mercredi 7 novembre 2012

அடிமைத் தமிழன்



அடிமைத் தமிழன்


பேரன்(பு) உடைய பெண்டீரே!
     பெருமை உடைய பெரியோரே!
பாரன்(பு) உடைய பாவலரே!
     பசுமைத் தமிழின் நாவலரே!
சீரன்(பு) உடைய சான்ரோரே
     சிறப்பை மேவும் இளைஞர்கால்
தாரம்(பு) உடைய என்வணக்கம்!
     தமிழின் திருத்தாள் அடிப்பொடியன்!

கூரம்(பு) உடைய நுண்கவிதை!
     கொள்கைப் பிடிப்பு! மொழிப்பற்று!
போரம்(பு) உடைய செயல்வேகம்!
     பொலியும் மனித நன்னேயம்!
காரன்(பு) உடைய குளிர்நெஞ்சம்!
     கடமை! தமிழி னச்சீர்மை!
ஓரம்(பு) உடைய மலர்ப்பார்வை
     உதிர்த்தாய் தமிழே உயிர்பெற்றேன்!

சித்திரைத் திங்கள் நம்மின்
     நித்திரை கலைக்கும் என்பர்!
முத்திரை குத்தி உம்மின்
     மூளையைச் சலவை செய்தார்!
சித்திரை தமிழர் சீரைச்
     சிதைக்கும் மாதம்! தோழா
இத்தரை போற்ற இன்ப
வள்ளுவர் ஆண்டை வாழ்த்து!

ஆரியன் சதிகள் தீட்டி
     அடிமையாய் நம்மை ஆக்கிக்
காரியம் முடிய வேண்டி
     கட்டிய பொய்கள் கோடி!
வீரிய தமிழன் வீழ்ந்தான்!
     விதியெனக் கிடந்தான்! சேற்றில்
ஊறிய எருமை போன்றே
     உலகிடை வாழ்தல் வாழ்வா?

நாட்டில் உள்ள அனைவரையும்
     ஓட்டி மேய்க்கும் மாடுகளாய்
வாட்டி வதைக்க மொழிக்கொள்கை
     தீட்டி வைத்தார் அன்னியர்கள்!
ஊட்டி வளர்த்தார் ஆங்கிலமே
     உலகின் அறிவின் மொழியென்று!
கூட்டி எண்ணும் தமிழர்களே
     கொஞ்சும் தமிழை வளர்த்தீரா!

மம்மி, தாடி என்றும்மை
     மழலைச் செல்வம் கொஞ்சுவதோ!
நம்மின் தமிழை அழிக்கின்ற
     நாசச் செயலை உணர்ந்திரோ!
அம்மி போல நாமிருந்தால்
     ஆளும் உலகில் ஆங்கிலமே!
அம்மா! தமிழே! பிறமொழியின்
     அடிமைத் தமிழன் விழிப்பானோ?

எங்கும் தமிழே ஒளித்திட்டார்!
     எதிலும் தமிழே பதித்திட்டார்!
பொங்கும் உணர்வில் உரையாற்றித்
     தங்கள் வாக்கைச் சேர்த்திட்டார்!
இங்கே தலைவர் வாழ்கின்றார்!
     தங்கத் தமிழோ தேய்கின்றாள்!
உங்கள் வாழ்வு உயர்ந்ததுவோ!
     உணர்வீர்! உணர்வீர்! தமிழர்களே!

கட்சித் தலைவர் சொல்லுவதைக்
     கண்ணை மூடிக் கேட்கின்றார்!
வெட்சி மாலை அணிந்தஇனம்
     வீரம் குலைந்து வீழ்வதுவோ?
எச்சில் சோற்றைக் கையேந்தும்
     இழிவேன்? நாளும் தலைவர்கள்
மெச்ச அவர்கை கால்பிடிக்கும்
     அடிமைத் தமிழன் விழிப்பாரோ?

வடவர் மொழியின் வழிபாட்டை
     வாழ்த்தும் தமிழர், செம்மொழியாய்ச்
சுடரும் தமிழை இறைமுன்னே
     சொல்லும் தடையை உடைத்தாயோ?
இடமும், பொருளும், செயற்பாடும்
     ஏந்தும் தமிழர்! தாய்மொழிமேல்
படரும் இடரைப் பாராமல்
     பக்தி அடிமை பூண்டாரே!

தமிழர் பெயரில் தமிழில்லை..
     தமிழர் வாயில் தமிழில்லை..
தமிழர் பிள்ளை தமிழ்பேசித்
     தழைத்த காலம் இன்றில்லை..
அமிழ்தத் தமிழும் அரசேறி
     ஆளும் காட்சி வரவில்லை..
இமியும் தாழ்வை எண்ணாமல்
     இருத்தல் அடிமை வாழ்வன்றோ!

சாதிப் பித்தைத் தலைச்சூடித்
     தம்முள் பிரிவை வளர்திங்கு
மோதிக் கொள்ளும் தமிழர்களே!
     மூளும் கொடுமை ஆய்ந்தறிவீர்!
நீதி உரைத்தார் வள்ளுவனார்
     நிலத்தில் உயிர்கள் பிறப்பொக்கும்!
ஓதிப் பலரும் தெளிவூட்டச்
     உணரும் நிலையை மறந்தீரே!

நடிப்பே இங்கு தொழிலாக
     நடிகர் அதனில் வாழ்கின்றார்!
துடிக்கும் இளைய சமுதாயம்
     தூய வாழ்வைப் பற்றமால்
படிமம் வைத்துக் கொண்டாடிப்
     பாடிப் பாடித் தெழுகிறதே!
பிடிக்கும் அவர்மேல் பித்தேறிப்
     பிதற்றி அடிமை யானாரே!

மக்கள் நலனே மதமாகும்!
     மதத்தின் நலமா இவ்வுலகு?
சிக்கல் ஆக்கிச் சிந்தையினைச்
     சிதறச் செய்யும் மதவெறியால்
பக்கம் எங்கும் பாழாகிப்
     பாரே காடாய் ஆகிவிடும்!
சொர்க்கம் என்று மதம்பிடித்துச்
     சொக்கும் தமிழர் உணருகவே!

முத்தம் காதல் பறிமாற்றம்!
     முதிர்ந்த தமிழின் அறநூல்கள்
சத்தம் இன்றிச் சீர்வாழ்வைச்
     சாற்றும்! படித்துச் சுவைத்திடுவீர்!
நித்தம் வளரும் வாழ்கைநிலை
     நிலைத்த மாண்பை மாற்றுவதோ?
சித்தம் கலங்கிப் பண்பாட்டைச்
     சிதைத்தல் அழிவைத் தேக்கிடுமே!

இரும்புக் காது! தமிழர்கள்
     எதற்கும் அதையா திருக்கின்றார்!
நரம்பு முறுக்கப் புத்துணர்வை
     நன்றே ஊட்டிப் பாரதியும்
நெருப்புக் கவிதை படைத்திட்டான்!
     செருப்புக் கிழிவாய்க் கிடப்பதுவோ?
கருப்புக் குயிலே! அறிவுற்றோம்!
     கருத்தின் உணர்வை இழந்திட்டோம்!


3 commentaires:

  1. தமிழனின் நிலையை அழகுத் தமிழில் சொன்னது அருமை. தமிழன் உணர்வானா?

    RépondreSupprimer
  2. உணர வேண்டிய வரிகள்...

    நன்றி ஐயா...

    த.ம. 1

    RépondreSupprimer
  3. http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_15.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    RépondreSupprimer