vendredi 14 décembre 2012

உலகம் அழியட்டும் [பகுதி - 1]


உலகம் அழியட்டும் 12.12.2012


காந்தி பிறந்த நன்னாடு!
    கள்ளம்! கபடம்! கையூட்டு!
சாந்தி கூறும் துறவிகளும்
    சாந்தி தேடி அலைகின்றார்!
வாந்தி நாற்றம்! எத்திசையும்
    வளரும் சாதிப் பேயாட்டம்!
ஏந்திச் சுற்றும் இவ்வுலகம்
    இன்றே துாளாய் அழியட்டும்!

நாட்டை ஆளும் தலைவா்கள்
    நரிபோல் சூழ்ச்சி புரிகின்றார்!
ஏட்டை ஆளும் கவிஞா்களும்
    ஏனோ காசுக்கு இரையானார்!
வீட்டை ஆளும் நன்னெறிகள்
    விண்ணைத் தாண்டி மறைந்தனவே!
சூட்டை ஆளும் புலவன்யான்
    சொன்னேன் உலகம் அழியட்டும்!

மக்கள் நலமே மதமாகும்!
    மாக்கள் ஆனார் மதத்தாலே!
சிக்கல் ஆக்கி இவ்வுலகைச்
    சிதைக்கும் கொடுமை தொடா்கிறது!
சொக்கல் காட்டிக் கூா்மதியைச்
    சுட்டி எரிக்கும் பேராசை!
முக்கல் இட்டுச் சுழல்பந்து
    முற்றும் துாளாய் அழியட்டும்!

(தொடரும்)

10 commentaires:

  1. வேதனையின் உச்சத்தில் வரிகள் வலிகளை மறந்து
    புரட்சிக் கணைகளாய்ப் பாய்கிறதே அருமை
    !..அருமை!...சத்தியத்தை சாக்கடையில் புதைக்கும் இவ்வுலகம் நிட்சயம் அழியத்தான் வேண்டும் ஐயா .என் ஆதங்கம் எதுவோ அதை நீங்கள் மறைக்காமல் வெளிக்காட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா!!!!:.......

    RépondreSupprimer
  2. // வாந்தி நாற்றம்! எத்திசையும்
    வளரும் சாதிப் பேயாட்டம்!
    ஏந்திச் சுற்றும் இவ்வுலகம்
    இன்றே துாளாய் அழியட்டும்! //

    உங்களது அறச்சொற்கள் கொண்ட கவிதை எல்லோருடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இவ்வுலகு அழிந்து மீண்டும் தோன்றும் பொழுதாவது சாதி சமயமற்ற உலகமாக மலரட்டும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முத்தான உங்கள் முதல்வருகை! வாழ்த்துகிறேன்
      கொத்தான பூவைக் கொடுத்து!

      இளங்கோ ஐயா என்வணக்கம்!
      இட்ட கருத்திற் கென்நன்றி!
      உளங்கோ பத்தால் பிறந்திட்ட
      ஊற்றே உலகம் அழியட்டும்!
      வளங்கோ வந்து எதிர்த்தாலும்
      வானே இடிந்து விழுந்தாலும்
      களம்போர் கான மறப்பேனோ?
      கருத்தைச் சொல்ல மறுப்பேனோ?

      Supprimer
  3. கோபம் கொப்பளிக்கிறது கவிதையில்.
    தொடர்ந்து கவி மழை பொழியுங்கள்

    RépondreSupprimer
  4. ஏட்டை ஆளும் கவிஞா்களும்
    ஏனோ காசுக்கு இரையானார்!
    ///////////////////
    உண்மைதான் ஐயா

    RépondreSupprimer
  5. இன்றைய அவலங்களை எடுத்துரைத்து அழியட்டும் இவ்வுலகம் என்பதானல் நானும் சொல்கிறேன் அழியட்டும் இவ்வுலகம் சாதி மத பேதமின்றி பொய் திருட்டு கையூட்டு இன்றி ஒரு உலகம் உருவாகட்டும்.

    RépondreSupprimer
  6. அரசியல்வாதிகளின் ஆணவம் அகம்பாவம் அழியும்போதுதான் அது நிகழும்,அருமையான கவிதை தொடருங்கள் ஐயா

    RépondreSupprimer
  7. அய்யா உங்கள் கவிதையில் சமூக அக்கறையின் விளைவாக ஏற்பட்ட கோபம் தெரிகிறது,, அதற்காக உலகம் அழியவேண்டும் என்று சொல்வது மனதுக்கு நெருடலாக உள்ளது. அன்புடன் அப்துல் தயுப்.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      கனியொரு பக்கம் நிற்க
      கனலொரு பக்கம் நிற்க
      தனியொரு மனிதன் உண்ணத்
      தரணியில் இல்லை என்றால்
      இனியொரு விதியைச் செய்வோம்
      இயம்பி கவிஞன் போன்றே
      பனையிரு தோள்கள் ஏந்தும்
      பாவலன் நெஞ்சம் பொங்கும்

      Supprimer
  8. ''..நாட்டை ஆளும் தலைவா்கள்
    நரிபோல் சூழ்ச்சி புரிகின்றார்!
    ஏட்டை ஆளும் கவிஞா்களும்
    ஏனோ காசுக்கு இரையானார்!..''

    தூசுக்குச் சமனாகும் மனிதர்
    ஏசுவிற்கும் இங்கு வேலையின்றி
    மாசு நிறைக்கிறார் மலையாக...

    மிகப் பிடித்துள்ளது. நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer