vendredi 7 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 27




ஏக்கம் நுாறு [பகுதி - 27]

இனம்புரியாப் பேரின்பம்! கன்னி யுன்றன்
     இல்லிருக்கும் தெருவினிலே நடந்து சென்றால்!
சினம்புரியாப் பொங்கிவரும் நிலையை மாற்றிச்
     சிந்தனையை அடைகாக்கும்! பூத்தே ஆடும்
வனம்..புரியாத் தடுமாறும் உன்னைக் கண்டு!
     வரும்பாதை மகிழ்வேந்தும்! மயங்கும் காற்று!
மனம்புரியாப் புத்துலகில் பறந்து சுற்றும்!
     மலா்மழையில் குளித்தாடும்! வளரும் ஏக்கம்! 96

தொலைபேசி வழியாகச் சூடும் முத்தம்
     தொடா்நாளைப் பசுமையுடன் படரச் செய்யும்!
சிலைபேசிச் சிரிக்கிறது! மின்னும் வண்ண
     சித்திரமும் நடக்கிறது! என்னை நாடி
வலைவீசி இருமீன்கள் ஆடும் ஆட்டம்
     வசந்தத்தின் வரவேற்பு! உயிர்கள் ஒன்றிக்
கலைபேசி! கதைபேசிக் கருத்தைக் கவ்வும்
     கவிபேசிக் களித்திடவே ஏங்கும் நெஞ்சே! 97

கள்ளமெனப் புகுந்ததடி ஏக்கம்! என்னைக்
     கவிஞனென ஆக்குதடி ஏக்கம்! என்றன்
உள்ளனென ஆனதடி ஏக்கம்! ஒன்றி
     உயிர்கலந்து ஓங்குதடி ஏக்கம்! பாயும்
வெள்ளமெனப் பொங்குதடி ஏக்கம்! கன்னல்
     விருந்தாக இனிக்குதடி ஏக்கம்! மேடு
பள்ளமென இருந்திட்ட இதய வீட்டைப்
     பசுந்தமிழால் நிரப்புதடி ஏக்கம்! ஏக்கம்! 98

6 commentaires:

  1. தொலைபேசி வழியாகச் சூடும் முத்தம்
    தொடா்நாளைப் பசுமையுடன் படரச் செய்யும்!

    அனுபவித்து இருக்கிறேன் ஐயா..

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      அனுபவித்த இனிமையினை விருத்தப் பாட்டில்
      அணியொளிர அளித்துள்ளேன்! உண்மைக் காதல்
      கணுபதித்த கரும்பாக இனிக்கும் என்பேன்!
      கண்ணுக்குள் குடிபுகுந்து கமழும் என்பேன்!
      மனுகொடுத்துப் பெறுவதன்று காதல்! ஒன்றி
      மனம்பதித்து வளா்ந்திடும் காதல்! வெற்றித்
      தனுகொடுத்த திருராமன் காதை சொன்ன
      தமிழ்க்கம்பன் தண்ணருளால் தந்தேன் ஏக்கம்!

      Supprimer
  2. உங்களுடைய வரிகள் சினிமா பாடல்களைப்போல் மிக அழகான எழுத்துநடையில் இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுவை..தேன் உங்கள் கருத்துக்கள்!
      சுவைத்தேன்! சுவைத்தேன்! உயிர்குளிர!
      இவை..தேன் ஊறும் கனியென்றே
      இதயம் ஏந்தும் தமிழ்ச்சொற்கள்!
      அவை..தேன் பருக அருங்கவிகள்
      அளிக்கும் கவிஞன்! மின்வலையில்
      அவள்..தேன் ஊறும் ஊற்றேன்றே
      ஆசை ஏக்கம் பெருகிடுமே!

      Supprimer
  3. எண்சீர் விருத்தம் ஏக்கத்திற்கு அழகு சேர்க்கிறது.அருமை.
    த.ம. 3

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விருத்தக் கம்பன் வியன்நுாலை
      விரும்பி விரும்பிக் கற்றதனால்
      பொருத்த மாகப் பாட்டெழுதும்
      புலமை எனக்கு வாய்த்ததுவோ!
      வருத்தம் சூழும் பொழுதெல்லாம்
      வசந்தம் சூடும் தமிழன்னை!
      கருத்தும் கமழ வலையுலகைக்
      கலக்கும் முரளி வாழியவே!

      Supprimer