dimanche 11 novembre 2012

கண்ணன் பதிற்றந்தாதி



கண்ணன் பதிற்றந்தாதி

நலந்தரும் சொல்லின் நயமெலாம் பாட
வலந்தரும் மாமணி வண்ணா! - குலந்தரும்
பூமகள் மின்னெஞ்சா! பூந்தமிழை நீ யென்றன்
நாமலர் மீதமர்ந்து நல்கு!

நல்லவர் தாழ்வதேன்? தீயவர் வாழ்வதேன்?
வல்ல விதியோன் வகுத்ததுவோ? - எல்லாம்
அறிந்தவனே! மண்ணை அளந்தவனே! என்னை
மறந்து விடாதே மனத்து!

மனமெனும் கூடத்துள் மாசகல, அன்பர்
இனமெனும் நற்பேர் எடுக்கத் - தனமிகு
மாமலை வாழும் மணிவண்ணா! போற்றியுனைப்
பாமாலை செய்தேன் பணிந்து!

பணிந்துனைப் போற்றிப் பரவ,என் நெஞ்சுள்
அணிந்துனைப் பாடிநலம் ஆள, - இனி,நான்
மறவா(து)  இருக்கவுனை மாமணி வண்ணா
உறவாய் எனைச்சூழ் உவந்து!

வந்துன் அடியை வணங்கும் அடியார்தம்
முந்தும் வினையை முடிப்பவனே! - செந்தமிழ்ப்
பாட்டில் களிப்பவனே! பாவலன் யான்எழுதும்
ஏட்டில் இருந்தருள்நற் றேன்.

தேனார் பொழில்சூழ் திருவரங்கை ஆண்டொளிர்
வானோர் தலைவா! மணிமார்பா! - நானோர்
பிழையினிச் செய்யாப் பெரும்புலமை எய்த
மழையாய்ப் பொழிகவே மாண்பு!

மாண்புறு சொல்லும், மணமுறு நற்செயலும்,
காணருந் தொண்டும், கனித்தமிழும் - வான்முகில்
வந்தொளிர் வேங்கட மன்னா! எனக்கிவை
தந்தருள் செய்வாய் தழைத்து!

தழைத்துயர் நன்னெறியும் தண்டமிழும் தந்தே
உழைத்துயர்ந் தோங்கவெனைச் செய்வாய்! - நுழையும்
துயரமெலாம் போக்கித் துணையருள் கண்ணா!
மயர்விலா வாழ்வை வழங்கு.

வழங்குமருள் வள்ளலே! வாழ்வை அறியா(து)
அழுந்துமெனை ஆட்கொண்(டு) அணைப்பாய் - முழங்கிடும்
என்மொழி யாவுமினி உன்புகழை! என்னெஞ்சுள்
பொன்னெறி ஈவாய் பொலிந்து.

பொலியும் திருச்சங்கும் பொற்சக் கரமும்
எளியோன் இருகைகள் ஏந்தி - மிளிருமுன்
தாளே சரணென ஆட்பட்டு நிற்கின்ற
நாளே பிறப்பின் நலம்!

கம்பன் இதழ் 15-02-2003

4 commentaires:

  1. நல்ல வரிகள்....

    நல்லவர் தாழ்வதேன்? தீயவர் வாழ்வதேன்?
    வல்ல விதியோன் வகுத்ததுவோ?
    ////////////

    RépondreSupprimer
  2. சிறப்பான வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்... நன்றி...
    த.ம.2

    RépondreSupprimer
  3. அருமை அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. வெண்பாவில் அந்தாதி பாடியது அழகு.படிக்க படிக்க இன்பம்

    RépondreSupprimer