன்று நான்காம் அடிகள் முற்றி, அடுத்த வலப்பக்கத்தாரின் முனைநின்று இடப்பக்கத்தாரின் முனையிறுதிமேலேறி ஐந்து ஆறாம் அடிகள் முற்றி, ஈற்று நான்கடிகள் செய்யுள் தொடங்கி இடப்பக்க எழுத்தில் தொடங்கி வட்டைவழி இடஞ்சுற்றிப் பாடல் நிறைவுறும்.
  
இடப்பக்க ஆரில் 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறள் பிறக்கும்.
  
வண்ண மலரென வானின் மழையெனக்
கண்ணா தருவாய் கவி!
  
அருஞ்சொல் விளக்கம்
  
ஏகன் - கடவுள்
வாமம் - அழகு
நுாழையார் - நுண்மையர்
எழால் - யாழிசை
ஆறு - வழி
தாது - பூந்துாது
  
கருத்துரை:
  
கண்ணனிடம் வேண்டிக் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. கண்ணா! குளிர்ந்த வைகுந்தத்தில் வாழும் விண்ணா! தேவா! மாதவத்தால் விழிப்புறும் மனத்தழகைத் தருக..தருக..! என் அன்னையே! விண்ணுலகில் வாழும் வாழ்வைத் தருக! காவல் தருக! வாழ்கவென்று அருளைத் தருக..தருக..! தோகை விரித்தாடும் வண்ண வாழ்வை இனி நீக்காமல் தருக! கலைவல்லுநர் இசைக்கும் யாழமுதை, மாண்பை, வளத்தை, உன்னன்பைத் தருக..தருக..! ஆண்ட வன்மையின் வழியைத் தருக..தருக..! மலராக மணப்பவனே! என் தீய வினையை எரித்துவிடு. உன்னைப் போற்றிப் பாடிட ஆழ்வார்களுக்கு அளித்த தமிழ்ப்பாலை எனக்கும் ஊட்டுக.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
27.10.2019

samedi 23 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 3


சித்திர கவிதை

[வெண்டளைக் கலிவிருத்தம்!]
  
கம்பன் வாழி!
  
சந்தம் கமழ்ந்திடும் கம்பன் தமிழாம்!
சொந்தமும் சூழ்ந்திடும் தோழா..நீ வா..கற்போம்!
முந்தும்பண் இன்பிடும்! நம்மொழி நாம்காக்க!
கந்திகமழ் சொக்கா! முழுதெம் இனம்வாழ்க!
  
இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே 'டு' என்னும் எழுத்து நிற்க, ஆறு ஆரங்களிலும் முறையே ஒன்பது எழுத்துகள் அமைவதைக் காணலாம். ஆரங்களிலுள்ள நடுவெழுத்தை வலஞ்சுழியாகப் படிக்க, 'கம்பன் வாழி' என்னும் சொல் பெறப்படுவதைக் காணலாம்.
  
இச்செய்யுளின் ஒவ்வொரு அடியும் 19 எழுத்துகளைப் பெறும். மொத்தம் 76 எழுத்துகளில் அமையும் இப்பாடல் சித்திரத்தில் 67 எழுத்துகளைப் பெறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் 22.12.2017
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம் - 3

jeudi 21 décembre 2017

ஆறாரைச் சக்கரம் - 2




சித்திர கவிதை

ஆறாரைச் சக்கரம் - 2

தாயே துணை!
[கட்டளைக் கலித்துறை]

சுற்றித் திரிகின்றோம் தாயே,யே கும்வழி துன்பணிந்தே!
முற்றி மனத்துக்குள் தீயே,யே தும்சொல்லா மூண்டெரியும்!
பற்றி மெமைக்காப்பாய் நீ!யேணைப் பிள்ளை பசியறிவாய்!
சுற்றும்முன் பாவ பழிவந்தே! கண்ணெம்மேல் துய்தருளே!

இச்செய்யுள் ஆறாரைச் சக்கரத்தில் அமையும்போது நடுவே யே என்னும் எழுத்து நிற்ப, ஆர்மேல் ஒன்பதொன்பது எழுத்தாய்க் குறட்டின்மேல் தாயே நீயே துணை என்ற சொற்கள் தோன்றச் சுற்று வட்டத்தில்  இருபத்து நான்கு எழுத்துகள் நின்று நிறைவுறும்.

செய்யுளில் வரும் 93 எழுத்துகள் சித்திரத்தில்  85 ஆக அமையும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017

ஆறாரைச் சக்கரம்





சித்திர கவிதை
ஆறாரைச் சக்கரம்

பாடுகிறேன் பைந்தமிழே! பாரிதில் பீடுடவும்!
நாடுகிறேன் நற்றமிழே! நன்மலர் - தேடி..மார்
சூடுகிறேன் சொற்றமிழே! துாயவுன் பொற்கையாற்
பாடுநாள் சூடும்சீர் பற்று!

அறுபத்தொன்பது எழுத்துகளைப் பெற்ற நேரிசை வெண்பா, சக்கரத்தில் எழுதுங்கால் அறுபத்தோர் எழுத்துகளைப் பெறும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2017