Affichage des articles dont le libellé est வாழ்த்து. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est வாழ்த்து. Afficher tous les articles

mercredi 7 janvier 2026

சாற்றுகவி

 

பாவலர்மணி வா. சண்முகம் எழுதிய

வெண்பாத் திரட்டு நுாலுக்குச்

சாற்றுகவி

 

வெண்பா அழகில் விருப்பம் மிகுந்தோங்க

நண்பா படி..இந்த நன்னுாலைப் - பண்பாடும்

ஆற்றல் நிறைந்தோங்கும்! அன்புடை..வா. சண்முகனார்

போற்றப் புனைந்தார் புகழ்!

 

பாட்டின் இயலறிந்தும், பாடும் வளமறிந்தும்,

ஏட்டின் எழிலறிந்தும் தீட்டிய..நுால் - மூட்டுமே

காட்டின் மலர்வாசம்! கற்றுக் களிக்குமனம்

நாட்டில் பெறுமே நலம்!

 

ஊரோங்கப் பாரின் உறவோங்க நெஞ்சத்துள்

நேரோங்க நெய்திட்ட இந்நுாலால் - சீரோங்கப்,

பெற்றோர் பெயரோங்க உற்ற..வா. சண்முகனார்

கற்றோர்க்[கு] அளித்தார் களிப்பு!

 

எங்கும் தமிழ்பரவ என்றும் பணியாற்றிப்

சங்கப் புலமைத் தகைபோற்றித் - தங்கமென

வெண்பாத் திரட்டு விளைத்த..வா. சணமுகனார்

பண்பால் அடைந்தார் பயன்!

 

தண்ணிலா முற்றத்தில் தத்தி விளையாடி

எண்ணிலா ஏற்றம் இசைத்திட்டார்! - கண்ணுலாக்

காட்சியைக் கட்டிக் கவிதந்தார்! சண்முகனார்

மாட்சியை வாழ்த்துமே மண்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

07.01.2026

jeudi 1 janvier 2026

புத்தாண்டு வாழ்த்து 2025

 


உலக உயிர்கள் உவப்புற

ஆங்கிலப் புத்தண்டு வாழ்த்து

 

அன்பு நிறைந்தோங்கப் பண்பு படர்ந்தோங்க

இன்பக் கலைக்கல்வி நன்றோங்க – மன்பதை

தாங்கிய தண்மைத் தமிழோங்க நல்வாழ்வை

ஆங்கில ஆண்டே அருள்!

 

ஒற்றுமை யோங்க உலக உறவோங்க

நற்றுணை நட்பு நனியோங்கப் – பொற்பெலாம்

தந்துள மோங்கத் தமிழோங்க நல்வாழ்வை

வந்துள ஆண்டே வழங்கு!

 

விண்ணக ஞானம் விளைந்தோங்க, வள்ளலென

வண்ணக மோங்க, வளமோங்கப், – பெண்ணோங்கப்

பண்ணகப் பைந்தமிழால் பாரோங்க வந்திடுவாய்

மண்ணக ஆண்டே மகிழ்ந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

01.01.2026

samedi 26 juillet 2025

புகழ்பாடும் நுழைவாயில்

 

புகழ்பாடும் நுழைவாயில்

 

மொழியோங்கத் தொண்டாற்றும், உயர்வை நல்கும்,

        மொய்த்தபுகழ்த் தமிழ்ச்சிறகம் தமிழர் தம்மின்

வழியோங்க வளமோங்கத் திட்டம் தீட்டி

        வரலாற்றைத் தானெழுதும்! மூன்றாம் ஆண்டில்

விழியோங்கச் சிலையமைக்கும்! அந்த மானில்

        விழாநடத்திச் சீர்படைக்கும்! உலக மெங்கும்

பொழிலோங்கச் செயலாற்றும்! எம்மோ டிங்கே

        புறப்படுவீர்! பொற்காலம் காண்போம் நன்றே!

 

தெருவெங்கும் தமிழ்முழக்கம் கேட்கச் செய்யும்

        தென்மறவர் தமிழ்ச்சிறகம் குறள்நுால் சொல்லும்

கருவெங்கும் விளைந்திடவும், காலம் போற்றும்

        கவியெங்கும் பரவிடவும், தமிழின் வீர

உருவெங்கும் நிலைபெறவும், உலகோர் ஒன்றி

        உறவாக வாழ்ந்திடவும் பணிகள் ஏற்கும்!

திருவென்றும் திறமென்றும் எம்மோ டிங்கே

        திரண்டிடுவீர்! தீந்தமிழைக் காப்போம் நன்றே!

 

ஒன்றிணைந்து வாழ்ந்திடவே உள்ளங் கொண்டே

        உழைக்கின்ற தமிழ்ச்சிறகம் அந்த மானில்

நன்கிணைந்து சமைக்கின்ற கடாரம் கொண்டான்

        நன்வளைவு தமிழ்மறத்தை உலகுக் கோதும்!

குன்றிணைந்து தொடர்கின்ற அரணைப் போன்று

        குவலயத்தோர் திகழ்ந்திடுக! இன்பம் சேரும்!

இன்றுணர்ந்து பெயர்பதிக்க எம்மோ டிங்கே

        இணைந்திடுவீா்! எத்திசையும் போற்றும் நன்றே!

 

கடற்படையால் கடாரத்தை வென்ற காலம்

        கணக்கிட்டுத் தமிழ்ச்சிறகம் வாழ்த்திப் பாடும்!

உடற்கொடையால் உயிர்க்கொடையால் மாட்சி பெற்ற

        உயர்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்!

இடங்கொடையால் மடங்கொடையால் மேன்மை யுற்ற

        ஈடில்லா மாந்தர்களை ஏத்திச் சாற்றும்!

தொடர்கொடையால் பெருமைபெற எம்மோ டிங்கே

        துணையாவீர்! தொன்மொழியை வளர்ப்போம் நாமே!

 

அந்தமானில் வாழ்கின்ற மக்கள் வாழ்க!

        ஆற்றலுடைத் தமிழ்ச்சிறகத் தொண்டர் வாழ்க!

அந்தமானின் விழியழகை முகத்தில் காட்டும்

        அந்தமிழின் பெண்மணிகள் வாழ்க! வாழ்க!!

வந்தமானின் எழிற்கண்டு நெஞ்சஞ் சொக்கும்

        வளர்கலைஞர் வன்கவிஞர் அன்பர் வாழ்க!

சந்தமானின் பாட்டழகாய் ஆக்கம் தந்த

        சான்றோர்கள் ஆன்றோர்கள் வாழ்க! வாழ்க!!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

26.07.2025

vendredi 10 mai 2024

பாவலர் அன்பரசி

 

அமுதச் செல்வி அன்பரசி

பிறந்தநாள் வாழ்த்து

 

அமுதில் பிறந்த செல்வியென

       அகத்தில் சிறந்த அன்பரசி!

குமுதில் அமர்ந்த நங்கையெனக்

       குணத்தில் உயர்ந்த பண்பரசி!

சிமிழின் செம்மைப் பெண்ணரசி!

       சீர்சேர் புலமைப் பண்ணரசி!

தமிழில் சிறந்த பாட்டரசன்

       தந்தேன் கோடிப் பல்லாண்டு!

 

மொழியின் பற்றும், நன்னெறியை

       முழங்கும் பற்றும், நற்றவத்தார்

வழியின் பற்றும், யாப்பருளும்

       மரபின் பற்றும், இயற்கைதரும்

எழிலின் பற்றும், எந்நாளும்

       இறைவன் பற்றும், அன்பென்னும்

பொழிலின் பற்றும் அகமலர்ந்து

       பொலிந்து வாழ்க அன்பரசி!

 

தேடித் தேடி நுால்கற்றும்

       திறனுக் கென்றும் உரமிட்டும்

ஓடி யோடித் தொண்டாற்றி

       ஒளிரும் வண்ணம் உளமுற்றும்

ஆடி யாடிக் களிக்கின்ற

       அழகு குழந்தை பணியுற்றும்

பாடிப் பாடிப் புகழுற்றும்

       பாரில் வாழ்க அன்பரசி!

 

கம்பன் காதல் கமழ்ந்திடுமே!

       கவிதைக் காதல் கனிந்திடுமே!

இம்மண் வாழும் செடிமீதும்

       இனிய காதல் தொடர்ந்திடுமே!

அம்மன் அழகில் மனமுருகி

       அருளாங் காதல் மலர்ந்திடுமே!

செம்பொன் இதய அன்பரசி

       செழித்து வாழ்க பல்லாண்டு!

 

பாட்டின் அரசன் பயிலரங்கிற்

       பாடங் கற்றும் பண்கற்றும்

காட்டின் வளமாய் எழுத்தாக்கங்

       கணித்தே எழுதுங் கலைகற்றும்

வீட்டின் பெருமைச் சீர்கற்றும்

       வெற்றி சூடும் வழிகற்றும்

நாட்டின் மேன்மை நிலைகற்று்

       நன்றே வாழ்க அன்பரசி! [83]

 

23.03.2024

samedi 13 avril 2024

வாழ்த்துக்கவிதை

தமிழ்க் கலாச்சார சங்கம் நடத்தும்

உலகத் தமிழ் இலக்கிய மாநாடு

சிறந்தோங்க வாழ்த்துகிறேன்! 

 

புலிபறக்கும் மாமறவர் சோழர் தம்மின்

          புகழ்பறக்கும் வரலாற்றைப் பேசும் இந்நுால்

கிளிபறக்கும் அழகாக இன்ப மூட்டும்!

          கிளைபடைக்கும் பூக்களென மணமே கூட்டும்!

ஒளிபடைக்கும்! உயர்வளிக்கும்! உலகே போற்ற

          ஒண்டமிழின் மேன்மையினை எடுத்துக் காட்டும்!

வலிபடைக்கும் மெலிபடைக்கும் பாட்டின் மன்னன்

          வாழ்த்துகிறேன்! மாநாடு வெற்றி காணும்!

 

சோறளிக்கும் வளநிலத்துத் தஞ்சைக் கோயில்

          சோழர்களின் கலைகாக்கும்! தொன்மை சொல்லும்!

ஆறளிக்கும் வளமாக ஆய்வை யேந்தி

          அமுதளிக்கும் இம்மலரை அகமே கொள்வோம்!

ஏறளிக்கும் விருதேற்று வாழ்ந்த மண்ணின்

          எழிலளிக்கும் மாநாட்டை நடத்தி நன்றே

பேறளிக்கும் தமிழ்ச்சங்கம் வாழ்க! வாழ்க!!

          பெயர்பதித்த தொண்டர்கள் வாழ்க! வாழ்க!!

 

கல்லணையைக் கட்டிவைத்த கரிகால் சோழன்

          காலத்தைக் கோலத்தை ஓதும் இந்நுால்

சொல்லணையைக் கட்டிவைத்த மாட்சி யாகும்! 

          சுவையணையே இல்லாமல் பொங்கிப் பாயும்!

பல்லணையைக் கட்டிவைத்த நன்மை போன்று

          பன்னாட்டு மாநாடு! நற்றேன் கூடு!

நல்லணையைக் கட்டிவைத்த ஆட்சி யாக

          நலங்காணப் பாட்டரசன் வாழ்த்து கின்றேன்! [52]

 

12.04.2024