samedi 17 novembre 2012

அன்னையே வாழ்க!




அன்னையே வாழ்க!

அன்னை யானவள் அன்பும் மானவள்!
என்னைப் பெற்றவள் இனிமை யானவள்!

கண்ணன் இசையினில் காதற் கொண்டவள்!
கண்ணகி போலவே கற்பிற் சிறந்தவள்!

கண்ணுறங் காமற் காத்து நின்றவள்
எண்ணம் யாவிலும் என்னைச் சுமந்தவள்!

இமுகத் தோடே என்றும் இருப்பவள்
நன்னயம் பூக்க நாளும் திகழ்பவள்

மண்ணின் மாண்புகள் மனையிற் காத்தவள்
கன்னித் தமிழையே களிக்கத் தந்தவள்

இன்பம் துன்பம் இணையாய்க் கண்டவள்
பண்பும் பணிவும் பாங்காய்ப் பெற்றவள்!

பெண்கள் நால்வரைப் பெற்றதால் மகிழ்பவள்
கண்ணாய் ஒருமகன் கம்பனுக் களித்தவள்!

கன்னல் மொழியே! காக்கும் விழியே!
வன்னச் 'சந்திரா' வாழ்க! வாழ்கவே!

7 commentaires:

  1. சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கின்றன வரிகள்...

    வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
    த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எண்ணும் தோறும் எனக்குள்ளே
      இன்பத் தமிழ்போல் இனிப்பவளாம்!
      கண்ணும் கமழ்ந்து கசிந்துருகும்!
      கருத்தும் மணந்து கனிந்துருகும்!
      தண்ணும் சோலை பேரழகாய்த்
      தாயின் உருவம் தவந்தாடும்!
      விண்ணும் மண்ணும் சோ்ந்தாலும்
      விஞ்சும் தாயின் அன்பன்றோ!

      Supprimer
  2. அம்மா என்றால் அன்புதானே.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நற்செல்வ லட்சுமியே!
      கேளும் கவிஞன் கிளா்மொழியை! - ஆளுமெனை
      அன்னையின் அன்புள்ளம்! அம்மா திருமுகம்
      பொன்னையும் மிஞ்சும் பொலிவு!

      Supprimer
  3. இந்த கவிதை மூலம் மறைந்த என் அன்னையின் நினைவில் இதயம் கனத்தது,கண்கள் கலங்கின. அருமை,அருமை,அன்புடன் அப்துல் தயுப், Lacourneuve

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      அன்னையின் பாட்டுக்(கு) அளித்த கருத்துரையால்
      என்னை மறந்தேன்! இனிதுற்றேன்! - தென்னையிளம்
      நீா்போன்று தாயின் நினைவினிக்கும்! செந்தமிழின்
      சீா்போன்று தாயின் சிறப்பு!

      Supprimer

  4. வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்!

    அன்னையை எண்ணி அடியேன் இசைத்தகவி
    இன்னலை எல்லாம் இறக்கிடுமே! - அன்பலை
    பாய்ந்து விளையாடும்! பண்பமுதில் நம்முள்ளம்
    தோய்ந்து விளையாடும் சூடு!

    RépondreSupprimer