Affichage des articles dont le libellé est குறள் வெண்செந்துறை. Afficher tous les articles
Affichage des articles dont le libellé est குறள் வெண்செந்துறை. Afficher tous les articles

samedi 19 juillet 2025

குறள் வெண்செந்துறை

 


கழுத்துார் முத்துமாரியம்மன்

குறள் வெண்செந்துறை

 

முத்தமிழ் வேண்டி முத்து மாரியைச்

சித்தம் பதிக்கச் சீர்கள் சிறக்குமே!

 

கழுத்துார் மாரியின் கண்கள் கண்டிட

அழுத்துந் துயர்கள் அனைத்தும் அகலுமே!

 

அன்னை மாரியின் அணிமலர் அடிகள்

முன்னை வினைகளை முற்றும் முடிக்குமே!

 

எங்கள் மாரியின் இணையடி தொழுதிட

அங்கப் பிணியின் அடிவேர் அறுமே!

 

காக்கும் மாரியின் கால்கள் பற்றிட

வாக்குச் சிறந்து வளர்புகழ் தொடருமே!

 

சத்தி மாரியின் தண்மலர்த் தாள்கள்

பத்துப் பிறப்பின் பாவம் நீக்குமே!

 

கன்னல் மாரியின்  கமழ்மலர்ப் பாதம்

இன்னல் அகற்றி இன்பம் அளிக்குமே!

 

எங்குல மாரியை ஏத்திப் பாடிட

அங்குல அளவும் அல்லல் இல்லையே!

 

வயல்சூழ் மாரியின் மலரடி போற்றிட

உயிர்சூழ் வினைகள் ஓடி மறையுமே!

 

முத்தா லம்மன் முன்னே இருந்தால்

சித்தாழ் ஞானஞ் செழித்துப் பூக்குமே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

17.05.2025

jeudi 1 mai 2025

தொழிலாளர் திருநாள்

 


தொழிலாளர் திருநாள்

[குறள் வெண்செந்துறை]

 

ஏரோட்டி எருவூட்டி இளைத்தோர்கள் இசைக்கும் திருநாள்!

சீரூட்டிச் செழிப்பூட்டித் திகைப்பூட்டிச் சிறக்கும் பெருநாள்!

 

உழைப்பாளி குறன்முழக்கம் உலகமெலாம் ஒலித்த திருநாள்!

கழைக்கூலி யாளர்களின் கண்ணீர்நீர் இனித்த பெருநாள்!

 

நெசவாளி நெஞ்சத்துள் நேசமலர் பூத்த திருநாள்!

வசைபாடி வதைத்தவரை வாயடக்கி வைத்த பெருநாள்!

 

பாட்டாளி யனைவரையும் கூட்டாளி யாக்கும் திருநாள்!

காட்டேறி யாட்டத்தைக் காலெடித்துப் போக்கும் பெருநாள்!

 

தொழிலாளர் ஒற்றுமையின் தோளோங்கி வென்ற திருநாள்!

பொழிலாக இவ்வுலகைப் புனைந்தோரின் இன்பப் பெருநாள்!

 

தொழிலுற்றும் துன்புற்றும் துடித்தவரின் எழுச்சித் திருநாள்!

இழிவுற்றும் இருளுற்றும் இருந்தவரின் வெற்றிப் பெருநாள்!

 

உழைக்கின்ற மக்கள்தம் உரிமையினை மீட்ட திருநாள்!

அழைக்கின்ற விருந்தாக அருஞ்சுவையை யிட்ட பெருநாள்!

 

ஆலைகளின் அதிகாரம் அடங்கிடவே செய்த திருநாள்!

சோலைகளின் வண்டாகச் சுழன்றாட வைத்த பெருநாள்!

 

இரும்புருக்கும் பட்டறையுள் கரும்பினிப்புத்  தந்த திருநாள்!

எலும்புருக்கும் கொடியவர்க்கு மருந்தளிப்புக் கண்ட பெருநாள்!

 

தொழுகின்ற திருக்கோயில் தொழிற்கூடம் என்றே போற்று!

பொழிகின்ற மழையின்பம் பொதுவுடைமை என்றே சாற்று!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.05.2025