தமிழா...நீ பேசுவது தமிழா
அன்னையைத் தமிழ்வாயால் "மம்மி" என்றழைத்தாய்...
அன்னையைத் தமிழ்வாயால் "மம்மி" என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை "பேபி" என்றழைத்தாய்...
என்னடா தந்தையை "டாடி" என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைக் கொன்றுதொலைத்தாய்...
- உணர்ச்சிக் கவிஞர் காசி
ஆனந்தன்
எது தமிழ்ச்சொல்? எது அயற்சொல்? பாமரத் தமிழர்கள் பலர் தம் தாய்மொழியின்
பெயர் என்ன என்று தெரியாமல் வாழ்வதைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் உங்கள்
தாய்மொழியின் பெயர் என்ன என்று கேட்டால் "தோ.. பேசறமே இதான்.." என்று மண்மணத்தோடு
பதில் கிடைக்கும். தமிழே உலகின் முதன்மொழி என்பதைக் குறித்தும், தமிழே திராவிட
மொழிகளின் தாய் என்பதைக் குறித்தும், தமிழில் கலந்துள்ள அயற்சொற்களைக் குறித்தும்
அவர்கள் அறிந்திலர்.
நன்கு கற்றவர்கள் வாழ்வில் தாய்மொழியாகிய தமிழ் காணாமல் போவதைப்
பார்த்து வருகிறேன். இன்றைய ஊடகங்கள் தாய்க்கொலையை முன்னிருந்து நடத்துகின்றன. ஆங்கிலம்
கற்றுக்கொள்ள விரும்பினால் இன்றைய தொலைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்த்துவந்தால்
போதும், ஆங்கில மொழியைத் தானாக நாம் பேசக் கற்றுக்கொள்ளலாம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் பிறமொழிச் சொற்கள்
கலந்து தமிழ்போலவே உடையணிந்து கொண்டன. தமிழை அழிக்க வேண்டும் என்று செயற்பட்ட மொழி
அழிந்து போனது என்று நான் எண்ணுவதுண்டு.
எந்த மொழியும் அழிந்துபோகக் கூடாது. இரசியாவைக் கட்டமைத்த
இலெனின் அவர்கள் அந்நாட்டில் வாழ்ந்து வந்த மொழிகளைக் காக்கும் வண்ணம் சட்டங்கள்
செய்தார். மக்களுடைய மொழியிலேயே நாம் (அரசு) பேச வேண்டும் என்ற பொன்மொழியை உலக்கு
அளித்து அந்நாட்டு மொழிகளின் உரிமையைப் பாதுகாத்தார்.
"மெல்லத் தமிழினிச் சாகும்" என்ற அடியைப் படித்த
நாம், மெல்லத் தமிழினி வாழும் என்று பாடியும் ஆடியும் வருகிறோம். மகாகவி பாரதியின்
அடிகளை ஆராய்ந்து இன்றைய தமிழின் நிலையை எண்ணிப் பார்த்தோம் என்றால் அடுத்த
தலைமுறைக்குத் தமிழ் இருக்குமா என்ற கேள்வியே எழுகிறது. தாய்மொழியைக் குறித்த
விழிப்புணர்வு தமிழர்களிடம் இல்லவே இல்லை என்று சொல்லலாம். தமிழைச் சொல்லிச்
சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள், வாழ்வார்கள்.
"தாய் மொழி வளராத நாடு ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய் மொழி ஓம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக" என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க உரைக்கின்றார்.
"தாய் மொழியில் பற்றில்லாதவரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்" என்று தந்தை பெரியார் அவர்கள் பகர்கின்றார்.
"தாய்மொழியையும் அதிலுள்ள இலக்கியங்களையும் மதிக்காமல் வேற்று மொழிக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்டவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அளவிற்கு வேறு எந்த நாட்டிலும் இல்லை" என்று தாகூர் மொழிகின்றார்.
தமிழினத்தார் தன் தாய்மொழியைப் பேணுவதை விட அயல்மொழி மீது
ஆசையும் மோகமும் உடையவர்கள். தாம் இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தாயை மறக்கக்
கூடியவர்கள். ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அந்நாட்டின் மொழியை அழித்துவிடு.
பின் அந்நாடு தானாகவே அழிந்துவிடும் என்பர். தமிழர்களே தமிழை அழிக்கும் பகைவராய்
ஆகிவிட்டனர்.
தமிழர்களால், தமிழன்பர்களால், தமிழ்ப் புலவர்களால், தமிழ்
அறிஞர்களால் நடத்தப்படும் மின்வலைப் பூக்களில் தமிழின் நிலை என்ன என்று ஆராய்ந்து
பார்த்தால் 90 விழுக்காடுகள் அழிவிற்கான வழிகளைக் கண்டுணரலாம்.
என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பூக்களில் பிறமொழிச்
சொற்களின் ஆட்சி அதிகமாக இருப்பதைக் கண்டு அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல நான் தயங்கியதில்லை.
நண்பர் துளசி அவர்கள் நடத்தும் இதம் என்ற வலைப்பூவைக்
கண்ணுற்றேன். இதம் என்பது வடசொல் என்பதால் கருத்துரையில் பின் வரும் குறளை எழுதி
விளக்கம் அளித்தேன்.
இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்க
மதுரத் தமிழில் மகிழ்ந்து!
இதம் பிறமொழிச் சொல்
இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு
நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!
மதுரத் தமிழில் மகிழ்ந்து!
இதம் பிறமொழிச் சொல்
இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு
நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
வல்ல கவிஞன்என் வாழ்த்து!
தமிழ்ப் பற்றுடைய நண்பர் துளசி அவர்கள், இதம் என்ற தன் வலையின்
பெயரை "மயிலிறகு" என்று மாற்றி அமைத்துள்ளதை இன்று கண்டு துள்ளிக்
குதித்து மகிழ்ந்தேன். அவருக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
களிக்கின்றேன்.
வலைப்பூக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவது, பதிவுகளில்
கொச்சை மொழியில் எழுதுவது, தேவையின்றி அயற்சொற்களைக் கலந்து எழுதுவது (சந்தோஷப் புன்னகை, நல்ல ட்யூப் லைட் மாதிரி பிரகாசமாயிடுச்சு) இவையனைத்தும்
தாய்க்கொலைக்கு ஒப்பாகும்.
கடல்பறித்துத் தின்றும்! கனல்பறித்துத் தின்றும்!
இடர்வகுத்துத் தீயோர் இருந்தும்! - சுடராக
மின்னும் தமிழின் வியன்வாழ்வை நம்தமிழர்
இன்னும் உணர்ந்தார் இலை!
மேல் படத்தில் எழுதியுள்ள சொல்விற்பனம் என்பது தமிழா?
நாளைய பதிவில் பார்ப்போம்.

