Affichage des articles dont le libellé est விருத்த மேடை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est விருத்த மேடை. Afficher tous les articles

lundi 6 avril 2026

விருத்த மேடை - 104

 

விருத்த மேடை  - 104

 

அறுசீர் விருத்தம்

[குறிலீற்றுமா+கூவிளம்+மா+விளம்+விளம்+மா]

 
பொருவ னார்புரி நுாலர்

…… புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

…… வருவது மில்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்தும்

…… திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவ னார்அடி யாரை

…… ஊழ்வினை நலியவொட் டாரே!

 

[சுந்தரர் தேவாரம் - 7995]

 

வாக்கை விற்றிடும் மக்கள்!

…… வந்திடும் நடிகர்பின் கூட்டம்!

நாக்கை நன்முதல் ஆக்கி

…… நரியெனச் சுற்றிடும் தலைவர்!

காக்கைக் கூட்டினில் குயில்போல்

…… கட்சியில் கூட்டுறும் சூதர்!

போக்கை யெண்ணியே வாடிப்

…… புனைந்துள பாப்பயன் தருமோ?

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் சீர் குறிலீற்றுமா, இரண்டாம் சீர் கூவிளம், மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் மா, நான்காம் சீரும் ஐந்தாம் சீரும் விளம் என ஓரடி அமையும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று நான்காம் சீர்கள் மோனையுறும். விளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வருதலும் உண்டு.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

dimanche 5 avril 2026

விருத்த மேடை - 103

 

விருத்த மேடை  - 103

 

அறுசீர் விருத்தம்

[முதல் நான்கு சீர்கள் வெண்டளை+மா+தேமா]

 
மறையின் மணந்தாரை வன்பரதர்

……… பாக்கத்து மடவார் செங்கை

இறைவளைகள் துாற்றுவதை ஏழையம்

……… எங்ஙனம்யாங்[கு] அறிகோம்? ஐய!

நிறைமதியும் மீனும் எனஅன்னம்

……… நீள்புன்னை அரும்பிப் பூத்த

பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்பல்

……… ஊதும் புகாரே எம்மூர்!

 

[சிலப்பதிகாரம், கானல் வரி - 29]

 

கல்வித் தகத்தால் திரைசூழ்

……… கடற்காழிக் கவுணி சீரார்

நல்வித் தகத்தால் இனிதுணரும்

……… ஞானசம் பந்தன் எண்ணும்

சொல்வித் தகத்தால் இறைவன்

……… திருநா ஏத்து பாடல்

வல்வித் தகத்தான் மொழிவார்

……… பழியில்இம் மண்ணின் மேலே!

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 2255]

 

பெருமை

 

பெண்ணின் பெருமையைப் பேணிப் புகழ்ந்திடப்

……… பெருகும் சீரே!

மண்ணின் பெருமையை வாழ்த்தி மகிழ்ந்திட

……… மணக்கும் தாரே!

எண்ணின் பெருமையை ஏத்தித் தெளிந்திட

……… ஏந்தும் ஊரே!

பண்ணின் பெருமையைப் பாடிக் களித்திடப்

……… படரும் பேரே!

 

[பாட்டரசர்] 10.04.2026

 

முதல் நான்கு சீர்கள் வெண்டளையில் அமையும். ஐந்தாம் சீர் மாச்சீர் ஆகும். ஆறாம் சீர் தேமாவாகும். இவ்வமைப்பிலேயே நான்கடிகள் வரும். நான்கடிகள் ஓரெதுகை பெறும். ஒன்று ஐந்தாம் சீர்கள் மோனையுறும்.  

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

10.04.2026

samedi 4 avril 2026

விருத்த மேடை - 102

 

விருத்த மேடை  - 102

 

அறுசீர் விருத்தம்

[மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய்]

 
பேரார் மதமா உரிவை போர்த்துப்

…… பொடியணி மேனியனாய்க்

காரார் கடலின் நஞ்சம் உண்ட

…… கண்ணுதல் விண்ணவனுார்

பாரார் வைகைப் புனல்வாய்ப் பரப்பிப்

…… பண்மணி பொன்கொழித்துச்

சீரார் வாரி சேர நின்ற

…… தென்திருப் பூவணமே

 

[திருஞானசம்பந்தர் தேவாரம் - 690]

 

நான் பிறந்த நகர்

 

நேராம் பாதை நெஞ்சைக் கவரும்

…… நிறையெழில் பூத்தொளிரும்!

சீராம் தமிழைச் சிந்தைக் கூட்டில்

…… சிறப்புறக் காத்தொளிரும்!

கூராம் அறிவால் கொள்ளை தீட்டிக்

…… குணநலங் கோத்தொளிரும்!

காராம் மழைபோல் கவிதை பொழியும்

…… கனித்தமிழ் நற்புதுவை!

 

[பாட்டரசர்] 04.04.2026

 

இந்த அறுசீர் விருத்தம் மா+மா+மா+மா+விளம்+கூவிளங்காய் என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.

 

ஆறாம் சீர் கூவிளங்காய் வரும் இடத்தில் புளிமாங்காய்ச் சீரும், தேமாந்தண்பூச் சீரும் எங்கோ ஓரிடம் வருதலும் உண்டு. [எழுத்து எண்ணிக்கையில் கூவிளங்காய்போன்று ஒற்று நீக்கி நான்கு எழுத்துக்களைப் புளிமாங்காயும் தேமாந்தண்பூவும் பெற்றுள்ளன]

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

04.04.2026

samedi 21 mars 2026

விருத்த மேடை - 101

 


விருத்த மேடை  - 101

 

கட்டளை அறுசீர் விருத்தம்

[நேர் : 19 எழுத்து, நிரை : 20 எழுத்து]

 

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச்

……. சங்கொடு சக்கரம்வில்

ஒண்மை யுடைய வுலகையொள் வாள்தண்டு

…… கொண்டுபுள் ளூர்ந்துலகில்

வன்மை யுடைய அரக்கர் அசுரரை

…… மாளப் படைபொருத

நன்மை யுடையவன் சீர்பர வப்பெற்ற

…… நானோர் குறைவிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

குறைவில் தடங்கடல் கோளர வேறித்தன்

…… கோலச்செந் தாமரைக்கண்

உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த

…… ஒளிமணி வண்ணன்கண்ணன்

கறையணி மூக்குடைப் புள்ளைக் கடாவி

…… அசுரரைக் காய்ந்தவம்மான்

நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்

…… யானொரு முட்டிலனே!

 

[நம்மாழ்வார், திருவாய்மொழி]

 

இல்லம் இனிக்க இளமை செழிக்க

…… இளையவள் வந்திடுவாள்!

வெல்லம் இனிக்க விருந்து மணக்க

…… வியன்கவி தந்திடுவாள்!

உள்ளம் இனிக்க உறவு கொழிக்க

…… உயர்மனை காத்திடுவாள்!

செல்லம் அவளின் சிறப்பை யுரைக்கச்

…… செகத்தினில் சொல்லிலையே!

 
[பாட்டரசர்] 20.03.2026

 

ஓரடியில் ஐந்து சீர்களைப் பெற்றுவரும் கட்டளைக் கலித்துறை இலக்கணத்தை ஒத்து, ஓரடியில் ஆறு சீர்களைப் பெற்றுவரும் கட்டளை அறுசீர் விருத்தம் இது. நேரசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 19 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் பாடல் அடிக்கு 20 எழுத்துக்களையும் பெறும்.  ஒவ்வோர் அடியும் வெண்டளை பெறும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டளை பார்க்க வேண்டியதில்லை. அடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் நான்கு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 6 ஆம் சீர் இடத்தில் மாங்கனியும், மாந்தண்பூ ஆகிய சீர்கள் அருகி வரும். மேலே இரண்டாம் விருத்தத்தில் தேமாந்தண்பூ  [வண்ணன்கண்ணன்] வந்துள்ளதைக் காண்க.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

20.03.2026

dimanche 15 mars 2026

விருத்த மேடை 100

 


விருத்த மேடை  - 100

 

அறுசீர் விருத்தம்

 

கட்டளை விருத்தம்

 

மற்றிருந் தீர்கட் கறியலாகா

………..மாதவன் என்பதோர் அன்புதன்னை

உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்

………..ஊமைய ரோடு செவிடர்வார்த்தை

பெற்றிருந் தாளை ஒழியவேபோய்ப்

………..பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி

மற்பொருந் தாமல் களமடைந்த

………..மதுரைப் புறத்தென்னை உய்திடுமின்

 

[ஆண்டாள், நாச்சியார் திருமொழி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 617]

 

கலைமகள் தாயே! கவிக்கடலே!

………..கடையன் எனக்கும் அருள்தருவாய்!

தலைமகள் ஆன தமிழணங்கின்

………..தாள்கள் அளிக்கும் பொருள்தருவாய்!

அலைமகள் ஆகத் தொடர்ந்துவரும்

………..ஆக்கஞ் சிறக்கத் துணைபுரிவாய்!

மலைமகள் வன்மை மனமடைய

………..மலர்கள் துாவி யுனைத்தொழுதேன்!

 

[பாட்டரசர்] 13.03.2026

 

எழுத்தெண்ணிக்கை ஒன்றி வரும் பாடலைக் கட்டளைப் பெயரிட்டுச் சொல்லப்படும். மேலுள்ள அறுசீர் விருத்தத்தில் நிரையில் தொடங்கும் அரையடியில் 11 எழுத்துக்கள் வரும். நேரில் தொடங்கும் அரையடியில் 10 எழுத்துக்கள் வரும். ஒவ்வோர் அரையடியும் வெண்டளை பெறும். அரையடியின் ஈற்றுச்சீர் விளங்காயாக வரும். முதல் இரு சீர்களில் விளங்காய் வராது. விளங்காய் வரும் 3 ஆம் சீரிலும், 6 ஆம் சீரிலும் மாந்தண்பூ ஆகிய நாலசைச் சீர்கள் அருகி வரும்.

 

நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் நான்காம் சீரும் மோனையுறும்.

 

விரும்பிய தலைப்பில் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

14.03.2026

dimanche 5 mars 2023

சந்தக் கலிவிருத்தம் - 8


 

விருத்த மேடை - 91

 

சந்தக் கலிவிருத்தம் - 8

 

தனதன+தனதன்னா+தனதன+தனதன்னா

[4+6+4+6 சந்த மாத்திரை]

 

பணிமொழி கடவாதான் பருவரல் இகவாதான்

பிணியுடை யவனென்னும் பிரிவினன் விடைகொண்டான்

அணியிழை மயிலோடும் ஐயனும் இளையோனும்

திணிமர நிறைகானில் சேணுறு நெறிசென்றார்.

 

[கம்பன், அயோத்தி. குகப் படலம் - 28]

 

தனதன+தனதன்னா+தனதன+தனதன்னா என்ற அமைப்புடைய பாடல் இது. முதற்சீரும் மூன்றாம் சீரும் 4 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதன, தந்தன, தானன  என்ற சந்தங்களைப் பெறும்.

 

இரண்டாம் சீரும் நான்காம் சீரும் 6 சந்த மாத்திரை பெறும். இவ்விடங்களில் தனதன்னா, தனதானா, தனதான, தனதன்ன, தந்தான, தந்தான, தந்தானா முதலிய சீர்கள் வரும். இவை இறுதியில் ஒற்றுப் பெற்றும் வரும். தனதன்ன, தந்தான என்பவை 5 மாத்திரைச் சீர்கள் என்றாலும் அடியிறுதியிலும், அரையடி இறுதியிலும்  வருவதால் சந்த இலக்கணப்படி 6 மாத்திரை பெறும். மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

கனிமொழி வருகின்றாள்! கணைகளை விடுகின்றாள்!

பனிமொழி பொழிகின்றாள்! பசுமையை யிடுகின்றாள்!

தனிமொழி தருகின்றாள்! தமிழிசை புனைகின்றாள்!

நுனிமொழி மதுவென்பேன்! நனிமிகு சுவையென்பேன்!

 

[பட்டரசர்]

 

இன்மொழி தருவாயே! இசையென வருவாயே!

நன்மொழி அணிவாயே! நலமென இணைவாயே!

பொன்மொழி புனைவாயே! புவிமகள் இணைநீயே!

என்மொழி அறிவாயே! இறையென அருள்வாயே!

 

[பட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

05.03.2023

vendredi 10 février 2023

சந்தக் கலிவிருத்தம் - 6


 

விருத்த மேடை - 89

 

சந்தக் கலிவிருத்தம் - 6

 

தந்தன + தானம் + தந்தன + தானம்

[ஒவ்வொரு சீரும் 4  சந்த மாத்திரை]

 

எண்ணின கோடிப் பல்படை யாவும்

மண்ணுறு காவல் திண்மதில் வாயில்

வெண்ணிற மேகம் மின்னினம் வீசி

நண்ணின போல்வ தொன்னகர் நாண

 

[கம்பன், யுத்த. மாயா சீதை - 20]

 

இதில் தந்தன வரும் இடங்களில் தாதனவும் வரும். தானம் வரும் இடங்களில் தான, தன்ன, தன்னா, தன்னம் ஆகியனவும் வரும். இப்பாடலில் வருவன எல்லாம் 4 சந்த மாத்திரைச் சீர்களே. மோனை 1, 3 ஆம் சீர்களில் அமையும்.

 

சீர்மிகு பாடல் செம்மொழி சூடும்!

பார்மிகு ஞானப் பண்ணிசை பாடும்!

தார்மிகு வாசம் தண்ணுரை வீசும்!

வேர்மிகு போலப் பேர்மிகு காணும்!

 

[பாட்டரசர்]

 

மேற்கண்ட சந்தக் கலிவிருத்தம் ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

10.02.2023