Affichage des articles dont le libellé est வெண்டாழிசை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வெண்டாழிசை. Afficher tous les articles

vendredi 15 août 2025

வெண்டாழிசை

 


ஒரு பொருண்மேல் ஐந்து அடுக்கி

நிரையொன்றாசிரியத் தளையான் வந்த

நேரிசை வெண்டாழிசை

 

இளையவள்… இனியவள்...

 

இலைபுரி பசுமையை இடுபவள்! இளையவள்!

கொலைபுரி விழிகளின் குலமகள்! - மலைமகள்!

கலைப்புரி அவளுடைக் கழுத்து!

 

கருங்குழல் உடையவள்! கருணையின் கடலவள்!

அருங்குறள் நெறியினை அணிந்தவள்! - திருமகள்!

ஒருகுறை இனியிலை உயிர்க்கு!

 

சிலையென மிளிர்பவள்! செழுமையைத் தருபவள்!

தலையெனத் தமிழினைத் தரித்தவள்! - கலைமகள்!

மலையெனக் கனவுகள் வரும்!

 

அமுதென இனிப்பவள்! அழகொளிர் பொழிலவள்!

குமுதென மலர்ந்தவள்! குயிலவள்! - தமிழ்மகள்!

எமக்கினி வருமிடர் இலை!

 

கனியவள்! கவியவள்! கலையவள்! களிப்பு..அவள்!

பனியவள்! பயிரவள்! பளிங்கவள்! - இனியவள்!

இனி..எவள் அவளிணை இயம்பு?

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

15.08.2025


வெண்டாழிசை

 

ஒரு பொருண்மேல் ஐந்து அடுக்கி

நிரையொன்றாசிரியத் தளையான் வந்த

இன்னிசை வெண்டாழிசை

 

விடுதலை

வியப்புறு வகைதனில் விடுதலை திருநிலம்

உயிர்ப்புற உழைத்தவர்! உரிமையை யளித்தவர்!

பயிரென அளித்தனர் பயன்!

 

படுகொடு பல..பல! கொடுநிலை பல..பல!

நடுநிலை துளியிலை! நசித்திடும் துயர்நிலை!

விடுதலைக் குழைத்தனர் விழைந்து!

 

உயிர்தமை அளித்தனர்! உடைமையை இழந்தனர்!

பயிர்தமைத் துறந்தனர்! படர்குடி மறந்தனர்!

அயலவர் அகன்றனர் அறி!

 

கொலைவெறி பிடித்தவர் குடிகளை அழித்தனர்!

தலைவெறி வெளிப்படத் தடைகளை விதித்தனர்!

மலைவெறி விடுதலை வணங்கு!

 

கொடியினைத் சுமந்தனர்! தடியடி யடைந்தனர்!

இடியினை எதிர்த்தனர்! இரவெலாம் உழைத்தனர்!

விடிவினைப் படைத்தனர் விழித்து!

 

பாட்டரசர் கி. பாரதிதா
சன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

15.08.2025

lundi 11 août 2025

வெண்டாழிசை

 


நேரொன்றாசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை

 

கடமை மறவர் காமராசர்

 

கல்வி தந்த காம ராசர்

சொல்லித் தந்த தொண்டு - வல்ல

நெல்லி யென்றே நல்கு!

 

கன்னல் நெஞ்சர் காம ராசர்

நன்னீர் தந்த நல்லார்! - அன்பே

என்றும் பாடி ஏத்து!

 

கார்வான் வண்ணக் காம ராசர்

சீர்வான் கண்ட செல்வர்! - பேர்தான்

பார்வான் ஆளும் பாடு!

 

கட்டித் தங்கம் காம ராசர்

பட்டி தொட்டி பாடும்! - சிட்டே

கொட்டிக் கும்மி கூறு!

 

கண்ணில் உள்ள காம ராசர்

மண்ணில் தந்த மாண்பு! - பெண்ணே

எண்ணி யெண்ணி ஏத்து!

 

கஞ்சி தந்த காம ராசர்

நெஞ்சுக் குள்ளே நின்றார்! - விஞ்சிக்

கொஞ்சும் இன்பக் கூத்து!

 

கட்சி தன்னில் காம ராசர்

வெட்சி மாலை இட்டார்! - சிட்டே  

கட்டித் தந்தார் காப்பு!

 

காட்சிக் கின்பர் காம ராசர்

ஆட்சிக்[கு] அச்சாய் ஆனார்! - நாட்டின்

மாட்சி அண்ணல் வாழ்வு!

 

காக்கும் தெய்வம் காம ராசர்

பூக்கும் சோலை போற்றும்! - நோக்கும்

வாக்கும் நல்கும் வாழ்வு!

 

கண்ணன் போன்றே காம ராசர்

எண்ணம் யாவும் இன்பம்! - மண்ணை

வண்ணம் ஆக்கும் வாழ்த்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

11.08.2025

 

mardi 7 août 2018

வெண்பா மேடை - 96


வெண்பா மேடை - 96
  
கொம்பில்லா வெண்பா!
  
சித்தமுறும் எண்ணம் சிறப்புறும்! ஈசனிடம்
நித்தமுறும் எண்ணம் நிழல்தரும்! - சத்தியம்!
பாடும் திறன்கூட்டும்! பண்ணின் அமுதுாட்டும்!
ஓடும் உயிருறும் ஊழ்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
கொம்புடை எழுத்துகளும் [கெ, ஙெ, செ], கொம்புச்சுழி எழுத்துகளும் [கே, ஙே, சே....] முன்கொம்பு பின் கொம்புக்கால் எழுத்துகளும் [கௌ, ஙௌ, சௌ...] இரட்டைக்கொம்பு எழுத்துகளும் [கை, ஙை, சை...] ஆகிய எழுத்துகள் வாரா. இவ்வெழுத்துகள் இன்றி வரும் பாடலைக் கொம்பில்லாப் பாட்டென்பர்.
  
விரும்பிய பொருளில் 'கொம்பில்லா வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து கொம்பில்லா வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.08.2018

mercredi 11 juillet 2018

வெண்பா மேடை - 77


வெண்பா மேடை - 77
  
வெவ்வேறு பொருள் பற்றி அடுக்கி வந்த வெண்டாழிசை
  
1.
இயற்கையைப் போற்றல், இவ்வுலகைக் காக்கும்
வயல்களை வாழ்த்தல், வளமுடன் வாழ
அயல்மொழி அகற்றல் அழகு!
  
2.
மரங்களைச் சேர்ப்போம் மாமழை வேண்டியே!
உரங்களைச் சேர்ப்போம் உழுமண் செழிக்கவே!
கரங்களைச் சேர்ப்போம் கணித்து!
  
3.
தொண்டு புரிந்திடுவோம்! தோழமை காத்திடுவோம்!
நண்டு செயலொழிப்போம்! நற்றமிழை நாளும்
மொண்டு குடிப்போம் முந்து!
  
4.
காவிரித் தாயே! கண்ணீர் துடைத்திடவே
தாவி..நீ வந்திடுவாய்! தண்டமிழ்ப் பாவலன்
கூவி அழைத்தேன் கொதித்து!
  
5.
கற்ற கல்வியைக் காதல் புரிந்திடவும்
உற்ற கலையை உயிராய் உவந்திடவும்
நற்றவ நாதனை நாடு!
  
6.
சாதி வளர்ப்பாரைச் சமயம் வெறியாரை
நீதி குலைப்பாரை நிலமெங்கும் பொய்ம்மையை
ஓதித் திரிவாரை ஓட்டு!
  
7.
கையூட்டு ஒன்றைக் கடமையென எண்ணிடுவார்!
மையூட்டும் வன்கருமை மனமுடையார் காண்பாரோ
தையூட்டும் இனிமையைத் தான்?
  
8.
நீட்டென்னும் தேர்வுள் நிலங்கொள்ளாச் சதியினைக்
கூட்டிக் குளிர்காயும் குள்ள நரிகளை
ஓட்டி ஒழிப்போம் உடன்!
  
9.
போலித் துறவிகள் பூச்சூடித் திரிக்கிறார்!
பாலின் நிறமாகப் பளபளப்பார்! அன்னவர்தம்
காலில் விழுவதோ காப்பு?
  
10.
வாக்கு வரங்கேட்டு வாசல் வந்தவர்கள்
துாக்குக் கயிறைச் சுழற்றுகிறார்! தீயவர்கள்
ஆக்கும் அரசை அகற்று!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் வெண்டாழிசை அமையும்.
    
விரும்பிய வெவ்வேறு பொருட்களுடன் பலவடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்டாழிசைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
குறிப்பு
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்று அடிக்கு வருதல் வெள்ளொத்தாழியை ஆகும்.
  
தளை தட்டாமல் சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மீது மூன்றுக்கு மேல் வந்தால் அவைகளைச் சிந்தியல் வெண்பா என்று உரைத்தல் வேண்டும்.
  
தளை தட்டி, வேற்றுறளை அருகி வருவது வெண்டாழிசை யாகும்.
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.07.2018

lundi 9 juillet 2018

வெண்டாழிசை - 5


வெண்பா மேடை - 76
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வந்த வெண்டாழிசை
  
மலர்விழியே!
  
1.
ஏங்கும் நினைவுகளை ஏவும் மலர்விழியே!
ஓங்கும் கனவுகளை ஊட்டுகிறாய்! வாடுகிறேன்
வீங்கும் ஆசை விளைந்து!
  
2.
வண்ணத் தமிழமுதை வழங்கும் மலர்விழியே!
எண்ணம் இனிக்க எழுதுகிறாய்! வாடுகிறேன்
விண்ணிகர் ஆசை விளைந்து!
  
3.
என்மேல் அம்புகளை ஏவும் மலர்விழியே!
பொன்மேல் பதித்த புதுமணியே! வாடுகிறேன்
உன்மேல் ஆசை விளைந்து!
  
4.
வேல்கொண்டு தாக்கும் விந்தை மலர்விழியே!
சூல்கொண்டு பாக்கள் சுரக்குதடி! வாடுகிறேன்
மேல்கொண்டு ஆசை விளைந்து!
  
5.
கூர்கொண்டு தாக்கும் கோல மலர்விழியே!
ஏர்கொண்டு என்னை உழுகின்றாய்! வாடுகிறேன்
வேர்கொண்டு ஆசை விளைந்து!
  
6.
வாள்கொண்டு தாக்கும் வல்ல மலர்விழியே!
நீள்கொண்டு தாக்கும் நிறையழகே! வாடுகிறேன்
வேள்கொண்ட ஆசை விளைந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் மூன்றுக்கு மேல் வெண்டாழிசை அமையும்.
  
விரும்பிய பொருளில் ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.07.2018

samedi 12 mai 2018

வெண்டாழிசை - 4


வெண்பா மேடை - 69
  
நிரையொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
விழியென மொழியினை விரிவுரை எழுதுவாய்!
பொழிலென மொழியினைப் புகழுவாய்! - அழிவிலா
அழகெனத் தமிழினை அணி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
தமிழ்மொழி இனிதெனத் தரையெலாம் மொழிவதை
இமியுமே நினைத்திடா திருப்பவர் முகமதில்
உமிழ்வதும் உயர்வென உணர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான கருவிளம் மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நிரையொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் பெறும். வெண்பாவின் ஈறுபோல் மலர் அல்லது பிறப்பு என்ற வாய்பாட்டில் முடியும்..
  
மூன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
பண்பின் உயர்வை வலியுறுத்தி நிரையொன்று ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
11.05.2018

jeudi 10 mai 2018

வெண்டாழிசை - 3



வெண்பா
மேடை - 68
  
நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
குன்றின் வேலன் கோல யாப்பை
ஒன்றிக் கற்க ஊட்டி - நின்றான்
நன்றி சொன்னேன் நான்!
  
இன்னிசை வெண்டாழிசை
  
உள்ளம் தன்னில் உண்மை ஓங்க
வெள்ளம் போன்று மேவும் நன்மை!
பள்ளம் நீங்கும் பார்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீரான தேமா மட்டும் பயின்று வரும் மூன்றடிப் பாடல். [நேரொன்றிய ஆசிரியத் தளை மட்டுமே அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் அடியாகும். வெண்பாவின் ஈறுபோல் நாள் அல்லது காசு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
அன்பின் அமுதை வலியுறுத்தி நேரொன்றாசிரியத் தளையால் வந்த வெண்டாழிசையை, நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.05.2018

வெண்டாழிசை - 2



வெண்பா
மேடை - 67
  
ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசை
  
நேரிசை வெண்டாழிசை
  
எங்கும் இன்றமிழ் இசைப்பீர்! இன்பம்
பொங்கும் பாக்களைப் புனைவீர்! - தங்கும்
மங்கலம் மணக்குமே மலர்ந்து!
  
முன்னைத் தோன்றிய முத்தமிழ் மொழியை!
உன்னைக் காத்திடும் ஒளியை! - என்றும்
அன்னை அன்பென அருந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இன்னிசை வெண்டாழிசை
  
பொங்கும் இனிமை பூத்துக் குலுங்கும்
எங்கள் தமிழாம் இணையிலா மொழியைச்
செங்கோல் செலுத்திடச் செய்
  
எண்ணும் எழுத்தும் இருவிழி என்றே
மண்ணில் எண்ணி மாண்பாய்க் கற்றோர்
உண்ணும் உணவே உணவு.
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஆசிரிய உரிச்சீர்கள் [தேமா, புளிமா, கூவிளம் கருவிளம்] வந்து பயிலும் மூன்றடிப் பாடல். [ஆசிரியப்பாவில் வந்துறும் நேரொன்று ஆசிரியத் தளையும், நிரையொன்று ஆசிரியத் தளையும், இயற்சீர் வெண்டளையும் கலந்து இப்பாடல் அமையும்]
  
முதல் இரண்டடிகள் நாற்சீர் அடிகள். ஈற்றடி முச்சீர் ஆகும். வெண்பாவின் ஈறுபோல் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும்.
  
முன்றடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
  
ஒற்றுமையை வலியுறுத்தி ஆசிரியத் தளையான் வந்த வெண்டாழிசையை நேரிசையுள் ஒன்றும் இன்னிசையுள் ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.05.2018