dimanche 28 novembre 2021

விருத்த மேடை - 54

 


விருத்த மேடை - 54       

 

எண்சீர் விருத்தம் - 7

 

கம்பனின் வெண்டளை எண்சீர் விருத்தம்

 

மேவா தவரில்லை! மேவினரும் இல்லை!

   வெளியோ டிருளில்லை! மேல்கீழும் இல்லை!

மூவா தமையில்லை! மூத்தமையும் இல்லை!

   முதல்யிடையோ டீறில்லை! முன்னொடுபின் இல்லை!

தேவா!இங் கிவ்வோநின் தொன்றுநிலை என்றால்

   சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்

காவா தொழியின் பழிபெரிதோ? அன்றே,

   கருங்கடலில் கண்வளராய்! கைம்மாறும் உண்டோ?

 

 

 [கம்பம், ஆரணிய, சரபங்கன் பிறப்பு நீங்கு - 28]

 

வானநுால் பயிற்சிகொள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

மண்பிடிக்கப் போரிட்டார்! தந்திரமாய் அன்று

   மதம்பரப்பப் போரிட்டார்! சாதியெனும் மாயப்

புண்பிடிக்கப் போரிட்டார்! எல்லையிலே ஓடும்

   புனல்பிடிக்கப் போரிட்டார்! ஆசையலை பொங்கிப்

பெண்பிடிக்கப் போரிட்டார்! இப்புவியில் தம்மின்
   பெயர்பிடிக்கப் போரிட்டார்! உண்மையிது! நாளை

விண்பிடிக்கப் போரிடுவார்! என்தமிழா! வான

   வெளியறிவைக் கற்றிடுவாய்! தற்காப்புக் கொள்வாய்!

   

[பாட்டரசர்]

 

அரையடி தோறும் இறுதியில் [நான்காம் சீர்] தேமாச்சீர் பெற்று, ஏனைய இடங்களில் மா, விளம் காய்ச்சீர்களைப் பெற்று, அடிதோறும் வெண்டளையால் வந்த எண்சீர் விருத்தம் இது. இதில் அரையடிதோறும் மூன்றாம் சீர் காயாகவோ, விளமாகவோ வருவது இப்பாடலின் தனித்தன்மையாகும்.

 

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.11.2021

விருத்த மேடை - 53


விருத்த மேடை - 53       

 

எண்சீர் விருத்தம் - 6

 

குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா
   குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா

அருவி

 

அள்ளி யள்ளியே மக்களுன் களித்த

   ஆன்ற வள்ளலும் அழிந்தனர், அறிவேன்!

வள்ளல் வாரியே வழங்கிய பொருளும்

   வற்றிப் போனதும் அழிந்ததும் அறிவேன்!

கொள்ளக் கொள்ளவும் குறைவுறா தளிக்கும்

   குன்றம் சூழ்மலை அருவியே! உனது

வெள்ள நீரினை வழங்கியும் குறையா

   வீறு பெற்றவர் உலகினில் இலையே!

 

[கவிஞரேறு வாணிதாசன், எழில் விருத்தம்]

 

வருவதை மகிழ்ந்துண் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

கூடி யுண்ணுமே கருநிறக் காக்கை!

   கோத்த பூச்சரம் கூந்தலைச் சேரும்!

பாடி ஓங்குமே பண்ணுடன் இசையும்!
   படையின் ஒற்றுமை படைக்குமே வெற்றி!

தேடி யூட்டுமே கூடுடைக் குருவி!

   திரண்ட தேனடை ஈக்களின் உழைப்பு!

நாடி மின்னுமே நற்புகழ் மாட்சி

   நாளும் ஈந்தருள்! வருவதை மகிழ்ந்துண்!

 

[பாட்டரசர்]

 

ஆதி மாவொடும் கூவிளம் விளமா

ஆகு மாயரை யடியிருங் குழலே

 

என்னும் விருத்தப் பாவியல் விதிக்கேற்ப அமைந்த எண்சீர் விருத்தம். முதலில்  குறிலீற்று மாச்சீரும், கூவிளமும் விளமும் மாச்சீரும் அரையடிக்கு வரும். மற்றை   அரையடி இவ்வாறே அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும். 

 

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
18.11.2021

mercredi 3 novembre 2021

விருத்த மேடை - 52

 


விருத்த மேடை - 52       

 

எண்சீர் விருத்தம் - 5

[ஒவ்வோர் அரையடியிலும் முதல் மூன்று சீர்கள் வெண்டளையில் அமையும்]

 

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!

   மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி!

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!

   ஓவாத சத்தத் தொலியே போற்றி!

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!

   ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி!

காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி!

   கயிலை மலையானே போற்றி! போற்றி!

[திருநாவுக்கரசர் தேவாரம் - 6794]

 

வருவதை மகிழ்ந்துண் [பாரதியின் புதிய ஆத்திசூடி

 

தன்னலம் வேண்டாமே! தம்பி என்றும்

   தலைக்கனம் வேண்டாமே! தீதால் வந்த

பன்னலம் வேண்டாமே! வஞ்சம் பற்றிப்

   பழியுற வேண்டாமே! காசால் உற்ற

இன்னலம் வேண்டாமே! ஆசை பொங்கி

   இழிவுற வேண்டாமே! ஊரைச் சாய்த்த

பொன்னலம் வேண்டாமே! கூடி யுண்ணும்

   பொதுநலம் பூத்துப் பொலிவாய் நன்றே!

 

[பாட்டரசர்]

 

முதல்  மூன்று சீர்கள் வெண்டளை பெறும். ஓவ்வோர் அரையடியிலும் காய்ச்சீர்கள். மாச்சீர்கள், விளச்சீர்கள்  கலந்து முதல் இரண்டு இடங்களில் வரும். மூன்றாம் சீர் மாவாகும். நான்காம் சீர் தேமாவாகும். இதுபோன்றே மற்ற  அரையடி அமையும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும். 

 

தேமாங்காயும் புளிமாங்காயும் இவ்விருத்ததில் நல்லோசை தரும். விளங்காய் இன்றி வரும் விருத்தத்தில் நேரசையில் தொடங்கினால் அரையடிக்கு 10 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 11 எழுத்துக்களும் வரும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.11.2021

lundi 1 novembre 2021

வெண்பா மேடை - 215

 


வெண்பா மேடை - 215

 

குமரேச வெண்பா

 

வெல்லும் வழியிருக்க வேண்டாப் பிரிவுகளால்

கொல்லும் துயரேன் குமரேசா! - தொல்லுலகில்

சாதி இரண்டென்று சாற்றும் தமிழ்நெறியை

ஓதி யுரைப்பாய் உயர்வு!

 

இரண்டாம் அடியில் மூன்றாம் சீர் 'குமரேசா' என முன்னிலை விளி அமைய வேண்டும். முன்னோர் நுால்களில் உள்ள நன்னெறியை வலியுறுத்தி வெண்பாவின் கருப்பொருள் அமைய வேண்டும்.

 

இவ்வகையில் அமைந்த 'குமரேச வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

01.11.2021

வெண்பா மேடை - 214

 


வெண்பா மேடை - 214

 

சிவசிவ வெண்பா

 

விற்பிரம்பான் மன்னர்செயன் மேவவுல கெங்குநிறை

சிற்பரனே தெய்வஞ் சிவசிவா - பொற்பின்

அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

[சென்னமல்லையர் இயற்றிய சிவசிவ வெண்பா - 1]

 

அகரவுயிர்போல் அதிபகவனாகிய பரமசிவன்  உலகத்தில் பரந்தெங்கும் உள்ளன். வில்லாலும், பிரம்பாலும் அருச்சுனனும், பாண்டியனும் அடித்த அடி எங்கும் உற்றமையால்  விளங்கும்.

 

திருக்குறளைப் பின்னிரண்டடிகளில் வைத்து, முன்னிரண்டடிகளில்  அக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தை, வரலாற்றை, புராண இதிகாசக் கதையை வைத்த வெண்பா நுால்கள் தமிழில் தோன்றின. அவ்வகையில் அமைந்த நுால்கள் பதினான்கு என உ.வே.ச  அவர்கள் கணித்து எழுதியுள்ளார்.

1. சினேந்திர வெண்பா, 2. இரங்கேச வெண்பா, 3. தினகர வெண்பா, 4. வடமலை வெண்பா, 5. திருமலை வெண்பா, 6. முதுமொழிமேல் வைப்பு, 7. திருப்புல்லாணி மாலை, [கட்டளைக் கலித்துறை] 8. சோமேசர் முதுமொழி வெண்பா, 9. திருத்தொண்டர் மாலை, 10. வள்ளுவர் நேரிசை, 11. முருகேசர் முதுநெறி வெண்பா, 12. திருக்குறள் குமரேச வெண்பா, 13. சிவசிவ வெண்பா, 14. ஒவ்வொரு திருக்குறளை ஒவ்வொரு விருத்தத்தில் அமைத்து 1330 செய்யுட்களால் இயற்றப்பட்ட நுால் ஒன்று உள்ளது.

வென்று பகுத்தறிவால் வெண்தாடி வேந்தன்பின்
சென்று சிறந்தேன் சிவசிவா! - என்றும்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்[கு] அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

 

வண்ணாவில் கொண்டான்! வளருருவில் நீ..கொண்டாய்!

தெண்மார்பில் கொண்டான் சிவசிவா! - மண்ணுலகில்

பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

 

பின்னிரண்டு அடிகளில் திருக்குறள்  நுாலிருந்து ஒரு குறள் அமையவேண்டும். முன்னிரண்டடிகளில்  அக்குறளுக்கு ஏற்ற விளக்கத்தையோ, வரலாற்றையோ, காப்பிய கதைகளையே கருவாக அமைய வேண்டும். இரண்டாம் அடியில் மூன்றாம் சீர் சிவசிவா என  அமைய வேண்டும்.

 

இவ்வகையில் அமைந்த 'சிவசிவ வெண்பா' ஒன்று எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம்  பிரான்சு

10.10.2021