mercredi 12 décembre 2012

மகாகவி பாரதியார் [பகுதி - 1]



பாட்டுக்கோர் புலவன் பாரதி

வானூரும் நிலவிற்குத் தடையும் உண்டோ? 
            மண்ணூரும் புழுவினிலே அடிமை உண்டோ?
தேனூறும் சொல்லெடுத்தே உரிமைத் தீயைத்
            திக்கெட்டும் பாரதியே ஏற்றி வைத்தாய்!
பாநூறு படைத்தாலும் உன்பாப் போன்று
            பழுதின்றிப் பாவலர்கள் படைக்கப் போமோ?
நானூறி உன்பாட்டில் திளைத்த தாலே
            நயமூறப் பாடுதற்குக் கற்றுக் கொண்டேன்!

பூட்டுத்தான் போட்டுநமைப் பூட்டி னாற்போல்
            புகுந்திட்ட அன்னியர்கள் அடைத்தே ஆண்டார்!
நாட்டின்மேல் பற்றுனக்கே இருந்த தாலே
            நரிமனத்துப் பரங்கியரை எதிர்த்து நின்றாய்!
ஏட்டினிலே விடுதலையை எழுதி வைத்தே
            ஏற்றமிகு சுதந்திரத்தை அறியச் செய்தாய்!
பாட்டுக்கோர் புலவனெனப் பட்டம் பெற்ற
            பாரதியே உனைஎன்றும் மறக்கி லேனே!

'ஆசைக்கே அளவில்லை' அதுபோல் உன்னை
            ஆட்கொண்ட புகழுக்கோ எல்லை யில்லை!
மீசைக்கே அழகூட்டி நின்ற வேந்தே!
            விடுதலைக்குச் சொல்லெண்ணாத் துன்பம் ஏற்றாய்!
தாசிக்கே கொடுப்பதற்கும், தண்ணீர் போலத்
            தாம்குடிக்கும் மதுவிற்கும் செலவ ழிப்பார்!
காசுக்கே விலைபோகும் கயவ ராலே
            கற்கண்டாம் சுதந்திரமும் கசக்கு தய்யா!

'எல்லாரும் எல்லாமே பெறுதல்' என்னும்
            இனிதான கருத்துக்குச் சொந்த மானாய்!
இல்லாரே இல்லாத நாடாய் மாற
            எழிற்பாக்கள் வடித்துப்பா வேந்த னானாய்!
கல்லாமை அடியோடு மறைந்து போகக்
            கல்விதனை வளர்த்திடவே கனவு கண்டாய்!
பொல்லாத தீண்டாமை வேறு பாட்டைப்
            புவியெங்கும் தடைசெய்த புலவன் நீயே!

காட்டினிலே வாழுகின்ற மிருகம் கூடக்
            கண்டவுடன் பகைதனையே எதிர்க்கும்! சின்ன
கூட்டினிலே வதிகின்ற பறவை கூடக்
            குஞ்சுகளை நன்முறையில் வளர்க்கும்! ஆனால்
நாட்டினிலே வசிக்கின்ற தமிழன் மட்டும்
            நற்றமிழைக் காத்திடவே மறந்த தேனோ?
பாட்டினிலே மொழிப்பற்றை ஊட்டி வைத்த
            பாரதத்தாய் பெற்றெடுத்த அறிஞன் நீயே!

5 commentaires:

  1. பாட்டினிலே மொழிப்பற்றை ஊட்டி வைத்த
    பாரதத்தாய் பெற்றெடுத்த அறிஞன் பாரதியின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாரதியின் பாட்டைப் படித்துப் பதிவளித்தீா்!
      சீரடியில் நெஞ்சம் செழித்து!

      Supprimer
  2. காசுக்கே விலைபோகும் கயவ ராலே
    கற்கண்டாம் சுதந்திரமும் கசக்கு தய்யா!

    அருமை.. அருமை...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கையூட்டு கட்சிதரும் ஆட்சியில் நாடெய்தும்
      மையூட்டு வன்னிருளில் மாய்ந்து!

      Supprimer

  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...

    http://blogintamil.blogspot.in/2013/02/2.html

    RépondreSupprimer