dimanche 9 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 28]




ஏக்கம் நுாறு [பகுதி - 28]

எடுப்பான எழில்மேனி! இளமை பொங்க
     இசைமீட்டும் கலைவாணி! பருவ ஆற்றின்
துடுப்பான சொல்லழகி! காதல் கள்ளி!
     துாண்மனத்தைத் துாளாக்கும் காந்தக் கண்ணி!
இடுப்பான பேரழகில் எண்ணம் ஏகி
     இன்பத்தின் உச்சியிலே நடனம் ஆடும்!
தடுப்பான சாதிமதப் போர்வை நீக்கித்
     தமிழ்மணக்கும் வாழ்வுபெற ஏங்கும் நெஞ்சே! 99

பூக்காடே! பொன்மழையே! புதையல் என்றே
     புலவனுனைப் போற்றுகிறேன்! சந்தம் மீட்டும்
பாக்காடே! படா்நலமே! சுகம் விளையும்
     பசும்வயலே! பண்ணிசையே! பருவக் கற்றே!
ஈக்காடே என்றென்றன் இதயம் மாறி
     இளையவளே உன்னழகின் தேன் உறிஞ்சும்!
கூப்பாடே போட்டிளமை குதித்தே ஆடும்!
     கொள்ளையிடும் விழிவடிவில் ஏங்கும் நெஞ்சே! 100

ஏக்கம் நுாறு விருத்தத்தைத் தொடா்ந்து படித்துக் 
கருத்தெழுதிய வலையுலகத் தோழா்களுக்கும் 
தோழிகளுக்கும் நன்றி! நன்றி! நனிநன்றி! 

ஏக்கம் நுாறு நுால்வடிவம் பெற்று 
அடுத்த ஆண்டுக் கம்பன் கழகம் நடத்தும் 
பொங்கல் விழாவில் வெளியிடப்படும்! 
அன்பா்கள் எழுதிய சிறந்த கருத்துக்களும் 
நுாலில் இடம்பெறும்!
 

4 commentaires:

  1. அருமையான கவிதை மழையில் நனைந்தேன். புத்தகம் வெளியிட வாழ்த்துகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இரண்டு நாள்கள் மின்வலையை
      இயக்கிப் பார்க்க நொடியின்றித்
      திரண்ட பணியில் நானிருந்தேன்!
      தேன்போல் ஏக்க விருத்தத்தை
      இருண்ட சூழல் எழுந்தோட
      இன்று படைத்தேன்! செம்மலையார்
      வரண்ட மனத்தை வளமாக்க
      வடித்த கருத்தை வரவேற்றேன்!

      Supprimer
  2. அருமையான இக் கவிதைகள் நூல் வடிவம் பெற என்
    மனமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா !....
    மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுமையுறு வினையை நீக்கிச்
      சுடா்தமிழ் அன்னை காக்க!
      இமையுறு செயலைப் போன்றே
      எனதுயிர்க் கண்ணன் காக்க!
      உமையொரு பாகம் கொண்ட
      உயா்பனி மலையோன் காக்க!
      எமையொரு கவியாய்ச் செய்த
      எழில்மிகு அம்பாள் காக்க!

      Supprimer