Affichage des articles dont le libellé est கலியொததாழிசை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est கலியொததாழிசை. Afficher tous les articles

samedi 30 novembre 2024

அம்மானை


 

கலிப்பா மேடை – 62

 

கலித்தாழிசை – 5

 

அம்மானை

 

அம்மானை என்பது மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிகையில் அமைந்த எலுமிச்சம்பழம் போன்ற காய்களை எறிந்து அவை கீழே விழாமல் பிடித்து விளையாடும் பெண்கள் விளையாட்டு.

 

அம்மானை ஆடும் போது ஒருத்தி  ஒரு கருத்தைக் கூறுவாள், அடுத்தவள் அதில் ஒரு வினாவை எழுப்புவாள், மூன்றாமவள் விடை கூறுவாள். மூவர் பாடுவதும், இருவர் பாடுவதும், ஒருவரே பாடுவதும் உண்டு.

 

அம்மானைப் பாடல் கலித்தாழிசையில் அமைதலும் உண்டு. வெண்டளை பயின்று வரும்.  முதல் மூன்றடிகள் அளவடியாய், ஈற்றடி எண்சீர் அடியாய் வரும். இரண்டாம் அடி ஈற்றிலும், நான்காம் அடி ஈற்றிலும், அதன் அரையடி ஈற்றிலும் அம்மானை என்ற சொல் அமையும். இரண்டாமடி மூன்றாமடியிலும் அந்தாதித்து வரும். நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

இப்பாடல் அடிகள் வெண்டளை பொருந்தியே வரும் எனினும் முதலடி இறுதிச்சீருக்கும் அடுத்த அடி முதற்சீருக்கும் தளைகோடல் கூடாது [வெண்டளை கட்டாயமில்லை], ஆனால் அவ்விடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளை அமையாது.

 

அம்மானைப்பாட்டு இசைப்பாட்டு ஆதலின் அம்மானை வரி எனவும்படும். இஃது ஒரு பொருள்மேல் மூன்றற்குக் குறையாமல் அடுக்கிவரும்.

 

சோழன் புகழ் அம்மானை

 

1.

வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை?

ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

துாங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

…… சோழன் புகார்நகரம் பாடலோர் அம்மானை!

 2.

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்யார் அம்மானை?

குறைவில் உடம்பெரிந்த கொற்றவன்முன் வந்த

கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை!

…… காவலன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

3.

கடவரைகள் ஓரெட்டும் கண்ணிமையா காண

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை?

வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்திக்கு எட்டும்

குடைநிழலில் கொண்டளித்த கொற்றவன்காண் அம்மானை!

……கொற்றவன்தன் பூம்புகார் பாடலோர் அம்மானை!

 

[சிலப்பதிகாரம், வாழ்த்துக் காதை – 16, 17, 18]

.

பாட்டரரசர் அம்மானை!


1.

சீர்மணக்கப் பாட்டெழுதிச் சிந்தை கவர்கின்ற
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் அம்மானை!
பேர்மணக்கம் பாட்டரசர் பீடொளிரும் நாடுண்டோ?
தார்மணக்கம் கோலுண்டோ? சாற்றுகவே அம்மானை!
……தமிழ்தந்த கோல்கொண்டு தாமாள்வார் அம்மானை!

2.

வெள்ளாடைப் பாட்டரசர் மேடை மணம்வீசம்!

முள்ளோடை மண்கூட முத்தாகும் அம்மானை!
முள்ளோடை மண்கூட முத்தாகும்  நற்றொழில்

ஒள்ளாடை வீணாகி ஓய்வுறுமே அம்மானை?
……ஒண்டமிழர் நுாலாடை ஒளிவீசும் அம்மானை!

3.

வல்ல புகழ்மேவி வாழ்கின்ற பாட்டரசர்

சொல்லச் செவியுருகிச் சொக்கிடுவார் அம்மானை!
சொல்லச் செவியுருகிச் சொக்குவது மாமாயம்

நல்ல செயலாமோ நல்கிடுவாய் அம்மானை?

……நல்லார் நடையழகு சீருரைக்கும் அம்மானை!

 

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
02.07.2022


அம்மானைப் பாடலில் ஈற்றில் வரும் விடைமொழியுள்  இருபொருள்படச் சிலேடை அமைதல் சிறப்பாகும். முப்பொருள் நாற்பொருள்படச் சிலேடை அமைதல் மிகச் சிறப்பாகும். மேலுள்ள பாட்டரசர் அம்மானையில் முதல் பாடலில் [கோல் – பிரம்பு, எழுதுகோல்] இரண்டாம் பாடலில்  [நுாலாடை – ஆடை, நுால்கள்]  மூன்றாம் பாடலில் [நடையழகு – பாட்டின் தொடையழகு, வாழ்வின் ஒழுக்கம்] என  இருபொருள் சிலேடை வந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலித்தாழிசை அம்மானை ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

30.11.2024

vendredi 15 novembre 2024

கலியொத்தாழிசை - 2

 


கலிப்மேடை - 60

கலித்தாழிசை – 3

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.

 

கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்பர்.

கலியொத்தாழிசை - 2

வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை


1.

செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்

பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

2.

முத்தேவர் தேவை முகிலுார்தி முன்னான

புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

3.

அங்கற் பசுங்கன் றளித்தருளும் தில்லைவனப்

பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!

 

[சிதம்பரச் செய்யுட் கோவை]

 

1.

கொய்தினை காத்தும், குளவி அடுக்கத்தெம்

பொய்தல் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

2.

ஆய்வினை காத்தும் அருவி அடுக்கத்தெம்

மாசில் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

3.

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்

குன்றச் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!

 

[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]

 

1.

சாதிவெறிப் பித்தேந்திச் சண்டையிடும் இவ்வுலகம்

நீதிநெறி நெஞ்சேந்தி நிம்மதியாய் வாழ்வுபெறல் எந்நாளோ?

2.

பொல்லாச் சமயவெறிப் போர்நடத்தும் இவ்வுலகம்

எல்லாம் ஒருநிலையே என்றெண்ணி வாழ்வுபெறல் எந்நாளோ?

3.

மண்பறித்துக் கூத்தாடும்! புண்ணரித்த இவ்வுலகம்

கண்பறித்துக் கூத்தாடும்! காப்புரிமை வாழ்வுபெறல் எந்நாளோ?

 

[பாட்டரசர்]

 

1.

பண்ணெழிலால் பாட்டரசன் பார்புகழைப் பெற்றாலும்

கண்ணெழிலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

2.

சீர்க்குழலால் பாட்டரசன் பேரின்பம் பெற்றாலும்

கார்க்குழலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 3.

வேலழகால் பாட்டரசன் வெற்றிகளைப் பெற்றாலும்

காலழகால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!

 

[பாட்டரசர்]

 

இவை வெண்டளையால் அமைந்த ஈரடிப் பாடல்கள்.  ஒரே பொருள்மேல் மூன்றடிக்கி வந்த கலியொத்தாழிசை. முதல் அடியில் நான்கு சீர்கள். இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள். இரண்டடியும் ஓரெதுகை. சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை. மூன்று பாடல்களிலும் ஈற்றில் மடக்கமையும்.

 

முதல் பாடலில் ‘புகழ்மினோ வம்மின் புலவீர்காள்’ என்றும், இரண்டாம் பாடலில் ‘சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்’ என்றும், மூன்றாம் பாடலில் ‘வாழ்வுபெறல் எந்நாளோ’ என்றும்  நான்காம் பாடலில் ‘வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!’ என்றும் மடக்கு அமைந்தன.

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

15.11.2024

samedi 9 novembre 2024

கலியொத்தாழிசை - 1

 


கலிப்மேடை - 59

கலித்தாழிசை - 2

 

கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும். ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும் வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.  

 

கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை என்பர்.

 

கலியொத்தாழிசை - 1

வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை

 

திருநாள் ஒருகேடா?

 

1.

ஈழ உடன்பிறப்பின் இன்னல்களைக் கண்டும்தன்

வாழ்வே பெரிதென்று  வாய்மூடிக் கொண்டிருப்பான்!

கோழையாய் வல்லாரைக் கும்பிட்டு வாழ்ந்திடுவான்!

தாழ்பிறவி யாம்அவற்குத் தைந்நாள் ஒருகேடா?

……தன்மானம் இல்லாற்குத் தைந்நாள் ஒருகேடா?

2.

பட்டமே யென்று பறப்பான்! பதிவியென்றால்

கட்டித் தழுவியெவன் காலும் பிடித்திடுவான்

எட்டாப் பரிசுகளுக் கேங்கும் அவனுடைய

திட்டமிலா வாழ்வில் திருநாள் ஒருகேடா?

……திருந்தாதான் வாழ்வில் திருநாள் ஒருகேடா?

 

3.

மானமே இன்றி வடமொழியில் போற்றிசெய்வான்!

ஆனவரை தாய்த்தமிழில் ஆங்கிலத்தைப் பெய்திடுவான்! 

தேனின் இனிதான செந்தமிழுக்கே கூற்றாகிப்

போன அவனுக்குப் பொங்கல் ஒருகேடா?

……புழுப்பிறவி யாம்அவற்குப் பொங்கல் ஒருகேடா?

[முனைவர் இரா. திருமுருகனார்]

 

எனைவிட்டுப் பிரிந்ததுமேன்?

 

1.

கண்ணே! கனிச்சாறே! கற்கண்டுக் காவியமே!

மண்ணே மணக்கின்ற மல்லிகையே! மாங்கனியே!

பண்ணே படைக்கின்ற பாட்டரசன் வாடுகிறேன்!

பெண்ணே எனைவிட்டுப் போனதுமேன்?

……பெருந்துயரை இங்கிட்டுப் போனதுமேன்?

2.

வாசமிகு வண்டமிழே! வண்ணமிகு மாமகளே!

நேசமிகு நேரிழையே! நெஞ்சமிகு பேரழகே!

பாசமிகு பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!

மோசமிகு வாழ்விட்டுப் போனதுமேன்?

……மோகமிகு தீயிட்டுப் போனதுமேன்?

3.

சீர்போற்றும் வாழ்வளித்தாய்! சிந்தனையாம் தேனளித்தாய்!

ஊர்போற்றும் மாண்பளித்தாய்! உள்ளொளியாய் நீயிருந்தாய்!

பார்போற்றும் பாட்டரசன் பாழ்பட்டு வாடுகிறேன்!

பேர்போற்றும் வாழ்விட்டுப் போனதுமேன்?

……கார்மூட்டும் துன்பிட்டுப் போனதுமேன்?

[பாட்டரசர்]

 

இது வெண்டளையால் அமைந்த நாலடிப் பாடல்தான். நான்காமடி மற்ற அடிகளைவிட நீண்டிருப்பதால் நடுவில் துணித்து ஐந்தாம் அடிபோல் அமைக்கப்பட்டுள்ளது.  

 

என்னாசிரியர் முனைவர் இரா. திருமுருகனார் பாடலில் முதல் மூன்றடிகளும் நான்கு சீர்களைப் பெற்றன. நான்காமடி எட்டுச் சீர்களைக் கொண்டது. என் பாடலில் நான்காம் அடி ஆறு சீர்களைக் கொண்டது. நான்கடியும் ஓரெதுகை பெற்றுவரும். நாலாமடியின் முதற்சீருக்கு ஏற்ற மோனை அதன் செம்பாதியில் அமையும். முன்னுள்ள மூன்றடிகளில் ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். இறுதியடியின் முற்பாதியின் இறுதிச்சீர்க்கும் பிற்பாதியின் முதற்சீர்க்கும் வெண்டளை கட்டாயமில்லை. இறுதியடியின் முற்பாதியும் பிற்பாதியும் இறுதிப் பகுதியில் மடக்குப் பெறும்.   

 

விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு அன்புடன் வேண்டுகிறேன.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

பாவலர் பயிலங்கம்

09.11.2024