samedi 24 décembre 2016

வெண்பா மேடை - 33

வெண்பா மேடை - 33
     
முற்று எதுகை வெண்பா!
    
சந்தமொலிர் செந்தமிழே! சிந்தையொளி தந்திடுவாய்!
பந்தமொளிர் கந்தமிட வந்திடுவாய்! - தந்ததன
மீட்டிடுவாய்! மாட்சியொளிர் சூட்டிடுவாய்! நாட்டமுடன்
தீட்டிடுவாய் ஆட்சியொளிர் பாட்டு!
    
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் எதுகை அமைந்திருப்பது இணையெதுகை
[கண்ணா! வண்ணா! காப்பாய் உலகை!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது பொழிப்பெதுகை
[கண்ணா! கமல வண்ணா! காப்பாய்!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது ஒரூஉ எதுகை.
[கண்ணா! இந்தக் கவிஞனை எண்ணிடுவாய்!]
    
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் எதுகை அமைந்திருப்பது கூழைஎதுகை.
[கண்ணா மண்ணை விண்ணைப் படைத்தாய்!]
    
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது மேற்கதுவாய் எதுகை.
[கண்ணா காப்பாய் மண்ணை விண்ணை!]
      
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் எதுகை.
[கண்ணா! கண்கவர் கமல வண்ணா! ]
    
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் எதுகை அமைதிருப்பது முற்று எதுகை.
[கண்ணா! மன்னா! தண்மலர் வண்ணா!]
    
முதல் மூன்றடிகள் முற்று எதுகை பெற்றும், ஈற்றடி கூழை எதுகை பெற்றும் இரு விகற்ப முற்று எதுகை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
23.12.2016

vendredi 23 décembre 2016

பாட்டரங்கம்

பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்
தலைமைக் கவிதை
  
தலைப்பு
கம்பனைக் கண்டு கதைக்கின்றார்கள்
[கூனி, வாலி, சூர்ப்பணகை, இராவணன்]
  
தமிழ்த்தாய் வணக்கம்!
  
சந்தங்கள் பலகோடி வந்தாடும் தமிழே..என்
தலைமீது குடியேடி வாழ்க!
தங்கத்து நிகராகத் தந்தான கவிபாடத்
தழைத்தோங்கும் அணியாவும் சூழ்க!

சிந்தோங்கப் பலகோடி சேர்ந்தாடும் தமிழே..என்
சிந்தைக்குள் குடியேறி வாழ்க!
சிங்கத்துக் குரலாகச் செம்மாந்து நான்பாடச்
சீருக்குள் செழிப்பேந்தி ஆழ்க!
முந்தும்சீர் பலகோடி மொழிகின்ற தமிழே..என்
மூளைக்குள் குடியேறி வாழ்க!
மூவாத அமுதுாறும் தேவார தமிழே..என்
மூச்சுக்குள் பண்பாடி ஆள்க!
சொந்தங்கள் பலகோடி தந்தாடும் தமிழே..என்
சொல்லுக்குள் குடியேறி வாழ்க!
தொட்டுன்னைத் தொழுகின்றேன் விட்டேன்றும் பிரியாமல்
தொடர்கின்ற பிறப்பெல்லாம் காக்க!
  
இறை வணக்கம்!
  
வில்லேந்தும் திருராமா! வியன்சீதை மணவாளா!
வெல்கங்கைக் குகனுக்கு நண்பா!
விண்ணேந்தும் ஒளியானாய் மண்ணேந்தும் வலமானய்!
வெண்பஞ்சு நெஞ்சுற்ற அன்பா!
மல்லேந்தும் வன்..கையா! மாண்பேந்தும் பொற்கையா!
மலைமீது வாழ்கின்ற ஐயா!
மனம்வாழும் மதுசூதா! மறைவாழும் மகிழ்வேதா!
மணம்வீசும் உன்னெண்ணம் நெய்யா!
சொல்லேந்தும் என்பாடல் சுவையேந்த நீ செய்தால்
சுடர்ந்தோங்கும் என்வாழ்வு மெய்யா!
தொல்பாவை எழின்மார்பா! பல்லாண்டு நான்பாடித்
தொடர்கின்ற பாட்டுக்குள் நீ..வா!
கல்லேந்தும் நெஞ்சத்தைக் கரைக்கின்ற வண்ணத்தில்
கமழ்கின்ற தமிழ்தந்து காப்பாய்!
கனியேந்தும் சுவைதந்து பனியேந்தும் குளிர்தந்து
கவிமன்றல் புகழள்ளிக் சேர்ப்பாய்!
  
அவையோர் வணக்கம்!
  
மின்னஞ்சல் முகநுாலின் மேலாசை கொள்ளாமல்
இன்பாட்டு அரங்கிற்கு வந்தீர்!
மின்விஞ்சும் விழியேந்திப் பொன்விஞ்சும் நகையேந்திப்
பண்கேட்க அமர்ந்துள்ள பெண்டீர்!
இன்தஞ்சை மொழியேந்தி எழிற்கூட்டி மலர்சூட்டி
இளம்பச்சைக் கிளியாக வந்தீர்!
இசைபாடும் இனியோரே! ஈடில்லா இளையோரே!
கவிகேட்க பேருள்ளம் கொண்டீர்!
வன்னெஞ்சம் கொண்டுள்ள வரலாற்று நபா்நாடி
வாயாட வந்துள்ள அன்பீர்!
புண்ணெஞ்ச நோய்தீரப் பூக்கொண்ட சொல்லேந்திப்
புகழ்கம்பன் சீர்பாடும் தொண்டீர்!
என்னெஞ்சம் வணக்கங்கள்! இருகைகள் தாம்சேர்த்து
இன்னோசை முழக்கத்தைக் கொட்டீர்!
நன்னஞ்சை நிலமாக இன்பாக்கள் விளைந்தாடும்
இம்மன்றை எந்நாளும் வாழ்த்தீர்!
  
தொடரும்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்

கேள்வியும் பதிலும்

கேட்டலும் கிளர்த்தலும்

வணக்கம் ஐயா!

அன்பு. பண்பு எதுகையாக வருமா? நலம் வளம் எதுகையாக வருமா? தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை, இவைகளுக்கு இலக்கியச் சான்றுகளுடன் விளக்கம் தர வேண்டுகிறேன்.

எழில் ஓவியா. சேலம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
  
தலையாகு எதுகை
  
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. [ திருக்குறள் - 5]
  
இருள்சேர், பொருள்சேர் முதல் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தன
  
இடையாகு எதுகை
  
அகர முதல எழுத்தெல்லாம், ஆதி
பகவன் முதற்றே உலகு
  
அகர, பகவன் இரண்டாம் எழுத்து மட்டும் ஒன்றி வருவது
  
கடையாகு எதுகை
  
இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல் வருக்கும், நெடில், இனம், ஆகியவற்றுள் அமைவதாகும்.
  
1. வருக்க எதுகை
  
அறத்தாறு இதுவென வேண்டா,சிவிகை
பொறுத்தானோ[டு] ஊர்ந்தான் இடை [ திருக்குறள் - 37]
  
ற, றா, றி, றீ, று, றுா, றெ, றே. றொ, றோ, றௌ என்னும் இவை றகர வருக்க எழுத்துகள். இவ்வெழுத்துகள் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [ 1. ககர வருக்கம் 2. ஙகர வருக்கம், சகர வருக்கம்,...... 18 னகர வருக்கம்]
  
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகக்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்! [திருப்பாவை - 27]
  
டகர வருக்க எழுத்துகள் எதுகைகயாக வந்துள்ளன.
  
2. நெடில் எதுகை
  
ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் - ஒருசாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் - ஒருசாரார்
ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார் - ஒருசாரார்
  
நெடில் எழுத்துகள் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [இதுபோல் குறில் எழுத்துகளும் ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரலாம்.]
  
3. உயிர் எதுகை
  
[ 1.அகர எதுகை, 2. ஆகார எதுகை, 3. இகர எதுகை, ஈகார எதுகை.... 12 ஓளகார எதுகை]
  
ஆகார உயிர் எதுகை
  
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்!
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்!
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்!
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்!
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! [உலகநீதி - 1]
  
ஓதாமல் மாதாவை, போகாத, வாகாரும் - 'தா' எழுத்துக்கு 'கா' எழுத்து எதுகையாக வந்தது.
  
இகர உயிர் எதுகை
  
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு [ திருக்குறள் - 20]
  
'ரி' எழுத்துக்கு 'னி' எழுத்து எதுகையாக வந்தது.
  
மாறியது செஞ்சம்
மாற்றிது யாரோ/
காரிகையின் உள்ளம்
காண வருவாரோ?
  
'றி' எழுத்துக்கு 'ரி' எழுத்து எதுகையாக வந்தது.
  
ஐகார எதுகை
  
சுவையொளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு [திருக்குறள் - 27]
  
'வை' எழுத்துக்குக் 'கை' எழுத்து எதுகையாக வந்தது.
  
இப்படி பன்னிரு உயிர் எழுத்துகளைக் கண்டுகொள்க.
  
4. வல்லின எதுகை
  
தக்கார் தகவிலா் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் [ திருக்குறள் - 114]
  
வல்லின மெய்யெழுத்துகள்ஆறும் [க்.ச்.ட்.த்.ப்.ற்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [வல்லின மெய்யெழுத்துக்கு வல்லின உயிர்மெய் எழுத்து எதுகையாக வராது. க், க எதுகையன்று]
  
5. மெல்லின எதுகை
  
அன்பீனும் ஆா்வம் உடைமை, அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு [ திருக்குறள் - 74]
  
மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் [ங்,ஞ்,ண்,ந்.ம்.ன்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [மெல்லின மெய்யெழுத்துக்கு மெல்லின உயிர்மெய் எழுத்து எதுகையாக வராது. ங், ங எதுகையன்று]
  
6. இடையின எதுகை
  
எல்லா விளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
  
இடையின மெய்யெழுத்துகள்ஆறும் [ய்.ர்.ல்.வ்.ழ்.ள்] ஒன்றுக்கு ஒன்று எதுகையாக வரும். [இடையின மெய்யெழுத்துக்கு இடையின உயிர்மெய் எழுத்து எதுகையாக வரும். ர், ர எதுகையாக வரும்.]
  
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோசை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்! [திருப்பாவை - 1]
  
இடையின மெய்யெழுத்துக்கு அதன் வருக்கமும் எதுயைாக வரும்.
  
7. அளபெடை எதுகை
  
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது [திருக்குறள் - 1176]
  
அளபெடை எதுயைாக வந்துள்ளது.
  
8. ஆசு எதுகை
  
ய், ர், ல், ழ், என்றும் இவ்வெழுத்துகளில் ஒன்று, ஒரு செய்யுளில் மோனை எழுத்தாகிய முதல் எழுத்துக்கும், எதுகை எழுத்தாகிய இரண்டாம் எழுத்துக்கும் இடையே ஆசாக அமைய வருவது ஆசெதுகையாகும்.
  
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்! உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு [திருக்குறள் - 110]
  
இக்குறளில் 'ய்' ஆசாக வந்தது.
  
காத்துக் கிடந்தேன் கயல்விழியே! வட்டியுடன்
சேர்த்துக் கொடுப்பாய் செழிப்பு!
  
இக்குறளில் 'ர்' ஆசாக வந்தது.
  
நீகொண்டு வாவென்றாய்! நெஞ்சேந்தி வந்தவனை
வேல்கொண்டு தாக்கும் விழி
  
இக்குறளில் 'ல்' ஆசாக வந்தது.
  
ஈந்து மகிழ்ந்தேன் இலக்கணத்தை! நன்றாக
ஆழ்ந்து தெளிதல் அறிவு!
  
இக்குறளில் 'ழ்' ஆசாக வந்தது.
  
9. வழி எதுகை
  
ஒரு செய்யுளில் அடிதொறும் ஒன்றி வந்த எதுகையே சீர்தொறும் ஒன்றி வருவது வழி எதுகை எனப்படும்.
  
கட்டழகு கொட்டமிடும்! தொட்டுமனம் வட்டமிடும்!
மொட்டழகு கட்டியெனைக் சட்டமிடும்! - பட்டழகே!
சுட்டுவிழி முட்டியெனை வெட்டவரும்! எட்டியுள
வட்டநிலாத் தட்டோ!உன் பொட்டு! [பாட்டரசர்]
    
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் எதுகை அமைந்திருப்பது இணையெதுகை
[கண்ணா! வண்ணா! காப்பாய் உலகை!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது பொழிப்பெதுகை
[கண்ணா! கமல வண்ணா! காப்பாய்!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது ஒரூஉ எதுகை.
[கண்ணா! இந்தக் கவிஞனை எண்ணிடுவாய்!]
  
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் எதுகை அமைந்திருப்பது கூழைஎதுகை.
[கண்ணா மண்ணை விண்ணைப் படைத்தாய்!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது மேற்கதுவாய் எதுகை.
[கண்ணா காப்பாய் மண்ணை விண்ணை!]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் எதுகை.
[கண்ணா! கண்கவர் கமல வண்ணா! ]
  
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் எதுகை அமைதிருப்பது முற்று எதுகை.
[கண்ணா! மன்னா! தண்மலர் வண்ணா!]
  
எதுகையைக் குறித்து இலக்கண நுால்கள் உரைக்குச் நுாற்பாக்களைத் தொகுத்து நாளை எழுதுகிறேன்.
  
எது..கை அகன்றாலும் என்றும் கவியுள்
எதுகை கமழ இசைப்பீர்! - புதுமைக்
கருத்தை அளிப்பீர்! கலைகற்போர் நெஞ்சுள்
விருந்தை அளிப்பீர் வியந்து!
  
தொடரும்.....

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
21.12.2016

முற்று மோனை

வெண்பா மேடை - 32
    
முற்று மோனை வெண்பா!
  
மார்கழி மங்கையின் மாண்புரைக்கும் மாக்கோலம்!
கார்விழி காட்டும் கவிக்கோலம்! - கார்வண்ணா!
பாடும் பசுந்தமிழைப் பாலாகப் பாய்ச்சிடுவாய்!
ஈடும் இலையென்[று] எனக்கு!
  
நாற்சீரடியில் நான்கு சீர்களிலும் மோனை அமைந்திருப்பது முற்று மோனை.
[கண்ணா! கருணைக் கடலே! காப்பாய்]
  
நாற்சீரடியில் முதல் இரண்டு சீர்களில் மோனை அமைந்திருப்பது இணைமோனை.
[கண்ணா! கருணைச் செல்வா! வாவா]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்திருப்பது பொழிப்புமோனை.
[கண்ணா! உன்போல் காப்பார் யாரோ]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது ஒரூஉ மோனை.
[கண்ணா! என்றும் என்னைக் காப்பாய்]
  
நாற்சீரடியில் முதல் மூன்று சீர்களில் மோனை அமைந்திருப்பது கூழைமோனை.
[கண்ணா! கருணைக் கடலே! வா!வா]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது மேற்கதுவாய் மோனை.
[கண்ணா! உன்றன் கழல்களைக் காட்டு]
  
நாற்சீரடியில் முதல் சீரிலும் இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை அமைந்திருப்பது கீழ்க்கதுவாய் மோனை.
[கண்ணா! காலம் எல்லாம் காப்பாய்]
  
முதல் மூன்றடிகள் முற்று மோனை பெற்றும், ஈற்றடி கூழைமோனை பெற்றும் அமைந்த வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
   
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.12.2016

மயக்குவதேன்?


இயற்பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா
  
மயக்குவதேன்?
  
தரவு
வண்ணமலர்ப் பொழிலுக்குள் வளைந்தாடும் வரிவண்டே!
உண்ணுமது பலகுடித்தும் உளறாத உயர்வண்டே!
எண்ணமதில் இருக்கின்ற இளையவளை அணைத்தவுடன்
மண்ணுலகம் சுழல்வதுபோல் மனம்மெல்லச் சுழல்வதுமேன்?
  
தாழிசை
1.
கன்னங்கள் தருகின்ற கனிச்சாற்றைப் பருகியதும்
தென்னங்கள் தரும்போதை திரண்டென்னை மயக்குவதேன்?
  
2.
இதழோடும் இதழ்சேர்த்தே இடும்முத்தம் தரும்போதை
எதனோடும் இணைசொல்ல இயலாமல் மயக்குவதேன்?
  
3.
பார்வைதரும் சுவையமுதைப் படர்நெஞ்சம் அருந்தியதும்
போர்வையுறும் குளிரூட்டிப் புலவனெனை மயக்குவதேன்?
  
4.
வரங்கூட்டும் இறையரசன் மகிழ்வூட்டி வழங்கியதாம்
குரல்கூட்டும் குளிரமுதைக் குடித்துள்ளம் மயக்குவதேன்?
  
5.
தொட்டவுடன் எனக்குள்ளே சுரக்கின்ற உணர்வலைகள்
கட்டுடைத்துப் பெருகுவதேன்? கருத்திழுத்து மயக்குவதேன்?
  
6.
செவியாடும் மணியழகும்! சிரிப்பாடும் உதட்டழகும்!
கவியாடும் மதுவாகக் களித்தென்னை மயக்குவதேன்?
  
இங்கே [தனிச்சொல்]
  
சுரிதகம்
போதை தெளிந்து புலவன் வாழப்
பாதை உரைப்பாய்! பணிந்தேன் உன்னை!
மலர்சேர் வண்ண வண்டே!
நலஞ்சேர் வழியை நவில்வாய் நன்றே!
  
இலக்கணக் குறிப்பு
[தரவு + தாழிசைகளுக்கு இடையே தனிச்சொல் பெற்றோ + தாழிசைகளுக்கு இடையே தனிச்சொல் பெறாமாலோ + மூன்றுக்கு அதிகமான தாழிசைகள் + தனிச்சொல் + சுரிதகம்]

18.12.2016

vendredi 16 décembre 2016

கவிப்பெண்ணே




கவிப்பெண்ணே!

பச்சைப் பசுங்கிளியே - தமிழ்ப்
பண்பின் உறைவிடமே!
இச்சை கொடுக்குதடி - உன்னழகு
இன்..பாத் தொடுக்குதடி!

பாடும் கவிக்குயிலே! - நடம்
ஆடும் எழின்மயிலே!
காடும் மணக்குதடி - உனைக்கண்டு
காலம் இனிக்குதடி!

கொஞ்சும் புறாவழகே! - சந்தக்
கோலத் தமிழ்நடையே!
நெஞ்சை இழுக்குதடி! - உன்விழிகள்
நேயம் பழுக்குதடி!

அன்ன நடைகாட்டி - நல்
ஆசை விளைத்தவளே!
இன்னல் குறைந்ததடி - வாழ்வில்
இன்பம் நிறைந்ததடி!

சின்னஞ் சிறுசிட்டே! - என்
சிந்தை மிளிர்பட்டே!
முன்னைப் பயன்என்பேன் - நீயே..என்
மோகத் தமிழ்என்பேன்!

முத்து நிறக்குருகே - என்
மூளை உறுங்கனவே!
பித்தம் பெருக்குதடி - நீ..தந்த
முத்தம் உருக்குதடி!

கொக்..கொக் எனுங்கோழி - போல்..நீ
கூறும் மொழிவாழி!
அக்கக் கெனையாக்கும் - உன்..பார்வை
ஆழ்ந்த துயர்போக்கும்!

கெண்டை விழிகளடி - பல
கேள்வி விடுக்குதடி!
தண்டை ஒலிகேட்டுத் - தீராத்
தாகம் எடுக்குதடி!

வண்டை நிகர்த்தகண் - தினம்
சண்டை நடத்துதடி!
மண்டை உறுங்காதல் - என்னை
மயக்கிக் கடத்துதடி!

அன்பே! அரும்அமுதே! - உன்னை
அள்ளிக் குடித்திடவா!
என்னே உடலழகு - நாளும்
ஏந்திப் படித்திடவா!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.12.2016

jeudi 15 décembre 2016

கட்டளைக் கலிப்பா



கட்டளைக் கலிப்பா!

நெஞ்சுள் நின்றிடும் நேரிழை! பொற்கவி
   நேயன் நெய்திடும் சீரிழை! மெல்லிழைப்
பஞ்சில் பின்னிய பாவையின் பட்டுடல்
   பட்டுத் தீயெனப் பற்றுதே என்னுடல்!
கொஞ்சிக் கூடிடும் கோல நினைவுகள்
   கோடி கோடி குலவிடும்! கூத்திடும்!
மஞ்சள் சிட்டென மாதுளை முத்தென
   வஞ்சி நல்லெழில் விஞ்சி மிளிருதே!

வண்ணப் பெண்ணே! மனத்தினைக் கொல்லாதே!
   மணத்தை ஏற்க வரும்நெஞ்சைத் தள்ளாதே!
எண்ணம் யாவும் இருளெனக் கொள்ளாதே!
   இடரில் வாழ்வை இருத்தியே துள்ளாதே!
கண்ணில் நீயே! கருத்திலும் நீயே!என்
   பண்ணில் நீயே! படர்நலம் நீயே!வா!
பெண்ணில் நீயே பிழையிலா நல்லெழில்!
   மண்ணில் என்னை மகிழ்வுறச் செய்கவே!

கட்டளைக் கலிப்பா இலக்கணம்

எட்டுச் சீர்களைக் கொண்ட நான்கடிகள் ஓரெதுகையில் அமையவேண்டும். ஐந்தாம் சீரில் மோனை வரவேண்டும்.

மா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற அமைப்பில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும்.

அனைத்து அரையடிகளிலும் முதல் சீர் குறிலீற்று மா [முதற்சீரின் இறுதி, குறிலாக அல்லது குறில் ஒற்றாக வரும்]

முதலிரு சீர்கள் மாமுன் நேராக  வருவது கட்டாயம். 2, 3 ஆம் தளைகள் விளமுன் நேராகவோ, மாமுன்  நிரையாகவோ [ இயற்சீர் வெண்டளையாக] வரலாம்

நேரசையில் தொடங்கும் அரையடியின் எழுத்தொண்ணிக்கை 11. நிரையசையால் தொடங்கும் அரையடிக்கு எழுத்தெண்ணிக்கை 12.

பாடலின் இறுதியில் ஏகாரம் வரும்.

விளச்சீர் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும். [ விளங்காய் வாராது]

பாட்டரசர் கி. பாரதிதாசன்
12.12.2016

தமிழ் முரசம்



தமிழ்முரசம்!

ஊதிடுவோம் தமிழ்ச்சங்கு!
   உறங்குபவன் விழிக்கட்டும் - வஞ்ச
      ஓநாயை அழிக்கட்டும்!
ஓதிடுவோம் திருக்குறளை!
   உலகுயர்ந்து செழிக்கட்டும் -  அன்பு
      உறவுயர்ந்து கொழிக்கட்டும்!

கொட்டிடுவோம் தமிழ்முரசு!
   கொடும்நரிகள் மடியட்டும் - கொண்ட
      குவியிருட்டு விடியட்டும்!
முட்டுகவே பகையரணை!
   மூடர்கதை முடியட்டும்! - நமை
      மோதுபகை ஒடியட்டும்!

தட்டிடுவோம் பெரும்மேளம்!
   தமிழினத்தார் இணையட்டும் - சங்கத்
      தமிழ்மழையில் நனையட்டும்!
எட்டிடுவோம் அரும்புகழை!
   எதிர்ப்பவர்கள் பணியட்டும்! - தமிழின்
      ஏற்றத்தை உணரட்டும்!

கூத்திடுவோம் தமிழ்பாடி!
   கொள்கையினைத் தலைசூடி -  நாம்
      குவித்திடுவோம் நலங்கோடி!
காத்திடுவோம் தமிழ்த்தாயை!
   கவிமறவர் தினங்கூடி - என்றும்
      கண்ணிமைபோல் உறவாடி!

ஊறிடுவோம் தமிழுணர்வில்!
   ஒன்றிடுவோம் தமிழுறவில் - கற்று
      உயர்ந்திடுவோம் தமிழறிவில்!
கூறிடுவோம் தமிழ்ச்சீரை!
   கொண்டிடுவோம் தமிழ்ப்பேரை - விரைந்து
      கண்டிடுவோம் தமிழ்ப்பாரை!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.12.2016