mercredi 21 novembre 2012

கவிநூறு தந்தாள்




கவிநூறு தந்தாள்

உண்ணாமல் உறங்காமல் உறவாடும் பெண்ணாள் - நல்
உயிராகி உடலாகி ஒளியாகி நின்றாள்!
கண்ணாலே கதைபேசிக் களிப்பூட்ட வந்தாள் - எழில்
கலைஞான வடிவாகிக் கவிநூறு தந்தாள்!

மண்ணாசை பொன்னாசை தன்னாலே ஓடும் - உயர்
மதுவாகும் அவளாசை என்முன்னே ஆடும்!
பண்பாலும் அன்பாலும் பாசத்தால் தேடும் - அவள்
பணிவொன்றே என்நெஞ்சில் தாலாட்டுப் பாடும்!

எண்ணாத எண்ணங்கள் என்மனதைத் தாக்கும் - செவ்
விதழொன்றே மருந்தாகி இனிதாகக் காக்கும்!
விண்ணோடு விளையாடும் மதியின்பம் தேக்கும் - வேல்
விழியாளின் பார்வையிலே அதுகூடத் தோற்கும்!

பண்பாடும் குரலோசை குயிலோசை மிஞ்சும் - அப்
பாவையவள் இராகத்தில் குழலோசை கெஞ்சும்!
மண்மீதில் எனையாளும் வளையோசை கொஞ்சும் - அவள்
மலர்வாயின் முத்தங்கள் தமிழோசை விஞ்சும்!

6 commentaires:

  1. அழகான அருமையான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    த.ம.1

    RépondreSupprimer
  2. இனிய கவிதைகளை அள்ளி அள்ளி வழங்கும் தங்கள்
    இதயத்துக்கு என் இனிய வாழ்த்துக்கள் ஐயா ........

    RépondreSupprimer
  3. அருமை.. அருமை...
    பல முறை படிக்கத் துாண்டும் கவிதை.

    RépondreSupprimer
  4. பண்பாடும் குரலோசை குயிலோசை மிஞ்சும் - அப்
    பாவையவள் இராகத்தில் குழலோசை கெஞ்சும்!...

    எந்தப் பாடகி அவள்...?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னுள் வாழும் இளங்கொடியாள்!
      இன்பத் தமிழின் தேன்மொழியாள்!
      பொன்னுள் பதித்த வைரமெனப்
      பொலியும் வண்ண மீன்விழியாள்!
      கண்ணுள் புகுந்து கமழ்கவிதை
      கருத்துள் கலந்து ஒளிர்எழிலாள்!
      பண்ணுள் அவளைச் செதுக்குகிறேன்!
      பசுமைத் தமிழின் அணியணிந்தே!

      Supprimer
  5. மீண்டும் ஓர் அழகிய காதல் கவிதையை விட்டுச் சென்றுள்ளீர்கள்...

    தொடருங்கள்...

    RépondreSupprimer