dimanche 30 décembre 2012

மீண்டுமோர் ஆசை [பகுதி - 6]



மீண்டுமோர் ஆசை


பெண்ணும் பொன்னும் ஓரினமோ?
     பெருகும் போதை அவள்சொத்தோ?
விண்ணும் மண்ணும் சோ்ந்தாலும்
     விழியின் அழகுக் கீடாமோ?
பண்ணும் பாட்டும் அவள்எழிலைப்
     பார்த்துப் பார்த்துப் பயனுறுமே!
கண்ணும் கண்ணும் கவ்வுகிற
     காட்சி காண மீண்டும்ஆசை!

அன்னம் பயிலும் நடையழகை!
     அமுதைப் பொழியும் மொழியழகை!
மின்னும் முத்துப் பல்லழகை!
     மீட்டும் வீணை உடலழகை!
பின்னும் நீண்ட சடையழகை!
     பித்தை ஊட்டும் உடையழகை!
இன்னும் பிறக்கும் பிறவிகளில்
     என்கண் பார்க்க மீண்டும்ஆசை!


12 commentaires:

  1. அன்னம் பயிலும் நடையழகை!
    அமுதைப் பொழியும் மொழியழகை!
    மின்னும் முத்துப் பல்லழகை!
    மீட்டும் வீணை உடலழகை!
    பின்னும் நீண்ட சடையழகை!
    பித்தை ஊட்டும் உடையழகை!
    இன்னும் பிறக்கும் பிறவிகளில்
    என்கண் பார்க்க மீண்டும்ஆசை!

    மேற்கண்ட வரிகளை படிக்கும்போது அய்யா உண்மையில் எனக்கு இருபது வயது குறைந்து விட்ட உணர்வு,,அன்புடன் அப்துல் தயுப்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் எழுதுகிறேன் நண்பா! அவளுடைய
      காலும் கவிதைக் கரு!

      Supprimer
  2. அய்யய்யோ!
    கொன்னுடிங்க அய்யா...!

    எங்கேயோ நினைவுகள் செல்கிறது-
    வாழ்த்துக்கள் அய்யா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெல்லும் அவளழகைச் சொல்லும் பொழுதெல்லாம்
      துள்ளும் இதயம் துடித்து!

      Supprimer
  3. வணக்கம் ஐயா .தங்கள் இனிய கவிதைகள் போல் வாழ்வும்
    இனித்திருக்க என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உறவினர்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.....
    மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அளித்த அருந்தமிழால் என்னுள்ளம்
      தெம்பாய் உழைக்கும் தெளிந்து!

      Supprimer
  4. எந்தப் பொருள் எனினும் இனியத் தமிழ் சூழ்க-தரும்
    சந்தக் கவிஞரே! தமிழ் வாழ நீர் வாழ்க!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      சந்தக் கவியென்று சால்புரைத்தீா்! ஆடுகிறேன்
      தந்த தமிழைத் தரித்து!

      Supprimer
  5. வாவ்! என்ன அற்புதமான வரிகள் அசத்திட்டிங்க ஐயா.

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிய வளங்களை ஏற்றுமகிழ்வீா்! வாழ்வு
      கனிய தமிழ்மொழி காத்து!

      Supprimer
  6. அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உலகம் உவந்தேத்தும் புத்தாண்டு! வாழ்க!
      அலகிலா இன்பம் அணிந்து!

      Supprimer