வெண்பா மேடை - 120
உயிர் வருக்கை வெண்பா!
அன்புக்[கு] அணையுண்டோ? இன்றமிழுக்[கு] ஈடுண்டோ?
உண்மைக்கே ஊழுண்டோ? எண்ணம்..சீர் ஏற்றிட,
ஐம்பொறி ஒன்றிட ஓய்வுண்டோ? ஒளவைபோல்
ஐம்முகா என்னையும் ஆக்கு!
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் முறையே சீர்களின் முதலெழுத்தாக வந்தமைந்த இன்னிசை வெண்பா.
அன்புருவே! ஆரமுதே! இன்றமிழே! ஈருருவே!
என்னுயிரே! ஐயனே! ஏத்துகிறேன்! - ஒன்றிமனம்
உண்ணுகிறேன் ஒளவையமே! ஊனொளிர, உள்ளொளிர
எண்ணுகிறேன் ஓதுவாய் இங்கு!
இந்த நேரிசை வெண்பாவில், அனைத்துச் சீர்களும் உயிரெழுத்தை முதலாகப் பெற்றுள்ளன. இவ்வெண்பாவில் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் வந்தன.
விரும்பிய பொருளில் உயிர் வருக்கை இன்னிசை வெண்பா ஒன்றும், உயிர் வருக்கை நேரிசை வெண்பா ஒன்றும் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து உயிர் வருக்கை வெண்பாக்களை தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.09.2018
