Affichage des articles dont le libellé est பொங்கல் கவிதை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est பொங்கல் கவிதை. Afficher tous les articles

lundi 20 janvier 2020

நாடகத்தமிழ்ப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 6
20.01.2020
  
நாடகத்தமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
சிலம்பும் மணியும் தமிழ்க்கலையின்
   சிறப்பை முழங்கும்! காலணிகள்
குலுங்கும் நடனம் தமிழ்ச்சொத்து!
   கூத்தன் சூடும் மலர்க்கொத்து!
இலங்கும் பொன்சேர் மணியாக
   ஈடில் கலையை அணிந்திடுவோம்!
துலங்கும் வாழ்வு! கூத்திசையால்
   கூறும் கதைகள் மனமாளும்!
  
முல்லை மலரைச் சிறுவண்டு
   முகர்ந்து நடனம் புரிந்திடுமே!
கொல்லை ஒளிர மயிலழகாய்க்
   கோல நடனம் அளித்திடுமே!
எல்லா இல்லாக் காதலினால்
   இளமைக் கண்கள் கூத்திடுமே!
தில்லை இறைவன் அருள்பாடித்
   தேனார் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,

dimanche 19 janvier 2020

இசைத்தமிழ்ப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 5
19.01.2020
  
இசைத்தமிழ்ப் பொங்கல் பொங்குகவே!
  
யாழ்சேர் பாணன் இசைப்பொங்கல்
   இன்பத் தமிழின் புகழ்மீட்டும்!
கீழ்சேர் உலகைச் சரிசெய்து
   கீர்த்தி காண வழிகாட்டும்!
ஆழ்சேர் கடலின் வளமுடைய
   அமுதத் தமிழே துயர்..ஓட்டும்!
ஊழ்சேர் பொழுதில் இறைவனுடன்
   ஒளிரும் எங்கள் தமிழ்மொழியே!
  
இசையாய் வாழ்க்கை இனிக்கட்டும்!
   எழிலாய் உள்ளம் சிறக்கட்டும்!
அசையாய்ப் பிறக்கும் நேர்நிரையே!
   அறத்தால் பிறக்கும் சீர்நிறையே!
தசையாய்.. உயிராய்த் தமிழ்மொழியைத்
   தாங்கி வாழ்வோம்! தகைகாண்போம்!
நசையாய்ச் சொன்ன கருத்தேந்தி
   நாளும் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

jeudi 16 janvier 2020

காணும் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தைத்திங்கள் 3
17.01.2020

 
கருணை பொங்கி மணம்வீசும்
   காணும் பொங்கல் வாழியவே!
அருணைத் தேவன் திருவருளால்
   அன்பும் அறிவும் மலருகவே!
சுருணை உலகம் சுடர்த்தமிழின்
   துாய நெறியைச் சூடுகவே!
வருணை அழகே! மலர்ப்பெண்ணே!
   வாழ்வே இனிக்கப் பொங்குகவே!
  
ஏழை எளியோர் இன்பமுற
   இனிக்கும் இந்நாள் வாழியவே!
வாழை தென்னைத் தோப்பாக
   வளமே எங்குஞ் சேருகவே!
யாழை மீட்டித் தமிழுணர்வை
   ஏந்தும் பாக்கள் பாடுகவே!
தாழை மணமே! தமிழ்மகளே!
   தவமே! பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

mercredi 15 janvier 2020

மாட்டுப் பொங்கல்


திருவள்ளுவர் ஆண்டு 2051 தை 2
16.01.2020
  
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
  
மாட்டுப் பொங்கல் பொங்குகவே!
  
உழவே உலகின் அச்சாணி!
   உறவே வயலை உழுகாளை!
தொழுமே குறளை எத்திசையும்!
   தொண்டே இனத்தின் அடையாளம்!
விழுதே போன்று குடிதாங்கும்
   வீறே தமிழர் வியன்மாட்சி!
அழகே! அமுதே! தைப்பெண்ணே!
   அறமே இனிக்கப் பொங்குகவே!
  
ஏறு துள்ளும் கலத்தினிலே
   இளமை துள்ளும் வளமேந்தி,
ஆறு பாயும் நிலமாக
   அன்பே பாயும் அருளேந்தி,
ஊறு மகத்துள் எந்நாளும்
   உயர்ந்த கவிதை சுவையேந்தி,
வேறு வேறாய் நிற்காமல்
   வேராய் வன்மை பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

mardi 14 janvier 2020

தைப்பொங்கல்!


திருவள்ளுவர் ஆண்டு 2051 தை 1
15.01.2020
  
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் பொங்குகவே!
  
அன்னைத் தமிழின் புத்தாண்டை
   ஆடிப் பாடி வரவேற்போம்!
பொன்னை நிகர்த்த தைம்மகளைப்
   போற்றித் தொழுது மலர்புனைவோம்!
முன்னைப் பெருமை முழங்கிடவும்,
   முல்லைக் காடாய் வாழ்வுறவும்,
என்னைச் சேர்ந்த கவிப்பெண்ணே!
   இனத்தின் பொங்கல் பொங்குகவே!
  
குறளாம் வாழ்வு பொங்குகவே!
   குணமாம் மாண்பு பொங்குகவே!
உறவாம் அன்பு பொங்குகவே!
   உயிராம் பண்பு பொங்குகவே!
மறமாம் காப்புப் பொங்குகவே!
   மதுவாம் சொற்கள் பொங்குகவே!
அறமாம் அணியே! கவிப்பெண்ணே!
   அமுதப் பொங்கல் பொங்குகவே!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு

lundi 13 janvier 2020

போகிப் பொங்கல்


போகிப் பொங்கல் பொங்குகவே!
  
பொல்லா நினைவை நெருப்பிடுக!
   பொய்யைப் புரட்டை நெருப்பிடுக!
செல்லாக் காசாய்க் கிடக்கின்ற
   சிறுமைப் போக்கை நெருப்பிடுக!
எல்லாத் திசையும் உறுஞ்சாதி
   இழிவை அள்ளி நெருப்பிடுக!
மல்லா! வில்லை! என்றமிழா!
   மாட்சி பொங்க நெருப்பிடுக!
  
வெறியாம் நெஞ்சைத் தீயிடுக!
   வெற்றுப் பேச்சைத் தீயிடுக!
பொறியாம் ஆசைக் குப்பைகளைப்
   பொசுக்க வேண்டித் தீயிடுக!
அறிவாம் சுடரை ஏற்றிடவே
   அகஞ்சோ் அழுக்கைத் தீயிடுக!
நிறைவாம் உலகைச் சமைத்திடவே
   நேயம் பொங்கத் தீயிடுக!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
14.01.2020

mardi 15 janvier 2019

உழவனுக்கு முதல் வணக்கம்!


உழவனுக்கு முதல் வணக்கம்!
  
உழவுக்கு முதன்மாலை!
உவந்தாடும் இந்நாளை!
அழகுக்கே அழகென்று போற்று! - உழவன்
அடிதொட்டுப் புவிசுற்றும் சாற்று!
  
தோள்மீது படையேந்தி,
தொண்டாற்றும் நடையேந்தி,
தாள்மீது சேறேந்தி உழுவான்! - உழவன்
தாயென்று வயல்தன்னைத் தொழுவான்!
  
கதிர்பூத்து வருமுன்னே
காகங்கள் எழுமுன்னே
கதிர்காக்க வயல்நோக்கி விரைவான்! - உழவன்
கரங்கொண்டே உலகத்தை வரைவான்!
  
தமிழூட்டும் கண்டாக,
தாயாற்றும் தொண்டாக,
அமிழ்துாட்டும் மண்போற்றி வாழ்வான்! - உழவன்
அவனிக்குத் தலையாகி ஆள்வான்!
  
வன்காளை துணைகொண்டு,
வற்றாத அணைகொண்டு,
இன்காளை பண்பாடிச் செல்வான்! - உழவன்
இருள்வாழ்வைப் போராடி வெல்வான்!
  
காய்கின்ற ஊழ்..கண்டு,
கால்பங்கு கூழ்..உண்டு,
பாய்கின்ற நீர்கட்டி விதைப்பான்! - உழவன்
படர்கின்ற சீர்கட்டி படைப்பான்!
  
உயிர்சிந்தும் செந்நீரில்,
உடல்சிந்தும் முந்நீரில்,
பயிர்முந்தும் உழைப்பேந்தி நிற்பான்! - உழவன்
பண்பாட்டை விழிப்பேந்திக் கற்பான்!
  
நடுவானில் ஒளிவிஞ்சும்!
நரம்பேறி வலிவிஞ்சும்!
இடுமேரில் உழுகாளை போகும்! - உழவன்
இனங்கொண்ட நிரைகாத்து வாழும்!
  
காளைக்குப் பேரிட்டு,
கழனிக்குச் சீரிட்டு,
நாளைக்குப் புகழிட்டு நடப்பான்! - உழவன்
நற்றோளில் உலகத்தைச் சுமப்பான்!
  
ஓராழி சாய்தோடும்!
உழுமாடு பாய்ந்தோடும்!
வேராடிச் சூழ்துன்பம் ஓடும்! - உழவன்
வீட்டுக்குள் நற்காதல் பாடும்!
  
வயல்தேடிக் கால்போகும்!
மனைதேடித் தோள்போகும்!
இயல்தேடி இசைதேடிப் பேசும்! - உழவன்
இடந்தேடிக் குளிர்காற்று வீசும்!
  
என்னினிய ஏரோட்டி!
இவ்வுலகின் தேரோட்டி!
தன்னுடலில் ஓரடை கொண்டு - உழவன்
தரணிக்குச் புரிகின்றான் தொண்டு!
  
நீரில்லை! நிழலில்லை!
நீதிக்கும் இடமில்லை!
சீரில்லை! சிறப்பில்லை வீட்டில்! - உழவன்
செழித்தோங்க வழியில்லை நாட்டில்!
  
நீருக்கும் தடையிட்டு,
நெஞ்சுக்கும் அடையிட்டு,
பேருக்குச் செயலிட்ட போக்கு! - தமிழா!
பிணிநீங்கப் போரிட்டுத் தாக்கு!
  
புலிபோல நின்றோமே!
புயல்போலச் சென்றோமே!
எலிபோல இன்றுன்னை எண்ணல் - தமிழா!
இருள்கொண்டு தாழ்கின்ற இன்னல்!
  
மண்காய்து போனாலும்,
கண்காய்ந்து போனாலும்,
புண்பாய்ந்து செய்கின்ற ஆட்சி! - சுடும்
புகைபாய்ந்து சூழ்கின்ற காட்சி!
  
எங்கெங்கும் கையூட்டு!
எந்நாளும் பொய்யூட்டு!
இங்கங்கும் அவர்போடும் வேடம்! - தீயர்
இழிவோட நீயேற்று சூடம்!
  
நரியாளும் காடாகி,
நரகாளும் நாடாகி,
கரியாளும் அயலாட்சி ஓட்டு! - தமிழா!
கவியாளும் தமிழாட்சி நாட்டு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
15.01.2019