jeudi 6 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 26]




ஏக்கம் நுாறு [பகுதி - 26]

பூங்கொடிகள் ஒன்றாகக் கூடிப் பேசிப்
     புலம்பினவே! பொன்மகளின் கொடியைக் கண்டு!
மாங்கிளிகள் ஒன்றாகக் கொஞ்சிப் பேசி
     மயங்கினவே! மாதவளின் இதழைப் பார்த்து!
தேங்கனிகள் ஒன்றாகக் குவிந்து பேசித்
     தேம்பினவே! தேவியவள் மொழியைக் கேட்டு!
தீங்கவிகள் தருகின்ற சொற்கள் யாவும்
     திரண்டனவே சீருரைக்க! ஏங்கும் நெஞ்சே! 94

காலணிந்த கொலுசுக்குச் சொர்க்க முண்டு!
     கையணிந்த மின்வளையல் மோட்சம் காணும்!
தோலணிந்த ஆடைக்கு மீண்டும் மண்ணில்
     தோழியெனத் தோன்றுமுயா் வாழக்கை மேவும்!
வேலணிந்த கண்களுக்கே அழகு செய்த
     வியன்கருமைக் கோலுக்குப் பிறப்பே இல்லை!
மாலணிந்த மலா்மகளாய், அவளை யானும்
     மனமணிந்து மகிழ்ந்திடவே ஏங்கும் நெஞ்சே! 95

4 commentaires:


  1. தெள்ளுகின்ற தீந்தமிழில் கவிதன்னை ஈந்தே
    தினம்தோறும் படைக்கின்ற கவியுலக வேந்தே
    அள்ளுகின்றீர் நம்மவரின் உள்ளமதை நன்றே
    அகமாரப் பாராட்டி மகிழ்கின்றேன் இன்றே
    உள்ளுகின்ற நிலைதானே உவமைகளும் இங்கே
    உணர்விற்கு விருந்தாகும் சொற்களது பங்கே
    துள்ளுகின்ற ஓசைநயம் சுவைமேலும் சேர்க்கும்
    தொன்மைமிகு தமிழுக்கு அணியாக ஆர்க்கும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவா் அளித்த புகழுரையில் நன்றே
      வளரும் கவிதை வளம்!

      Supprimer
  2. காலணிந்த கொலுசுக்குச் சொர்க்க முண்டு!
    கையணிந்த மின்வளையல் மோட்சம் காணும்!
    தோலணிந்த ஆடைக்கு மீண்டும் மண்ணில்
    தோழியெனத் தோன்றுமுயா் வாழக்கை மேவும்!


    ஆஹா! எவ்ளோ அற்புதமான வரிகள், இந்த வரிகள் மட்டும் இல்லை எல்லாவரிகளையும் ரசித்தேன். தொடருங்கள் பின்தொடர்ந்து வருகிறேன்.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகாய்க் கருத்தெழுதி என்னகம் சோ்ந்தீா்!
      விழுதாய் வலிமை விளைத்து!

      Supprimer