Affichage des articles dont le libellé est வெண்பா. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வெண்பா. Afficher tous les articles

mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026

jeudi 1 janvier 2026

புத்தாண்டு வாழ்த்து 2025

 


உலக உயிர்கள் உவப்புற

ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து

 

அன்பு நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க

இன்பக் கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை

தாங்கிய தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை

ஆங்கில ஆண்டே அருள்!

 

ஒற்றுமை யோங்க உலக உறவோங்க

நற்றுணை நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்

தந்துள மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை

வந்துள ஆண்டே வழங்கு!

 

விண்ணக ஞானம் விளைந்தோங்க, வள்ளலென

வண்ணக மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்

பண்ணகப் பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்

மண்ணக ஆண்டே மகிழ்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

01.01.2026

vendredi 21 novembre 2025

ஓம் ஓம் ஓம்

 


ஓம்.. ஓம்.. ஓம்

 

கலமுடைந்[து] ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்

பலமுடைந்து சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து

சென்றதுபோல் பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

என்றதுமே நீங்கும் இடர்!

 

காக்கும் வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்

தாக்கும்! துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற

கோது..மன நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

ஓதுமனம் காணும் ஒளி! 

 

பொய்யர் உறவால் புழுங்கி மனநொந்தேன்!

மெய்யர் எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி

வாழ்ந்த நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..

ஆழ்ந்த ஒளியால் அறி!

 

திருடும் தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்

உருளும்! உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்

முற்றும் ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..

பற்றும் பரம பதம்!

 

அடியாள் பலர்கொண்டே ஆடிய ஆட்டம்

இடியாய் விழும்நம் மிடமே! - படிபடியாய்

வந்த வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..

தந்த ஒலியே தவம்!

 

பட்ட அடியென்ன? நட்ட வினையென்ன?

சுட்ட நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்

ஆணைத் திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..

ஆனை முகனே அகற்று!

 

வறுமை வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்

கருமை மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை

உளங்கொண்டு பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..

வளங்கொண்டு ஞானம் வழங்கு!

 

பாட்டரசா வென்று பழித்திடுவார்! வீண்வெற்று

வேட்டரசா வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!

ஏட்டரசா! உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..

வீட்டரசா தீராய் வினை!

 

நாடி நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!

கூடிக் குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே

நிற்கின்றேன்! அத்தனையும்  நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..

கற்கின்றேன் உள்ளம் கனிந்து!

 

ஆசையலை சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்

வேசையலை சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்

தங்கும் அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..

தொங்குங் கரங்கொண்டு துாக்கு!

 

எங்குக் குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?

இங்குச் சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு

தடையின்றித் தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..

இடையின்றி வேண்டும் எழுத்து!

 

அம்மைத் தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!

வெம்மை வினைகளை வேரறுப்பாய்! - மும்மை

மலம்போக்கிக் காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..

நலந்தேக்கி ஞானம் நவில்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

27.08.2025

dimanche 15 septembre 2024

கவிக்கோ துரை. வசந்தராசனார்

 


கவிக்கோ துரை. வசந்தராசனார்

71 ஆம் அகவை வாழ்த்து

 

பல்லாண்டு வாழ்க!

 

வண்ணத் தமிழ்காக்கும் பண்ணைத் திருவூரார்

எண்ண மனைத்தும் இனிப்பாகும்! - அண்ணாவின்

பொன்னெறி போற்றும் புகழ்ப்புலவர் வாழியவே

இன்னெறி யாவும் இசைத்து!

 

துாய கவிக்கோ துரைவசந்த ராசனார்

நேய மனத்துள் நிறைந்திருக்கும் - தாயன்பு!

பாட்டரசன் பாடுகிறேன் பல்லாண்டு! காண்கவே

நாட்டரசர் சூட்டும் நலம்!

 

விந்தைமிகு சந்தம் விளையாடும்! எந்நாளும்

சிந்தைமிகு வண்ணம் செழித்தாடும்! - செந்தமிழின்

தொண்டர் கவிக்கோ துரைவசந்த ராசனார்

கண்டார் கவிதைக் களம்!

 

பகுத்தாறிவு வாழ்வும், படிப்பகமும் கொண்டு

தொகுத்தறிவு தந்தார் தொடர்ந்து - மிகுத்தபுகழ்

தோற்றும் கவிக்கோ துரைவசந்த ராசனார்

ஆற்றும் பணியே அழகு!

 

வாழ்க வளத்துடனே! வண்டமிழ்ச் சீருடனே!

சூழ்க நிறைந்து நலமெல்லாம்! - ஏழ்பிறப்பும்

தொன்மைக் கவிக்கோ துரைவசந்த ராசனார்

நன்மை புரிவார் நமக்கு!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

15.09.2024

samedi 7 septembre 2024

யானைமுகன் வெண்பா

 


யானை முகத்தனை வேண்டுதல்!

 

முன்னே இருந்து முழுநலம் தந்துவக்கும்

பொன்னே! புதுத்தேனே! பூமணமே! - என்னே..யுன்

இன்னருள்! இங்கு..நீ என்னை மறந்ததுமேன்?

வன்னிருள் போக்கவே வா!

 

எலியுடை வானத்தை இன்றுடன் மாற்று!

புலியுடை வாகனம் போதும்! - உளியுடன்

வந்து வினையொழிப்பாய்! என்னை மறந்ததுமேன்?

நொந்து கிடக்குமெனை நோக்கு!

 

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் படைத்திட்டேன் நானுனக்கு! - நுாலுமே

இ்ங்கு வடித்திட்டேன்! என்னை மறந்ததுமேன்?

தொங்கு கரங்கொண்டு துாக்கு!

 

வங்கக் கடலருகே வாழ்கின்ற வள்ளலே!

தங்கத் தமிழிட்டுத் தாழ்பணிந்தேன்! -  செங்கதிராய்

எங்கும் ஒளிர்கின்றாய்! என்னை மறந்ததுமேன்?

தங்குந் துயர்போக்கித் தாங்கு!

 

யானை யுருக்கொண்டாய்! பானை வயிறுற்றாய்!

மோனைத் தொடையாக முன்னின்றாய்! - பூனையென

இங்[கி]யான் சுழல்கின்றேன்! என்னை மறந்ததுமேன்?

மங்கிய என்மனம் மாற்று!

 

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

07.09.2024

jeudi 18 février 2021

வெண்பா மேடை - 203

  

வெண்பா மேடை - 203       

 

தலையாகு இயைபு வெண்பா!

 

மீனாடும் கண்ணழகு, விந்தைமொழி, தேனுாற்று!

மானாடும் துள்ளல், மலர்பார்வை, - தேனுாற்று!

மூத்தாடும் கற்பனை மோகத்தின் தேனுாற்று!

பூத்தாடும் புன்னகை..தே னுாற்று!

 

மொழிகாக்க வேண்டும் முதன்மை விழிப்பு!

வழிகாக்க வேண்டும் மதியின் - விழிப்பு!

தளைகாக்க வேண்டும் தமிழ்ப்பா விழிப்பு!

விளைகாக்க வேண்டும் விழிப்பு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

நான்கு அடிகளில் ஈற்றுச்சீர் முற்றும் ஒன்றுவது தலையாகு வெண்பா.  மேலுள்ள  முதல் வெண்பாவில் 'தேனுாற்று' என நான்கு அடிகளிலும் தலையாகு இயைபு பெற்றுள்ளது. 'விழிப்பு'  என்ற இயைபை இரண்டாம் வெண்பா பெற்றுள்ளது.

 

இவ்வாறு அமையும் தலையாகு இயைபு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

18.02.2021

vendredi 4 décembre 2020

வெண்பா மேடை - 199

 

வெண்பா மேடை - 199

 

மங்கல வெண்பா

 

நுால்களை மங்கலச் சொற்களில் தொடங்க வேண்டுமெனப் பாட்டியல் நுால்கள் உரைக்கும். வெண்பாப் பாட்டியல் இரண்டாம் நுாற்பா 19 மங்கலச் சொற்களைக் காட்டும். 

 

சீர்,எழுத்து, பொன்,பூ, திரு,மணி,நீர், திங்கள்,சொல்

கார்,பரிதி, யானை, கடல்,உலகம், - தேர்,மலை,மா,

கங்கை, நிலம்,பிறவும் காண்,தகைய முன்மொழிக்கு

மங்கலமாம் சொல்லின் வகை!

 

சீர் முதலாக நிலம் ஈறாக எண்ணப்பட்ட பத்தொன்பதும் பிறவும் முதன்மொழி யிடத்தே வரக்கூடிய மங்கலச் சொற்கலாம்.

 

பிறவும் என்றதால் - வாழி, மாலை, சங்கு, தார், கவி, கயல், சுடர், முரசு, கவரி, தோகை, நன்று, தாமரை, விளக்கு,  மலர், பழனம், இடபம், செல்வம், ஞாயிறு, புனல், களிறு, அமுதம், புகழ், சீர்த்தி, கீர்த்தி, வேழம், ஆரணம், கடவுள், தீபம், புயல், ஆறு, எழில், மழை, பசுங்கதிர், செஞ்சுடர், பரி, ஆழி, பால், பார்,  ஆகிய சொற்களும் மங்கலச் சொற்களாகும்.

 

மங்கலச் சொல்லின் பொருளைக் குறிக்கும் மற்றொரு சொல்லும் மங்கலச் சொல்லாக ஏற்கலாம். [சீர் - சிறப்பு] [பொன் - பொலம்] [பூ - மலர்] [திங்கள் - நிலவு - மதி] [சொல் - கிளவி - மொழி]

 

இலக்கண விளக்கம் - 771, பன்னிரு பாட்டியல் - 133, 134, நவநீதப் பாட்டியல் - 2, சிதம்பப் பாட்டியல் - 18, தொன்னுால் விளக்கம்  - 285, முத்துவீரியம் - 66, சுவாமிநாதம் - 173, பொருத்த விளக்கம்  - 3 ஆகிய நுால்களில் மங்கலச் சொற்குறித்து நுாற்பாக்கள் உள்ளன.

 

மங்கல வெண்பா

 

நீரோடும் நற்புதுவை! நீடுபுகழ்ச் செந்தமிழின்

தேரோடும் சீர்ப்புதுவை! தென்புதுவை! - பேரோதி

மின்னும் திருப்புதுவை! விஞ்சும் கலைப்புதுவை!

கன்னல் கவியின் கடல்!

 

மங்கல வெண்பாவின் முதல் சொல்லும் ஈற்றுச் சொல்லும் மங்கலச் சொல்லாக அமைய வேண்டும். மேலுள்ள வெண்பா "நீர்" என்ற மங்கலச் சொல்லில் தொடங்கி, "கடல்" என்ற மங்கலச் சொல்லில் நிறைவுற்றது. இரண்டாம் அடியில் நான்கு சீர்களில் ஓரிடத்தில் மங்கலச் சொல் அமைய வேண்டும். மேலுள்ள வெண்பாவின் இரண்டாம் அடியில் "தேர்", "சீர்" என மங்கலச் சொற்கள் வந்தன. மூன்றாம் அடியில் நான்கு சீர்களில் ஓரித்தில் மங்கலச் சொல் வர வேண்டும். மேலுள்ள வெண்பாவில் மூன்றாம் அடியில் "திரு" என்ற மங்கலச் சொல் வந்தது.

 

மங்கல வெண்பாவில் அமங்கலச் சொல்லோ, கருத்தோ வரக்கூடாது.

 

மங்கல நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். [இவ்வெண்பா இலக்கிய உலகிற்கு என்னுடைய புதிய உருவாக்கம்]


பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

04.12.2020