lundi 30 octobre 2017

குற்றெழுத்து விருத்தம்

குற்றெழுத்து விருத்தம்
  
1.
கனிநல முடையது! கவிநல முடையது!
நனிநல முடையது! நறுமண முடையது!
பனிநல முடையது! படரெழில் உடையது!
தனிநல முடையது! தமிழெனும் ஒளிமொழி!
  
2.
கலையெழில் உடையது! கவரெழில் உடையது!
அலையெழில் உடையது! அணியெழில் உடையது!
மலையெழில் உடையது! மணியெழில் உடையது!
சிலையெழில் உடையது! செழுதமிழ் ஒளிமொழி!
  
3.
மதிநல முடையது! மறைநல முடையது!
நதிநல முடையது! நடுநிலை யுடையது!
துதிநல முடையது! சுதிநல முடையது!
ததிநல முடையது! தமிழெனும் ஒளிமொழி!
  
4.
அருளொளி யுடையது! அறிவொளி யுடையது!
பொருளொளி யுடையது! புகழொளி யுடையது!
திருவொளி யுடையது! திணையொளி யுடையது!
குருவொளி தருவது! கொழிதமிழ் ஒளிமொழி!
  
5.
மறமொளி யுடையது! மலரொளி யுடையது!
அறமொளி யுடையது! அழகொளி யுடையது!
உறவொளி யுடையது! உலகொளி யுடையது!
நெறியொளி யுடையது! நிறைதமிழ் ஒளிமொழி!
  
6.
பொதுநல முடையது! புவிநல முடையது!
புதுநல முடையது! புனைநல முடையது!
மதுநல முடையது! மனநல முடையது!
முதுநல முடையது! முனிநலம் ஒளிமொழி!
  
7.
வகைவகை யுடையது! வனமெழில் உடையது!
தொகைதொகை யுடையது! துணிவினை உடையது!
பகைபகை ஒழிவுறு படைவகை யுடையது!
தகைதகை யுடையது! தமிழெனும் ஒளிமொழி!
  
8.
சுடரெழில் உடையது! சுவைபல தருவது!
படரெழில் உடையது! பயிரெழில் உடையது!
மடலெழில் உடையது! மனையெழில் உடையது!
தொடரெழில் உடையது! துணைதரும் ஒளிமொழி!
  
9.
விடியெழில் உடையது! வியனெழில் உடையது!
கொடியெழில் உடையது! குடியெழில் உடையது!
அடியெழில் உடையது! அமுதினை உடையது!
கடியெழில் உடையது! கனிவருள் ஒளிமொழி!
  
10.
கொடையெழில் உடையது! குயிலெழில் உடையது!
விடையெழில் உடையது! மிளிரெழில் உடையது!
தொடையெழில் உடையது! சுனையெழில் உடையது!
நடையெழில் உடையது! தமிழெனும் நயமொழி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
30.10.2017

வெளிவிருத்தம்


மூன்றடியால் வந்த வெளிவிருத்தம்
[மா + காய் + மா + காய் + தனிச்சொல்]
  
என்மகளே!
  
1.
சின்ன விழிதிறந்து சிரிக்கும் எழில்கண்டு - என்மகளே!
தின்னுஞ் சுவையாவும் திரண்டு வந்ததடி - என்மகளே!
என்ன தவம்செய்தேன்? இன்பம் பெருகுதடி - என்மகளே!
  
2.
பிஞ்சி விரலழகும் பேச வருமழகும் - மல்லிகையே!
நெஞ்சில் கால்வைத்து நிற்கும் பேரழகும் - மல்லிகையே!
கொஞ்சிக் கொடுத்தநலம் கோடிப் பொன்னிணையோ - மல்லிகையே!
  
3.
கண்ணில் மையிட்டுக் கண்ணார் பொட்டிட்டுப் - பூங்குயிலே!
வண்ண மலரிட்டு வாசப் பொருளிட்டுப் - பூங்குயிலே!
விண்ணின் முழுநிலவு வீட்டில் தவழுதடி - பூங்குயிலே!
  
4.
பட்டில் உடையணிந்து பவள மணிசூடி - இளங்கிளியே!
தொட்டில் உனைக்கிடத்தித் துாங்கத் தாலாட்டி - இளங்கிளியே!
எட்டுத் திசையழகும் என்முன் தோன்றுதடி - இளங்கிளியே!
  
5.
முல்லை அடிகளை..நான் முகரும் பொழுதெல்லாம் - வெண்குருகே!
தொல்லை மறக்கின்றேன்! சொக்கி மகிழ்கின்றேன் - வெண்குருகே!
கொல்லை மலர்களின் கூட்டே உன்னுருவம் - வெண்குருகே!
  
6.
முழந்தாள் இட்டழகாய் முன்னே நகர்ந்துவரும் - பூஞ்சிட்டே!
கொழுந்தாய்த் தலையாட்டிக் கொஞ்சிச் சிரிக்கின்ற - பூஞ்சிட்டே!
பழந்தான் பழுக்குதடி! பாக்கள் பிறக்குதடி - பூஞ்சிட்டே!
  
7.
ஆடும் செங்கீரை அழகை நான்கண்டு - என்னுயிரே!
பாடும் புலமைமிகும்! படரும் பசுமைமிகும் - என்னுயிரே!
வாடும் நிலையாவும் வற்றி வரண்டுவிடும் - என்னுயிரே!
  
8.
கொட்டும் சப்பாணி கோல எழில்கண்டு - பொன்மயிலே!
தட்டும் இசையாவும் தாங்கும் செவிகொண்டு - பொன்மயிலே!
கட்டும் ஆசைக்குக் கணக்கே இல்லையடி - பொன்மயிலே!
  
9.
வட்டில் அமுதேந்தி வள்ளல் குணமேந்தி - மலர்கொடியே!
வட்ட மாமதியை வா..வா.. என்றழைத்தாய் - மலர்கொடியே!
முட்டும் இனிமைக்கு முடிவே இல்லையடி - மலர்கொடியே!
  
10.
மெல்ல நடந்துவரும் விந்தை அடியழகை - மின்தேரே!
சொல்ல மொழியில்லை! தொடரும் கடலலையாய் - மின்தேரே!
வெல்லச் சுவைபாயும்! வேண்டும் நலங்கூடும் - மின்தேரே!
  
11.
அந்த அப்பூச்சி அழகுக் கிணையேது - மென்காற்றே!
சந்த மணியொளியைச் சாற்ற சுவையேது - மென்காற்றே!
தந்த முத்தத்தின் தண்மைக் கீடேது - மென்காற்றே!
  
12.
தலைமேல் உனைத்துாக்கித் தாங்கி நடந்ததையும் - என்மகளே!
கலைபோல் உனையெண்ணிக் காத்துக் கிடந்ததையும் - என்மகளே!
மலைபோல் மனங்கொண்டே யாவும் மறந்ததுமேன் - என்மகளே?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
0.10.2017.

முத்தமிழே!


முத்தமிழே!
  
ஓங்குபுகழ் ஒண்டமிழே! ஓதும் கவிசிறக்க
வீங்குபுகழ் ஆற்றலை வீசு!
  
அன்னைத் தமிழே! அருளமுதே! ஆருயிரே!
என்னை அளித்தேன்! இயக்கு!
  
செம்மொழித் தாயே! செழுந்தமிழே! உன்னீடாய்
எம்மொழியும் இல்லை எழில்!
  
தித்திக்கும் செந்தமிழே! தென்மொழியே! தேனுாற்றே!
எத்திக்கும் இல்லையுனக் கீடு!
  
முத்தமிழே! முக்கனியே! முல்லை மலர்க்காடே!
புத்தமிழ்தே! தாராய் புகழ்!
  
கன்னல் தமிழே! கவிஞன் வணங்குகிறேன்!
இன்னல் அனைத்தும் இறக்கு!
  
முன்னைத் தமிழே! முதன்மொழியே! என்பாட்டில்
பொன்னை மணியைப் புகுத்து!
  
சங்கத் தமிழே! தனித்தபுகழ்ச் செம்மொழியே!
பொங்கல் சுவையைப் பொழி!
  
தாயே! தமிழே! தழைத்தசுவைப் பாக்களை
வாயே இனிக்க வழங்கு!
  
இன்மொழியே! செந்தமிழே! என்றன் எழுத்தெல்லாம்
பொன்மொழியே ஆகப் புகல்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன் - 30.10.2017
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
30.10.2017

dimanche 29 octobre 2017

செம்மொழியே!

செம்மொழியே!
  
சந்தமொளிர் தண்டமிழே! தங்கக் கவிபாடச்
சிந்தையொளிர் சீர்களைச் செப்பு!
  
வண்ணமொளிர் வண்டமிழே! வற்றாக் கவியூற்றை
எண்ணமொளிர் வண்ணம் இடு!
  
சீரொளிரும் செந்தமிழே! செப்பும் கவிதைகளைப்
பேரொளிரும் வண்ணம் பெருக்கு!
  
அன்பொளிரும் அந்தமிழே! ஆரமுதே! ஆருயிரே!
இன்பொளிரும் மாண்பை இயம்பு!
  
பண்பொளிரும் பைந்தமிழே! பாட்டரசன் என்னாவில்
மண்ணொளிரும் மாட்சி வழங்கு!
  
பொன்னொளிரும் பூந்தமிழே! நெஞ்சுள் குறள்நெறிகள்
நின்றொளிரும் வண்ணம் நிறுவு!
  
சிறப்பொளிரும் செம்மொழியே! திக்கெட்டும் உன்பேர்
பறந்தொளிரும் என்பேன் பணிந்து!
  
பூவொளிரும் பொற்றமிழே! பொங்கும் புலமையினால்
பாவொளிரும் நன்றே பழுத்து!
  
பண்ணொளிரும் எங்கள் பசுந்தமிழே! உன்னழகால்
கண்ணொளிரும் காதல் கமழ்ந்து!
  
பாரொளிரும் மேன்மை படர்தமிழே! எந்நாளும்
தாரொளிரும் வாழ்வினைத் தா!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
29.10.2017

திருமுருகா!

திருமுருகா!
  
வண்ணமயில் மீதமரும் வள்ளலே! என்னுடைய
எண்ணமயில் மீதமரும் இன்று!
  
வள்ளியுடன் வந்து வளரும் குழந்தையெனக்[கு]
அள்ளி அளிப்பாய் அமுது!
  
ஆறுமுகங் கொண்ட அணியழகா! என்வாழ்வில்
ஏறுமுகம் யாவும் இடு!
  
வெற்றிவேல் வேந்தனே! வேகும் வினைநீங்கப்
பற்றினேன் உன்றன் பதம்!
  
சேவற் கொடியுடையாய்! சிந்தை யுனைக்காண
ஆவற் கொளுமே அழுது!
  
பழனி மலைவாழும் பாலா! தமிழாம்
கழனி உழ..அருள் காட்டு!
  
ஓளவைத் தமிழுண்ட அன்புத் திருமுருகா!
கௌவும் கருத்தைக் கொடு!
  
செந்துார் வடிவழகா! சீர்மேவி நான்வாழ
வந்துார் அடியேன் மனத்து!
  
சோலை நகர்வாழும் துாயவனே! உன்னுடைய
காலை அடையும்நாள் காட்டு!
  
குன்றின்மேல் வாழும் குமரா!என் நெஞ்சமெனும்
மன்றின்மேல் வாழ்ந்திட வா!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
29.10.2017

samedi 28 octobre 2017

வெளிவிருத்தம்

வெண்பா மேடை - 46
  
வெளிவிருத்தம்!
  
மூன்றடியால் வரும், அல்லது நான்கடியால் வரும்.
  
ஒவ்வோரரடியின் ஈற்றிலும் ஒரே சொல் வரும். தனிக்கோடு பெறும்.
  
மூன்றடிகள் பெற்று நடக்கும் வெளிவிருத்தத்தைச் சிந்தியல் வெண்பாவின் இனமாகவும், நான்கடிகளைப் பெற்று நடக்கும் வெளிவிருத்தத்தை அளவியல் வெண்பாவின் இனமாகவும் கொள்ளலாம்.
  
பொருள் முற்றாத அடிகளைக் கொண்ட பாவை நிலைவெளிவிருத்தம் என்றும், பொருள் முற்றிய அடிகளைக் கொண்ட பாவை மண்டில வெளிவிருத்தம் என்றும் வேறுபடுத்திக் கூறுவர்.
  
வெண்டளையில் அமைந்த வெளிவிருத்தம் உண்டு [ தனிச்சொல் முன் வெண்டளை இல்லாமலும் வரலாம்]
  
வெளிவிருத்தத்தில் எல்லாச் சீர்களும், தளைகளும் வரலாம்.
  
வெளிவிருத்தச் செய்யுளின் நான்கடிகளும் ஒரே எதுகை பெற்றுவருவது சிறப்புடைத்து. முதலிரண்டடிகள் ஓரெதுகையாகவும். பின்னிரண்டடிகள் ஓரெதுகையாகவும் நிற்றலுமுண்டு. [அடியளவும், சீரின் தன்மையும் ஒத்ததாய் இருக்க வேண்டும்]
  
அதாவது, வெளிவிருத்ததின் முதலடி சிந்தடியாயின் மற்ற அடிகளும் சிந்தடியாகவும், முதலடி அளவடியாயின் மற்ற அடிகளும் அளவடியாகவும், முதலடி நெடிலடியாயின் மற்ற அடிகளும் நெடிலடியாகவும், முதலடி கழிநெடிலடியாயின் மற்ற அடிகளும் கழிநெடிலடியாகவும் அமைந்திருக்க வேண்டும்.
  
செய்யுளின் முதலடியின் மாச்சீர் நின்றவிடத்தில் மற்ற அடிகளிலும் மாச்சீரும், விளச்சீர் நின்றவிடத்தில் விளச்சீரும், காய் நின்றவிடத்தில் காய்ச்சீரும். கனி நின்றவிடத்தில் கனிச்சீரும் நிற்க வேண்டும்.
  
நான்கடி மண்டில வெளிவிருத்தம்

பித்தம் பெருகுதடி! பெருந்தொல்லை புரியுதடி! - செல்லம்மா!
முத்தம் கேட்குதடி! முகத்தழகு வாட்டுதடி! - செல்லம்மா!
நித்தம் ஏங்குதடி! நெஞ்சுருகிப் பொங்குதடி! - செல்லம்மா!
சித்தம் இரங்காயோ? செந்தேனை அருளாயோ? - செல்லம்மா!
  
நான்கடி நிலைவெளிவிருத்தம்
துாங்கும் பொழுதினிலும் சுடர்கின்ற முழுநிலவாய்ச் - செல்லம்மா!
ஏங்கும் கனவுகளை எப்பொழுதும் எனக்கிட்டுச் - செல்லம்மா!
தேங்கும் உணர்வுகளைச் சிந்தாடும் நினைவுகளைச் - செல்லம்மா!
தாங்கும் நிலையின்றித் தவிக்கின்றேன்! அணைத்திடுவாய் - செல்லம்மா!
  
நான்கடி வெண்டளை வெளிவிருத்தம்!
மீனாடும் கண்ணழகில் நானாடி நிற்கின்றேன் - செல்லம்மா!
தேனுாறும் சொல்லழகில் சீரூறிச் சொக்குகிறேன் - செல்லம்மா!
வானுாரும் மேகமென வந்துாறும் கற்பனைகள் - செல்லம்மா!
ஊனுாறும் என்னாசை உன்னுறவை வேண்டுதடி - செல்லம்மா!
  
நான்கடியால் வந்து அடியோறும் பொருள் முற்றுப்பெறும் மண்டில வெளிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.10.2017

jeudi 26 octobre 2017

செல்லம்மா


செல்லம்மா


எடுப்பு
என்னாசைச் செல்லம்மா - என்மேல் காதல்
இருக்குதெனச் சொல்லம்மா!
                  [என்னாசை]
   
தொடுப்பு

இன்தோசை நீயம்மா - பசியறிந்து
ஈந்திடவே நில்லம்மா!
                  [என்னாசை]
      
முடிப்பு
அன்பூறும் அமுதுாறும் அகமுடைய தாயம்மா - நான்
அழகூறும் முகங்கண்டு ஆடுகின்ற சேயம்மா!
இன்பூறும் கவிகேட்டும் ஏன்மனத்தில் காயம்மா - நாம்
இனிப்பூறும் கனவெழுத இடு..சேலைப் பாயம்மா!
                  [என்னாசை]
   
புன்னகை எழிலேந்திப் பூத்தாடும் பூவம்மா - நீ
பொன்னகைப் பொலிவேந்திக் கூத்தாடும் நாகம்மா!
மென்னடை அழகேந்தி எனையாளும் பா..அம்மா! - நீ
இன்னடைச் சுவையேந்தி மூத்தாடும் தீவம்மா!
                  [என்னாசை]
   
கண்ணிரண்டும் நற்காதல் கடலாடும் மீனம்மா - உன்
கையிரண்டும் தொட்டவிடம் கனியூறும் தேனம்மா!
மண்மகிழ்ந்து செழித்திடவே மழைபொழியும் வானம்மா - நாம்
மனமகிழ்ந்து குளிர்ந்திடவே மறுப்பதுவும் ஏனம்மா?
                  [என்னாசை]
   
மயிலம்மா! மானம்மா! மருக்கொழுந்துக் காடம்மா - நீ..என்
உயிரம்மா! உடலம்மா! உறவாடக் கூடம்மா!
குயிலம்மா! கொக்கம்மா! குணங்கூறும் ஏடம்மா - இன்பப்
பயிரம்மா! பணிவம்மா! பாரில்ஏது ஈடம்மா?
                  [என்னாசை]
   
சிங்கார இளமேனி தங்கமணித் தேரம்மா - நீ
செப்புமொழி அத்தனையும் செவ்வாழைத் தாரம்மா!
மங்காத சுடரேந்தி மணக்கும்உன் பேரம்மா - தினம்
மயங்குகிறேன் அம்மம்மா! வந்தென்னைச் சேர்..அம்மா!
                  [என்னாசை]
   
26.10.2017

mercredi 25 octobre 2017

மத்தாப்புப் பாடல்



மத்தாப்புப் பாடல்

மத்தாப்பு
மங்கையரின் சிரிப்பு!
                                
பொட்டு வெடிகள்
பூவிழிகள்
வெட்டும் அடிகள்!

சுருள் வெடிகள்
சொக்கச் செய்யும்
சுழல் விழிகள்!

மின்னும்
பூச்சரங்கள் - பாடும்
பாச்சரங்கள்!

வானவேடிக்கை
வண்ண மலர்த்தோட்டம்!

சுற்றும் வட்டங்கள்
முற்றும் கனவுகள்!

பூட்வானம்
மழலையரின் விளையாட்டு!

ஊசி வெடி
காதலியின் கோபம்!
ஆனை வெடி
மனைவியின் கோபம்!

பாயும் இராக்கெட்
பாவையரின் விழியம்பு!

சிதறும் அணுக்குண்டு
காதலரின் பிரிவு!

வத்தி வைப்பவரை
நினைவூட்டும்
வத்தி வெடிகள்!

மிக நீண்ட
வெடிச்சரங்கள்!
தொடரும் பகைமை..
நீள்துயர் நிலைமை..

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:         
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்.
20.01.2017

அவளிடத்தில்.....

அவளிடத்தில்....
  
இரண்டு மீன்கள்!
ஆயிரம் வண்ணங்கள்!
  
இரண்டு இதழ்கள்!
ஆயிரம் மலர்கள்!
  
ஒற்றை முக்கோண மூக்கு!
ஆயிரம் கணக்குகள்!
  
இரண்டு செவிகள்!
ஆயிரம் கவிகள்!
  
இரண்டு கன்னங்கள்!
ஆயிரம் சின்னங்கள்!
  
இரண்டு புருவங்கள்!
ஆயிரம் தென்னங்...கள்!
  
ஒற்றை பார்வை!
ஆயிரம் மின்னல் கீற்று!
  
இரண்டு தோகைகள்!
ஆயிரம் விசிறிகளின் காற்று!
  
ஒற்றை பொட்டு
ஆயிரம் கனவுகள்!
  
ஒற்றை நாக்கு
ஆயிரம் மது ஊற்று!
  
ஒற்றை சொல்
ஆயிரம் தேனடை!
  
அவளழகை முற்றும் பாட
வேண்டும்
ஆயிரம் பிறவிகள்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
25.10.2017