mercredi 26 octobre 2016

கம்பன் புகழ்



கம்பன் புகழ்

1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!

2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!
பொருத்த முடனே கருத்தைப் புனையும்
புதுமைத் திறனை..நான் கொண்டேன்!

3.
வில்லொளிர் வீரனும் சொல்லொளிர் சீதையும்
வென்மதிலை வீதியில் நோக்கினரே!
நல்லொளி பாக்கள் நவின்றிடும் என்னுள்
நடையொளி காட்டியே தாக்கினரே!

4.
என்றும் உளதென இன்பத் தமிழினை
ஏத்திய கம்பனைப் போற்றிடுவேன்!
நின்றும் கிடந்தும் அமர்ந்தும் இருக்கும்
நெடியவன் சீரினைச் சாற்றிடுவேன்!

5.
போரும் ஒடுங்கும் புகழும் ஒடுங்காப்
புதுநெறி போற்றிக் களிக்கின்றேன்!
யாரும் உறவென யாதுமே ஊரென
ஈந்த தமிழை விளிக்கின்றேன்!

6.
நடையில் உயர்ந்துள நாயகன் சீரினை
நாடிட இன்பமே ஓங்கிடுமே!
கொடை மிகுந்த சடையனின்  சீரினைக்
கொண்டிடத் துன்பம் நீங்கிடுமே!

7.
சிறியன சிந்தியான் செம்மையைச் செப்பிடச்
சிந்தனை ஓங்கிக் கமழ்ந்திடுமே!
பொறிகள் அடங்கிப் பொலிந்திடும் ஆன்மா
புவிமகன் தாள்மேல் அமர்ந்திடுமே!

8.
தோள்களைக் கண்டு தொடர்ந்திடும் காட்சியைச்
சொல்லிய பாட்டுக் கிணையேது?
தாள்களைக் கண்டு தழைத்திடும் தாய்த்தமிழ்
தந்திடும் இன்புக் கணையேது?

9.
தாயினும் நல்லான் தனிப்புகழ் நற்குகன்
சாற்றிய இன்மொழி காத்திடுவேன்!  
வாயில் வனப்பாய் வடித்துளப் பாக்களை
மாண்புறப் பாடியே கூத்திடுவேன்!

10.
மானிடம் வென்ற மதுத்தமிழ்க் காவியம்
மாட்சியைச் சூடி வலம்வருவேன்!
தேனிடம் நாடித் திளைத்திடும் வண்டென
தீந்தமிழ் பாடி நலந்தருவேன்!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்