mardi 4 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 24]




ஏக்கம் நுாறு [பகுதி - 24]

இனிக்கின்ற சிவப்பல்வாத் துண்டைப் போன்றே
     இழுக்குதடி தேனுதடு! கவிஞன் என்னுள்
சனிக்கின்ற கற்பனைக்கும் எட்டா வண்ணம்
     தழைக்குதடி உன்னழகு! துயா் மறந்து
தனிக்கின்ற நல்லிரவில் தொடா்ந்து வந்து
     தாக்குதடி இன்கனவு! பூக்கள் தம்மை
நனைக்கின்ற மார்கழிபோல் நாளும் என்னை
     நனைக்கின்ற கவிமழையே! ஏங்கும் நெஞ்சம்! 89

மணக்கின்ற மலரினங்கள் ஒன்றாய்ச் சோ்ந்து
     மாநாடு அமைத்தவளின் அழகைப் பேசும்!
கணக்கின்ற பெருஞ்சுமையைப் பஞ்சாய் மாற்றும்
     கன்னியெழில் சிந்தனைகள்! கோடைச் சூட்டைத்
தணிக்கின்ற இளநீராய்க் குளிர்ந்த சொற்கள்!
     தண்முத்து அணிவகுத்து அமா்ந்த பற்கள்!
திணிக்கின்ற மூட்டையென இதயக் கூட்டைச்
     சோ்கின்ற ஏக்கங்கள் தொடர வேண்டும்! 90

                                         (தொடரும்)

4 commentaires:

  1. இனிக்கும் தமிழய்யா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிக்கும் தமிழில் இனிக்கும் அவளைக்
      கணிக்கும் கவியும் இனிக்கும்! - பனியில்
      குளிக்கும் மலராய் மனங்குளிரும்! வண்டு
      களிக்கும் மலராய்க் கமழ்ந்து!

      Supprimer
  2. “மணக்கின்ற மலரினங்கள் ஒன்றாய்ச் சோ்ந்து
    மாநாடு அமைத்தவளின் அழகைப் பேசும்!“

    அடடா... என்ன கற்பனை!! வியக்கின்றேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அலகிலாக் கற்பனையை அன்னவள் நல்க
      உலகெலாம் சுற்றிவரும் உள்ளம்! - மலரெலாம்
      சொக்கிக் களிக்கும் சுடரழகில் என்னெஞ்சம்
      சிக்கிக் களிக்கும் செழித்து!

      Supprimer