Affichage des articles dont le libellé est வலைப்பூ என் கவிக்பூ. Afficher tous les articles

dimanche 27 juillet 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 30

நண்பர்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வாட்டி வதைக்கின்ற நாட்டு நிலைமையினை
ஓட்டி அழித்தல் உயர்வு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

உள்ளம் தெளிய உரைத்த கதைபடித்தேன்
அள்ளும் உணர்வை அணைத்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நற்கணித மேதைக்குக் கட்டிய இப்படைப்புப்
பொற்கோயில் கொண்ட பொலிவென்பேன்! - சொற்சோ்
கரந்தைச் செயகுமார் கன்னல் தமிழ்கற்ற
பரந்த அறிவின் பயன்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கம்பன் வடித்த கவிதைகளைக்
       
கற்றால் தமிழின் சுவையறிவார்!
நம்பன் இராமன் மொழியழகும்
       
நங்கை சீதை விழியழகும்
நம்முள் தங்கிக் கமழ்ந்திட்டால்
       
நற்றேன் பாயும் வாழ்வினிலே!
எம்மண் கொண்ட மாண்புகளை
       
இயம்பும் சீதை பெருங்கதையே!

----------------------------------------------------------------------------------------------

மிண்டும் வணக்கம்

ரசம் என்பது தமிழ்ச்சொல் அன்று எனவே

கம்பன் சுவையென்றால் கம்பன் வளமென்றால்
நம்மொழி ஓங்குமே நன்கு!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
தமிழ் காப்போர் கடமை!

பழமை எனயெண்ணி அப்படியே ஆளுதல் சிறப்பன்று!

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற நிலையை
உருவாக்கவேண்டம்!

எந்த நிலையிலும் பிரஞ்சுக் காரர்கள் ஆங்கிலம் கலந்து எழுதவோ பேசவோ மாட்டார்கள்!

எல்லா மொழியும் கலந்து வளர்ந்துள்ள ஆங்கில மொழியிலும் தனித்த ஆங்கில இலக்கியப் போக்கு உண்டு!

தனித்தமிழ் போற்றும் தமிழர்தம் நூலைப்
அணிந்து மகிழும் அகம்!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

சாதி சமய சழக்குகளைச்
   சாற்றும் உலகைத் தூளாக்கு!
மோதி மிதித்துப் பகைவர்களை
   முன்னைத் தமிழின் துயர்போக்கு!
போதி மரத்து நற்புத்தன்
   புகன்ற அன்பை வழியாக்கு!
நீதி ஏந்திக் கமழ்தென்றல்
   நிலத்தில் வீச மகிழ்கின்றேன்! 

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்

முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

போட்டியில் வென்று பொலிகின்றீர்! வாழ்த்துகளைப்
பாட்டில் படைக்கின்ற பாரதிநான்! - நாட்டமுடன்
சொன்னேன் புகழ்வெண்பா! சூடிச் சரவாணி
இன்றேன் தமிழை இயம்பு!

----------------------------------------------------------------------------------------------

புலவர் அவர்களுக்கு வணக்கம்

சந்தம் ஒலித்திடச் சாற்றிய பாட்டினில்
சிந்தை மயங்கும் செழித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பிறப்பின் நிலையைச் சிறப்புடன் சென்னீர்
பறந்து மகிழ்ந்தேன் படித்து!

----------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தன்னைப் போற்றும் தமிழ்மைந்தன்
   தமிழைப் போற்ற மறந்ததுமேன்?
பொன்னைப் பொருளைத் தேடுகிறான்!
   புகழைக் குழியில் மூடுகிறான்!
தென்னை மரத்து வேரினிலே
   தீயை மூட்டி எரிப்பதுவோ?
அன்னைத் தமிழின் பற்றேந்தி
   அளித்த பதிவை வணங்குகிறேன்!

23.02.2013

vendredi 9 mai 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 29

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

இளமதி வணக்கம்!

கோடுகள் கோலமிடக் கொண்ட கலையொளிக்கு
ஈடுகள் உண்டோ இயம்பு!

கனவுகள் ஆயிரம் காட்டும் கவிதை
மனத்தைக் கிழிக்கும் வலி!

வற்றிய கண்கள் வடித்துள்ள சொல்யாவும்
முற்றிய பாட்டின் மொழி!

படித்ததை நெஞ்சுள் படிந்ததைத் தந்தீா்!
மடித்ததைக் காக்கும் மனம்

10.02.2013

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

இன்றமிழ் மாலதிக்கு என்வணக்கம்! நன்றிகள்!
உன்றமிழ்த் ஓங்கி உயருகவே! - நன்றே
வலைச்சரம் காட்டும் மணமிகு பூக்கள்!
கலைச்சரம் காட்டும் கமழ்ந்து!

19.02.2013

-------------------------------------------------------------------------------------------------
வணக்கம்
நல்ல பதிவை நலமுற தந்துள்ளீா்
வல்ல திறனை வகுத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அருமையொளிர் ஆக்கத்தை ஆய்தே அளித்து
பெருமையொளிர் பேற்றைப் பெருக்கு!

நாட்டின் நிலையை நவின்றுள்ளீா்! இன்றமிழ்
ஏட்டின் இனிமை இசைத்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

மழைக்கால முத்தங்கள் நெஞ்சமெனும் மன்றில்
இழைந்தாடும் என்றும் இனித்து!

மீண்டும் எழுவோம்! விளைந்த துயருக்கு
வேண்டும் உலகில்  விடை!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வெளியில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
இருட்டில் தேடுகிறார் வாழ்வை

என்ற புதுக்கவிதை உண்டு!

என்மக்கள் திரைப்படம் ஒருகலை
அதுவே வாழ்வன்று என்ற தெளிவைப் பெறும்வரை 
இதுபோன்ற பதிவுகள் தொடரவே செய்யும்

இருட்டை வாழ்வின் பேரொளியாய்
எண்ணும் தமிழா் தெளிவுறுக!
சுருட்டைப் பரட்டை காட்சிகளைச்
சொந்தம் என்றே எண்ணாதே!
உருண்டை உலகம்! கண்டுணர்ந்து
உரைத்த பொழுது கேட்டார்யார்?
கருத்தை ஆய்ந்து செயற்பட்டால்
காலம் போற்றும் என்தோழா!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நல்ல பதிவுகளை நன்றே படைத்திங்கு
வல்ல தழிழை வழங்கு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

அழகிய சொற்களில் அள்ளிப் படைத்தீா்
பழமாய் இனிக்கும் படைப்பு

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கவிஞா் சுகுமார் கவிதைகள் இன்பச்
செவிநுகா் தேனெனச் செப்பு!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வரலாறு வருகின்ற தலைமுறைக்கு வாழ்க்கைப் பாடம்

வரலாறு கண்ட வழிகள்நம் வாழ்வின்
அரண்என எண்ணுக ஆய்ந்து!

-------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

நெஞ்சைக் கவரும் நிலையில் உரைத்துள்ளீா்
கொஞ்சும் தமிழைக் குழைத்து!

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------

கவிஞா் மாலதி அவா்களுக்கு வாழ்த்துக்கள்!

இனிக்கும் தமிழை இசைக்கின்ற தோழி
கனிபோல் அளித்தாய் கவி!

குன்றின் விளக்காய்க் கொடுத்த வலைச்சரம்
நன்றி நவில்கின்றேன் நான்

22.02.2013

-------------------------------------------------------------------------------------------------
 
vendredi 11 avril 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

புத்தம் புதிய இலக்கணத்தைத் தீட்டிடுக!
நித்தம் இனிமை நிலைத்து!

29.01.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

நல்ல நெறிகளை நல்கினை! நற்றிறனில்
இல்லை இணையே இனி!

01.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

இக்கவிதை உங்கள் வாழ்வின் நிகழ்வாக இருப்பின்
துணிந்து போராடுங்கள்!

முன்பு சில முறை உங்கள் வலைக்கு வந்திருக்கிறேன்
இனித் தொடா்ந்து வருவேன்!

கவிதைக் கலையில் நீங்கள் அடுத்த 
படிம வளா்ச்சியைக் காண வேண்டும்!

தாண்டாதே! தாண்டாதே! வாசற் தன்னை!
    தகிதகித்துத் தந்துள்ள கவிதை கண்டேன்!
வேண்டாதே என்றிருக்கும் என்றன் உள்ளம்
    வேலவனைத் தாழ்பணிந்து வேண்டி நிற்கும்!
துாண்டாதே கோபத்தை! துணிவை ஊட்டு!
    துாயமனக் காதலரை ஒன்றாய் ஆக்கு!
ஆண்டவனே! அல்லாவே! அம்மை அப்பா!
    அனைவரையும் தொழுகின்றேன்! ரூபன் வெல்க!

02.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

தேன்துளி தொட்டுச் செழுந்தமிழ் தீட்டியுள்ளீா்!
நான்துளி தொட்டு நலமுற்றேன்! - மான்!கிளி
வண்ண வடிவழகை வார்க்கின்ற சீராளன்
எண்ண வடிவழகை ஏத்து!

03.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

உங்கள் தமிழ்ப்பணிக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன்
தற்போது எந்த நாட்டில் வாழ்கின்றீா்

உங்கள் கவிதைகள்  எனக்கு மிகவும் பிடித்திருந்தது மேலும் கவிதைக் கலையைக் கற்றுக்கொடுக்கவே உங்கள் மின் அஞ்சல் முகவரியைக் கேட்டேன்!

வலையில் நிறைய ஒற்றுப் பிழைகள் மலிந்து இருந்தன!
விரைவில் பிழையின்றி எழுதகின்ற இலக்கணத்தைச் சொல்லித் தருகிறேன்

ற்ப்போது - இது பிழை
இரண்டு வல்லின ஒற்றுகள் சோ்ந்து தமிழ்மொழியில் வரா
எந்த இடத்திலும் வரா
விற்பனை
கற்பனை
கற்போம்
இந்த விதியை எளிதாக மனத்துள் நிறுத்திக்கொள்ளலாம்

தொடா்ந்து என்வலையைப் படிக்கவும்!
கவிதைக் கலை தானே வந்தடையும்

சொல்லும் இலக்கணத்தைச் சூடிக் களிப்பதுவே
வெல்லும் கவிதை விதி!
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்

சின்னக் குழந்தையே! சித்திரமே! செந்தமிழைத்
தின்னத் துடிக்கும் செழும்மனமே!- உன்பதிவு
ஆகா அருமை! மிகஅருமை! நீயன்றோ
ஓகோ எனஒளிரும் பல்பு!

04.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

வனப்பு வலைக்குள்ளே வந்து படித்தேன்!
மனப்பூ மலா்ந்து மணந்தது! நற்றோழி
சந்திர கௌரியின் சிந்தனை அத்தனையும்
செந்தமிழ் நல்கும் செழிப்பு! 
----------------------------------------------------------------------------------------------------
இனிய நண்பா் சீராளன் அவா்களுக்கு வணக்கம்!

சீராளா! செந்தமிழ்த் தேன்பருகிப் பாட்டுலகின்
பேராளக் காண்கவே பீடு!

05.02.2013
----------------------------------------------------------------------------------------------------
வணக்கம்!

வாழ்த்து நன்றாக இருக்கிறது

இந்தப் பிறவியிலே இன்பத் தமிழ்மொழியைச்
சொந்தமெனக் கொண்டு சுடா்கின்றாய்! - சந்தமுடன்
வண்ணமும் சித்திரமும் வார்த்துப் புகழெய்தத்
திண்ணமுடன் ஏற்பாய் திறம்

07.02.2013
----------------------------------------------------------------------------------------------------
கம்பன் உறவுகளே!

பல்லாணடு வாழ்க! பலகோடி இன்பங்கள்
வில்லாண்ட வேந்தன் விளைக்கட்டும்! - நல்லதமிழ்
மல்லனும் மல்லிகையும்  மங்கல மாண்புகளை
வெல்லனும் வாழ்வில் விரைந்து!

10.02.2013
----------------------------------------------------------------------------------------------------

lundi 24 mars 2014

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 28

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

வரலாறு தந்த வழிகளைக் கண்டுணா்ந்தால்
இரவேது நெஞ்சுள் இயம்பு!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

காற்றின் மகனைக் கனிந்துருகும் வண்ணத்தில்
போற்றிப் படைத்தீா் பொலிந்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

கவி.சோம சுந்தரனார் கற்கண்டு சொல்லால்
புவிசேமப் பாடல் புனைந்தார்! - செவிகண்கள்
இன்பச் சிலிர்ப்பில் இளகினவே! கற்போர்தம்
துன்பம் அனைத்தும் துடைத்து!

20.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

துன்புற்று வாழும் நெஞ்சே!
    துணிவுற்று வாழ்வை வெல்க!  
இன்புற்று வாழும் வண்ணம்
    இங்குற்ற கவியைக் காண்க!
அன்புற்று வாழும் வாழ்வே
    அவனுற்ற உலகைக் காட்டும்!
வன்பற்றுத் தமிழ்மேல் கொண்டு
    வளமுற்று வாழ்க அம்பாள்!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்

மார்கழித் திங்கள் மணக்கும் பனித்துளியே!
சீா்நெறி தந்தாய் செழித்து!

20.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

படிக்கும் பொழுதே பசியெடுக்கும் வண்ணம்
வடிக்கும் வலையே! வணக்கம்! - துடிப்புடன்
தஞ்சம் அடைந்து சமைத்த உணவெண்ணி
நெஞ்சுள் சுரக்குதே நீா்!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

நம்பிக்கைப் பாடல் நறுங்கவி என்னுள்ளே
தும்பிக்கை செய்யும் துணை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இளமதிப் பாவாய்! இனியதமிழ்ப் பற்றால்
நிலமிதில் நற்போ் நிறுவு! - நலமுற
என்றன் கவிக்கலையை இங்குனக்குத் தந்திடவே
உன்றன்மின் அஞ்சலை ஓது!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

இமாவின் உலகம் இனிமை! இனிமை!
உமாதேவி காப்பாள் உனை!

22.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்

பேரீசம் சொல்லில் பிறந்த கவிகண்டு
பாரீசு பாரதி பாடுகிறேன்! - மாரியெனச்
சீனி படைக்கின்ற சிந்தனை அத்தனையும்
தேனி படைக்கின்ற தேன்!

22.01.2013
-----------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சீராளன் வலைக்கின்று வருகை தந்தேன்!
    சிற்பியென வடித்துள்ள கவிதை கண்டேன்!
பாராளன் என்றாலும் பாவை கண்கள்
    படுத்துகிற பாடுகளைத் தாங்க வேண்டும்!
கூராளன் என்றாலும் கோதை கண்கள்
    கூறுகிற மொழிகேட்டுச் சொக்க வேண்டும்!
காராளன்! கனியாளன்! என்றே போற்றக்
    கவியாளன் ஓங்கிடுக! காதல் வாழ்க!

கைவண்ணம் கண்டு கவிவண்ணம் தீட்டுகிறேன்!
மைவண்ணன் போன்றே மனத்தைப் பறித்ததுவே!
எண்ணும் கருத்துக்கள் எற்ற எழிற்கண்டு
கண்ணும் கமழும் கனிந்து

23.01.2013
----------------------------------------------------------------------------------------- 

வணக்கம்!

ஆசைப் பிடியில் சிக்காதே!
        
அழிவை என்றும் எண்ணாதே!
காசைத் தேடி வாழ்நாளைக்
        
கரைத்துக் கரைத்துத் தேயாதே!
மாசை நீக்க! மண்டியுள
        
மருளைப் போக்க! ஓமென்னும்
ஓசைக் குள்ளே உன்னுயிரை
        
உருகச் செய்க! ஒளிபிறக்கும்!