mardi 27 février 2018

கலிப்பா மேடை - 10   

கலிப்பா மேடை - 10
  
நேரிசைக் கலிவெண்பா!
  
கலிவெண்பா ஒருபொருள் நுதலியதாக இருக்க வேண்டும். வெண்பாவைப் போல் வெண்டளை கொண்டிருக்க வேண்டும். வெண்பாவைப் போல் "நாள், மலர், காசு, பிறப்பு" என்ற வாய்பாட்டில் முடிய வேண்டும். சிற்றெல்லை பதின்மூன்று அடிகளாகும். பேரெல்லை அளவில்லை.
  
இரண்டு இரண்டு அடிகளுக்கு எதுகை பெற வேண்டும். அடிதோறும் மூன்றாம் சீரில் மோனை பெற வேண்டும்.
  
கலிப்பாவின் வகையாகிய இப்பாடல் இன்னிசைக் கலிவெண்பா, நேரிசைக் கலிவெண்பா என இரண்டு வகைப்படும்.
  
நேரிசைக் கலிவெண்பாவில் இரண்டடிகளுக்கு ஒரு முறை தனிச்சீர் எதுகையுடன் வரவேண்டும்.
  
துாது, உலா, மடல் ஆகிய பிரபந்தங்களை நேரிசைக் கலிவெண்பாவால் பாடுதல் மரபாகும்.
  
நேரிசைக் கலிவெண்பா
  
நான் பிறந்த புதுவை!
  
அலைதவழ் தண்புதுவை! அந்தமிழ்த் தாயின்
கலைதவழ் பண்புதுவை! கன்னல் - குலைதவழ்
பாக்கள் படைக்கின்ற பாவலர் வாழ்புதுவை!
பூக்கள் மணக்கும் பொழில்புதுவை! - ஈக்களெனச்
சந்தக் கவிமீது தங்கிச் சுவைக்கின்ற
சிந்தை யுடையவரின் சீர்ப்புதுவை! - விந்தையெனச்
சாலை அமைந்திருக்கும்! சோலை மலர்ந்திருக்கும்!
ஆலை நிறைந்திருக்கும்! அன்றாடம் - காலைக்
கதிரழகு கண்ணைக் கவர்ந்திழுக்கும்! கற்றோர்
மதியழகு நெஞ்சை மயக்கும்! - நதியழகு
ஏந்தி நடக்கும் இனிய தமிழுக்குள்
நீந்திக் கிடக்கும் கவிநெஞ்சம்! - பூந்தியெனக்
.....................................................................
.....................................................................
.....................................................................
.....................................................................
வீட்டுக்கோர் பாவலன் மின்னும் புதுவையிலே
பாட்டுக்கோர் பாரதியாய் நான்பிறந்தேன்! - நாட்டினில்
மின்வலை மீதினில் பண்வலை நன்கிட்டு
வன்னிலை பற்றுடன் பொன்னிலை - அன்புடன்
பாட்டின் அரசன்..யான் மீட்டும் தமிழிசையைக்
கேட்டுச் சுவைக்கும் கிளர்புதுவை! - ஏட்டினில்
கொள்ளா அழகுடைய கோலப் புதுவைக்கண்
எல்லாரும் வாழ்வார் இணைந்து!
  
          பாட்டரசர் கி. பாரதிதாசன்
  
நீங்கள் பிறந்த ஊரைக் குறித்து அல்லது வாழும் ஊரைக் குறித்து 24 அடிகளுக்கு மிகாமல் நேரிசைக் கலிவெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் கலிவெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

நான் பிறந்த புதுவை!


நான் பிறந்த புதுவை!
[நேரிசைக் கலிவெண்பா]
  
அலைதவழ் தண்புதுவை! அந்தமிழ்த் தாயின்
கலைதவழ் பண்புதுவை! கன்னல் - குலைதவழ்
பாக்கள் படைக்கின்ற பாவலர் வாழ்புதுவை!
பூக்கள் மணக்கும் பொழில்புதுவை! - ஈக்களெனச்
சந்தக் கவிமீது தங்கிச் சுவைக்கின்ற
சிந்தை யுடையவரின் சீர்ப்புதுவை! - விந்தையெனச்
சாலை அமைந்திருக்கும்! சோலை மலர்ந்திருக்கும்!
ஆலை நிறைந்திருக்கும்! அன்றாடம் - காலைக்
கதிரழகு கண்ணைக் கவர்ந்திழுக்கும்! கற்றோர்
மதியழகு நெஞ்சை மயக்கும்! - நதியழகு
ஏந்தி நடக்கும் இனிய தமிழுக்குள்
நீந்திக் கிடக்கும் கவிநெஞ்சம்! - பூந்தியெனக்
கம்பன் கலையரங்கில் செம்பொன் தமிழமுதை
இம்மண் சுவைக்க எடுத்தோதும்! - நம்மொழியே
பாராண்ட முன்மொழி! சீராண்ட செம்மொழி!
தாராண்ட இன்மொழி! சால்புரைக்கும்! - தேராண்ட
வண்ணத் திருக்கோவில் வாழ்வை நமக்களிக்கும்!
எண்ணம் இனிக்க எழும்ஈசன் - தண்ணருளை
வேண்டிக் கிடப்பரும், விண்ணளந்த - கண்ணனைத்
தீண்டிச் சுவைப்பாரும் சேர்புதுவை! - தோண்டி
வயிறுடை வள்ளல்! மணகுளத்துச் செம்மல்!
உயிருடைக் காப்பென ஓதும்! - தயிருடைய
நற்குளிரை நல்கிடும் செங்கழுநீர் அம்மனின்
பொற்பெயரைப் போற்றும் புகழ்ப்புதுவை! - கற்றொளிர்
வங்க அரவிந்தர் வாழ்ந்த வளர்புதுவை!
அங்கம் அடக்கும்..சித் தானந்தர் - பொங்குமருள்
எங்கும் மணக்கும் எழில்புதுவை! இன்னெறிகள்
தங்கி மணக்கும் தமிழ்ப்புதுவை! - சிங்க
நடைகொண்ட நற்கவி பாரதியின் வல்ல
படைகொண்ட வன்புதுவை! பைந்தேன் - அடைகொண்ட
பாவேந்தர் பாடிப் பறந்த பயன்புதுவை!
நாவேந்தர் நாடும் நறும்புதுவை! - காவேந்தும்
கன்னல் கவிபடைத்த இன்வாணி தாசனின்
மின்னல் தமிழால் மிளிர்புதுவை! - தென்னை
மரமோங்கும்! துாய மரபோங்கும்! வண்மைக்
கரமோங்கும்! தாய்மொழி காக்கும் - உரமோங்கும்!
ஏரி கரையுண்டு! எங்கும்நன் னீர்உண்டு!
வாரி யளிக்கும் வளமுண்டு! - காரிருள்
பொய்யைப் பொசுக்கும் திறமுண்டு! மாண்பூட்டும்
மெய்யை விளைக்கும் விரைவுண்டு! - பொய்கையாய்
பூத்த புகழுண்டு! புண்ணியர் இங்கிருந்து
காத்த கதையுண்டு! கற்புண்டு! - மூத்த
இலக்கணத்தை ஈந்த திருமுருகர் தொண்டால்
தலைநிமிர்ந்த எம்புதுவை! சான்றோர் - நிலைபுதுவை!
என்னுடை ஆசிரியர் இன்னரிய புத்திரரைத்
தன்னுடை மேனியில் தாங்கிய - இன்புதுவை!
அத்தன் அழகினில் ஆழ்ந்து கவிபாடும்
சித்தன் பிறந்த செழும்புதுமை! - முத்தமிழ்
வித்தகர் இன்..வேங்க டேசரின் மென்றமிழால்
இத்தரை ஏத்தும் இசைப்புதுவை! - முத்துச்சீர்
நுாற்கடல் தி.வே.கோ பாலையர் நுண்ணறிவால்
பாற்கடல் இன்பம் பகர்புதுவை! - போற்றும்
அரிந்தார்க் கினியனார் ஆண்ட தமிழால்
செரிந்த சிறப்பில் திகழும் - அரும்புதுவை!
நற்றமிழ் ஏட்டினைப் பற்றுடன் நல்கிய
பொற்பார் இறைவிழியர் சொற்புதுவை! - கற்பார்
களிக்கத் தனித்தமிழ் காண்தமிழ மல்லன்
விளைக்கும் செயலால் வியப்பில் - மிளிர்புதுவை!
ஆழ்ந்த புலமை அரங்க. நடராசர்
சூழ்கவி யாளே சுடர்ப்புதுவை! - பாழ்சேர்
அயலார் அரசைப் புயலாய் எதிர்த்த
இயலிசைப் பாவலர்! ஈடில் - வியப்புடைய
சந்தக் கவிகளைச் சாற்றும் சனார்த்தனர்
வந்து பிறந்த வயற்புதுவை! - விந்தையுடன்
பாநுால் பலபடைத்த பஃறுறை. மாலிறையர்
மாநுால் திறமார் மணிப்புதுவை! - பூநிகர்
ஆயியெனும் மங்கை அளித்திட்ட தொண்டிற்குத்
தாயெனும் மேன்மையைத் தந்திங்கு - வாயிலில்
சின்னம் அமைத்திட்ட தென்புதுவை! நற்கவி
அன்பு நிலவனின் வன்புதுவை! - மன்பதையில்
போற்றும் புதினம் புனைந்த பிரபஞ்சன்
சாற்றும் எழுத்தின் தகைப்புதுவை! - ஆற்றலுடன்
நாட்டு விடுதலையை நாடிய சுப்பையா
காட்டிய சீரில் கமழ்புதுவை! - ஈட்டுபுகழ்
ஆனந்த ரங்கனார் தேனேந்தும் நாட்குறிப்பால்
வானேந்தும் சீர்மையில் வாழ்புதுவை! - கானேந்தும்
கன்னல் கவிஞர் இலக்கியனார் கற்பிக்க
மின்னும் மரபேந்தி வெல்புதுவை! - முன்கலை
கோனேரி சாமியின் கோலத் தமிழ்ச்சந்தம்
வானேறி ஆளும் வளர்புதுவை! - தேனேறும்
நாவலர்! நல்லார் இராமா நுசனாரின்
பாவளம் பூத்த படர்புதுவை! - மாவளப்
பாக்கள் பதித்திட்ட ஏந்துார்ச் சடகோபர்
ஆக்க அமுதின் அணிப்புதுவை! - பூக்கும்
பொழிலாய்த் தமிழைப் புனைந்த சிவனார்
மொழியை முரசென ஏற்ற - எழில்புதுவை!
தொல்காப் பியம்ஆய்ந்து தொன்மை உரைதந்த
நல்லசிவ லிங்கர் நலப்புதுவை! - வெல்லாய்வுச்
சுந்தர சண்முகனார் தந்த சுவடிகளால்
சிந்தை மணக்கும் செழும்புதுவை! - தந்தைபோல்
பண்தீட்டும் எங்கள் பரங்குசப் பூங்கொடியார்
தண்ணுாட்டும் பாக்கள் தழைபுதுவை! - விண்மூட்டும்
மின்னல் தமிழ்க்கனல் விந்தைப் பணியாலே
கன்னல் சுரந்த கவிப்புதுவை! - இன்னல்
அளிக்கும் அயன்மொழியை நீக்கும் அருளி
விளிக்கும் மொழியால் விளைந்த - வளப்புதுவை!
தேர்ந்த இலக்கணச் செம்மல்நற் சுந்தரனார்
ஓர்ந்த நெறியால் உயர்புதுவை! - கூர்விழியார்
தங்கை குழலியும் தங்க அருணாவும்
பொங்கும் கவிசேர் பொழில்புதுவை! - எங்கும்
இருக்கும் எழுகதிர் ஆதவன் தொண்டால்
பெருகும் பெருமையைப் பெற்ற - அரும்புதுவை!
எங்கும் தமிழ்மணக்கும்! இன்பக் கலைமணக்கும்!
சங்க நெறிமணக்கும்! சால்பளிக்கும்! - வங்க
அலைதவழும்! ஆண்ட அறந்தவழும்! அன்பாம்
நிலைதவழும்! நெஞ்சம் நெகிழக் - கலைதவழும்!
வீட்டுக்கோர் பாவலன் மின்னும் புதுவையிலே
பாட்டுக்கோர் பாரதியாய் நான்பிறந்தேன்! - நாட்டினில்
மின்வலை மீதினில் பண்வலை நன்கிட்டு
வன்னிலை பற்றுடன் பொன்னிலை - அன்புடன்
பாட்டின் அரசன்..யான் மீட்டும் தமிழிசையைக்
கேட்டுச் சுவைக்கும் கிளர்புதுவை! - ஏட்டினில்
கொள்ளா அழகுடைய கோலப் புதுவையில்
எல்லாரும் வாழ்வார் இணைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

விருத்த மேடை - 33



விருத்த மேடை - 33
  
அறுசீர் விருத்தம் - 33
[தேமா 5 + கூவிளம்]
  
நேர்படப் பேசு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
அஞ்சிப் பேசல், கெஞ்சிப் பேசல்,
   அல்லல் மூட்டுமே!
விஞ்சிப் பேசல், வீணே பேசல்,
   மேன்மை ஓட்டுமே!
கொஞ்சிப் பேசல் குற்றம் பேசல்
   நஞ்சை ஊட்டுமே!
நெஞ்சம் கொள்ள நேரே பேசல்
   நேயம் மீட்டுமே!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
தேமா 5 + கூவிளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, ஐநதாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
முல்லை மலர்க்காடே! முந்து சுவைக்கவியே!
கொல்லை வளமே! குளிர்தமிழே! - எல்லையிலா
முன்னே உதித்தவளே! முத்தமிழே! நற்றமிழே!
என்னே..உன் தோற்ற எழில்!
  
செவ்வந்திப் பூவே! செழுந்தேனே! சிந்தையுள்
சிவ்வென்று மேவும் சிலுசிலுப்பே! - கவ்வென்[று]
உயிரைக் கவர்கின்ற ஒள்ளழகே! என்றும்
உயர்வைத் தருவாய் உவந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.02.2018

lundi 26 février 2018

காலை வணக்கம்!



இனிய காலை வணக்கம்!
  
வாய்மை மொழியே! வளமுடைய பன்மொழிக்குத்
தாய்மை மொழியே! தவமொழியே! - துாய்மை
அளிக்கும் மொழியே! அருளேந்தி வா..வா..
களிக்கும் மொழியே கமழ்ந்து!
  
சீர்மணக்கும் செந்தமிழே! தார்மணக்கும் தண்டமிழே!
பார்மணக்கும் பைந்தமிழே! பண்டமிழே! - ஏர்மணக்கும்..
ஊர்மணக்கும்! ஒண்டமிழே! தேர்மணக்கும் பாக்களை
வேர்மணக்கும் வண்ணம் விளம்பு!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.02.2018

விருத்த மேடை - 32   



விருத்த மேடை - 32
  
அறுசீர் விருத்தம் - 32
[மா + காய் + காய் அரையடிக்கு]
  
நுாலினைப் பகுத்துணர்! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
நுாலைப் பகுத்துணர்வாய்! நன்காய்ந்து
   நுட்பம் தொகுத்துணர்வாய்! தவமாற்றக்
காலை விழித்தெழுவாய்! கவியன்னை
   காலைப் பணிந்துயர்வாய்! மனமோங்க
மாலை நடைந்திடுவாய்! நற்புகழாம்
   மாலை புனைந்திடுவாய்! கற்றோர்தம்
சாலை அடைந்திடுவாய்! குறள்கூறும்
   சால்பை அணிந்திடுவாய்! அருள்பெறுவாய்!
  
       [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மா + காய் + காய் என்ற வாய்பாட்டில் அனைத்து அரையடிகளும் அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். ஒன்று, நான்காம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.02.2018