தமிழ்த்தாத்தா உ.வே.சா
அங்கும் இங்கும் அலைவதுவோ?
ஆசை பெருகிக் குலைவதுவோ?
எங்கும் திரியும் தெருநாய்போல்
இழிந்து கிடந்து நலிவதுவோ?
பொங்கும் அறிவு!
பெரும்புலமை!
புவியைப் புரட்டும் நுண்கவிதை!
தங்கும் புகழை
எனக்கீந்து
தாயே தமிழே
காத்திடுக!
மதியார் வாசல்
மிதியாதே!
மனமே! பகைக்குப் பணியாதே!
விதியோன் கையில்
பொம்மையென
விளைந்த காலம்!
துவளாதே!
சதியோர் கூட்டு!
கலங்காதே!
தமிழின் வன்மை!
இறைத்தன்மை!
மதியின் செல்வர்! உ.வே.சா
வாழ்வும் வளமும்
தமிழாகும்!
பற்று! பாசம்! புகராசை!
பதவி! பட்டம்! பேராசை!
சுற்றும் நட்பு!
பிறர்பொருளைச்
சுருட்டும் நினைவு!
பொய்நடிப்பு!
சற்றும் என்னைச் சாராமல்
தமிழே! தாயே அருட்செய்தாய்!
முற்றும் தமிழே!
உ.வே.சா
முகிழ்த்த வாழ்வைப் பாடுகிறேன்!
தம்மின் வாழ்க்கைத் தழைத்திடவே
தமிழைச் சொல்லிப் பிழைக்கின்றான்!
செம்பொன் தமிழின் திறமறியான்!
செம்மை சேர்க்கும் அறமறியான்!
நம்மின் தமிழர்
உயர்வின்றி
நண்டின் கதைபோல் கிடக்கின்றார்!
கும்பென் றிருட்டே! உ.வே.சா
கொடுத்த விளக்கை ஏற்றுகவே!
அன்னை இல்லம் பெயர்மட்டும்!
அம்மா முதியோர் இல்லத்தில்!
பெண்ணை மதியான்! மேடையிலே
பெண்ணின் உரிமை
பேசுகிறான்!
கண்ணை விற்றே ஓவியமா?
மண்ணை விற்றே
புலம்பெயர்வா?
என்னைக் காக்கும் உ.வே.சா
ஈடில் அறிஞா் வணங்குகிறேன்!
பொன்னும் பொருளும் சேர்த்திடவே
போட்டி போடும்
தமிழர்களே!
மண்ணும் மணியும் பெருகிடவே
வாழ்வை இழக்கும் மனிதர்களே!
வண்ணத் தமிழின் ஏடுகளை
வாழ்வாய் வளமாய்
எண்ணிமனம்
உண்ணா துறங்கா(து) உ.வே.சா
உழைத்தார்! தமிழின் பொற்காலம்!
சுடரும் புலமை!
நறுங்கவிதை
சுரக்கும் உள்ளம்!
நூலாய்ந்து
படரும் அறிவு! சுவடிகளைப்
பதிக்கும் மாண்பு!
எழுத்தாற்றல்!
உடலும் உயிரும் தமிழாக
ஒளிரும் வடிவம்!
எந்நாளும்
தொடரும் புகழ்சேர் உ.வே.சா
தொண்டின் இமயம்!
போற்றுகிறேன்!
எந்த மொழிக்கும் குறையின்றி
இருந்த மொழிதான் செந்தமிழும்!
சந்தத் தமிழின் துணைக்கொண்டு
வந்த மொழிகள் பற்பலவாம்!
சொந்தத் தாயின்
நினைவின்றித்
தூங்கும் தமிழன்
விழிப்புறவே
தந்த நூல்கள்! உ.வே.சா
தமிழர் வணங்கும் இறையென்பேன்!
நாயும் நரியும் நண்டுகளும்
நாற்றப் பன்றி
கழுதைகளும்
பாயும் புலியும் சிறுத்தைகளும்
பறக்கும் கழுகு
ஆந்தைகளும்
பேயும் பிறவும் அலைமோதும்
மனிதர் உருவில்! இவைக்கண்டு
காயும் நெஞ்சம்! உ.வே.சா
தமிழின் தாத்தா!
காத்தருளே!
உண்மை ஒளிரும் இடந்தேடி
உரிமை முழங்கும் களந்தேடி
வண்மை மின்னும் உளந்தேடி
வண்ணக் கவிஞன்
அலைகின்றேன்!
நுண்மை பொங்கும் மொழியாற்றல்!
நோக்கம் ஒன்றே!
தமிழ்உயர்வு!
திண்மை பொங்கும் உ.வே.சா
திறத்தை உடையார் கிடைப்பாரோ?
08-05-2008



