dimanche 2 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 21]





ஏக்கம் நுாறு [பகுதி - 21]

முத்திரண்டும் காதழகில் ஊஞ்சல் ஆடும்!
     மூக்குத்தி நல்லழகைப் பெற்றே மின்னும்!
சொத்திரண்டு பொன்விழிகள்! சொர்க்க வாயில்!
     சொல்லுகிற நன்மொழிகள் காதல் வேதம்!
குத்திரண்டு பட்டனபோல் குலையச் செய்யும்
     கொழித்தொளிரும் திருமேனி! செவ்வாய் பாடப்
பத்திரண்டு மாதங்கள் ஆன போதும்
     பைந்தமிழில் சொற்தேடி ஏங்கும் உள்ளம்! 84

ஐயோஎன்று என்னுயிரை ஆடச் செய்யும்
     அளவில்லாப் பேரழகு! காதல் கண்கள்
மையோஎன்று என்னுயிரை மயங்க வைக்கும்
     மந்திரமோ? மதுக்குடமோ மலா்ந்த பூக்கள்!
பையோஎன்று என்னுயிரை ஊதி ஊதிப்
     பந்தாடும் பொற்பாவை! சிவந்த கோவை!
தையோஎன்று என்னுயிரைத் தழைக்கப் பெய்யும்
     தண்டமிழோ? தண்மழையோ! ஏங்கும் நெஞ்சே! 85

                                         (தொடரும்)

6 commentaires:

  1. உங்களின் ஒரு கவிதை படித்து முடித்து சுவையை மனதில் அசைபோட்டு முடிக்கும் முன் இன்னும் கூடுதல் இனிய சுவையுடன் அடுத்த கவிதை.
    அன்புடன்,
    அப்துல் தயுப்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தமிழே இனிமை! தமிழே வளமை!
      அமிழ்தே இணையாம் அதற்கு!

      Supprimer
  2. ஆகா... படங்களும் வரிகளும் ரசிக்க வைக்கிறது...

    வாழ்த்துக்கள் ஐயா...
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டுக் கிசைந்த படத்தை வடித்திட்டால்
      ஏட்டுக் கிசைந்த எழில்மேவும்! - நாட்டமுடன்
      நண்பா் தனபாலா் நல்கும் கருத்தெல்லாம்
      பண்பில் பழுத்த பழம்!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      அடடா அருமை! கவியே செழிக்க
      நடடா நறுந்தமிழ் நாற்று!

      Supprimer