Affichage des articles dont le libellé est திருஅருட்பா அரங்கம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est திருஅருட்பா அரங்கம். Afficher tous les articles

dimanche 29 décembre 2013

dimanche 10 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 3




கருணைக்கடல்

அழகுக் கிளியே! என்றென்னை
     ஆசை பொங்கக் கொஞ்சியவள்!
பழகு நிலவே பிள்ளையுடன்
     பாட்டுப் பாடி ஆடியவள்!
எழுது பாடம்! விரல்பிடித்தே
     எண்ணும் எழுத்தும் சூடியவள்!
அழுது தொழுது நோம்பேற்ற
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

பள்ளி சென்று படித்திடுவாய்!
     பாதை பார்த்துச் சென்றிடுவாய்!
துள்ளிக் குதித்தே ஆடாதே!
     தூர மாகப் போகாதே!
கள்ளிக் காட்டுப் பக்கத்தில்
     கவனம் தேவை என்கண்ணே!
அள்ளி அணைத்து வழிசொன்ன
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

வெளியே செல்லும் பொழுதெல்லாம்
     வீதி வென்று பார்த்திடுவாள்!
கிளியே போன்று சிலசொல்லைக்
     கிளம்பும் முன்னே உரைத்திடுவாள்!
துளியே துயரம் என்முகத்தில்
     துன்னக் கண்டு துடித்திடுவாள்!
ஒளியே! உயிரே! என்தாயே!
     ஓதும் கருணைப் பெருங்கடலாம்!

திரும்பி இல்லம் வரும்வரையில்
     திண்ணை மீதும், படிமீதும்,
அரும்பிப் பெருகும் கவலையுடன்
     அமர்ந்து நெஞ்சம் வாடிடுவாள்!
விரும்பி ஒன்றும் தனக்காக
     வேண்ட வில்லை! இனிக்கின்ற
கரும்பின் சாறே என்அன்னை
     காக்கும் கருணைப் பெருங்கடலாம்!

தன்னின் உணவை எனக்கீந்து
     தண்ணீர் மட்டும் அருந்தியதை!
என்னின் உயர்வாய் ஒருபொருளும்
     இல்லை என்றே எண்ணியதை!
பொன்னின் மணியாய் என்புலமை
     பொலியக் கண்ட பொங்கியதை!
என்றன் உயிரும் மறந்திடுமோ?
     என்தாய் கருணைப் பெருங்கடலாம்!

கருணைக்கடல் - பகுதி 2




கருணைக்கடல்

தொடக்கக் கவிதை

இனிக்கும் கவிதை அரங்கத்தை
     இருகை கொண்டு திறக்கின்றேன்!
மினுக்கும் பட்டுப் பூச்சியென
     மிதக்கும் வண்ணக் கற்பனைகள்!
நினைக்கும் பொழுதே தேனூறும்
     நேயத் தமிழின் திருப்பாக்கள்!
எனக்கும் கவிதைக் கலையூந்தே
     என்றும் காப்பாய் தமிழணங்கே!

பின்னைப் பிறக்கும் பிறவிகளில்
     அன்னைத் தமிழின் மைந்தனென
என்னைப் பிறக்க வைத்திடுவாய்
     பொன்னை நிகர்த்த திருராமா!
தென்னை நல்கும் இளநீராய்,
     தென்றல் நல்கும் நல்லிதமாய்,
முன்னைத் தமிழை நான்பாட
     முகுந்தா! முகிலா! அருள்வாயே!

கம்பன் கழகக் கவிஞர்கள்
     கருணைக் கடலில் நீந்திடவே
இம்மன் றேறி வந்திடுவார்!
     இனிக்கும் தமிழைத் தந்திடுவார்!
நம்மின் நெஞ்சம் தேனேந்த!
     நல்லோர் வாழ்ந்த மாண்பேந்த!
செம்பொன் இராமா அருளுகவே!
     செல்வத் தமிழ்த்தாய் ஓங்குகவே!

வள்ளல் படைத்த அருட்பாவை
     வடிவாய் ஓதும் அரங்கிரண்டில்
உள்ளம் மணக்கும் வண்ணத்தில்
     உயர்ந்த கருணைக் கடல்நீந்தத்
தௌ்ளத் தெளிந்த மனத்தோடு
     திரண்டு வந்த உறவுகளே!
அள்ள அள்ளச் சுரக்கின்ற
     அன்பால் வணங்கி மகிழ்கின்றேன்!

நிறைவு கவிதை

பலாச்சுளைப் பாக்களைப் பாடும் தணிகா
உலாவரும் பண்பின் உரு!

மகத்துவம் மிக்க மலர்க்கவி தந்தார்
அகத்துள் தமிழை அணிந்து!

கருணைக் கடலில் குளித்த..மதி வாணன்
உருவை அடையும் ஒளி!

அருமை அருணா அளித்தார் கவிதை
கருணைக் கடலைக் கடைந்து!

பாப்புப் படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

அய்யா சிவஅரியார் இங்களித்த அந்தமிழில்
நெய்யாய் உருகும் நினைவு!

பூக்களாய் இங்குப் பொழிந்திட்ட பக்களை
ஈக்களாய் மொய்த்தோம் இனித்து!

சிவப்பிர காசம் சிறப்புறும் வண்ணம்
தவத்தமிழ் தந்தார் தழைத்து!

கொஞ்சும் தமிழெடுத்துப் பெஞ்சமின் தேன்கொடுத்தார்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!

மல்லன் மனத்துள் மணக்கும் கருணைமலர்
மல்லிகா என்பேன் மகிழ்ந்து!

கருணைக் கடலைக் கவிதையில் தந்தார்
பெருமை அனைத்தும் பிணைத்து!

தலைவர் சிமோன்இங் களித்த தமிழ்ப்பா
நிலையென நிற்கும் நிலத்து!

சந்த நடையொளிரத் தந்த கவிதைகள்
முந்தும் புகழை முனைந்து!

பாப்பு படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

கருணைக் கடலின் கவிதந்த
     கவிஞர் வாழ்க! ஒளிர்கின்ற
அருணைத் தமிழின் அகங்கொண்ட
     அன்பர் வாழ்க! இவ்வரங்கைப்
பெருமை செய்ய வந்தமர்ந்த
     பெரியோர்! பெண்டீர்! வாழ்க!நல்
அருமை மனத்தோன் பாரதிநான்
     அளித்தேன் நன்றி! சந்திப்போம்!

தொடரும்

samedi 9 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 1

                                                       [என் தாயாருடன் நான்]


கருணைக்கடல்

அம்மா அன்பு இரண்டல்ல!
     அமுதும் தேனும் வேறல்ல!
இம்மா நிலத்தில் உயர்ந்தொளிரும்
     இறைவன் கோயில் இணையில்லை!
சும்மா கிடந்த எனையிங்குச்
     சுடரும் பொன்னாய் மாற்றியவள்!
செம்மாந் துரைப்பேன்! தாய்என்னும்
     சீரே கருணைப் பெருங்கடலாம்!

பத்துத் திங்கள் எனையேந்திப்
     பட்ட பாட்டை எண்ணுகிறேன்!
கத்தும் வலியை நீயேற்றுக்
     கண்ணே என்று அணைத்தாயே!
முத்தும் மணியும் பொன்பொருளும்
     முத்தம் ஒன்றுக் கீடாமோ?
கொத்து மலரே தாயுள்ளம்
     குளிர்ந்த கருணைப் பெருங்கடலாம்!

கண்ணின் இமைபோல் காத்திட்டாள்
     கண்ணீ ராலே நோய்தீர்த்தாள்!
விண்ணில் உலவும் விண்மதியாய்
     மண்ணில் என்னை நினைத்திட்டாள்!
புண்ணில் கிடந்த காலத்தில்
     பண்ணில் என்னைப் படித்திட்டாள்!
எண்ணில் பெருகும் தாய்அழகே!
     இனிக்கும் கருணைப் பெருங்கடலாம்!

கோலம் வரைந்து சீராட்டி!
     கொஞ்சும் மொழியால் பாராட்டி!
காலம் அறிந்து பாலூட்டி!
     கண்கள் உறங்கத் தாலாட்டி!
ஞாலம் புகழும் தமிழூட்டி!
     நல்லோர் நவின்ற வழிகாட்டி!
ஆலம் போன்றே வாழ்வீந்த
     அன்னை கருணைப் பெருங்கடலாம்!

மூப்புப் பருவம் அடைந்தாலும்
     மூளை முழுதும் என்நினைவே!
யாப்புச் சுவையா? இசைக்கின்ற
     யாழின் சுவையா? இவ்வுலகின்
தோப்புக் கனிகள் அத்தனையும்
     தோற்றே ஓடும்! வாழ்நூலின்
காப்புக் கவிதை தாயன்றே!
     கமழும் கருணைப் பெருங்கடலாம்!

09.11.2013 தொடரும்