dimanche 2 décembre 2012

ஏக்கம் நுாறு [பகுதி - 20]




ஏக்கம் நுாறு [பகுதி - 20]

சிரிப்பேந்தி அமைந்திருக்கும் இதழைக் கண்டு
     சிந்தனைகள் பலகோடிச் சீராய்ப் பூக்கும்!
கரிப்பேந்தி இருக்கின்ற உப்பும் கூட
     இனிப்பேந்திச் சுவைக்குதடி உன்..கை பட்டு!
சுரிப்பேந்தி ஆசையலை நெஞ்சைத் தாக்க
     சுகமேந்திக் கவிபிறக்கும்! பொய்யாய் ஏனோ
முரிப்பேந்திச் செல்கின்றாய்! உடுக்கை காட்டிப்
     பரிப்பேந்தும் பின்னழகு! படரும் ஏக்கம்!! 82

தொட்டவுடன் எனக்குள்ளே பாயும் இன்பம்!
     தொடா்ந்ததனை வேண்டிமனம் ஏங்கும்! எண்ணெய்
பட்டவுடன் பற்றுகின்ற நெருப்பைப் போன்று
     பார்த்தவுடன் பற்றுகின்ற உணா்வே காதல்!
சட்டமுடன் உள்நுழைந்ததே இதயக் கூட்டைத்
     தன்வயமாய் மாற்றிவிடும்! தமிழ் விளைக்கும்!
திட்டமுடன் என்மனத்தை அடக்கி வைக்கத்
     திறனின்றித் தவிக்கின்றேன்! செந்தேன் ஊற்றே! 83

2 commentaires:

  1. வரிகள் எங்கள் மனதில் பாய்ந்தன...

    வாழ்த்துக்கள்...
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்

      அடிகள் அனைத்தும் அகத்துள் அமைந்தால்
      முடியைத் தரிப்பேன் முனைந்து

      Supprimer